Sunday, August 23, 2015

வீரபாண்டிய கட்டபொம்மன் - செம்மீன் - Veerapandiya Kattabomman -Chemmeen.







சில நாட்களாக ஏடுகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் செம்மீன் திரைப்படங்கள் பற்றிய செய்திப் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத வெள்ளித்திரை படைப்புகள் ஆகும்.

துரோகங்கள் நிகழ்த்தப்படும்போதும், சோதனைகளும், தோல்விகளும் வந்தடையும் போதும், சோர்வடையாமலிருக்க  நான் பார்த்து ரசிப்பது வீரபாண்டிய கட்டபொம்மனைத் தான்.

போர் குணத்தை அள்ளித் தெளிக்கின்ற எங்கள் தெற்குச் சீமையின் வீரத்தையும் பராக்கிரமத்தையும் பகிர்கின்ற இத்திரைப்படத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா?  என்ன வசனங்கள்!

அன்றைய தொழில்நுட்பத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அமைந்த வண்ணத் திரைப்படம். மறைந்த சிவாஜிகணேசன் கட்டபொம்மனாகவே மாறிவிட்டார்!

வீரபாண்டிய கட்டபொம்மன்
_______________________________

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் 1959ம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் வெளியானது. இயக்குநர் பி.ஆர்.பந்துலு இயக்கிய இத்திரைப்படத்தில், சிவாஜியோடு, ஜெமினி கணேசன், பத்மினி, குலதெய்வம் ராஜகோபால், ஜாவர் சீதாரமன், வி.கே. ராமசாமி, எஸ். வரலட்சுமி, ஓ.ஏ.கே. தேவர் போன்றோர் சிறப்பாக நடித்திருப்பார்கள்.


 இத்திரைப்படத்தை சிவாஜி நாடக மன்றம் மூலமாக 116 தடவைக்கும்  மேலாக நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவ மனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார்.




இந்தத் திரைப்படம் தென்மண்டலமெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்பே இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள். அந்த விழாவில் பண்டிதர் ஜவஹர்லால் நேருவும், அவரது சகோதரி விஜயலட்சுமி பண்டிட் ஆகியோர் பங்கேற்றார்கள்.

 1960 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் இப்படத்தின் மூலம்  பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்.

இரண்டு பெரிய கண்டங்கள் (ஆசியா, ஆப்ரிக்கா) கலந்துகொள்ளும் இவ்விழாவில் விருது வாங்கிய முதல் ஆசியத்திரைப்படமாகவும், முதல் இந்தியப்படமாகவும், முதல் தமிழ் திரைப்படமாகவும், வீரபாண்டிய கட்டபொம்மன் முத்திரை பதித்தது.

அன்றைக்கு கெய்ரோவில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் கெய்ரோ மாநகராட்சி நடிகர் திலகத்தை அந்நகருக்கு வரவேற்றுக் கொண்டாடியது மட்டுமில்லாமல் அந்நகர மேயர் நகரத்தின் “சாவியை” சிவாஜி கணேசன் அவர்களிடம் வழங்கி சிறப்பித்தார் என்பது பெருமையான செய்தி.

பின்னர் எகிப்து அதிபர் நாசர் இந்தியா வந்தபோது, பிரதமர் நேருவின் அனுமதியோடு, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சென்னையிலுள்ள  கலைவாணர் அரங்கத்தில் (அப்போது பாலர் அரங்கம்) அவரை வரவழைத்து மிகப் பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார்.

அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் எகிப்து அதிபர் நாசரை சென்னைக்கு அழைத்து சிறப்பித்ததோடு தன் வீட்டிலே விருந்தும் அளித்தார். இந்தப்பெருமை பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனையே  சேரும்.


தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு, அவர் தூக்கிலிடப்பட்ட பகுதியான ஒருங்கிணைந்த நெல்லைமாவட்டம் கயத்தாரில் 1971ம் ஆண்டு 47 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். அந்தச் சிலையை குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தார்.

வீரபாண்டியனின் வாரிசான குருசாமி நாயக்கர் தூக்குதண்டனையிலிருந்து சஞ்சீவரெட்டி அவருடைய கருணை மனுவை பரிசீலித்து இடைக்கால தடையும் வை.கோ அவர்கள் முயற்சியால் வழங்கியதும் பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரை தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றிய வழக்கை நடத்தியவன் என்ற பெருமையோடு நினைவு கொள்கிறேன்.

1999 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை முறைப்படி தமிழக அரசிடம் ஒப்படைத்தார் சிவாஜி கணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் புதுபொலிவுடன், புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்தது.

செம்மீன்.
_____________





1965ம் ஆண்டு செம்மீன் திரைப்படம் வெளியானது. நாவலாசிரியர் தகழி சிவசங்கரன் எழுதிய “செம்மீன்” நாவலை ராமு காரியாட் என்ற இயக்குனர் திரைப்படமாக்கியிருந்தார். பல நல்ல நாவல்கள் நல்ல திரைப்படங்களாக அமைவதில்லை. அப்படியான நிலையில் மலையாளத்தின் முதல் வண்ணப்படமாக செம்மீன் வெளியாகி இருந்தது. அதன் 50வது ஆண்டு நிறைவு விழாவை கேரள மாநிலமே கொண்டாடி வருகின்றது.

உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட செம்மீன் நாவலின் ஆசிரியர், படத்தில் நடித்த நட்சத்திரங்கள், இயக்குனர் என்று தனி இதழே வெளியிட்டது கேரளாவின் மாத்ருபூமி நாளிதழ்.

அந்த காலகட்டத்தில் சிறந்த படத்துக்கான விருதுகள் பெரும்பாலும் வங்கத் திரைப்படங்களுக்கே கொடுக்கப்பட்டுவந்தது. சிறந்த படங்களுக்கான தேர்வில் இடம்பெற்ற இருபது படங்களுக்குள் செம்மீன் முதலில் இடம்பெறவில்லை. தென் இந்தியாவிலிருந்து சிறந்த படம் செம்மீன் என்று பரிந்து பேச யாரும் இல்லாத சூழலில் அன்றைக்கு தேர்வுக்குழுவில் இருந்த பாரதி மணி பரிந்துரையின் பேரில் முதல்முறையாக தங்கத் தாமரை விருது தென்னிந்திய சினிமாவுக்கு செம்மீன் திரைப்படம் மூலம் கிடைத்தது.

மார்க்ஸ் பார்தலே ஒளிப்பதிவு அற்புதமாக அமைந்தது. அவர் ஒரு ஜெர்மானியர். இருந்தும், கடற்புரத்து மக்களின் அன்றாட வாழ்வின் வியத்தகு கோணங்களை அவர் தம் ஒளிப்பதிவில் காட்டியதும் செம்மீனின் வெற்றிக்கு இன்றியமையாத இன்னொரு காரணம். மேஜர் சத்யன் அப்பாவி பளனியாகவே மாறியிருப்பார்.

சத்யனும் ஷீலாவும் நடிப்பில் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டு மிஞ்சியிருப்பார்கள். பரீக்குட்டியாக வரும் மது கதாப்பாத்திரம் மனதைக் கரைக்கும். செம்பன் குஞ்ஞுவாக வரும் கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், சக்கியாக நடித்த அடூர் பவானி, பஞ்சமியாக வரும் லலா, சி. ஆர். ராஜகுமாரி, அடூர் பங்கஜம், கோட்டயம் செல்லப்பன், பறவூர் பரதன், பிலோமின, ஜெ.எ.ஆர். ஆனந்த் , கோதமங்கலம் அலி ஆகியோர் தாங்கள் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் மூலம் கேரள மக்களின் வாழ்வியலை கண்முன் காட்சியாகக் கொண்டுவந்திருப்பார்கள்.

இத்திரைப்படத்தினை பாபு இஸ்மயில் சேட்டு தயாரிக்க, மார்கஸ் பார்ட்லி, யு. ராஜகோபால் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்தனர். இசை சலில் சௌத்ரி. இயக்குனர்  ராமு காரியாட் நடிகர்களுக்கு ஈடாகக் கடலலைகளையும் நடிக்க வைத்திருந்தார்.
கடல் அலைகளின் சீற்றம், கோபம், சிரிப்பு, புன்முறுவல், முணுமுணுப்பு, நாணம், கெஞ்சல், கொஞ்சல், பிடிவாதம் எல்லாம் காட்சியமைப்பில் ரசிக்கும்படியாகக் கையாண்டிருப்பார்.

இன்றைய தலைமுறையினர் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனும், செம்மீனும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-08-2015.

#KsRadhakrishnan #KSR_Posts

 #VeerapandiyaKattabomman #Chemmeen

#SouthIndianCenima

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...