Sunday, August 30, 2015

விவசாயம் - Agriculture



Aavishkara Book on Scientists  கன்னட இதழில்  ஒரு சிறு குழந்தை காளைமாடுகளை பத்திக்கொண்டு செல்கின்ற  இந்த அட்டைப் படத்தை பார்த்தபோது பெருமையாக இருந்தது. வழக்கறிஞராக இருந்தாலும், விவசாயியாகப் பிறந்து, வாழ்ந்து, இறுதிகாலத்திலும் விவசாயியாகக் கழிக்கவேண்டும் என்ற உணர்வு உதிரத்தோடு ஒட்டியது.

கம்பீரமாக நிற்கும் காளைமாடுகள், பழைமையைச் சொல்லும் மாட்டுவண்டிகள், ஈரம் வடிந்து நிற்கும் விவசாய நிலங்கள், காற்றுக்குத் தலையசைக்கும் பயிர்கள், அறுவடை செய்து களங்களில் அம்பாரமாகக் குவித்து வைத்திருக்கும் மேழிகள் என விவசாய நிலம் சார்ந்த  வாழ்வியல் தனி அழகும் அமைதியும் ஆனந்தமும் தருவன. 

மூட்டை மூட்டையாக நெல்மணிகளை அளந்து கட்டுவதும், கரும்பு விவசாயம் முடிந்தவுடன் வெல்ல ஆலைகளில், பெரிய அடுப்புகள் அமைத்து வெல்லம் காய்ச்சுவதும், விளைந்த மிளகாயை களங்களில் காயப்போடும்போது கம்யூனிஸ்டு தோழர்கள் அணிகின்ற சிகப்பு வண்ண கம்பளித் துண்டு போல ஜொளிப்பதும், காய்ந்து வெடித்த பருத்தியை மணலின் மேல் காற்றுப் புகாத அறைகளில் அடுக்கி வைக்கும் போது வெள்ளை வெளெரென்று விளக்கு வெளிச்சத்தில் காட்சியளிப்பதும், எள்ளும் நிலக்கடலையும் கொண்டுபோய் செக்கில் எண்ணெய் ஆட்டுவதும், கிணற்றடியிலும், பம்புசெட்டிலும் குளிப்பதும், என கிராமத்து நாட்கள் எல்லாமே வாழ்க்கையோடு இணைந்தது....  

இவையெல்லாம் கடந்தகாலங்களின் நினைவுகள். இன்றைக்கு டிராக்டர்கள், இயந்திரங்கள் என்று வந்தபின் உழவுக்கு மாடுகளைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஒரு சிறு குழந்தை அனுபவமிக்க விவசாயியைப் போல லாவகமாக காளைமாடுகளின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்வதைப் பார்க்கும் போது, “தமிழ் இனி மெல்ல சாகும்” என்ற பாரதியின் கூற்றைப் போல விவசாயமும் மெல்ல காணாமல் போகுமோ என்ற எங்களைப் போன்ற விவசாயிகளின் அச்சம் நீங்கியது.


அய்யன் வள்ளுவன் வேளாண்மை பற்றிச் சொன்ன மணிவாசகங்களுக்கு என்றைக்கும் மதிப்பும் மரியாதையும் மவுசும் குறையாமல் இருக்கும். 
 “விவசாயத்தை எவராலும் அழிக்க முடியாது. எங்கள் தலைமுறையிலும் விவசாயத்தையும், அதன் பாரம்பரியத்தையும் காப்போம்” என்று  இந்த சிறுபிள்ளை சொல்வது போல இருக்கின்றது இந்தப் படம். அந்த சிறுவனுக்கு ஒரு சல்யூட். 










கர்நாடகாவில் மாட்டைப் பத்திச் செல்லும் குழந்தையின் காட்சியோடு,
எங்கள் பகுதியான, கோவில்பட்டி, எட்டையபுரம், சாத்தூர், சிவகாசி சங்கரன்கோவில் வட்டாரங்களில் விடியற்காலையில் தாய்மார்கள் கஞ்சிக் கலயங்களை தலையில் வைத்துக் கொண்டு இன்றைக்கும் விவசாய வேலைகளுக்குச் செல்கின்ற காட்சியும்,  உழுதுபோட்ட நிலங்களும், வெங்காயப் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்ற விவசாயியின்  உழைப்பும், களத்தில் விவசாயிகள் தங்களுடைய சாகுபடிகளைப் பக்குவப்படுத்துவதும், நிலத்தில் பருத்தி விளைச்சலும், வேலைமுடித்துவிட்டு நண்பகல் உணவுக்காக காடுகளில் சற்று நேரம் மாடுகளை வேப்ப மரநிழலின் கீழ் கட்டிப் போடும் காட்சிகளும், 

கிடை அமைக்கப் பயன்படும் ஆடுகளுக்கு மழைக்காலங்களில் அண்டவும், இரவு நேரங்களில் அடையவும் பனை ஓலையால் வேய்கின்ற கூண்டுகள் செய்வதும், ஓய்வாக மாட்டுவண்டியில் உட்கார்ந்து சற்று ஆசுவாசப்படுத்துவதும், நதி நீர் இணைப்புக்காக உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில் முக்கிய அம்சமாக இருக்கும்  கேரளாவிலிருந்து, அச்சன்கோவில்-பம்பை நதிகளை தமிழக வைப்பாற்றோடு இணைக்கும் போது, சாத்தூர் அருகே உள்ள இந்தப் படத்தில் உள்ள வைப்பாறு பகுதி முக்கியத்துவம் பெறும். 

 


கணினியைத் தொட்ட இளந்தலைமுறையினர் எதிர்காலத்தில் நிச்சயமாக கிராமங்களை நோக்கிச் செல்வார்கள் என்ற நிலை உருவாகி வருகின்றது. என்னைச் சந்திக்கும் இளைஞர்களும் இந்த விரும்பங்களையே தெரியப்படுத்தும்போது மட்டற்ற மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது. 

1975ல் விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை என்று வருவாய்த்துறை அதிகாரிகள்  வீட்டுக் கதவுகள், பண்ட பாத்திரங்களை அள்ளிச் சென்ற அந்த கடுமையான பஞ்சகாலத்தில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் தொடுத்தவன், மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களோடு களப்பணியில் இருந்தவன் என்ற சூழலில் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையும் தனிப்பட்ட முறையில் என்றைக்கும் இருக்கின்றது. 

நூற்றாண்டு காலமாக விவசாயிகள் குறித்து தெளிவான வரலாற்றுப் பதிவுகளோடு விவசாயப் போராட்டம், மற்றும் அவர்களுடைய வாழ்வியலைக் குறித்த என்னுடைய நூல் அச்சுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது.  குலசாமிகளைப் போல குலத்தொழிலான விவசாயம் எவ்வளவு தான் ஏற்ற இரக்கங்களைச் சந்தித்தாலும் அதனைக் கும்பிட்டுத் தொழும் விவசாயியிடமிருந்து அதைப் பிரிக்க முடியாது.


Tail Piece
____________________

நான் பணித்து எங்கள் வட்டாரத்தை சிலநாட்களுக்கு முன் ,  தன்னுடைய இரண்டுசக்கர வாகனங்களில் கார்த்திக் புகழேந்தி வெயிலும் மழையும் பார்க்காமல் சுற்றித் திரிந்து அவரது காமிராவில் எடுத்த காட்சிகள். 


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 
30-08-2015.

See Also :

http://ksr1956blog.blogspot.in/2015/05/blog-post_19.html

http://ksr1956blog.blogspot.in/2015/05/urid-dhall.html

http://ksr1956blog.blogspot.in/2015/06/blog-post_3.html

http://ksr1956blog.blogspot.in/2015/07/organic-farming.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/farmer-suicide.html

http://ksr1956blog.blogspot.in/2015/02/formers-suicide.html

http://ksr1956blog.blogspot.in/2015/03/land-acquisition4.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/old-farmers-almanac.html

http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_39.html

http://ksr1956blog.blogspot.in/2015/03/get-out-from-agriculture-highly.html

http://ksr1956blog.blogspot.in/2015/07/farmer-agriculture-issue-radhakrishna.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/good-agricultural-practices-help-raise.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/today-youths-turn-back-to-natural.html










No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...