Tuesday, August 11, 2015

வளைகுடா தமிழர்களின் கோரிக்கை

''உலகில் சுயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும் வெட்டப்பட்டு அதன் செயல்பாடுகள் உலகநாடுகளுக்கெல்லாம் பயனாக இருக்கும் போது, இந்தியாவுக்குப் பயனளிக்கும் சேதுக்கால்வாய்த் திட்டத்தை மட்டும் செயல்படுத்த விடாமல் ஒரு சிலர் அதைப் பாழ்படுத்துவது ஏனோ?

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
-------------------------------------------------------------------------------------------
''திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அய்யா  அவர்களுக்கு  ஒரு கோரிக்கை. பல பொதுநல திட்டங்களையும்  விவரமாக படித்து,கேட்டு  ஆராய்ந்து  விளக்கமாக கட்டுரையாக  எழுதி அதையே  கோரிக்கை மனுவாக வைக்கும் உங்களிடம் வளைகுடாவில் வேலை பார்க்கும் என்னைப்போல் உள்ள  லட்சகணக்கான [தென்] தமிழர்களின் சார்பாக நானும் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.அதற்கான ஆவணங்களை பெற்று ஏற்பாடுகளை  செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

வளைகுடா [Gulf] நாடுகளில் பணிபுரிந்து வரும் லட்சகணக்கான தென் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பணியாளர்கள் தற்போது 1. Gulf to Chennai to Madurai, அல்லது 2. Gulf to Colombu to Trichy, அல்லது 3. Gulf to Colombo to Madurai , அல்லது 4. Gulf to Colombo to Trivanandapuram அல்லது 5. Gulf to Trivanandapuram ஆகிய விமான நிலையம் வழியாகவே வரவேண்டியதுள்ளது. இதனால் அதிக பணம் செலவுகள் ஆகிறது.
அத்தோடு கால விரயமும் நிறைய ஆகிறது. அவசர கால[Emergency] தேவைகளுக்கு உடனே வர முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.

ஆகையால் எங்களுடைய பலவருட கோரிக்கையான, வளைகுடாவிலிருந்து நேரடியாகவே மதுரைக்கு [Gulf To Madurai] விமான சேவை வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று பல கோரிக்கைகள்  வைத்தும் யாரும் செவிமடுப்பதில்லை.

 மதுரை விமான நிலையம் பன்னாட்டு [International Air Port] நிலையமாக மாறியபின், சிறிதுகாலம் [SpiceJet Airline மூலமாக] ''Dubai to Madurai'' என்ற வழித்தடத்தில் விமானசேவை இருந்தது. ஆனால் ஏதோவொரு காரணத்தால் அதையும் நிறுத்தி விட்டார்கள்.

இதனால் பலவழிகளிலும் தென்தமிழகத்திற்கு வரவேண்டிய வருமானத்தை இழக்க வேண்டியதுள்ளது. ''Gulf to Madurai'' Airline service வர விடாமல் தடுப்பதில் கேரளாக்கார்களுடைய கையும் ஓங்கியுள்ளது.

இந்த விமான சேவை பற்றி நீங்கள் தீர விசாரித்து கட்டுரையாக எழுதி அதையே மனுவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பினால் நாங்கள் நன்றி கடமைபட்டவர்களாக இருப்போம்

 - சுபா. வெங்கட் ராமன்.

*******************************************************************************
 திரு. சுபா. வெங்கட்ராமன் ஆதங்கம் முற்றிலும் உண்மையானது. இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.
கேரளா லாபி நேரு காலத்திலிருந்தே தமிழ்நாட்டுக்கு விரோதமாக பிரதமர் அலுவலகத்தில் தொடர்ந்து இருந்துகொண்டு, தமிழகத்திற்கு என்னென்ன விரோதமாகச் செய்யமுடியுமோ அவ்வளவு காரியங்களையும் செய்துவருகிறார்கள்.

இதனால் தெற்கே நெய்யாற்றங்கரை, நெடுமாங்காட்டை இழந்தோம்,  தேவிகுளம், பீர்மேட்டை இழந்தோம், பாலக்காடு பகுதியில் பல கிராமங்களைத் தமிழகம் இழந்தது. இதனால் தான் இன்றைக்கு கொழுந்துவிட்டு எரிகின்ற குமரியின் நெய்யாறு அணைப்பிரச்சனை, அடவி நயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, அழகர் அணைத்திட்டங்கள், ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி,  போன்ற நீர் பாசானத் திட்டங்களில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.இப்படியான கேரளா லாபியை நாம் தடுக்க வேண்டாமா?

வளைகுடா நாடுகளில் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாகப் பணியாற்றுகிறார்கள். ஊர் திரும்பவும்,  அவசர காரணங்களுக்காக உடனடியாக சொந்த ஊருக்கு வரவேண்டுமென்றால் கொழும்பிலோ, திருவனந்தபுரத்திலோ காத்துக் கிடக்கும் சூழ்நிலை. அவர்கள் வசதிக்கேற்பவும், வீண் கால மற்றும் பயணச் செலவுகளைக் குறைக்கவும்,  விரைவில் மதுரையை அடைய விமான சேவைகள் அவசரம் மற்றும் அவசியத் தேவையாகும்.

வயலார் ரவி அமைச்சராக இருந்தபொழுது கேரளா கொழிக்க வேண்டுமென்று வளைகுடாநாட்டு விமானங்கள் அனைத்தையும் திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்கள் நோக்கித் திருப்பி விட்டார். நம் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் இறங்கிதான் தென்மாவட்டங்களில் உள்ள அவர்களது சொந்த மாவட்டத்திற்கு வரவேண்டிய நிலை.

எல்லா காரணங்களும் பொறுத்தமாக இருப்பதை கணக்கில் கொண்டு, மதுரை விமான நிலையத்திற்கு வளைகுடா நாடுகளில் இருந்து விமான சேவைகளை வழங்க வேண்டுமென்பது நம் அனைவருடைய நீண்ட நாளைய கோரிக்கை

. துபாயிலிருந்து ஒரு விமானம் மஸ்கட் வழியாக மதுரைக்கு வரலாம். பிறிதொரு விமானம் பஹ்ரைனிலிருந்து வரலாம்.
இல்லையென்றால் கத்தார், ரியாத், அபுதாபி, குவைத், ஓமன், சவுதி  வழியாகவும் வரலாம். இதனால் விமான நிறுவனங்களுக்கு நஷ்டமும் ஏற்படாது. இது ஒரு முக்கியமான பிரச்சனை. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு கவனிக்கவேண்டும்.

கேரள லாபியும், வயலார் ரவியினுடைய தவறான அணுகுமுறையும் தென் தமிழகத்தைச் சார்ந்த வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தோழர்களை பாதிப்படையச் செய்கிறது. இதை உடனடியாக கவனித்து உரிய விமான சேவையை வளைகுடா நாடுகளில் இருந்து மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்குத் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைக்குறித்து உரிய நடவடிக்கைக்காக மத்திய அமைச்சர்களான வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன், பொன்.இராதாகிருஷ்ணன் மற்றும் விமானசேவைத் துறை அமைச்சர் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ ஆகியோர்களின் கவனத்திற்குக் சொண்டு செல்வோம்.

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-08-2015.

#GulfTamils  #GulfTamilsIssue #KsRadhakrishnan #KSR_Posts



No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...