Friday, August 21, 2015

இலங்கையில் தேசிய அரசாங்கம் அமையும் சூழல்- சுதந்திரக் கட்சி ஆதரவு. - National Government in Sri Lanka .




இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான ஆதரவைத் தருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (20-08-2015) தீர்மானித்துள்ளது.

இன்று காலை அக்கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்ரிபால் சிறிசேனாவின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த அக்கட்சியின் துணைச் செயலாளர் துமிந்த திசாநாயக்க,  “ஜனாதிபதியின் வேண்டுகோளின்படி,  நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற  ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு மத்தியக் குழு அனுமதி வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த தேசிய அரசாங்கம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையில் சிறப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா , சரத் அமுனுகம , மகிந்த சமரசிங்க, எஸ்.பி. திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இப்படி கட்சிகள் எதிரும் புதிருமாக இருந்தாலும், சிங்களர்கள் ஒன்றுகூடி தேசிய அரசை அமைத்து தமிழர்களை வஞ்சிக்கத் துவக்கத்திலே திட்டமிட்டு விட்டார்கள். இது ஒரு கொடுமையான அபாயம் என்றே  நாம் நினைக்க வேண்டியிருக்கின்றது.




தமிழர்கள் 14+ 2+தேசியப் பட்டியல் 2 = என 18 இடங்கள் பெற்றுள்ளார்கள். ஆனாலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பூர்வீகக் குடிகள் என்ற உரிமையோடு வாழ முழு உரிமையையும், ஒற்றையாட்சி முறையை ஒழித்து இந்தியாவில் செயல்படும் மாநிலங்களைப் போன்று இலங்கையில் உள்ள மாகாணங்கள் செயல்படவும், 2009 இன அழிப்புக்கும், போர்குற்றங்களுக்கும் சர்வதேச, நம்பகமான, சுதந்திரமான விசாரணை அமைப்பதெல்லாம் வெறும் கனவாகிப் போய்விடுமோ என்ற வேதனை ஏற்படுகின்றது.

18நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களிடையே இருந்தாலும் சிங்களர்களே இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க நினைத்தால், தமிழர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். திரும்பவும் பழைய கதைதான்.

தமிழினத்தை அழிக்க சிங்களவர்களின் இந்த மிருகபலமான தேசிய அரசுத் திட்டம் வழிவகுக்கும். இந்த நிலையில் இந்தியாவினுடைய கடமைகளும், பொறுப்புகளும் இன்றைக்குப் பிரதானமானவை.

வெறும் ஈழத்தமிழர் பிரச்சனை என்று மட்டும் பார்க்காமல், இந்தியாவின் பாதுகாப்பும், இந்துமகா சமுத்திரத்தை அமைதிமண்டலமாகக் காக்கவும், சீனாவின் ஆதிக்க ஆளுமையை ஒழிக்கவும், தமிழக மீனவர்களை ரணப்படுத்துகின்ற காரியங்களை நிறுத்தவும் இந்தியா முன்நின்று செயலாற்ற வேண்டும்.

எதிர் வருகின்ற ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், ஈழத்தமிழர் பிரச்சனையில்  இந்தியா என்ன கருத்து தெரிவிக்கப்போகிறது என்பதைப் பொறுத்துதான் ஈழத்தமிழர்களுடைய விடியல் எதிர்காலத்தில் அமையும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தம் அவர்கள் இன்றைக்கு வெளியிட்ட அறிக்கையில், “தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்”  என்று சொல்லியுள்ளார். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று போகப் போகத்தான் தெரியும்.

 “ஒரு நாடு இருதேசம்” என்று சொன்ன கஜேந்திர குமார் தலைமையில் இயங்கும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சில இடங்கள் கிடைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையையும், ஈழத்தைக் குறித்தும் குரல் எழுப்பியிருப்பார்கள். அதற்கான வாய்ப்புகள் கிட்டாமல் போய்விட்டது என்பது கவலையான செய்தி.

தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட ஆறுமுகம் தொண்டமான், முத்துச் சிவலிங்கம் போன்றோர் மலையகத் தமிழர்களின் சார்பில் வெற்றிபெற்றுள்ளார்கள்.

கடந்த ஆண்டு  மலையகத் தமிழர்களுக்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய,“கொஸ்லாந்தை மீரியாபெத்தை” நிலச்சரிவுவில் எத்தனை மலையகத் தமிழர்கள் மண்ணில் புதைந்து இறந்தார்கள் என்றே தெரியவில்லை. இப்பிரச்சனையால் மலையகத் தமிழர்கள் இன்றைக்கும் கவலையோடு நிம்மதியில்லாமல் இருக்கின்றார்கள். (இந்தப் பிரச்சனையை தனிப்பதிவாக விவரித்து எழுதவேண்டும் என்று நினைத்துள்ளேன்).

இவ்வாறு பூர்வீக தமிழர்களானாலும், மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களானாலும், கடந்த காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு தேசிய அரசாங்கம் அமைந்தால் நிம்மதி கிடைக்குமா என்பது தெரியவில்லை.

***

இறுதிப்பகுதி  (Tail-Piece) :
________________________



Sri Lanka in the Modern Age: A HIstory - Nira Wickramasinghe (Oxford)

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த நூல் 18ம் நூற்றாண்டிலிருந்து, மகிந்த ராஜபக்‌ஷே ஆட்சியின் இறுதிகாலம் வரை இலங்கையின் வரலாற்றையும், அங்குள்ளத் தமிழர்களின் போராட்டங்களையும் பல தரவுகளோடு விரிவாக எடுத்துச் சொல்கின்றது.

இலங்கை வரலாறு தொடர்பான அக்கறை கொண்டவர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூலாகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-08-2015

#KsRadhakrishnan #KSR_Posts #SriLankaParliamentElection2015

#NationalGovernmentinSriLanka #Tamils

See Also :

1 : http://ksr1956blog.blogspot.in/2015/08/sri-lanka-parliament-elections-2015.html

2 : http://ksr1956blog.blogspot.in/2015/08/sri-lanka-elections-2015.html

3 : http://ksr1956blog.blogspot.in/2015/07/sri-lanka-parliament-election.html

4 :  http://ksr1956blog.blogspot.in/2015/08/blog-post_19.html

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...