Wednesday, August 19, 2015

தஞ்சைத் தரணியில் நாசக்கார ஷெல் எண்ணெய் எரிவாயு திட்டம்- ‎Shale Gas Projects‬



தஞ்சைத் தரணியில் நாசக்கார ஷெல் எண்ணெய் எரிவாயு திட்டம்- ‎Shale Gas Projects‬

_________________________________________

நேற்றைய (18-08-2015) தினமணியில் வெளியான,  காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும்  “ஷெல்” கேஸ் பிரச்சனை குறித்த எனது  கட்டுரையை அப்படியே பதிவு செய்திருந்தேன்.  அதில் அச்சில் வராத செய்திகளை இத்தோடு பதிவு செய்தால் மேலும் சில தரவுகள் கிடைக்கும்.

**
  ஆரம்பத்தில் குஜராத்தைச் சேர்ந்த, “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்ரேஷன் லிமிடெட் ”  என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய எரிவாயுக் கழகம் காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு அனுமதி வழங்கியது.

தற்போது “ஷெல்” எரிவாயு எடுக்கும் திட்டம் தஞ்சை வளநாட்டுக்கு வந்து, விவசாயத்தைச் சீரழித்துவிடும் என்ற கடுமையான மனஉளைச்சலுக்கு டெல்டா விவசாயிகள் ஆளாகியுள்ளனர். 700கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல் கட்டமாக இந்தப் பணியை ஆரம்பிக்க உள்ளது ஷெல் எரிவாயு நிறுவனம்.

ஃபிராக்கிங் (நீராற்றல் முறிப்பு) தொழில்நுட்ப முறையில் “ஷெல் எரிவாயு” எடுப்பதற்கு,  துளையிடப்பட்ட நிலத்தில் ஆழ்குழாய் மூலமாக 20கோடி லிட்டர் தண்ணீர் ரசாயனக் கலவையுடன் செலுத்தப்படும். இந்த கலவை நிலத்துக்குக் கீழே செல்லும்போதே உடைப்பை ஏற்படுத்தும். ரசாயனக் கலவை நிலத்தடி நீரோடு கலந்து பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பாறைப்பிளவுகளோடு சேர்ந்து இந்த நீர் மீண்டும் தரைமட்டத்துக்குக் கொண்டுவரப்படும்போது, இக்கலவையைத் தனியாகச் சேகரித்துவைக்க வெட்டப்பட்ட குளங்கள் தேவை.

அதிகமான உப்புத்தன்மை உடைய இந்த நீர் ரசாயன வேதிப் பொருட்களோடும் இருப்பதால் பாசன வாய்க்கால்களில் அல்லது நிலத்தில் அப்படியே வெளியேற்றினால் நிலம் பாழ்பட்டு விவசாயத்திற்கு பயன்படாத மலட்டுத் தன்மையை அடையும். மேலும் இந்த வேதிக்கலவையிலிருந்து கதிர்வீச்சு பாதிப்புகளும் ஏற்படும்.

கதிர்விச்சினால் புற்றுநோய் உள்ளிட்ட சிலநோய்கள் பரவும். விவசாய நிலம் பாதிக்கப்பட்டு, கடல்நீரும் உட்புகுவதால்  நிலத்தடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்படும். சுவாசிக்கும் காற்றும் பாழ்படுத்தப்படும்.

10 ஆயிரம் அடிக்கு கீழே கிணறு அமைத்து இந்த வாயுவை எடுக்கும் போது பூமிக்கடியில் ஏற்படும் வெற்றிடத்தால்   பூகம்பம் அபாயங்களும் ஏற்படும்.

இந்தியாவில் காம்பே வளைகுடா, கிருஷ்ணா, கோதாவரி, காவிரிப்படுகை ஆகிய இடங்களில் ஷெல் எண்ணெய் மற்றும் எரிவாயு  இருப்பதாகக் கண்டுபிடிக்கட்டுள்ளது.

உலகில் பல நாடுகளில் ஷெல் எரிவாயு எடுக்கும் இந்த முறைகள் தடை செய்யப்பட்டுள்ளன. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள காவிரிப்பகுதி ஆசியாவிலே மிக நீண்ட சமவெளி.

இதுகுறித்து வேகமாக பணிகள் நடக்கின்றன. கடலூர் மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் என்று ஒப்புக்கு நடத்தப்படுகின்றது. தமிழக அரசுக்குத் தெரிந்துதான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகநாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த ஷெல் வாயு
எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நச்சுத்தன்மையோடு தமிழகத்தைப்
பாழ்படுத்தும் இந்த ஆலைகளை மட்டும் வேகமாகச் செயல்படுத்தவேண்டிய அவசியம் என்ன?

 டில்லி பாதுஷாக்கள் விரும்பும் நச்சுத் தொழிற்சாலைகளை அமைக்க தமிழகம் என்ன குப்பைக் கூடை என்று நினைத்துவிட்டார்களா? மாநில அரசும் இதற்கு துணைபோகிறது.

உலகத்தின் முதல் நாகரிகம், மூத்த மொழி தமிழ், முதுகுடி  என்றெல்லாம் தொன்மைகள் மிகுந்த தமிழகத்தை மத்திய அரசே சீண்டிப்பார்க்க வேண்டாம்.


தினமணிக்கட்டுரை : https://www.facebook.com/ksradhakrish/posts/1638919843064365

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-08-2015.


‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬ ‪#‎Dinamani‬ ‪#‎ShaleGasProjects‬ ‪#‎TamilnaduPendingPlansandProjects‬ ‪#‎தமிழ்நாடுதிட்டங்கள்

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...