Tuesday, August 18, 2015

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - Sri Lanka Parliament Elections 2015 (2)




நேற்று நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று மதியம் முழுமையாக வெளியானது. ரணில் பிரதமராகப் பதவியேற்க இருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிட்டத்தட்ட 14இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2010ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த அணி 14 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.  மேலும் தேசியப்பட்டியல் மூலமாக இந்தக் கூட்டணியிலிருந்து 14உறுப்பினர்களோடு  ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றிபெற்றுள்ளார்.

இலங்கை அரசியலில், “ஒரு நாடு இரு தேசம்” என்ற கொள்கை முழக்கத்தோடு போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் தமிழ்தேசியம், சுய நிர்ணய உரிமை என்ற உறுதிமொழியோடு தேர்தலைச் சந்தித்தனர்.

சம்பந்தம் அவர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கையின் வடக்கும், கிழக்கும் தமிழர்களின் பூர்வீக நாடு. அந்தவகையில் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுடைய உரிமைகளையும்,  தனித்தன்மையைக் காத்து உரிய அதிகாரங்களை பெற்றுத்தருவோம் என்று உறுதி தந்தனர்.

கொழும்பு மற்றும் இலண்டனில் இருந்து நமக்குத் தற்போது கிடைத்த தகவல்களின்படி, மகிந்த கட்சியில் இருந்து தற்போது வெற்றிபெற்ற சுமார் 25க்கும் மேலான  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ரணில் பக்கம் தாவ உள்ளார்கள் என்றும், இதன் காரணமாக ரணில் தனித்து ஆட்சியமைக்க தேவையான 113 ஆசனங்கள் கிடைத்து விடும் என்றும்
தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையும் (மூன்றில் இரண்டு), தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவும்   ரணில் அரசுக்கு கிடைக்கும்.  இதன்மூலமாக ரணில் அரசு அரசியல் சாசனத்தை மாற்றி அமைக்கவும் வாய்ப்புகள்  உள்ளது.

முன்பு இலங்கை வரலாற்றில் மூன்றில் இரண்டு பங்கை கொண்டு ஆட்சி புரிந்த ஜேர் .ஆர் ஜெயவர்த்தன , எப்படி அரசியல் சட்டங்களை மாற்றினாரோ அதுபோன்ற ஒரு பெரும்பான்மையை ரணில் அரசு எதிர்பார்கிறது. இதற்கு சர்வதேச காய் நகர்த்தல்களும்,உதவியும் ரணிலுக்குக் கிடைக்கும் என்று தெரிகிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களில் 196 பேரை மக்கள் தேர்ந்தெடுக்க முடியும். மீதமுள்ள 29பேர் தேசியப் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். கட்சிகள் பெற்றுள்ள இடங்களின் அடிப்படையில் இந்த உறுப்பினர் எண்ணிக்கை பிரித்து வழங்கப்படும். அப்படி பிரித்து வழங்கினாலும் ரணில் கட்சி பெரும்பான்மையை பெற முடியாது (113) தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு கொடுத்தால் மட்டுமே அவர்களால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை  தோன்றியுள்ளது.

தேர்தல் முடிவை  கவனிக்கும்பொழுது, கொடியவன் ராஜபக்‌ஷே தோல்வியடைந்தது ஒரு ஆறுதல் என்றாலும், 2010லிருந்து  முள்ளிவாய்கால் கொடூரங்களுக்கு சர்வதேச, சுதந்திரமான, நம்பகமான புலனாய்வு விசாரணை இன்னும் விவாதப் பொருளாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் ரணிலும் ராஜபக்‌ஷேவை விட்டுக்கொடுக்க மாட்டார்.
ரணில் விக்ரமசிங்கே பல உறுதிகள் தமிழர்களுக்கு வழங்கி, கடந்த தேர்தலில் வெற்றிபெற்றும் அவர் கொடுத்த உறுதிமொழிகளைக் காப்பாற்றவில்லை என்பதுதான் கடந்தகால உண்மை.

தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு, பொதுவாக்கெடுப்பு கோரிக்கையும் நிறைவேறுமா என்ற ஐயம் தான் ஏற்படுகின்றது. இவை இரண்டும் பிரதானமாக இருந்தாலும், தமிழர்களுடைய நிலங்களை சிங்களர்கள் அபகரித்து, அதைக் குறித்து வழக்குமன்றம் வரை சென்றும் இதுவரை நிலங்களை உரிய தமிழர்களிடம் ஒப்படைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இப்பிரச்சனையிலும் மைத்ரி சிரிசேனாவும், ரணிலும் கவனித்துச் செயல்படுவார்களா என்பது சந்தேகமான விடயமாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களும், சுயாட்சியும் வழங்குவதைக் குறித்தும் மைத்ரி சிரிசேனாவும், ரணிலும் ஆலோசிப்பார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இன்றைக்கு ரணில் புதிய பார்வையோடு, “எல்லோரும் ஒருங்கிணைந்து நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வோம்” என்று சொல்லியுள்ளார். ஆனால் இதை நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளலாமா என்பதே சந்தேகத்திற்கு இடமானது.

இந்தத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் சில இடங்களில் வாய்ப்புக் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஈழத்தில் உள்ள தமிழர்களின் நலன்களில் அக்கறைகொண்டு நாடாளுமன்றத்தில் வாதிடவேண்டியது தங்கள் கடமை என்று நினைக்க வேண்டும்.

மொத்தத்தில் இந்தத் தேர்தல் முடிவுகள் ஈழம், சுயநிர்ணய உரிமை, தமிழர்களுடைய உரிமை வேட்கை பற்றிய தாக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்பதுதான் மிகவும் கவலைக்குரிய செய்தியாகும்.



கட்சிகள்*   வாக்குகள்*  இடங்கள்* சதவிகிதம்*


 UNP ................5098927..............93....................... 45.66%
 UPFA ..............4732669..............83....................... 42.38%
 ITAK  .................515963..............14....................... 04.62%
 JVP    ................543944...............04....................... 04.87%
 SLMC ..................44193..............01....................... 00.4%
 EPDP  .................33244 ..............01.......................00.3% 

 ACMC .................33102..............00....................... 00.3% 
 DP     ...................28587..............00....................... 00.26%
 BJP   ...................20377 ..............00....................... 00.18%
 AITC ...................18644................00....................... 00.17%
 CWC ...................17107 ..............00....................... 00.15% 
 TULF  ....................4173 ..............00....................... 00.04%
 USP  .....................1895  ..............00....................... 00.02%

 OTHERS  ...........74497 ...............00....................... 00.67%


Registered Electors : 15499367

Total Polled : 11609283

Rejected Votes : 515180

Valid Votes : 11094103


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். |
18-08-2015

‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬ ‪#‎SriLankaParliamentElection2015

see also :  https://www.facebook.com/ksradhakrish/posts/1638642459758770


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...