Thursday, August 13, 2015

கருவேல மரங்கள் - Acacia Nilotica



ஆஸ்திரேலியாவிலிருந்து 1950களில் விதையாகக் கொண்டுவரப்பட்டு, பயிர்களுக்கு வேலியாகவும், விறகாகவும் பயன்படுத்த சீமைக் கருவேல மரங்கள் இந்தியாவுக்குள் புகுந்தன. அதேபோல வேலி மரங்களும் ஒருபக்கத்தில் வந்து சேர்ந்தன. இவை யாவும், நிலங்களில் மட்டுமல்லாமல், ஏரி, குளங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு நிலத்தடி நீரை உறிஞ்சுகின்ற பிசாசுகளாக பார்வையில் படுகின்றன.

இம்மரங்கள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்ப சலனங்கள் ஏற்படுகின்றன. அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் இவை ஆபத்தான தாவரங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் முற்றிலும் இம்மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இதைக்குறித்து ஆட்சியாளர்கள் சற்றும் அக்கரையில்லாமல் இருக்கின்றனர்.

தமிழ் நாட்டில் காட்டுக்கருவேல் மரம், சீமை உடை, சீமைக்கருவை, வேளிக்கருவை, டெல்லி முள், முட்செடி என அழைக்கப்படுகின்றது.
175அடி நீளம் வேர்விட்டு வளரக்கூடிய இத்தாவரம், 53மீட்டர் அளவு நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மையைப் பெற்றுள்ளது. இதனால் எந்த வறட்சியான காலகட்டத்திலும் வளரும். இதன் நச்சுத் தன்மையால் எந்த பூச்சிகளோ, பூஞ்சைகளாலோ தாக்கப்படுவதில்லை.

காலில் இந்த வேலி முட்கள்  தைத்தால் வேதனையும், விசத்தன்மையும் ஏற்படும் என்பதால் அக்காலத்தில் சீமைஎண்ணெயை ஊற்றுவதும் உண்டு.

எங்கள் கிராமத்தின் அருகே செவல்பட்டி பக்கத்தில் கீழாண்மறை நாடு என்ற உறவினர் கிராமத்திற்குச் செல்வதற்கே பயமாக இருக்கும் எனக்கு. ஏனெனில் நான்கு வயதில் அங்குச் செல்லும்போது, ஹவாய்ச் செருப்பை மீறி காலில் சீமைக்கருவேல முள் தைத்தது. சின்னவயதில் ஏற்பட்ட அந்த ரணத்தை நினைவில் வைத்தே அவ்வூருக்குச் செல்ல பயம் இருந்தது.

சிலகிராமங்களில் வேலி மரங்கள் நிறைய இருந்தால் அங்கே பெண்கொடுக்கக் கூட யோசிப்பார்கள்.ஆடுமாடுகள், பெட்டைக் கோழிகள் இதன் பூக்கள் காய்களைச் தின்றாலோ, இம்மரத்தின் கீழே கட்டிப் போட்டாலோ அவற்றிற்கு மலட்டுத்தன்மை ஏற்படும்.

அவ்வைப்பாடலான "வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை." என்ற வரிகள் தான் இம்மரங்களைப் பற்றிச் சொல்லும்போது நினைவுக்கு வருகின்றது.

விஷத்தன்மையும், சுற்றுச்சூழல் பாதிப்பும், நிலத்தடி நீரை உறிஞ்சி சவர் நீராக்கிவிடும் இந்த கொடிய கருவேல மற்றும் வேலி மரங்கள் நமக்குத் தேவைதானா? நீர்நிலைகளை பாழ்படுத்தும் ஆகாயத் தாமரையும் இதே நிலைமைதான்.

எனவே,  மத்திய மாநில அரசுகள் இந்தக் கொடியத் தாவரங்களை அப்புறப்படுத்த முனைவதோடு மட்டுமல்லாமல் மக்கள் சக்தியும் இதற்குத் துணையாக இருக்கவேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-08-2015. 

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...