Friday, August 14, 2015

இயற்கைச் சீற்றங்கள் - Natural Disasters.


பௌதீகத்திலும், நிலவியலிலும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்து, பல ஆய்வுகள் செய்த நெருங்கிய நண்பர் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், கடற்கரை ஓரத்தில் 1996ல் நான் வீட்டு மனை வாங்கும்போது, அங்குபோய் ஏன் வாங்குகிறீர்கள் என்று தடுத்தார்.

நேற்றைக்கு என்னோடு கிழக்குக் கடற்கரைச் சாலையில் அவர் பயணிக்கும்போதும், இப்பகுதி மட்டுமில்லாமல், ஒரிசாவிலிருந்து தென்முனைக் குமரிவரை எப்போது வேண்டுமானாலும் இயற்கைச் சீற்றத்தினால் பாதிப்பு வரும் என்று என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.

 “எப்படி” என்று கேட்டேன். அவர் அதற்கு, “2004 டிசம்பரில் சுனாமி என்ன சொல்லிக் கொண்டா வந்தது. இந்தோனேசியா கடற்கரை ஒட்டிய பகுதிகளில் எப்போதும் நில அதிர்வு, கடல் மட்டம் அதிகரித்து பூமியை விழுங்குவது போன்ற சீற்றங்கள் ஏற்படலாம். அதற்கான அறிகுறிகள் அங்கு தென்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் என்றால், நேரடியாக அதன் பாதிப்பு நமது கிழக்குக் கடற்கரைச் சாலை வரை ஏற்படும். சென்னை போன்ற கடற்கரையோர நகரங்களுக்கெல்லாம் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம்.

ஏற்கனவே நியூஸிலாந்து அருகே உள்ள தீவுகளை பசிபிக் கடல் விழுங்கிக்கொண்டு வருவதால் அங்குள்ள மக்கள் அகதிகளாக, நியூஸிலாந்து , ஆஸ்த்திரேலியா, டாஸ்மேனியா நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.

சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடங்கள், பெருக்குத் தொடர்  (geometric ratio) கட்டுப்பாடில்லாமல் பெருகி வருவதாலும், கணக்கற்ற வாகனங்கள் வெளியேற்றும் புகையினாலும் வெப்பமண்டலம் அதிகரிப்பதாலும் சென்னைக்குக் கேடுகள் ஏற்படும்” என்றார்.

நான், “ இம்மாதிரி அடுக்குமாடிக் கட்டிடங்கள் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கட்டப் படுகிறதே அங்கு என்ன ஆபத்துகள் இருக்கிறது” என்று கேட்டேன்.

“ அங்கும் புவியியல் ரீதியாக தீர்க்கமுடியாத பெரும் பிரச்சனைகளாக உருவாகி வருகின்றன. மறுக்கவில்லை” என்றார்.

 “அப்படியென்றால் சென்னையை விட்டுவிட்டு கிராமத்தை நோக்கிச் சென்றுவிடலாமா?” என்று கேட்டதற்கு,  “அது நல்லதுதான் கிராமத்திற்கே போய்விடுங்கள்” என்றார் வேடிக்கையாக.

அவர் சொன்ன கருத்துகள் உண்மையாக நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் ஆய்வுக்கும் விவாதத்துக்கும் உரிய பொருள் என்பதை மட்டும் உணர முடிந்தது.

கடல்நீர் கரை மீறுவதும், சுனாமியும், நில அதிர்வுகளும் எப்போது ஏற்படும் என்பது கண்டறிய முடியாவிட்டாலும், அதன் பாதிப்புகளிடமிருந்து பாதுகாக்க நாம் முன்னெச்சரிக்கையோடு முயலவேண்டும். ஏற்கனவே இந்தியா நில அதிர்வுகளுக்கும், சுனாமி தாக்குதலுக்கும் பலியாகும் என்ற எச்சரிக்கைகளும் உள்ளன.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-08-2015.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...