Monday, August 17, 2015

இன்றைய இளைஞர்களின் கிராமத்தை நோக்கிய பயணம். - Today Youths Turn back to Natural Farming.



















 இயற்கை வேளாண்மையை பறைசாற்றிய ஜப்பான் இயற்கை விவசாயி மாசானபு ஃபுகாகோவின்  நினைவுதினமான நேற்றைக்கு (16-08-2015)
ஐந்து ஆறு இளைஞர்களும், இரண்டு பெண்களும்  வந்து என்னைச் சந்தித்தார்கள்.

இவர்கள் அனைவருமே ஐ.ஐ.டியிலும், பிட்ஸிலும் படித்த திறமையான, துடிப்புமிக்க இளம்வயதினர்.
அவர்களோடு பேசும்போது, தாங்கள் கிராமங்களுக்குச் சென்று விவசாயம் செய்யப் போகின்றோம். எங்களைப் போல படித்த பல இளைஞர்கள் இன்றைக்கு வேறு பணிகளுக்குச் செல்லாமல் விவசாயத் தொழிலை விருப்பத்தோடு செய்யத் தொடங்கியுள்ளனர் என்றார்கள்.

நான் அவர்களிடம், “நானெல்லாம்  கிராமத்து விவசாயத்தை விட்டுவிட்டு நகரத்துக்கு வந்துவிட்டேன். உங்களுக்கு வெளிநாடுகளிலும், பல்வேறு வசதிகளோடு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்போது, ஏன் கிராமத்தை சோக்கிச் செல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டேன்.

“கிராமம் தான் உண்மையான இந்தியா. அதுதான் நாட்டின் ஆன்மா. அமைதியான வாழ்க்கை. அதை நேசிக்கின்றோம். உங்கள் நிலங்களை எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் உங்கள் நிலத்தில் உழைத்து வெற்றியை ஈட்டுவோம்” என்றதும் எனக்கு சற்று வேடிக்கையாகவும், பெருமிதமாகவும் இருந்தது.

அந்த இளைஞர்கள் ஃபுக்கோ, நம்மாழ்வார், குடிவாடா நாகரத்ன நாயுடு ஆகியோர்களின் இயற்கை வேளாண்மைப் பணிகள் பற்றி நன்கு அறிந்து என்னிடம் விவரித்த விபரங்களின் சாரம் இதோ!

***
ஜப்பானில் இயற்கை வேளாண்மையை ஆய்வுசெய்து, தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அதே விவசாயத்திற்காகச் செலவிட்டவர் மாசானபு ஃபுகாகோ.

 “ வேட்டையாடி உணவு சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக்காலம். ஒரே இடத்தில் மனித சமூகம் தங்கி வாழ்க்கை நடத்துவதற்கு பயிர்கள் வளர்க்கப்பட்டது என்பது கலாச்சாரக் கண்டுபிடிப்பு” என்கிறார் ஃபுக்கோ.

 ஃபுகாகோவின் விவசாய முறையிலுள்ள முக்கியவேறுபாடு என்னவென்றால், அது இயற்கையை ஆக்கி்ரமித்து அதை ‘மேம்படுத்து’ வதில் அல்லாமல் இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது.

 ஜப்பானில் யகோஹாமா நகரில் நுண்ணியிரிகள் நிபுணராக வாழ்க்கையைத் துவக்கின அவர் தாவர நோய்கள் குறித்த நிபுணராக உருவானார். சில ஆண்டுகள் சோதனைச்சாலைகளில் பணிசெய்துவிட்டு மீண்டும் தன்னுடைய கிராமத்திற்கே திரும்பினார்.

தன்னுடைய கிராமத்தில் தரிசு நிலத்தின் வழியாக சென்றபோது, அங்கே நெற்பயிர்கள் நல்ல திரட்சியான தானியங்களோடு விளைந்திருப்பதை பார்த்து அதிசயித்தார். ஒரு உழப்படாத,உரமிடாத, பூச்சிமருந்து எதுவும் தெளிக்காத, களைபறிக்காத நிலத்தில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்ததைப் பார்த்தபின் அவருக்கு ‘எதையுமே செய்யாமல் விவசாயம் செய்யவேண்டும்’ என்ற ஆர்வம் ஏற்பட்டது.

தன் தந்தை கவனித்து வந்த விவசாயத்தில் இவர் மாற்றங்கள் ஏற்படுத்தினார். செய்முறைகளை மாற்றி மாற்றி அனுபவத்தில் கற்ற பாடத்தினால் நிலத்தை பாழ்படுத்தாமல் வேதியல் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என பயன்படுத்தி உற்பத்தி செய்த தானியங்களைவிட அதிக அளவில் சாகுபடியும் செய்தார். சில ஆண்டுகள் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டதும் உண்டு.

மனிதர்கள் ‘அதிக உற்பத்தி’ அல்லது ‘அதிக தர’த்துக்காக உழைக்காமல், மனிதகுல நன்மைக்காக உழைக்கும்போது, அவர்கள் உழைப்பு தனித்தன்மையுடையதாகிறது. ஆனால் தொழில்மயப்படுத்தப்பட்ட வேளாணமையின் தாரக மந்திரமோ ‘அதிக உற்பத்தி’  என்று மட்டுமே முழங்குகிறது.

 “வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல; மனிதர்களை வளர்த்து முழுமை பெறச்செய்வதுதான்” என்கிறார் ஃபுகாகோ. 1975ம் ஆண்டில் அவர் எழுதிய  ஒற்றை வைக்கோல் புரட்சி (one straw revoultion)  என்ற நூல் ஜப்பானில் இயற்கை வேளாண்மை குறித்த ஆர்வத்தை  வேகமாகப் பரப்பியது.

ஃபுக்கோவின் இயற்கை வேளாண்மை குறித்த நான்கு அடிப்படைகள் ஆதாரங்கள்.

1. மண்பதப்படுத்துதல் : மண்ணைப் பதப்படுத்துவதற்கு அதிகமாக உழுகிறோம், இது தேவையற்றது என்கிறார் ஃபுக்கோ. இயற்கை தானாக உழுதுகொள்ளும், அதாவது மண்ணிலுள்ள நுண்ணியிர்கள், தாவரவேர்கள் தரையில் நுழைவதன் மூலமும், சிறு விலங்குகள் மூலமும் நிலம் தன்னைத்தானே உழுதுகொள்ளும்.

ஆழமாக உழும்போது தேவையில்லாத களையின் விதைகள் பூமிக்கு மேலெ வந்து அதிகமாக முளைக்கும். நிலத்தை தரைதெரியாமல் வைக்கோலை பரப்பிவைக்கும்போது அது  மண்ணில் மக்கிப்போவது மட்டுமல்லாது களைகளையும் கட்டுப்படுத்தும் .

  2. உரங்கள் : வேதியல் உரங்களை இடுவதன் மூலம் மண்ணின்வாழும் நுண்ணியிர்கள் அழிக்கப்படுகின்றன. வைக்கோல், பசுந்தாள், பறவையின் எச்சங்கள் ஆகியவற்றை உபயோகித்தே அதிக சாகுபடி பெறமுடியும் .

3. களைகள் : உழுவதை நிறுத்தும்போது களைகளும் குறைந்துவிடுகின்றன, களைகளை ஒழிப்பதற்கு களைக் கொல்லிகள் (வேதியல்) பயன்படுத்தும் போது  மண்ணின் வளமும் நுண்ணியிர்களும் அழிக்கப்படுவதோடு மழைபெய்யும் நீரில் கலந்து அது நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.

4. பூச்சிக்கட்டுப்பாடு: நிலத்தில் நீர்தேங்காமல் பார்த்துகொண்டாலே பூச்சிகளை  கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம், நாம் ரசாயன பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும்போது பூச்சிகளின் ‘இரையினங்களையும்’ சேர்த்தே அழித்துவிடுகிறோம்.

எலிகளைக் கட்டுப்படுத்த பாம்புகள் உள்ளது போன்று இயற்கையாக பூச்சிகளை கட்டுப்படுத்த இரையினங்கள் உண்டு.

மேலும் இந்த ரசாயனப் பூச்சிக்கொல்லிகளில் செடிகளில் பத்து சதவீதமும் நிலத்தில் மீதமும்  தெளிக்கப்படுகிறது அது நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு நுண்ணியிர்களையும் அழித்துவிடுகிறது.

  ஃபுகாகோவின்  பாதை  உலகத்தின் வேளாண்மைக் கொள்கைக்கு  நேரெதிரானது.

“ நான் காலத்தால் பின்னடைந்து விட்டதாக தோன்றக்கூடும். ஆனால் நான் சென்றுகொண்டிருக்கும் பாதைதான் அறிவுபூர்வமானது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் ஃபுக்கோ.

மேலும் ‘இயற்கையில் இருந்து மக்கள் எவ்வளவு தூரம் விலகி செல்கிறார்களோ, அவ்வளவுதூரம் அதன் மையத்திலிருந்து சுழற்றி எறியப்படுவார்கள். அதே சமயம் குவி மைய விசையால் இயற்கைக்குத்திரும்பும் ஆசை அவர்களுக்கு வருகிறது’ என்பது அவரது அசாத்திய நம்பிக்கை.

கூடவே வணிகப் பயிர்களை விளைவிக்காதீர்கள் ,பொதுவாக வணிக வேளாண்மை முன்கூட்டி கனிக்கமுடியாத ஒரு விசயமாகும் என்கிறார் ஃபுகாகோ.

சமீபத்தில் பி.சாய்நாத் அவர்கள் பெங்களூரில் ஆற்றிய உரையில் இந்திய விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளில் சில லட்சத்திற்கும் மேல் தற்கொலை செய்துகொண்டார்கள்.  அவர்கள் அனைவரும் பணப்பயிரான பருத்தி பயிரிட்டவர்கள்.

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் ‘வெண்ணிலா’ பயிரிட்டவர்கள் விலைவீழ்ச்சி காரணமாக கடன் சுமையில் தற்கொலை செய்துகொண்டார்கள்.

ஏனென்றால் வணிகப்பயிர்களின் சந்தை என்பது பன்னாட்டு, அல்லது பெருமுதலாளிகளின் கைகளில் சிக்கியுள்ளது. எந்த ஒரு விவசாய இடுபொருளான விதையோ, உரமோ, பூச்சிமருந்தோ விவசாயிகள் நலனோ, மக்கள் நலனோ கருத்தில் கொள்ளாமல் பணம் சம்பாதிப்பதன் நோக்கமும் ஆதிக்க நோக்கமும் கொண்டதாக இருக்கிறது.

இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கூடாதென்று விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், திரு.பாசுதேவ் ஆச்சார்யா தலைமையில் உள்ள பாராளுமன்ற நிலைக்குழுவும்  தெரிவித்தார்கள். உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர்கள் குழுவும் அனுமதிக்கக்கூடாது என்றே பரிந்துரைத்தார்கள். ஆனால் வேளாண் அமைச்சரோ மான்சாண்டோவின் நலன்களுக்காக ‘ஒரு கார்ப்பரேட் ஆலோசோகர்’ ஒருவரை நியமித்து ஆய்வு செய்யச்சொன்னார்.

இயற்கையாக விளையும் காய்கறிகள். பழங்கள் மனிதனுக்கு நோய் தருவதில்லை, செயற்கையான முறைகளில் வளர்க்கப்படும் பொருட்கள் மனிதர்களின் தேவைகளை தணித்தாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி நோயாளிகள் ஆக்கிவிடுகின்றது. இது விவசாயிக்கும், நுகர்வோருக்கும் கஷ்டத்தை உண்டாக்குகிறது.

ஃபுகாகோ விளைவித்த காய்கறிகள், பழங்கள், தானியங்களை செயற்கைமுறை விவசாய உற்பத்தி விலையைவிட சந்தையில் குறைவாக விற்குமாறு கடைக்காரர்களை கேட்டுக்கொண்டார். ஏனென்றால் செலவீனமே இல்லாத முறையில் விளையும் பொருட்களை சந்தைவிலையில் ஏன் விற்கவேண்டும் என்கிறார்.

தமிழகத்தில் இயற்கை வேளாண்மை முறைக்காக மறைந்த நம்மாழ்வர் போன்ற ஆளுமைகள்  மாசானபு ஃபுகாகோ போன்று முன்னெடுத்துச் சென்றார்கள்.

ஆந்திரத்தில் குடிவாடா நாகரத்தினம் நாயுடு அரசுப் பணிகளில் இருந்து விலகி, விவசாயமே தன்னுடைய மூலத் தொழில் என்று இன்றைக்கும் பாடுபட்டு வருகின்றார். இன்றுவரை இந்தியாவே அவரைக் கொண்டாடுகின்றது.

உலகின் பல நாடுகள் இவரது செயல்பாடுகளுக்காகச் இவரைச் சிறப்பித்துள்ளன. அமெரிக்க அதிபர் புஷ் இவருடைய பண்ணைக்கே வந்து, நாகரத்தினம் நாயுடுவின் விவசாயப் பணிகள் பற்றிக் கேட்டறிந்தது மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்கு வந்து எங்களோடு பணியாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டபோது மறுத்துவிட்டார்.

ஆந்திராவில் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில்  இவரது பண்ணைக்கே வந்திறங்கி, இவரோடு உண்டு, பேசி, இவருடைய வேளாண் பணிகளைக் கவனித்துப் பாராட்டினார்.

தினமும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் இவர் தோன்றுவதுண்டு. விவசாயத்தையும், அதன் எளிமையையும்  நம்பினோர் கைவிடப் படமாட்டார்கள் என்ற வாக்குக்கு சான்றாகத் திகழ்கின்றார் குடிவாடா நாகரத்தினம்.  இவரைப் பற்றி ஒரு பதிவு தனியாக பின்னால் செய்யவேண்டுமென்று நினைக்கின்றேன்.

இப்படியான நிலையில், மெத்தப்படித்த இன்றைய இளைஞர்கள் கிராமங்களை நோக்கிச் சென்று வேளாண்மையில் ஈடுபடவேண்டுமென்ற நோக்கத்தையும், இவர்களின் வேட்கையையும் தட்டிக்கொடுத்து அவர்களை ஊக்குவித்து அதற்கான நடவடிக்கைகளையும் அரசுகளும், நாமும் செய்யவேண்டும்.

”வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோலுயரும் கோலுயரக் கோனுயர்வான் என்ற அவ்வை வாக்கை அரசுகள் கவனத்தில் எடுத்துச் செயல்படவேண்டும்.

அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு, என்ற நம் பண்பாட்டு வேளாண்மை  கார்ப்பரேடுகளின் நலன்களுக்காக இல்லாமல் விவசாயிகள் மற்றும்  நுகர்வோர் நலன்களுக்காக செய்யும் முறைதான் இதயசுத்தியானது.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-08-2015.

#KsRadhakrishnan #KSR_Posts

#Agriculture #NaturalFarming #MasanobuFukuoka #GudivadaNagaratnamNaidu
#TodayYouthsTurnbacktoNaturalFarming.






No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...