Tuesday, August 4, 2015

புதுடெல்லி நினைவுகள் - New Delhi

கடந்த வாரம் டெல்லி சென்ற பொழுது, மறுநாள் தான் கவனிக்கவேண்டிய பணிகள் இருந்தது. இதற்கிடையில் சென்னைக்கு ஏன் திரும்பவேண்டுமென்று நினைத்து வெஸ்டர்ன் கோட்டிலே தங்கியிருந்தேன்.

1970களின் துவக்கத்தில் டெல்லிக்கு முதன்முதலாக சென்றதுண்டு. அதன்பின் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தில், முதுகலை ஆந்திரஃபாலஜி வகுப்பில் சேர்ந்து சில நாட்கள் வகுப்புகளுக்குச் சென்றதுண்டு.

பழைய இடங்களை சற்று சுற்றிப் பார்ப்போமென்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சென்றுவந்தேன். அங்குள்ள கேண்டீனில் பூரி மசாலாவும்,  பிரெட் டோஸ்ட்  ஆம்லேட்டும் டீயும் நன்றாக இருக்கும் அதை ஒரு கை பார்த்துவிட்டு, ஒருகாலத்தில் பிரம்மித்த கன்னாட் பேலஸை கால்நடையாகச் சுற்றிவந்த பொழுது, தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழ்ந்த மெட்ராஸ் ஹோட்டல் இன்றைக்குச் சிதிலமடைந்துள்ளதைக் காண முடிந்தது.

தென்னிந்தியாவிலிருந்து டெல்லி செல்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய உணவு வகைகள் 1930லிருந்து, தென்னிந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்களை இந்த உணவு விடுதிதான் ஈர்த்தது.  சென்னையில்  உள்ள டவுட்டன் கபேயில் இட்லியில் சூடான சாம்பாரை ஊற்றி ஸ்பூனில் சூடாகச் சாப்பிடுவது போல இருக்கும்.  அதன் மாடியிலே இதேபோல மற்றொரு உணவுவிடுதியும் 1960களில் துவங்கப்பட்டதாக செய்தி.

அங்கு பணியாற்றுகின்றவர்கள் அத்தனைபேரும் வடபுலத்து மக்கள்.
 சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, கண்ணாடி தம்ளரில் தேனீர்,காபி சாப்பிடலாம். டபரா செட் கிடையாது. கீழே வந்தால் செண்ட்ரல் நியுஸ் ஏஜென்ஸியில் தமிழ் பத்திரிகைகளான, தினமணி, தினத்தந்தி அப்போது கிடைக்கும். அதை வாங்கிக்கொண்டு, தென்புறம் காதி கிராமோத்யோக் பவன் அருகில் உள்ள ரீகல் தியேட்டரில் திரைப்படங்கள் பார்க்க 1970காலகட்டங்களில் செல்வதுண்டு.

இந்த ரீகல் தியேட்டரில், கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா, நாஞ்சிலார் போன்றவர்கள் திரைப்படங்கள் பார்க்கச் சென்றதுண்டு. தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் பொழுது, டெல்லி வரும்போது இந்தத் திரையரங்கில் திரைப்படங்கள் பார்த்ததாக டெல்லி சம்பத் என்னிடம் கூறினார்.

அதுபோல ஹெரிடேஜ் சினிமா அரங்கத்திலும்  ‘யாதோன் கி பாரத்’ அல்லது “பாபி’ சினிமா பார்த்ததாக நினைவு.  இன்றைக்கும் தொடர்ந்து கென்னட் பேலசில் அதேஇடத்தில் ஒரு கடையாக இருந்தது “ஜெயின் புக் ஸ்டால்”. இந்தக் கடை தற்போது சகோதரர்கள் பங்குபிரித்து அதன் வடபுறத்திலே புதிதாக ஒரு ஜெயின் புக்ஸ்டால் உருவாகியுள்ளது. அருமையான கிடைப்பதற்கரிய நூல்கள் இங்கு கிடைக்கும்.

வைகோ அவர்கள் டெல்லியில்  இருக்கும் பொழுது, இங்குள்ள சைனா கார்டனுக்கு எங்களையெல்லாம் அழைத்துச் செல்வது வாடிக்கை.








1970களில் உள்ள கென்னாட் பிலேஸ் ஒவ்வொரு நாளும் மாற்றமடைந்து  வருகிகின்றது. கால மாற்றத்தினால் இங்குள்ள ஜனங்கள் அதிகமாவும், வேகமாகவும் நடைபோடுகின்ற காட்சியைக் காண முடிகின்றது.  ஆனாலும் அங்கே பறந்து திரியும் புறாக்கள் என்றைக்கும் போல சுதந்திரமாக உள்ளது.

பாலிகா பஜார் 1970களில் கட்டப்பட்டது என்று நினைக்கின்றேன். அங்கேயுள்ள கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவது சில காலம் மோகமாக இருந்தது.

இந்தியாகேட் போர்ட் க்ளப் அருகே உள்ள புல்வெளியில், கால்களை மாலிஷ் செய்வதும்,  மெரினா கடற்கரையில் சிறுவர்கள் சுண்டல் விற்பது போல,  அங்கு விற்கும் கடலை பெரிதாக இருக்கும்.


கரோல் பார்க் பகுதி இதிலிருந்து வேளாண்மை விஞ்ஞானத் தொழில்நுட்ப- பூசா வரை டெல்லியில் தமிழர்கள் பரவி இருந்தனர். இப்போது மயூர் விஹார், ஆர்.கே புரம் போன்ற பகுதிகள் மட்டுமில்லாமல் பல பகுதிகளிலும் பரந்து வசிக்கின்றனர்.

டெல்லி தமிழ்ச் சங்கம் அரிய பல பணிகளை மேற்கொண்டுள்ளது. அதனோடு தொடர்புகள் இல்லையென்றாலும், என்னுடைய  “நிமிரவைக்கும் நெல்லை நூல்” அறிமுக விழாவில் வைகோ, மாலன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான கிருஷ்ண மணி, பென்னேஸ்வரன் போன்றவர்கள் டெல்லித் தமிழ்ச்  சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் 1970களிலே பார்த்தாலும், இன்றுவரை சபைகளின் இருக்கைகளில் அமரவில்லை என்ற கேள்விகளை எதிர்கொள்வதுண்டு. அந்த வாய்ப்புகள் சிலரால் தடுக்கப்பட்டதால் அவர்கள் இன்றைக்கும் சீரும்  சிறப்புமாக வாழ்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன். பாராளுமன்றத்திற்குச் செல்ல சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். வாழ்க நமது ஜனநாயகம். ஏனெனில் அனுபவமும், உழைப்பும் தகுதியே தடை

நவீன தமிழ் இலக்கியத்திற்கு விதை போட்ட கணையாழி இதழ் இங்குதான் வெளிவந்தது. அன்றைக்கு இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, கஸ்தூரி ரங்கன், தி.ஜானகிராமன், கா.நா.சுப்பிரமணியம், வாஸந்தி, ஆதவன், அம்பை ( சி.எஸ்.லட்சுமி) போன்ற ஆளுமைகள் எல்லாம் அப்போது டெல்லியிலிருந்து கணையாழியை ஆதரித்த டெல்லிவாசிகள் ஆவார்.

இதைக்குறித்து இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்டது.
“ I loved my years in Delhi. At that time ‘Kanaiyazhi’ magazine was run from Delhi; possibly the first time a Thamizh magazine was run from outside Thamizh Nadu. ‘Kanaiyazhi’ was owned & edited by Mr. Kasturirangan who was also a correspondent for ‘The New York Times’ at that time. Thi. Janakiraman, who was also my school teacher, and I had a second connection through that magazine. Writers Ka. Naa. Subramaniam, Athavan, Sujatha and Vaasanthi were in Delhi too, besides Thi. Janakiraman. We all used to get together and have literary discussions every month. I am very happy to have been part of it. At that time I had a distant outsider’s view of Chennai, and everything seemed fine. Once I was in Chennai itself, I felt a small degree of alienation; there is definitely less creative freedom in the Chennai environment. There seems to be a hierarchical system which is non-existent in Delhi. Even though ‘suyamariyaadhai iyakkam’ started in Thamizh Nadu, human dignity seems to have less of a premium in Thamizh Nadu. I think it is basically because of an intrinsic, rigid caste system that existed in the Thamizh society, which the British were able to exploit by dividing the people broadly into Brahmins and non-Brahmins. In the North, the British reinforced the Hindu-Muslim division…all for their own purposes, very clever of them!”

1970களில் ஸ்டீபன் மற்றும் இந்துக்கல்லூரி ஆகியவை  மாணவர்களை ஈர்க்கும் கல்விநிலையங்கள் ஆகும். இன்றைக்கும் அவற்றுக்கு மாணவர்களிடையே மவுசு உண்டு. இன்றும் இங்குள்ள தமிழ்த்துறைகளும், பல்கலைக்கழகங்களும் முக்கியமானவை. மிராண்டா ஹவுஸில் உள்ள தமிழ்த் துறை குறிப்பிடத் தக்க ஒன்று.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மில்யா போன்ற கலாசாலைகளும் இன்றைக்கு பிரசித்தி பெற்று விளங்குகின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் துவங்கும் போது புதிய கல்வித்திட்டங்களும், பாடத்திட்டங்களும் புகுத்தப்பட்டன. இதற்கு இந்திரா காந்தி அவர்கள் முயற்சியும் நேரடி கவனமும் செலுத்தினார்.

இவையெல்லாம் ஒருபுரத்தில் நினைவிலிருந்தாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சரவணபவன் இதே பழைய மெட்ராஸ் கபே சற்று அருகிலும் ஜன்பத்தில் மற்றொரு விடுதியும், தமிழ்நாடு அரசு இல்லமும், ஆந்திரா பவனும் தமிழ்நாட்டிலிருந்து செல்பவர்கள் உணவுக்காக்த் தேடிச் செல்லும் இடங்களாக உள்ளது.

ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் உள்ள தொடர்பை இந்த விடுதியின் சுவர்கள் தான் அறிந்திருக்கும். டெல்லிக்கு முன்பெல்லாம் போக வேண்டுமென்றால் இம்மாதிரி விமான வசதிகள் அதிகம் கிடையாது. காலை ஒன்றும் மாலை ஒன்றும் என இரண்டு விமானங்கள் தான் உண்டு. இல்லையென்றால் ஜி.டி. எக்ஸ்பிரஸில் டெல்லிக்குப் பயணிக்க வேண்டும்.

இன்றைக்கு வெளிநாடுகளுக்குப் பயணிப்பதுபோல அப்போது  மூட்டை முடிச்சுக்களை தயார் செய்து புறப்படுவதுண்டு. இப்படியான டெல்லி நினைவுகள் சில.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-08-2015


see also : http://ksr1956blog.blogspot.in/2015/05/old-delhi.html

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...