Sunday, August 9, 2015

மலரும் நினைவுகள் : தீப்பட்டி லேபிள்களும், சினிமா பிட்நோட்டீஸ்களும்.. - Matchbox labels, Cinema bit notices.









கடந்தவாரம் எனது கிராமத்திற்குச் சென்றபோது,  என்னுடைய ஆரம்பப் பள்ளி தோழன் பொன்ராஜைக் காண அவனுடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

1959-60 என்று நினைவு . கறைபடிந்த அவனது வீட்டின் நிலைக் காலிலும், கதவிலும் அவன் ஒட்டிய தீப்பெட்டி லேபிள்களும், சினிமா பிட் நோட்டீசுகளும் பல தடவைப் பார்த்திருந்தும் அன்றைக்கும் கண்ணில்பட்டது.

கிழிந்து, சில எழுத்துகள் மட்டும் தெரியும்படி அவைகள் பார்வையில் பட்டபோது, அந்தக் காலத்தில் தீப்பெட்டி லேபிள்கள், தபால்தலைகள், பல வர்ணத்தில் வெளிவரும் சினிமா பிட்நோட்டீஸ்களைச் சேகரிப்பதில் தணியாத ஆர்வம் இருந்தது நினைவுக்கு வந்தது.

சினிமா பிட் நோட்டீஸ்களை ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிவிட்டு, பசை வாளியோடு சைக்கிளில் வருபவர் பல்வேறு வண்ணங்களில் விசிறி சூறைபோட்டுவிட்டுச் செல்வார். குறிப்பாக திருவேங்கடம், கழுகுமலை, கோவில்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் உள்ள கொட்டகைகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் பிட் நோட்டீஸ்கள் கிராமங்களுக்கு வரும்.

 

தீப்பட்டி உற்பத்தி நிலையங்கள் எங்கள் பகுதியில் கழுகுமலை, கோவில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, எட்டையபுரம் போன்ற இடங்களில் அப்போது  குடிசைத் தொழிலாக இருந்தது. அங்கு வேலைபார்ப்பவர்களிடமிருந்து  தீப்பெட்டியில் ஒட்டாத புதிய லேபிள்கள் கிடைக்கும்.

அப்போதெல்லாம் பால்பாயிண்ட் பேனாக்கள் கிடையாது, மையால் எழுதும் நிப்பு பேனாக்கள் தான். சாத்தூரில் தான் இந்தியாவிலே அதிக அளவில் நிப்புகள் தயாரிக்கப்பட்டன. தங்க நிறத்தில் மூலாமிடப்பட்ட அதன் நிப்புகள் கேட்டால் அள்ளிக்கொடுப்பார்கள்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளின் தபால்த்தலைகளும் சேகரிப்பதுண்டு. குறிப்பாக, இலங்கை தபால்த் தலைகள் அன்றைக்கு அதிக அளவில் கிடைக்கும்.  இவற்றைச் சேகரிக்க அந்த வயதில் பட்டப் பாடுகள் ஏராளம்.

மதுரை, திருநெல்வேலி சென்றால் அங்குள்ளவர்களிடம் தபால்த்தலைகள் வேண்டுமென்று சிறுவயதில் அடம்பிடித்ததெல்லாம் நினைவில் உண்டு. மெட்ராஸ் தாம்பரத்தில் என்னுடைய சித்தப்பா மறைந்த திரு.ஜி.கோபால்சாமி அவர்கள்  இராணுவத்தில் உயர் அதிகாரியாக அப்போது இருந்தார்.

சென்னை சென்றபோது, என்னை அழைத்துக்கொண்டு, தனக்குத் தெரிந்த நண்பர்களிடம் தபால்தலைகளைப் பெற்றுத் தந்ததை பெரிய பேறாகக் கருதினேன்.

என்னுடைய சகோதரர்கள் இருவருக்கும்  பாளையங்கோட்டையில் படிக்கும்பொழுது கல்லூரி காலத்தில், இலங்கை நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். 1950களில் அவர்களுக்கு வரும் கடிதங்களில் உள்ள ஸ்டாம்புகளை அப்படியே சேகரித்து, விடுமுறைக்கு எங்கள் வீட்டிற்கு வரும்பொழுது என்னிடம் கொடுப்பது வாடிக்கை. படிப்போடு இப்படியான சேகரிக்கும் ஆர்வமும் அப்போது இருந்தது.
அந்த அளவில் இந்தப் பழைய நினைவுகள் பால்யகால நண்பன் பொன்ராஜ் வீட்டிற்குச் சென்றபோது நிழலாடியது.

கணிதத்தில், வாய்ப்பாடு என்று சொல்லக்கூடிய அரிச்சுவடியை ஒருமுறை படித்தாலே அப்படியே சொல்லக்கூடிய ஆற்றலும், கணித அப்பியாசத்திலுள்ள கணக்குகள் அனைத்தையும் சில நொடிகளில் கூட்டிக் கழித்து விடை கொண்டுவரும் திறமையும் அவனிடம் இருந்தது.  தமிழில் செய்யுள்களை ஒருமுறைப் படித்தவுடன் அப்படியே வார்த்தை மாறாமல் ஒப்பிக்கின்ற ஆற்றலும் கொண்டிருந்தான்.

அவன் எல்லா ஆசிரியர்களும் கொடுக்கின்ற வகுப்புப் பாடங்களை உடனுக்குடன் முடிக்கும் திறன் கொண்டவன். நாங்களெல்லாம் தரிகினதோம் போட்டுக் கொண்டிருப்போம். இன்றைக்கு ஒரு கணிதமேதையாகவோ, விஞ்ஞானியாகவோ வந்திருக்க வேண்டியவன் பொன்ராஜ்.

திடகாத்திரமாக இருந்த அவன் உடல் சுருங்கி, பார்வைத் திறன் குறைந்து, அவனைப் பார்க்கும்பொழுது மனதைப் பாதிக்கத்தான் செய்தது. ஆனால், அவன் வீட்டின் கதவில் இன்றும் ஒட்டியிருக்கும் லேபிள்களின் மிச்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த பொன்ராஜின் திறமைகளை நினைவுக்குக் கொண்டுவந்தது.

பழைய காங்கிரஸிலிருந்து, ஜனதாகட்சி ஆரம்பித்தபோது,
எனது கிராமத்தில் ஜனதாகட்சி அமைப்பின் தலைவனாக இருந்தான் பொன்ராஜ். மொரார்ஜி தேசாய் கன்னியாக்குமரி வந்தபோது, “அவரைப் பார்க்கவேண்டும் என்னை அழைத்துச் செல்” என்று அவன் சொன்னபோது, திருநெல்வேலியிலிருந்து கன்னியாக்குமரி வரை நான் செல்லாமல்  உடன் ஒருவரை அனுப்பி, முன்னாள் எம்.எல்.ஏ பொன்னப்பநாடார் அவர்களின் புதல்வரும், அன்றைக்கு எம்.எல்.ஏவாக இருந்த பொன்.விஜயராகவன் மூலம், பிரதமர் மொரார்ஜியைச் சந்திக்க ஏற்பாடு செய்ததெல்லாம் பழைய நினைவுகள்.

பொன்ராஜ் இன்றைக்கு அரசு கொடுக்கும் பென்சனில் வாழ்ந்து வருகிறான். அதைக்கூட சங்கரன்கோவில் வட்டாட்சியார் அலுவலகத்தில் நான் ஒருமுறை நேரடியாகச் சென்று கிடைக்க
ஆவன செய்தேன்.

இப்போதெல்லாம் தபால் தலைகளும், நாணயங்களும் ஒரு சிலரால் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. தீப்பெட்டி லேபிள்கள், சினிமா பிட் நோட்டீஸ்களெல்லாம் இப்போதுள்ள தலைமுறைகளை ஈர்க்கவில்லை என்று நினைக்கின்றேன்.

உலகமயமாக்கலில் தற்போது, தீப்பெட்டித் தொழில்களும் நசிந்துவிட்டன. சினிமாக் கொட்டகைகள் யாவும் திருமண மண்டபங்கள் ஆகிவிட்டன. வீட்டு உபயோகத்திற்குக் கூட தீப்பெட்டிக்கு பதில் ‘கேஸ் லைட்டர்கள்” பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

அன்றைக்கு இருந்த இனிமையான நாட்கள் இன்றைக்குள்ள இளைய சமுதாயத்திடம் தொலைந்துவிட்டன. கிரிக்கெட்டும், வீடியோ கேம்களும், பீட்சாவும்  பெரும்பாலான நேரங்களை ஆக்கிரமித்துவிட்டன.

அது வேறுகாலம், இது வேறுகாலம் இது சரியா தவறா என்று சொல்வதற்கில்லை.

அன்றைக்கு, குளக்கரையோரத்தில் கிடைக்கின்ற நாவல்பழம், கொடிக்காய், நெல்லிக்காய், இளந்தைப்பழம், நுங்கு சில நேரங்களில் புளியம்பழங்கள் கூட நாமே பறித்துச் சாப்பிடுவதில் ஒரு மோகம் இருக்கும்.  சொந்தத் தோப்பில் கிடைக்கும் கொய்யாவும், மாம்பழமும், வாழைப்பழமும் அவ்வளவு ஈர்ப்பதில்லை.

திருநெல்வேலியிலிருந்து வாங்கிவரும் அல்வாவும், தனா.முனா கட்டிடத்தில் இருந்த சிவாஜி ஸ்டோரில் கிடைக்கும் பிரத்தியோகமான பெரீஸ் வட்ட பிஸ்கெட்டும், பச்சைக்கலர் சருகத்தாள் சுற்றிய பாரி சாக்லேட்டும், சங்கரன் கோவிலில் இருந்து வரும் சுல்தான் பிரியாணி பார்சலும், நவநீத கிருஷ்ணன் லாலா கடை மிக்சரும், கோவில்பட்டி மனோரமாவில் கிடைக்கும் மைசூர்பாகும், கடம்பூர் போளியும்,  சாத்தூரில் கிடைக்கும் ஓமப்பொடியும் பூந்தியும், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவும், குற்றாலம் மங்குஸ்தான் பழங்களும் தான் அந்தக் காலத்து அரிய தின்பண்டங்களாக தின்று தீர்த்தவை.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளைம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றால், அருப்புக்கோட்டை தமிழ மணி தியேட்டருக்கு முன்னால் உள்ள சேவுக்கடை பதார்த்தங்களும் சுவையால் ஈர்த்தவை. தூத்துக்குடி மக்ரோனியை இங்கே சொல்லாமல் தவிர்த்துவிட முடியாது.

 1960களில் பரோட்டாவை பிய்த்துப் போட்டு சால்னா ஊற்றி சாப்பிடும் பழக்கம் இருந்தது. எங்கள் கிராமத்தின் அருகே உள்ள திருவேங்கடத்தில் சாயிபு கடை புரோட்டா மிகவும் பிரசித்தம். செங்கோட்டை கேரள எல்லையில் கிடைக்கும் பார்டர் புரோட்டாவின் சுவையின் தன்மையை வாயால் சொல்ல முடியாது. கோழி லெக் பீஸை கடையில் பரிமாறுபவர்கள், ரெண்டு துப்பாக்கி, ஒரு துப்பாக்கி என்று செல்லப் பெயர் வைத்து அழைப்பார்கள்.

இப்போது ஒருசில இடங்கள் தவிர வேறு எங்கும் புரோட்டாவைப் பிய்த்துபோட்டுத் தரும்  பழக்கம் இல்லை. இன்றைக்குள்ள புரோட்டாவை சாப்பிட்டால் நெஞ்சிலே நிற்கிறது.

இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு இன்றைக்கு மவுசு இருக்கிறதா என்று தெரியவில்லை.  ஆனால், இவற்றை ருசி பார்த்தவர்கள் யாரும் மறந்துவிட மாட்டார்கள். சுவை என்றால் எங்கள்
தெற்குச் சீமைதானே...!!!


இதுவெல்லாம் ஒரு பதிவா? என்று நினைப்பவர்களுக்கு, பழைய கதவில் ஒட்டிய லேபிள்களும், நோட்டிஸ்களும் தரும் நெகிழ்ச்சிகள், அவை சுமந்துள்ள நினைவுகள் என நெஞ்சில் நினைத்தால் இன்றைக்கு உள்ள இயந்திர மயமான, போலியான வாழ்க்கையில் அது ஒரு சிரஞ்சீவி மருந்தாகத் தோன்றும் மலரும் நினைவுகள் தான்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-08-2015.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...