Thursday, August 13, 2015

சென்னைப் பல்கலைக் கழக பேராசிரியர். ராமு மணிவண்ணன் மீது அடக்குமுறை.



பேராசிரியர்கள் நாட்டு நலனையும், மாணவர்நலனையும் போற்றுகின்ற பெருந்தகைகள். பேராசிரியர் ராமு மணிவண்ணன் போல கடந்தகாலத்திலும் பல பேராசிரியர்கள் பொதுவான நாட்டுப் பிரச்சனைகளில் தங்களின் உரிமைக்குரல்களை எழுப்பியுள்ளனர்.

 நானறிந்தவரையில், பேராசிரியர். அலெக்ஸாண்டர் ஞானமுத்து (1932 - 1957) திருநெல்வேலி இந்துக்கல்லூரி முதல்வராக இருந்தவர். அதே கல்லூரியில் தமிழறிஞர் பேராசிரியர். அருணாச்சலம் போன்றவர்கள் தங்கள் பொறுப்புகளைக் கடந்து மனித நேயம், மாணவர் நலன், நாட்டு நடப்பு என்று அக்கறையோடு தளங்களில் இயங்கியவர்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தியபோது தெருவுக்கே வந்து கண்டணக்குரல் கொடுத்தவர்கள்.

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி முதல்வர். வேதசிரோன்மணி, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் முதல்வராக இருந்த தமிழறிஞரும், ஆங்கிலப் பேராசிரியரும், நாணல் இலக்கிய இதழின் ஆசிரியருமான  மறைந்த ஆ.சீனிவாச ராகவன் போன்றோர்கள் நியாயமென்று
எது படுகின்றதோ அதைச் செய்தார்கள். இதில் தனக்கு எந்த பாதிப்பு வந்தாலும் சந்திக்கத் தயாரான நிலையில் கடமையாற்றியுள்ளதைப் பார்த்துள்ளேன், மாவட்ட நிர்வாகமோ, காவல்த்துறையோ ஏதேனும் அத்துமீறலில் ஈடுபட்டால் அதைக் கடுமையாக எதிர்த்து ஆட்சியாளர்களிடமே போராடியவர்கள்.

பாளையங்கோட்டை செயிண்ட்.சேவியர்ஸ் கல்லூரி ரசாயனப் பேராசிரியர். சீனிவாசனும் இவர்களைப் போலவே பிரச்சனைகள் வந்தபோது மாணவர்கள் பக்கம் நின்றவர். இவையெல்லாம் கடந்தகால வரலாறு.

மதுரை அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரி, மதுரைக் கல்லூரி ஆகியவற்றின் முதல்வர்கள், பேராசிரியர்கள் திருச்சி செயிண்ட்.ஜோசப் கல்லூரி அருட்தந்தை. கஷ்மீர் போன்றவர்கள் நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடியவர்கள். அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் மனிதநேயம் கொண்ட பேராசிரியர்கள் போராட்டங்கள் வந்தால் நியாயத்தின் பக்கம் இருந்துள்ளார்கள்.  கேரளாவில் அவசரநிலை காலத்தில் பிராந்திய பொறியியல் கல்லூரி மாணவர் ராஜன் காவல்த்துறையின் அத்துமீறலாலும், அன்றைய முதல்வர் கருணாகரனின் தூண்டுதலாலும் கொடூரமாகச் சாகடிக்கப்பட்டதற்கு கேரள மாநில பேராசிரியர்கள் கடுமையாகப் போராடவில்லையா? இப்படி பல நிகழ்வுகள்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின், பி.ஏ, பி.எஸ்.சி வகுப்புகள் ஒழிக்கப்பட்டபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் 1982ல் வழக்குத் தொடுத்து ஆஜரானவன் நான். அப்போது அப்பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தபோது,  ஆசிரியர் சங்க நிர்வாகிகளான ஏஎல். சிதம்பரம், பானுமூர்த்தி போன்ற பேராசிரியர்கள் மாணவர்களுக்காக தாங்களே வழக்குத் தொடுத்ததெல்லாம் உண்டு.

1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், 1983ல் இலங்கைத் தமிழர் போராட்டங்கள்  நடக்கும் போது, மாணவர்களோடு பல பேராசிரியர்கள் போராட்டக் களத்தில் இறங்கியது உண்டு. இன்றைக்கும் டெல்லி ஜவஹர்லால் நேரு, டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா போன்ற பல்கலைக்கழக வளாகங்களிலும், ஐ.ஐ.டிகளிலும் பல பேராசிரியர்களும் தாங்கள் நேசிக்கும் தளத்தில் கருத்துகளைச் சொல்லியும், அதில் சமூகப் பொறுப்புடன் செயல்பட்டும் வருகின்றனர்.இதில் குறையொன்றும் இல்லையே!

பேராசிரியர். ராமு. மணிவண்ணன் சரியான அணுகுமுறையில், பிரச்சனைகளைப் பற்றி கருத்துகள் மூலமாகவோ, தனது விவாதங்கள் மூலமாகவோ, ஆரோக்கியமாகச் செயல்படுவதை சென்னைப் பல்கலைக் கழகம் தடுப்பதற்கு எந்த காரணமோ, தகுதியோ கிடையாது.
அந்த வகையில், நாட்டின் நலன் நாடும் பேராசிரியர் ராமு. மணிவண்ணன் அடக்கப்படுவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பந்தை அடிக்க அடிக்க எழும்புவதுபோல, போராளிகள் ஒடுக்கப்பட்டால் மேலும் மேலும் எழுவார்கள் என்பதை அடக்குமுறையாளர்கள் உணரவேண்டும். இந்த அடக்குமுறைகளை இத்தோடு நிறுத்திக் கொள்வது சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு நல்லது.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்களாக இருந்த ஏஎல்.முதலியார், என்.டி.சுந்தரவடிவேலு, ஜி.ஆர்.தாமோதரன்,
மால்கம் ஆதிஷேஷய்யா போன்ற பெருந்தகைகளின் இடத்தில் அமர்ந்துகொண்டு  யாரையும் ஒடுக்கிவிடலாம் என்ற மமதைகள் வேண்டாம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-08-2015

#KSR_Posts #KsRadhakrishnan  #Prof_RamuManivannan  #UniversityofMadras



No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...