Monday, August 17, 2015

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - Sri Lanka Parliament Elections 2015.






இலங்கையில் இன்று காலை 7.00மணிக்குத் தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கின்றது. ஆங்காங்கு காவல் துறையினர் தேர்தல் விதிகளை மீறுபவர்களைக் கைது  செய்து வருகின்றனர்.

இன்று இரவு 11மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் துவங்கிவிடும். முடிவுகள் இரவே வந்துவிடும். நாளை மதியத்துக்குள் தேர்தல் முடிவுகள் முழுமையாகத் தெரிந்துவிடும்.

இலங்யைில் பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கும் வகையில் அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் பதவியை பிடிக்க தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சேக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஈழத்தில் நடைபெறும் தேர்தலில் இரண்டு அணிகளிலும் போட்டியிடுபவர்கள் நெருங்கிய நண்பர்கள். குறிப்பாக மாவை. சேனாதிராஜா, விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனும் என்னோடு சில வருடங்கள் தங்கிய இடத்திலேயே அவர்கள் சென்றபின் தங்கி இருந்தார்.

திரு சம்பந்தன் அவர்கள்,  மறைந்த அமிர்தலிங்கம் அவர்கள் சென்னை அரசு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தபொழுது, பலசமயம் வந்து என்னைச் சந்தித்தது உண்டு. இவ்வாறு தேர்தலில் இரண்டு அணிகளிலும்  போட்டியிடுபவர்கள் என்னோடு நெருங்கியவர்கள்.

இது ஒருபுறம் இருந்தாலும் இந்தத் தேர்தல் ஈழத்தமிழர்களுக்கு, ஏதோ ஒருவகையில் ஆறுதலான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்று நம்போன்றவர்களுக்கு அக்கறையும் ஆர்வமும் இருக்கின்றது.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தம் அவர்கள் தலைமையில்,  “வீடு” சின்னத்தில் போட்டியிடுகின்றது. யாழ் மாவட்டத்தின் தலைமை வேட்பாளராக தமிழரசுக் கட்சியின்
தலைவர் மாவை சேனாதிராஜாவும், திருகோணமலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், வன்னியில் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், வழக்கறிஞர் என். ஸ்ரீகாந்தாவும்  அடங்கிய இந்த அணி ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் தனித்தன்மையைக் காத்து உரிய அதிகாரங்களை பெற்றுத்தருவோம். தமிழர் பூர்வக்குடி என்ற நிலையில் எங்கள் அணுகுமுறை இருக்குமென்று சொல்லியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளர்களும் முக்கியத் தலைவர்களுமான மாவை சேனாதிராஜா மற்றும் மற்றொரு வேட்பாளர் ஸ்ரீகாந்த்  ஆகியோர் வீடுகள் மீது  குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வந்துள்ளன.

நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,”சைக்கிள்” சின்னத்தில் போட்டியிடுகின்றது. இவர்கள், “ஒரு நாடு இருதேசம்”  என்ற கோஷத்தோடு தேர்தல் களத்தில் உள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், ஆனந்தி சிவஞானசுந்தரம், திருநாவுக்கரசு சிவகுமாரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், அமிர்தலிங்கம் இராசகுமாரன், ஜெயரத்னம் வீரசிங்கம், தேவதாசன் சுதர்சன், சின்னமணி கோகிலவாணி, எஸ்.பத்மினி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இவர்களுள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எஸ்.பத்மினி போன்றோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவிகளில் இருந்தவர்கள்.

குருநாகல் மாவட்டத்தில், நண்பர் சிவாஜி லிங்கம் சுயேட்சை வேட்பாளராகக் களம் காண்கின்றார்.

ஆனால் வடக்குமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் யாரையும் ஆதரிக்காமல் நடுநிலையோடு தமிழ்மக்கள் நலனை மனதில் கொண்டு வாக்களிக்கவேண்டுமென்று ஈழத்தமிழர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அங்கு சின்னங்களும், யாருக்கு வாக்களிப்பதில்  முன்னுரிமை என்ற தரவரிசை எண்ணும் முக்கியமான நிலையில்  பிரச்சாரங்கள் நடந்தேறின.

1977வட்டுக்கோட்டை தீர்மானத்தை செல்வா காலத்தில் நிறைவேற்றியபின் நடைபெற்ற தேர்தலில், சக வாழ்வு இல்லை தனிவாழ்வுதான் என்ற நிலையில் தனிநாடுதான் தீர்வு என்ற நிலைப்பாடு இந்தத் தேர்தலில் இருக்குமா என்று சொல்லமுடியாது.

ஏனெனில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஈழம் என்று சொல்லாமல், ஒரு அணி தமிழர்களுடைய பூர்வீகத் தாயகம் என்றும், மற்றொரு அணி ஒரு நாடு இருதேசம் என்ற கோஷங்களை முன்வைத்துத்தான்  தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கின்றது.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகின்றதோ? ஈழமக்கள் என்ன முடிவெடுப்பார்களோ தேர்தலில்?

ஈழத்தில் உள்ள தமிழ் இனத்திற்கு உரிய விடியல் ஏற்படவேண்டும் என்பதுதான் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பும். தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பும், ராஜபக்‌ஷே நடத்திய கொடூரத்துக்கு சர்வதேச நம்பகமான, சுதந்திரமான புலனாய்வு விசாரணை, தமிழர்களுடைய நிலங்களை திருப்பி அளித்தல், இராணுவத்தைத் திரும்பப் பெறுதல், மாகாண கவுன்சிலுக்கு உரிய சுயாட்சி அதிகாரங்கள் என்பதை வென்றெடுக்கவேண்டிய பொறுப்பு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுகின்றவர்களிடம் உள்ளது.


- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17-08-2015. 

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...