Tuesday, December 2, 2014

மனைவி என்ற துணைவி

மனைவி என்ற துணைவி
-------------------------------------------------
என்றும் என் நெஞ்சிலிருந்து அகலாத என்னுடைய மனைவி சரளா, கடந்த 24.11.2014 அன்று காலமாகி விட்டார். அப்பலோ மருத்துவமனையில் மூன்று மாத காலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் (இ.இ.க்.) சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போய்விட்டது.



                         
இச்செய்தியை அறிந்தவுடன் தலைவர் கலைஞர் அவர்கள், என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்ததையும், கோவில்பட்டி வட்டார கரிசல் மண்ணில் பிறந்து, தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் தம்பி இராதாகிருஷ்ணன் என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டது, எனது ரணத்துக்கு களிம்பு தேய்த்தது போன்ற ஆறுதலை அளித்தது. பேராசிரியர் பெருந்தகை எனக்கு மன தைரியம் கொடுக்கும் வகையில் இரங்கல் அறிக்கை கொடுத்தார். துயரச் செய்தியை கேட்டவுடன் தளபதி அவர்கள், எனது இல்லத்திற்கு விரைந்து வந்து என் துணைவியாருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
                           



 வைகோ அவர்கள் குடும்பத்தோடு, உரிமையோடு வந்து சில மணி நேரம் இருந்து என்னை ஆறுதல் படுத்தினார். அரசியல் நாற்றங்காலில் எனக்கு வழிகாட்டியாக இருந்த பழ.நெடுமாறன் அவர்கள் ஆறுதல் சொன்னார். இப்படி தமிழகத்தின் அனைத்து கட்சித் தலைவர்களும் வந்து ஆறுதல் சொன்னபொழுது, என்னுடைய 42 ஆண்டு அரசியல் களப்பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இருந்தது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் என்னோடு பணியாற்றியவர்கள், எனக்கு ஜூனியர்களாக இருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ளனர். அவர்கள் அனைவரும் நேரிடையாக வந்து இரங்கலை தெரிவித்தனர். சென்னையில் உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள், தமிழ் இலக்கியப் படைப்பாளிகள், ஈழ ஆதரவாளர்கள், மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  என  பலரும் நேரில் வந்து இரங்கலை தெரிவித்தது, எனக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத துக்கத்தை மறக்க வைத்தது.

தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு, எங்கள் இல்லம் ஒருகாலத்தில் கேந்திர பகுதியாக இருந்தது. தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன், அமிர்தலிங்கம், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், சிவ. சிதம்பரம், தளபதி கிட்டு, பாலசிங்கம், சேனாதிராஜா, ஈழவேந்தன், யோகேஸ்வரன், தமிழர் கூட்டணித் தலைவர் சம்பந்தம், கரிகாலன் போன்ற பலரும் வந்து என் துணைவியாருடன் பழகுவதும், அவர்களை என் துணைவியார் உபசரிப்பதும் வாடிக்கை. இந்த மறைவு செய்தி கேட்டு உலகமெங்கும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கைபேசியில் அழைத்து ஆறுதல் சொன்னார்கள்.

என்னுடைய துணைவியார் சரளா ஆங்கில இலக்கியத்தில் புலமை பெற்றவர். சேக்ஷ்பியர் நாடகங்களில் இடம் பெற்ற வரிகளை சொன்னாலே, இது மேக்பத்தில் வருகின்றது, இது ஒத்தல்லோவில் உள்ளது, இது அந்தோணி கிளியபாட்ரோவில் இருக்கின்றது என்று தெளிவாக சொல்லும் நுண்மான் நுழைபுலம் கொண்டவர். நான் இல்லையென்றாலும், வீட்டிற்கு வருபவர்களை சிறப்பாக உபசரிப்பது அவருடைய வாடிக்கையாகும். என்னுடைய அரசியல் பணிகளுக்கும், நான் 1989 மற்றும் 1996 தேர்தல்களில் போட்டியிடும்போதும், பணமுடை ஏற்படும் போதெல்லாம், கோடிகணக்கில் பெறுமானமுள்ள அண்ணாநகர் வீட்டையும், சென்னை - புதுவை கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள சில ஏக்கர் நிலங்களையும் அவரே விற்று, கவலைப் படாதீர்கள் என பணத்தை அள்ளிக் கொடுத்தார்.

எனக்கு ஐ.நா.வில் பணி வாய்ப்பு கிடைத்தது. அதற்கும் செல்லவில்லை. என் கீழ் பணியாற்றியவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். நானும் அந்த நிலைக்கு வந்திருக்க வேண்டும். எனக்கு உதவியாளர்களாக இருந்தவர்களெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என ஆனார்கள். எவருக்காவது வாழ்க்கையில் இவ்வாறு பின்னடைவு ஏற்பட்டால் சலிப்பு உண்டாகும். தேர்தல்களில் 35,000 வாக்குகள் பெற்றும், வெறும் நூற்றுகணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தபொழுதும் மற்றும் எனது ஏற்ற இறக்கங்களுக்கு எனக்கு ஆறுதல் சொன்னார்.

30 ஆண்டுகளுக்கு முன்னால், தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தார். திரு.பழ. நெடுமாறன் தலைமையேற்க, திரு. வைகோ வரவேற்புரையாற்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பி.இராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான எனது உறவினர் சோ.அழகிரிசாமி, இந்திரா காந்திக்கு நெருக்கமான மத்திய முன்னாள் அமைச்சர் கே.பி.உன்னிகிருஷ்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரத்தினவேல் பாண்டியன், வி.இராமசாமி, மறைந்த மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, மறைந்த எஸ்.டி.சோமசுந்தரம், ஈழத் தமிழர் தலைவர்களான திரு-திருமதி. அமிர்தலிங்கம், ஈழத் தமிழர் தேசிய தலைவர் தம்பி. பிரபாகரன், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன், சிவ. சிதம்பரம், சம்பந்தன், கா.பொ. ரத்தினம் மற்றும் சந்திரகாசன், ஈழவேந்தன், சேனாதிராஜா போன்ற பலர் வாழ்த்துரை வழங்க, என்னுடைய சீனியர் வழக்கறிஞர் ஆர்.காந்தி நன்றியுரை ஆற்றினார். அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். தனது வாழ்த்துச் செய்தியை மணமேடைக்கே, ஒட்டப்பட்ட கவர் மூலம் அனுப்பியிருந்தார். தலைவர் கலைஞர் நடத்தி வைக்கின்ற திருமணம் என்று தெரிந்தும், இன்றைக்குள்ள அரசியல் நிலைகளை எல்லாம் மீறி, எம்.ஜி.ஆர். மணமேடைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியது இன்றைக்கு நினைத்தாலும் பெருமையாக உள்ளது. இந்த திருமணம் சிறப்பாக நடைபெற அன்றைக்கு வழிகாட்டியவர்கள்  வைகோவும், பழ.நெடுமாறனும் என்பதை நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன். அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்ட இப்படிப்பட்ட நிகழ்வை பெரும் பேறாக நினைக்கிறேன்.
தொடர்ந்து 42 வருட அரசியல் வாழ்வில் பாலைவன பயணம்தான். தகுதியே தடை என்ற நிலையில், தோல்விகளையும் தடைகளையும் கண்டு சற்றும் துவளாமல், அவமானப்படுத்தப்பட்ட போதும் எனக்கு ஆறுதலை கொடுத்து துணையாக நின்றது என்னுடைய மனைவி சரளா.  அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமைகளான காவிரிப் பிரச்சினை, கண்ணகிக் கோட்டம், விவசாயிகள் மீதான ஜப்தி நடவடிக்கை, கூடங்குளம் அணுமின் உலை, கைதிகளுக்கு வாக்குரிமை, கர்நாடக சிறையில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, தேசிய மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டது, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் பல்வேறு பிரச்சினைகளில் முறையிட்டது, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என பல பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றத்திலும்,  சென்னை உயர்நீதிமன்றத்திலும் நான் தாக்கல் செய்தபோது அருமையான ஆங்கிலத்தில் வடித்து கொடுத்ததையும் நினைத்துப் பார்க்கிறேன்.
கி.ரா. அவர்களை ஆசிரியராக கொண்ட கதை சொல்லி இதழை நான் வெளியிடுவதற்கு துணையாகவும், நான் இதுவரை வெளியிட்ட 14 நூல்கள் எப்படி அமைய வேண்டும் என்று ஆலோசனைகளை சொல்லியதெல்லாம் நினைவில் ஆடுகின்றது. இவை அனைத்தும் என்னுடைய நெருங்கிய  பத்திரிகை நண்பர்கள், அரசியல் நண்பர்கள் போன்றோருக்கு நன்கு தெரியும்.
நதி நீர் தேசியமயமாக்கப்பட்டு நதிகளை இணைக்க வேண்டும் என்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் 30 ஆண்டுகள் போராடிய எனக்கு துணையாக இருந்தவர் என் துணைவியார். இயற்கையாக அவர் இறந்த அன்று, தினமணி ஆசிரியர்  நண்பர் வைத்தியநாதன் அவர்கள், முதல் நாள் இரவே ‘ஏன் கையேந்த வேண்டும்?’ என்ற தலைப்பில், தமிழக நதி நீர் சிக்கல்கள் குறித்து நான் எழுதிய நடுப்பக்கக் கட்டுரையை முடிவு செய்து பொறுத்தமாக வெளியிட்டிருந்தார். அந்த கட்டுரையை பாத்திருந்தால், படித்து தனது கருத்தை சொல்லியிருப்பார். அந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டு தினமணி வெளிவந்த அன்று அதிகாலையிலேயே மறைந்து விட்டார்.

வைத்தியநாதன் அவர்களுக்கு அந்த கட்டுரையை முதல் நாள் போட வேண்டுமென்று இயற்கையாக உறுத்தல் ஏற்பட்டிருக்கும் என்று, என் மனைவி மறைவின்போது நண்பர் கல்கி ப்ரியன் குறிப்பிட்டது போல், அவருக்கு (சரளாவிற்கு) இரங்கல் தெரிவிக்கும் வகையில் கட்டுரை வெளிவந்துள்ளது என்று தெரிகின்றது.

கழக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் துணைவியார் திருமதி சரளா இயற்கை எய்தினார்.

தலைவர் கலைஞர் இரங்கல்.

(24-11-2014)

தி.மு.கழகத்தின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும்,

""""தி.மு.க. - சமூக நீதி"", """"கலைஞரும் ஈழத் தமிழரும்"", """"ஈழத் தமிழர் பிரச்சினை"",

""""தூக்குக்குத் தூக்கு"", """"சேதுக் கால்வாய் - ஒரு பார்வை"", """"கலைஞரும் முல்லைப்

பெரியாறும்"" போன்ற படிப்பதற்கு எளிமையான, படித்துப் பாராட்டத்தக்க பல்வேறு

நூல்களை எழுதி வெளியிட்டவரும், கரிசல் மண்ணான கோவில்பட்டிப் பகுதியைச்

சேர்யதவரும், போராடும் குணமும் வாதாடும் திறமையும் மிக்கவருமான தம்பி

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் துணைவியார் திருமதி சரளா, நோய்வாய்ப்பட்டுச்

சில மாதங்கள் மருத்துவ மனையிலே சிகிச்சை பெற்று வயத நிலையில்,

இன்று (24-11-2014) காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறியது பெரிதும்

துயருற்றேன். நேற்று முன்தினம் மாலைதான் தம்பி இராதாகிருஷ்ணன் என்னைச்

சயதித்து, தன்னுடைய துணைவியாரின் உடல்நிலைக் குறித்து விவரித்துச் சென்றார்.

இவ்வளவு சீக்கிரத்தில் இயத எதிர்பாராத நிகழ்வு நடக்கும் என்று நான் நினைத்துப்

பார்க்கவில்லை.

1986ஆம் ஆண்டு திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன் - திருமதி சரளா

இணையரின் திருமண விழா சென்னையில் என்னுடைய தலைமையிலே நடைபெற்று,

அயத விழாவில் விடுதலைப் புலிகளின் தலைவர் தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன்

உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நீதியரசர்களும், தமிழ்

ஆர்வலர்களும் கலயது கொண்டு சிறப்பித்த நிகழ்வு என் நினைவில் நிழலாடுகிறது.

தனது அன்புத் துணைவியாரை இழயது வாடும் தம்பி இராதா கிருஷ்ணனுக்கு

என்னுடைய ஆழ்யத இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். துயருற்றிருக்கும்

அவருடைய உறவினர்களுக்கும், உலக நாடுகளில் பரவியிருக்கும் அவரது

நண்பர்களுக்கும் ஆறுதலை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


என் துணைவியாரின் மறைவு செய்தியையும், குறிப்புகளையும் முரசொலி, தினமணி, தி இந்து (தமிழ்), தினத்தந்தி, தினகரன், நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற ஏடுகள் வெளியிட்டன. அதுபோல தொலைக்காட்சி ஊடகங்களும் ஒளிபரப்பியது.

                         




                         
தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக முன்னணியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், நண்பர்கள் துக்கச் செய்தியைக் கேள்விபட்டவுடன் நேரில் வந்தது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. நேரில் வந்தும் கைபேசி மூலமாகவும், குறுஞ்செய்திகள் மூலமாகவும் துக்கத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நான் எனது மகன் சிரினிவாசு மற்றும் குடும்பத்தினரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் நண்பர்கள் தெரிவித்த இரங்கலுக்கும் நன்றிகளை உரித்தாக்குகின்றேன். அதுமட்டுமல்லாமல், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புறங்களில் உள்ள எனக்குத் தெரிந்தவர்களும், நெருங்கியவர்களும் சாரை சாரையாக சென்னைக்கு வந்து எனது துக்கத்தில் பங்கேற்று கொண்டதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...