இலங்கையில் ராஜபக்சே பிரதமராக மைத்ரிபால சிறிசேனே அறிவித்ததைக் குறித்து இந்தியா இன்னும் மௌனம் சாதிக்கின்றது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சீனா வரவேற்றுள்ளது. கீழே விடுக்கப்பட்ட வினாக்களை வைத்து இந்தியா உஷாராகுமா? என்பது தான் நமது எதிர்பார்ப்பு.
1. மைத்ரிபால சிறிசேனேயை இந்திய உளவுப் பிரிவு அமைப்பான ரா மூலம் கொலை செய்ய முயற்சிப்பதாக அபாண்டமான தகவல் கசிந்தது. ஆனால் அது மைத்ரி சார்பில் மறுக்கவும்பட்டது. ஏன் இந்த குழப்பம் என்பதை அறிந்து இந்தியா எதிர்வினையாற்றாமல் இருந்தது ஏன்?
2. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை இலங்கை அரசு வெளியேற்றியது ஏன்? அப்போதும் இந்தியா அமைதி காத்தது.
3. சீனாவின் கையாளான ராஜபக்சேவையும் அவரது மகனையும் சுப்பிரமணிய சாமி டெல்லிக்கு அழைத்து கூட்டம் நடத்தி, இந்திய பிரதமரை சந்திக்க வைத்துள்ளார். இத்தனைக்கும் அவர் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர். இப்படி சுப்பிரமணிய சாமி போகிற போக்கில் எதுவும் தனது விருப்பத்திற்கேற்ப பேசிக்கொண்டு போவதை பாஜக அரசு இதுவரை கண்டிக்கவில்லையே. ஏன்? சாமியின் தேவையில்லாத வம்புகளை இழுத்து அண்டை நாடுகளின் நட்புறவில் குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லதா?
4. ஒரு அதிபரைப் போலவே பாவித்து ராஜபக்சேவுடன் பேசி கௌரவப்படுத்தினாரே இந்தியப் பிரதமர், அந்த கமுக்கமான பேச்சு குறித்து எந்தவிதமான தகவலும் நாட்டு மக்களுக்கு இல்லையே ஏன்?
5. இலங்கை பிரதமரான ரணில் விக்கிரமசிங்கே வந்தாரே. ராஜபக்சே இந்தியாவிற்கு வந்துவிட்டார் என்பதால் தான் அவரும் பதற்றத்தோடு இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். அதை குறித்தும் எந்த தகவலும் இல்லையே.
6. மைத்ரிபால சிறிசேனே சீனாவுக்கு சென்று வந்த பின் இலங்கையில் இந்த மாற்றங்கள் நடைபெற்றுள்ளதே. அதை பற்றி இந்திய அரசு கவனித்ததா? மைத்ரியும், ராஜபக்சேவும் மூன்று முறை இரகசியமாக சந்தித்துள்ளதாக செய்தி உள்ளதே? அதன் நோக்கத்தை இந்திய அரசு அறிய முற்பட்டதா?
7. ராஜபக்சே தன்னை பிரதமராக மைத்ரிபால சிறிசேனே அறிவிப்பார் என்று 26/10/2018 அன்று மதியம் வரை அவருக்கு தெரியாமல் திடீரென அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி ஒன்றும் உள்நாட்டு குழப்பங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லையே?
8. பிரதமராக இருந்த ரணிலிடமிருந்து சட்ட அமைச்சகத்தை திரும்ப பெறவேண்டிய சூழலுக்கான காரணம் கண்டியில் நடந்த சிங்களவர் - இஸ்லாமியர்களின் கலவரம் தான் என்றார்கள். ஒரு பிரதமரிடமிருந்து அமைச்சகத்தை அதிபர் திரும்ப பெறுவது சரியான நாடாளுமன்ற ஜனநாயக மரபு இல்லை என்பது மைத்ரிக்கு தெரியாதா?
9. சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றி பெற்றாரே, நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி ஒருவர் வெற்றி பெற்றால் ஒரு வருடத்திற்கு அவரை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த முடியாது. இது உலகறிந்த நாடாளுமன்ற ஜனநாயக மரபாகும். அந்த நெறிகளையெல்லாம் புறந்தள்ளி ரணில் பிரதமர் பதவியிலிலிருந்து மைத்ரிபால சிறிசேனே நீக்கியது நியாயம் தானா? சீனாவுக்கு கட்டுப்பட்டு மைத்ரி ஏன் சீனாவின் உத்தரவுகளுக்கு அடிபணிய வேண்டும்.
10. யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சீர்செய்ய இந்தியாவுடன் ஒப்பந்தங்களை செய்த பின் அதை நடைமுறைப்படுத்தாமல் போனதற்கு யார் காரணம்? மைத்ரி அரசாங்கம் தானே?
11. மத்தளை விமான நிலையத்தை சீர் செய்யும் ஒப்பந்தத்திலும் இந்தியாவை செயல்படுத்தவிடாமல் இலங்கை அரசு முட்டுக்கட்டை இட்டுள்ளதே ஏன்?
12. சம்பூர் மின் உற்பத்தி நிலையங்களை செயல்படுத்தும் பணிகளையும் இந்தியாவை செயல்படுத்தவிடாமல் இலங்கை அரசு முடக்கியது ஏன்?
13. திரிகோணமலை துறைமுகம், ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் போல அமைந்த இயற்கை துறைமுகம். அந்த துறைமுகத்தில் இந்தியாவிற்கு எண்ணெய் கிடங்குகள் அமைக்க ஒப்புக்கொண்ட பின்னர் சில பணிகள் செய்ய என்று அதை அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் மைத்ரி தாரைவார்க்க காரணம் என்ன? இந்த பிரச்சனை இந்திரா காந்தி காலத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.
14. இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 22,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்தது. மீதம் 44,000 வீடுகளை இந்திய அரசு தான் கட்டிக்கொடுத்திருக்க வேண்டும். அந்த திட்டப் பணிகளை சீனாவுக்கு ஏன் மைத்ரி அரசு கொடுத்தது?
15. கொழும்பு துறைமுகத்தின் கிழக்குப் பகுதி முற்றத்தை இந்தியாவிற்கு வழங்கப்பட்டு, பின்னர் ஏன் அது மறுக்கப்பட வேண்டும்?
16. இந்திய தூதரகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு அந்த இடத்தை பின்னர் சீன நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
17. இந்திய அரசு 2009 முள்ளிவாய்க்கால் போருக்குப்பின் தமிழர்களின் புனர்வாழ்விற்காக வழங்கிய நிதியை இலங்கை அரசு தவறாக பயன்படுத்தியது ஏன்?
18. இந்திய அரசு வழங்கிய பணத்தைக் கொண்டு ராஜபக்சே ஊருக்கு அருகேயுள்ள காலியில் இரயில்வே நிலையத்தை இந்தியாவின் பணத்தை கொண்டு கட்டி அதையும் இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது எந்த விதத்தில் நியாயம்?
19. இந்திய அரசு வழங்கிய நிதியிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மாகாணங்களின் விவசாயிகளுக்கு டிராக்டர்களும், மாணவர்களுக்கு சைக்கிள்களும் வாங்கித் தருவதாக சொல்லிய திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை, அது இந்திய அரசின் கவனத்திற்கு வந்ததா?
20. ஒரேயொரு பணியை மட்டுமே இந்தியா செய்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை செல்லும் யாழ் தொடர் வண்டிப் பாதையை சரிசெய்யும் பணியை மட்டுமே இந்தியா செய்து கொடுத்தது.
21. பல பில்லியன் பணம் தமிழர்களின் புணர்வாழ்விற்காக வழங்கிய நிதியை இலங்கை அரசு என்ன செலவு செய்தது என்று கணக்காவது இலங்கை அரசிடம் இந்திய அரசு கேட்டதா?
22. கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பலும், நீர்மூழ்கிக் கப்பல்களும் நிற்பதாக செய்திகள் வந்ததே, அதற்கான அவசியம் என்ன?
23. இந்தியப் பெருங்கடல் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. தற்போது இலங்கையை பயன்படுத்திக் கொண்டு சீனா பட்டு வழி வியாபாரச் சாலை அமைத்து தன் வியாபாரத்தை ஆப்பிரிக்காவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் பெருக்கிக் கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் அதன் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. டீகோகார்சியா தீவுகளில் அமெரிக்காவும், பிரெஞ்சும் வேகமான இராணுவத் தளங்கள் அமைப்பதாக செய்திகள் வருகின்றன. இதை குறித்து எதையும் பேசாமல் டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் அமைதி காக்கிறார்கள்.
24. சமீபத்தில் கொழும்பில் இலங்கை பிரதமர் ரணில் தலைமையில் நடந்த இந்திய பெருங்கடல் நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, சில ஆப்பிரிக்க நாடுகளும் கலந்து கொண்டன. அந்த கூட்டத்தில் பிரதமர் ரணிலுக்கும், அதிபர் மைத்ரிபால சிறிசேனேவுக்கும் மறைமுகமாக சமிக்ஞையாக தங்களுடைய கோபங்களை காட்டிக் கொண்டனர். மைத்ரி அந்த மாநாட்டில் உரையாற்றாமலேயே வெளியேறினார். இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆளுமை குறித்து எந்த கருத்தையும் இந்திய அரசு தெளிவாக, ஆணித்தரமாக வைக்கவில்லை.
25. தமிழர்களுடைய அடையாளமும், இன அழிப்பும் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. அனுராதபுரம் மாவட்டம் தமிழர் பகுதிகளை உள்ளடக்கி சிங்கள மாகாணமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
26. எப்படி இந்தியாவின் வடக்கே ரிஷிகேசை ஈஸ்வரத் தலமாக பார்க்கிறார்களோ, இலங்கையில் தெற்கே நான்கு ஈஸ்வரத் தலங்கள் உண்டு. அதில் திரிகோணமலை ஈஸ்வரத் தலம் ஆதி காலத்தில் இருந்தே மதரீதியாக சம்மந்தரால் பாடப்பட்ட புனிதத் தலமாகும். அதன் தொன்மையும் தற்போது அழிக்கப்பட்டு வருகிறது.
27. வடக்கு, கிழக்கில் உள்ள 200, 300 கோவில்கள் அழிக்கப்பட்டு புத்த விகார்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதையும் இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
28. அம்பாறையிலும், கண்டியிலும் பல்வேறு மத அடையாளங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமியத் தொன்மைகளும் அழிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து வளைகுடா நாடுகளும் எதையும் பேசுவதில்லை.
29. கிறித்துவரான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயத்தில் கிறித்துமஸ் நள்ளிரவு ஜபத்தின் போதே தேவாலயத்திலேயே சுட்டுக் கொன்றார்களே?
30. 40 ஆண்டுகளுக்கு முன்பே தான்தோன்றித்தனமாக மத்திய அரசு கச்சத்தீவையும் தாரைவார்த்துவிட்டது.
31. தமிழக மீனவர்களை 1979 லிருந்து அவ்வப்போது தாக்குவது மட்டுமல்லாமல் படகுகளையும் பறிமுதல் செய்து விடுவிக்காமல் இருக்கிறது இலங்கை ராணுவம். இந்தியா கண்டும் காணாமலும் இருப்பது ஏன்?
32. இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், சீனா, மியான்மரோடு, பங்களாதேஷ் என எந்த நாட்டுடனும் சரியான நட்புறவு இல்லை. ஏற்கனவே மாலத்தீவும், நேபாளும் சரியான நட்பில் இல்லாமல் நமக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையும், சீனாவுடன் கைகோர்த்து நமக்கு எதிராக களமிறங்குவது பெரும் ஆபத்தாக உள்ளது. வடகிழக்கும், வடமேற்கும் சீனா, பாகிஸ்தானோடு இதுவரை இந்தியா போருக்கு உள்ளாக வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம். இனிவரும் காலங்களில் இலங்கையை வைத்துக் கொண்டு இந்தியப் பெருங்கடலில் சீனாவால் இந்தியா போரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தமிழகமும், கேரளமும், அந்தமான் தீவுகள் மற்றும் இலங்கையில் ஈழத் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணப் பகுதிகளும் எதிர்காலத்தில் பெரிதும் பாதிக்கப்படும் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இப்படி ஏராளமான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இன அழிப்பு செய்த ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திராமான நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச ஐநா மனித உரிமை ஆணையத்தில் விசாரணையில் இருக்கும்போது எப்படி மைத்ரிபால சிறிசேனே, ராஜபக்சே பிரதமராக்க முடியும் என்ற சாதாரண விடயத்தினை கூட இந்திய அரசு கவனிக்காமல் இருந்தால் எப்படி?
இலங்கையில் தற்போது நடந்தேறும் நிகழ்வுகள் விபரீதமானது. ஒரு வீட்டில் கணவன், மனைவியோடு அமைதியாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் போது இன்னொரு பெண்ணை அந்த வீட்டிற்குள் சேர்ப்பது எப்படியோ, அப்படி இலங்கைக்கு இரண்டு பிரதமர்களா?
மைத்ரிபால சிறிசேனே வடக்கு, கிழக்கு மாநில தமிழர்கள் இனஅழிப்பு செய்த ராஜபக்சே ஆட்சிக்கு வரக்கூடாது என்ற வாக்குறுதி அளித்தே அதிபரானார். அப்படி இருக்கையில் யார் வரக்கூடாது என்று தமிழர்கள் வாக்களித்தார்களோ, அவரையே அழைத்து பிரதமராக்குவது தான் பௌத்தம் காட்டும் மார்க்கமா? 106 உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற ரணிலை ஒதுக்கிவிட்டு 95 உறுப்பினர்களை கொண்ட ராஜபக்சேவை நன்றிகெட்டதனமாக முடிசூட்டியது நியாயம் தானா? குதிரை பேரத்தை நடத்த ஒரு நாட்டின் அதிபரே அச்சாரம் போடலாமா? இது தான் இலங்கையில் இது நடக்கிறது. இதை அண்டை நாடான இந்தியா அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது?
ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளில் குற்றவாளி என்று சொல்லப்பட்ட ராஜபக்சேவுக்கு இலங்கையில் பிரதமராக மக்களுடைய நிர்பந்தத்திற்கு மாறாக அந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 12-ன் படி அதிபர் மைத்ரிபால சிறிசேனே நியமிக்கும் அதிகாரம் இல்லை என்று தெளிவாக கூறுகிறது. இலங்கை நாடாளுமன்றத் தலைவர் (சபாநாயகர்) இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரும் அதிபரின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ளாமல் ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமராக அங்கீகரித்துள்ளார். பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் ரணிலை தான் அங்கீகரித்துள்ளது. ஆனால் இந்தியா மட்டும் வாய்மூடி மௌனியாக இருப்பது தான் புரியாத கேள்வி.
இந்தியாவை அங்குள்ள ஈழத்தமிழர்கள் தங்களுடைய தாய்நாடு என்று எண்ணுகின்றனர். அந்த எண்ண ஓட்டத்தை சீனப் போரின் போதும், பாகிஸ்தான் போரின் போதும் இந்தியா பக்கமே இருந்தனர். சிங்கள அரசாங்கம் அந்த காலக்கட்டத்தில் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்த போருக்கு உதவிகரமாகவும் இருந்தனர்.
’தந்தை செல்வா சீனப் போரின் போது ஈழத்தில் நிதிதிரட்டி அன்றைய பிரதமர் பண்டித நேருவுக்கு அனுப்பினார். அதுமட்டுமல்லாமல், யாழ்பபாணம் வீரசிங்க அரங்கில் சீனாவை கண்டித்து அந்த காலத்தில் தமிழர் விடுதலை கூட்டணி இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்திலும் செல்வா தலைமையில் இந்தியாவிற்கு ஆதரவாக இலங்கை சீனாவையும், பாகிஸ்தானையும் ஆதரிக்க கூடாது என்று கடுமையான கண்டனங்களை அவையில் பதிவு செய்தது. ஆனால் சிறிமாவோ பண்டாரநாயகா இந்திரா காந்தியை மீறியும் வங்க தேசம் உதயமான போது பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பி இந்தியாவிற்கு எதிராக ஆதரித்தது. அதுபோல, சீனப்போரின் போது இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு தான் இருந்ததேயொழிய நமக்கு ஆதரவளிக்கவில்லை. இலங்கை தமிழர்கள் இதையறிந்து வேதனைப்பட்டு யாழ்ப்பாணம், திரிகோணமலையில் கண்டனக் கூட்டங்களையும் அந்த காலக்கட்டத்தில் நடத்தினார்கள். இப்படியான துரோகங்களை இந்தியாவிற்கு எதிராக சிங்கள அரசாங்கம் தொடர்ந்து செய்து வந்தது.
அதே மனப்பான்மை தான் இன்றைக்கு இந்தியாவின் எதிரி நாட்டோடு கைகுலுக்கி இந்து மகா சமுத்திரத்தின் அமைதிப் பகுதியை நாசப்படுத்தும் இலங்கையை எதிர்த்து கண்டனக் குரலை எழுப்ப இந்தியாவிற்கு என்ன தயக்கம் என்று தான் தெரியவில்லை.
பண்டித நேரு அங்கே சென்றபோது தாக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன் உரையாற்றும் போதும் அவரை நோக்கி சிங்களவர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதும் உண்டு. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சேலம் வரதராஜூலு நாயுடு இருந்தார். அப்போது செயலாளராக ஈ.வெ.ரா. பெரியார் இருந்தார். நேருவின் இலங்கை பயணத்திற்கு முன்னோட்டமாக அங்குள்ள பிரச்சனைகளை அறியச் சென்ற சேலம் வரதராஜூலு நாயுடுவிடமும் அன்றைய சிங்களவர்கள் விதண்டாவாதமாக நடந்து கொண்ட செய்தியெல்லாம் உண்டு. 1960களில் பண்டாரநாயக ஆட்சிக்காலத்தில் கொழும்பு நகரில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சென்றபோது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை எதிர்த்து கோஷமிட்டனர்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி நரசிம்மராவோடு சென்றபோது, இலங்கை கப்பல் படையை சேர்ந்த விஜித ரோஹன விஜேமுனி என்ற சிப்பாய் தாக்க முற்பட்டபோது உடனிருந்த ஜெயவர்த்தனே அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததை மறக்க முடியுமா? இப்படி எல்லாம் இலங்கை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக இருக்கும்போது, ஏன் இந்திய அரசு நியாயங்களின் பக்கமிருந்து சர்வதேச நாடுகளின் உதவியோடு கண்டிக்க மனமில்லாதது தான் வேதனையான விடயம்.
இந்தியா வல்லரசாகிறது என்று மோடி ஒருபுறம் மார்தட்டிக் கொண்டு வந்தாலும், ஐ.நா. மன்ற பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்பெற வேண்டுமென்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய வேளையில் தென்கிழக்கு ஆசிய புவியரசியலில் (Geo - politics) உறுப்பினராக இந்தியாவிற்கு ஆபத்துகள் எட்டுதிக்கிலும் இருக்கிறது. குறிப்பாக இனிவரும் ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் இந்தியா இருக்கிறது. இன்றைக்கு மோடி இருக்கலாம். நாளை இன்னொரு பிரதமர் வரலாம். ஆனால், நாடும், மக்களும் அமைப்பு ரீதியான செயல்பாடுகளும் நிரந்தரமானவை. இன்றைக்கு இதை கவனிக்காமல் விட்டால் நாளைய இந்தியா என்னவாகும் என்று டெல்லி பாதுஷாக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.