Friday, October 26, 2007

மக்கள் பிரதிநிதிகள்..?

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை மக்களே திருப்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்õல் அவர்களுக்கு ஊதியம் வழங்கக் கூடாது என்ற கருத்தையும் ஏற்கனவே அவர் கூறியிருந்தார்.
சாட்டர்ஜியி‘ன் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப் பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997ல் விடுதலைப் பொன்விழா மக்களவைச் சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2006ஆம் ஆண்டு அறிக்கையின்படி 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர் சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே நாடாளுமன்றத்தில் பதினோரு உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி மூலம் அம்பலப்படுத்தியது. 1951இல் எச்.ஜி.முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர் நேரு அவரை அவையைவிட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990இல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.
அமெரிக்காவில் செனட் சபை தலைவராக இருந்த நிவேட் ஜிஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப் படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்குப் பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.ககள் தங்கள் மீது சுமதத்தப்பட்ட லஞ்ச விவகாரம் பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.
சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும் முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970இல் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தான் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விட்டார். அதுபோன்று எம்.ஜி.ஆர். தன்னுடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது திரும்ப அழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.
கலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் லையன் ஜே.பி.ரேசர் என்பவரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல் சட்டம்1936, பிரிவு 106இல் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவையில் உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல் கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ.2 லட்சம் வரை பல வரை பல இனங்களில் அரசு வழங்குகின்றது. மாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.
கடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்கள் உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்களுடைய உரிமைகளை சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜீவ் சுக்லா போன்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள ஆபீஸ் ஆஃப் பிராஃபிட் என்று சொல்லக்கூடிய பொறுப்பின் பயன்களைப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ.45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.
1955இல் நாடாளுமன்றத்திற்கு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையோ லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்தச் செலவு ரூ.300 கோடிக்கு மேலாக உள்ளது. இது போக உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி என்று ரூ.2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.
அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003இல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பிக்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சித் தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணி செய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்ற பொழுது இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காண முடிகிறது.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசரம் அவசரமாக கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.
இத்திட்டத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோட்டா வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ.2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில் திரும்ப அழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.
தகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். கட்சித் தலைவர்கள், தங்கள் குடும் ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்!
– தினமணி, 26.10.2007

#*மதிமுக* #*சார்பட்டா இராயபுரம் ஏழுமலை நள்ளிரவு கொலை நினைவுகள் (2)*

#*மதிமுக*  #*சார்பட்டா இராயபுரம் ஏழுமலை நள்ளிரவுகொலை நினைவுகள் (2)* ———————————— 1………அப்படியான மிகச்சிறந்த ஒரு பேரணியை1994 ஏப்ரல் 16 எழுச்சி...