Showing posts with label Nuremberg. Show all posts
Showing posts with label Nuremberg. Show all posts

Saturday, May 16, 2015

முள்ளிவாய்க்கால் 2009 கொடூரம்: அரசபயங்கரவாதம். - Mullivaikkal War .






1810ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து 320கி.மீட்டர் தொலைவிலுள்ள டாஸ்மேனியா தீவின் கரையில் நாடுபிடிக்கும் ஆசையில் நுழைந்த  இரண்டு வெள்ளையர் கப்பல்கள் அங்கிருந்த 5000க்கும் மேற்பட்ட அம்மண்ணின் பூர்வ குடியினர்களை கொன்று குவித்தனர். தாங்கள் எதற்காகச் சாகிறோம் என்பதே தெரியாமல் அந்த இனம் கொல்லப்பட்டது.

1828ம் ஆண்டு 5000பேராக இருந்தவர்கள் வெறும் 75 பேராக மிஞ்சியிருந்தார்கள். அதில் மூன்றுபேர் மட்டும் பெண்கள். டாஸ்மேனிய இன அழிப்புக்கு எதிராக உலகம் குரல் எழுப்பியது. எனவே அவர்கள் சிறைக்கொட்டடியில் அடைத்து நயவஞ்சமாகக் கொல்லப்பட்டார்கள் 1869ம் ஆண்டு  இரண்டு பெண்ணும், ஒரு ஆணும்  மீதமிருந்தார்கள். அந்த ஆணும் பட்டினியால் இறந்துபோக ஆராய்ச்சிக்காக அவர் உடலும் கூறுபோடப்பட்டது.

1876ல் இறுதியாக இருந்தது ஒரு பெண் மட்டும் தான். ஏற்கனவே இறந்த இருவடைய உடலையும்… கண் முன்னேயே… துண்டாக்கி எடுத்துப்போனதை பார்த்து தனது பாசையில் ஏதோ முனகிக் கொண்டிருந்தாள். ஆஸ்திரேலிய பழங்குடியனத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் அந்த பெண் பேசியது மொழி பெயர்க்கப்பட்டது.

“எங்கள் சம்பிரதாயப்படி இறந்த உடலை கடலின் நடுவே சென்று மூழ்கடிக்கப்பட வேண்டும் தயவு செய்து… என்னுடலை சின்னா பின்னமாக்காதீர்கள் என் கடைசியாசையை ஆவது நிறைவேற்றுங்கள்.” என்று கதறினாள்.

ஆனால் கொஞமும் இரக்கம் கொள்ளாத வெள்ளையர்கள் அவள் உடலை நிலத்தில் புதைத்தார்கள். பின் தோண்டி எடுத்த எலும்பை, 1947ல் கடைசி டாஸ்மேனிடப் பெண் என்று மியூசியத்தில் வைத்தார்கள். 1976ம் ஆண்டு மக்கள் ஒன்றிணைந்து இனப்படுகொலை செய்யப்பட்ட அந்த இனத்தின் கடைசி மகளைக் கடலில் கரைத்தார்கள்.

***
1968 ஆண்டு மார்ச் மாதம் வியட்நாமில் தரையிறங்கிய அமெரிக்கப் படைகளுக்கு இப்படி அறிவுறுத்தப்பட்டது, “யாரெல்லாம் மறைந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் தப்பி ஓடுகிறார்களோ அவர்களெல்லாம் நம் எதிரிகள். காலை 7 மணிக்குப் பிறகு ஊரையே காலிசெய்துவிட வேண்டும். பெண்கள், குழந்தைகள், ஏன் சிறு விலங்குகளைக் கூட உயிருடன் விட்டுவிடக்கூடாது.”

படைப் பிரிவுத் தளபதி எர்னெஸ்ட் மேடினா உத்தரவை நிறைவேற்ற வியட்நாமின் சோன்மை  கிராமம் சுற்றிவளைக்கப்பட்டது. கோயிலில் மண்டியிட்டு பிரார்த்தனையில் இருந்தவர்கள், சந்தைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தவர்கள், வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளென எந்த எதிர்ப்புமில்லாமல், வான் வழியாகவும், தரை வழியாகவும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சிலமணிநேரங்களில் ஐநூறு உயிர்கள் சர்வசாதாரணமாகச் சுட்டுவீழ்த்தப்பட்டது.

1969-ம் ஆண்டுவரை இந்தச் சம்பவமே வெளியே தெரியாது. பெயரளவில் இராணுவ விசாரணை நடத்தி இந்த படுகொலையை முன்னின்று நடத்திய வில்லியம் கேலி மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் வீட்டுக்காவலுக்குப் பின் விடுவிக்கப் பட்டான். அந்த ஐநூறு உயிர்கள்? .

வியட்நாம் படுகொலை  கடைசி வரைக்கும் அமெரிக்காவால் யுத்த நடவடிக்கை என்றே அறிவிக்கப்பட்டது. வியட்நாமில் பல லட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். வடக்கு வியட்நாமின் முதலாவது பெண் போர் செய்தியாளரும் அதில் அடக்கம்.
இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் அவரது குடும்பத்தினர் அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிய  முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது மகளான குவாங் லீ இப்போது பிபிசியில்  செய்தியாளராகப் பணியாற்றுகிறார்.

ஹிட்லரின் கொடுமைகள் நடந்தேறிய நியூரம்பர்க்- கொடூரத்தையும் தான்   நாம் மறக்க முடியுமா? .


***
இப்படியான பல  இனப்படுகொலைகள் உலகம் முழுவதும் நடந்ததை வரலாற்றில் நாம் படிக்கும் போது கண்ணீர் வருகின்றது.

உலகில் நடந்த இனப்படுகொலை முகாம்களில் இறந்தவர்களின் எண்ணிக்கைத் தோராயம் :

#அவுஸ்விட்ச் - 1,000,000
#பெல்செக் -  600,000
#கெல்மினோ -   320,000
#ஜசேனோவக் -       58–97,000
#மஜ்டனெக் - 360,000
#மலே
#டிரொஸ்டினெட்ஸ் - 65,000
#சொபிபோர் - 250,000
#டிரெபிலிங்கா - 870,000

#இனப்படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை..

#யூதர்கள் - 5.9 மில்லியன்.
#சோவியத் போர் கைதிகள் 2–3 மில்லியன்.
பாரம்பரிய #போலந்தினர் 1.8–2 மில்லியன்.
#ரோமானி 220,000–1,500,000.
#ஊனமுற்றோர் 200,000–250,000 .
#ஃப்ரீமேசன்ஸ் 80,000–200,000.
#ஸ்லோவேனியர்கள்  20,000–25,000.
#ஓரினச்சேர்க்கையாளர்கள் 5,000–15,000.
#யெகோவாவின் சாட்சிகள் 2,500–5,000.
#எசுப்பானியக் குடியரசுக் கட்சியினர் - 7000.


இப்படித்தான் தமிழ் ஈழத்தில் கடந்த 2009 மே 16,17,18 ஆகிய தேதிகளில் முள்ளிவாய்க்காலில் தமிழ்ச் சகோதர சகோதரிகள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டனர்.  ஆனால், நம் போன்ற தமிழினத்தின் சொந்தக்காரகளும், மனித உரிமை ஆர்வலர்களும் கைகட்டி வருத்தப் படுகின்றோமே ஒழிய அதற்குக் காரணமான இராஜ பக்‌ஷேவையோ, அவர் சகாக்களையோ கூட ஒரு சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணைக்கு ஆட்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கமும், வேதனையும் நம்மை வாட்டுகின்றது.

லைபீரியாவின் அதிபராக இருந்த சார்லஸ் டெய்லர் அந்நாட்டில் இனப்படுகொலை செய்ததற்காக சர்வதேச புலன்விசாரணையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இலண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.  ஆனால் முள்ளிவாய்க்காலில் தமிழினத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு, ஒரு சர்வதேச புலனாய்வு விசாரணையைக்கூட அமைக்க முடியவில்லையே.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து கண்ணில்பட்ட உணர்ச்சிகரமான பதிவை இத்துடன் இணைத்துள்ளேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலை:

 தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சகதியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு. எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் இந்த நெருப்பை எவராலும் அணைத்து விடமுடியாது.

உடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்த நாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது.

2006இல் மாவிலாற்றில் ஆரம்பித்த ஆற்றுப் பிரச்சினை 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழக்கனவுகள் மண்ணில் புதையுண்டு போகும் என சிங்கள அரசு தப்புக்கணக்கு போட்டது .

பொது மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களை எறிகணைத் தாக்குதல்களாலும் ஷெல் வீச்சுக்களாலும் கோரத் தாண்டவமாடி கொலைக்களமாக்கியது சிங்களப்படை. துண்டாடப்பட்ட நிலங்களில் திண்டாடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையா முள்ளிவாய்க்கால், வெள்ளா முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலையமாக சிங்கள அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இப்பகுதிகளில் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் பயங்கர வாத்தினைத் தோற்கடித்தல் என்ற பரப்புரையின் கீழ் வரலாறு காணாத தமிழின படுகொலையை நிகழ்த்திவிட்டு தெற்கில் சிங்கள அரசும் அதன் படைகளும் கோலாகலமாக வெற்றி விழாவாகக் கொண்டாடுகிறது. தமிழர் தாயகப்பகுதிகளில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூற அனுதியில்லை. இது கொடிய இன ஒடுக்கு முறையன்றி வேறு என்னவாக இருக்க முடியும்??.
முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம். பாலையும் நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மண்ணின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் மன உறுதிக்குச் தக்கசான்று.

அந்த மண்ணில் ஊனுமின்றி உறக்கமுமின்றி ஈழமக்கள் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாகவல்லவா இறுதிவரை போராடினார்கள். முள்ளிவாய்க்கால் என்கின்ற போது ஒவ்வொரு ஈழத்தமிழனது நரம்புகளும் முறுக்கேறும். இதயத்துடிப்பு அதிகரிக்கும் நெஞ்சம் கனக்கும் தமிழீழம் என்ற இலட்சியக்கனவு உயிர் பெற்று எம்மை வழிநடத்தும்.

உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொரு வகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்தது.

மதவெறி பிடித்த முடவன் தைமூர் வட இந்தியாவைச் சிதைத்தபோது மடிந்த மக்கள் லட்சத்தைத் தாண்டினர். நவீன உலகின் இனவெறியன் நாசிச ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் பல்லட்சம் யூதர்களைச் சாம்பலாக்கியது.

ஆனால் இவற்றையெல்லாவற்றையும் தாண்டி புதிய உலக ஒழுங்கிங்கிலும் ஆர்மேனிய, கொசோவா, அல்பேனியா, சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் என போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகள் மானிட வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருந்தாலும் இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் மனித குலத்திற்கெதிரான இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நிகழ்ந்தது.

உலகத்தமிழினமே முள்ளிவாய்க்காலில் போரின் பிடியில் சிக்குண்ட எமதுறவுகள் இட்ட அவலக்குரல் உன் காதுகளில் கேட்கிறதா? மானிடம் பேசும் மாண்புமிகு மானிடவாதிகளுக்கும் எம்முறவுகளின் அவலக்குரல் கேட்கவில்லையே!

முள்ளிவாய்க்காலில் மக்கள் குண்டுபட்டு மடிந்தார்கள் படுகாயமடைந்து மருத்துவச் சிகிச்சையின்றி மடிந்தார்கள். இரசாயணக் குண்டிற்கு இரையாகி மடிந்தார்கள். உணவின்றி பட்டினியால் மடிந்தார்கள் இவையெல்லாம் உலகின் கண்களுக்குத் தெரியவில்லையே. இப்பெருங்கொடுமையை இந்த உலகம் ஏன் கேட்கவில்லை பார்க்கவில்லை. அல்லது பார்த்தும் பாராமுகமாக நடந்துகொண்டது. எம்மினத்திற்கு ஏன் இந்தக் கொடுமை நிகழ்ந்த்து. எம்மினம் என்னதான் தவறிழைத்தது? கேட்கக் கூடாத எதையாவது எம்மினம் கேட்டுவிட்டதா? மனிதப்பிறவியின் பிறப்புரிமையான சுதந்திரத்தைத் தானே கேட்டது. சுதந்திரத்தை கேட்டதற்கா இப்பெருந் தண்டணை.

முள்ளிவாய்க்காலில் எம்முறவுகள் எழுப்பிய மரண ஓலங்கள் ஆன்ம ஓலங்களாக தமிழ்த் தேசியத்தின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களப்படை கொலைவெறியாட்டத்தை நிகழ்த்துவதற்குத் தடையாக ஆனந்தபுரத்தில் எம்மின வீர்ர்கள் நடத்திய தனிச்சமர் எம்மின விடுதலை இலட்சியத்தின் பற்றுதிக்கு தக்க சான்று.

நாற்புறமும் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்துகொண்டு சர்வதேச நாடுகளின் ஆயத தொழில்நுட்ப உதவியோடு நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு பல்லாயிரம் எதிரிகளை வீழ்த்திய சிலநூறு புலிவீரர்களின் வீரஉடல்கள் அந்தமண்ணிலே வீழ்ந்ததைத்தான் எப்படி மறப்போம்.

தம் இறுதி மூச்சுவரை தமிழீழ இலட்சியத்திற்காக அவர்கள் சிந்திய குருதிதான் வீண்போகுமா அந்த இறுக்கமான போரினுள்ளே சிங்களத்தின் சேனைகளைச் சிதைக்க எம் வீர்ர்கள் மனிதக் குண்டுகளாக எதிரிகளினுள்ளே வெடித்துச் சிதறிய அளப்பரிய தியாகங்களைத்தான் எண்ணிப்பார்க்க முடியுமா?

தமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும் சுமக்கத் தயாராகிய வன்னியின் மூன்றரை லட்சம் மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாய்க்கால் வாழ்வைத்தான் எப்படி மறப்போம்.

எல்லாவற்றிற்கும் மேலாக may 16,17,18ஆம் நாட்களில் நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கேனும் நடந்த்துண்டா?

முள்ளிவாய்க்கால் ஜ.நா வரலாற்றில் படுமோசமான இருள் சூழ்ந்த அத்தியாயமாக அமைகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்ற போது சர்வதேச சமூகத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் லோறன்ஸ் திலகர் பாதுகாக்கும் பொறுப்பு (Responsibility to Protect – R2P) என்ற கோட்பாட்டின் கீழ் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தும்படி சர்வதேச சமூகத்தை கேட்டார். ஆனால் போருக்கு எல்லா வகையிலும் உதவிய சர்வதேச சமூகத்தால் அவருடைய கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியவில்லை.

ஒன்றா இரண்டா மூன்று நாட்களில் 46.000க்கு மேல் ஈழத் தமிழர்களையல்லவா முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்தது சிங்களப் பேரினவாதம். மடியிலிருந்த குழந்தை குண்டுபட்டு இறந்தது தெரியாமல் இருந்தாள் ஒருதாய். மறுபுறத்தே தாயிறந்தது தெரியாத மகவு பாலுக்கழுதது தாய் மடியில். குழந்தையின் இரண்டு கைகளும் இழந்ததையிட்டுத் துடித்தாள் ஒரு தாய். கருவுற்ற தாயின் வயிற்றில் குண்டு பட்டு வயிற்றின் படுகாயத்தினூடே சிசு வெளித் தொங்கியதை இவ்வையகம் எங்கும் பாத்த்துண்டா.

உலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்யாத மிகக் கீழ்த்தரமான மிருகத்தனமான ஈனச்செயல்களை அங்கே எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த்தல்லவா. அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களை துகிலுரித்த சிங்களப் படையினரையும், பிணத்துடன் புணர்ந்த காமுகர்களையும், இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களத்தில் கொடுமையை யாரும் அறிந்துண்டா? மனித மொழிகளில் சொல்லக் கூடிய இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் உள்ளதோ அத்தனை கொடுமைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறியது.

01. சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும் : சாணக்கியர்
02. தகுதியுள்ளவை உயிர்வாழும் : டார்வின்
03. தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த வாழ்க்கைக்கு அது அவசியமுமாகும் : சிக்மன்ட் ப்ராய்ட்

இதை புரியாததன் விளைவுதான் தாயகத்தில் கட்டமைக்கப் பட்டுள்ள இனஅழிப்புக்குள் சிக்கி நாம் இரையாக வேண்டியுள்ளது.

எனவே அபிவிருத்தி, நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை என்ற நுண்மையான இன அழிப்பு மாய வலைகளை அறுத்தெறிந்துவிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் ஒன்றே இன அழிப்பில் இருந்து எம்மை முழுமையாக பாதுகாக்கும் என்பதை புரிந்து கொள்வோம்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழத்தின் இராணுவபலம் உடைக்கப்பட்டு தமிழீழ அரசு தற்காலிகமாக வீழ்த்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல. அது தமிழீழத்தின் கருத்தரிப்பு. சிங்களம் முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதியதாக எக்காளமிடலாம் அது எம்மின எழுச்சியின் ஆரம்பம். சர்வதேசம் எங்கும் தமிழர்களால் பாரிய எழுச்சியாக நினைவு கூறப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் தாயக மக்களின் விடுதலைக்கான பாதையை திறந்துவிடும். சர்வதிகாரம் நீண்டநாள் நின்று பிடிப்பதில்லை என்பது உலக வரலாறு.

ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் தொடர்பான சில முக்கிய கடமைகள் இருக்கின்றன.

1. முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான முழு விபரங்களும் திரட்டப்பட்டு ஆவணப் படுத்தப் படவேண்டும். நீதி விசாரணைக்கான பிரசார முயற்சிகளை எடுக்க வேண்டும்.

2. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டோர், காணமற் போனோரின் பெயர், முகவரி விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஒரு ஈழத் தமிழனாவது பெயர் முகவரி இல்லாமல் சாகக் கூடாது.

3. முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தோரின் சடலங்களுக்கு என்ன நடந்தது என்று கண்டறியப்பட வேண்டும்.

தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை. சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழத் தனி நாட்டின் தோற்றம் சாத்தியமே. இதற்கான உழைப்பை உலகத் தமிழினம் சிரமம் பாராது மேற்கொள்ள வேண்டும்.

உலகவரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிக் கிடந்ததான வரலாறு எங்குமில்லையே. அப்படியிருக்க ஒடுக்கிய சிங்களம் ஓய்வெடுப்பதா? முள்ளிவாய்காலில் ஒடுங்கிய தமிழனத்தின் ஆன்ம ஓலம் ஒடுங்கித்தான் கிடக்குமா?  சிங்களதேசத்திற்குமொரு முள்ளிவாய்க்கால் வராமல் தான் போய்விடுமா  உலகத்தமிழினமே விழித்திரு... வெறித்திரு... தெளிந்திரு.. ஈழவிடுதலையின் மிள்ச்சிக்காக நாளைய போரை அவர்களுக்காக நாமே நடாத்துவோம்.

 - ஈழத்து நிலவன் -

*


#KSRadhakrishnan
#KSR_Posts 

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC