#யாழ் நூலக எரிப்பின் 38ஆம் ஆண்டு ...
-----------------------
யாழ்.பொது நூலகம் (Library) எரியூட்டப்பட்டு வரலாறுகளை அழித்த நாள். 31-05-1981 நள்ளிரவில் (01.06.1981)
கடந்த 1981 மே 31 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின.
கடந்த 1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். ஹிட்லர் கூட செய்யாத கொடூர உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெருமதிப்புமிக்க நூல்கள் அழிந்தன.
இன்றோடு ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும்.
20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.
இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இது.
இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சிலரும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் மருத்துவமனை வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.
1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.
நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணி தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் அரச சிங்கள காவல்துறையினரின் உதவியோடு திட்டமிட்ட சதியாக இடம்பெற்றது.
இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் அரிய நூல்களுடன்தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. தமிழீழ விடுதலை போராட்டம் வீச்சுப் பெற யாழ் நூலக எரிப்பும் ஒரு காரணமாயிற்று.
1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போன அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண. டேவிட் அடிகள். அந்த நூலக எரியூட்டலினால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு இலக்கியவாதி “சுஜாதா” 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் “ஒரு இலட்சம் புத்தகங்கள்” என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.
அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து “கிருதயுகம்” என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.
யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த “The Jaffna Public Library rises from its ashes” என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார். எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.
இவை போல் பல ஆவண நூல்கள் யாழ் நூலக எரிப்பு குறித்து உருவாயின. இந்த கொடும் வலியை உணர்வில் ஏற்றுக் கொள்ளும் தமிழ் மக்கள் தாம் வாழும் இடமெல்லாம் ஆவணப்படுத்தல்களையும் நூலகங்களையும் கட்டி எழுப்பி அன்று மூண்ட தீயின் எழுச்சியை உலகெங்கும் விதைக்க வேண்டும்.