#டெல்லியில்தமிழகமாணவர்களின் கல்வி நிலையங்களில் சேர்ப்பது பிரச்சனையா?*
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர்களின் ஆக்கிரமிப்பால் புதுடெல்லியில் மாணவர்களுக்கு இடம் கிடைப்பது குறைந்துவிட்டது. தமிழக மாணவர்கள் மற்றவர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறார்கள் என்று கூறியதாக செய்திகள் வந்தன.
டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம், அம்பேத்கார் பல்கலைக்கழகம் என பல பல்கலைக்கழகங்கள் டெல்லியில் உள்ளன. இதில் முதல் மூன்று பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகும். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சேர தனி நுழைவுத் தேர்வு உண்டு. டெல்லி பல்கலைக்கழகத்தின் 58 கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் படிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களை போல் டெல்லி பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு உண்டு. இந்த பல்கலைக்கழகங்களில் எஸ்.சி, எஸ்.டி, காஷ்மீரிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கு தனி இட ஒதுக்கீடு உண்டு. நானும் 1975 காலகட்டங்களில் JNUவில் சேர்ந்து சில நாட்கள் வகுப்புகளுக்கு சென்று கொண்டு இருந்தேன். டெல்லி பல்கலைக்கழகம், JNU, ஜாமியா மில்லியா ஆகியவை பரந்த சுற்றளவில் பச்சைப்பசேல் என்று தனித்தனியாக பாடப்பிரிவு வகையில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டவை. அந்த காலத்தில் பார்க்க மிக பிரம்மாண்டமாக இருக்கும். பிற்காலத்தில் ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், யேல் போன்ற பல்கலைக்கழகங்களை பார்த்தபோது டெல்லி போலவே உள்ளதாக தோன்றியது.
இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களை சந்திப்பது, சில நிகழ்ச்சிகளை நடத்துவது எல்லாம் அப்போது நடைபெற்றது. JNUவில் படிக்காமல் சென்னை சட்டக் கல்லூரிக்கு வந்து படித்தபோது, தவறு செய்துவிட்டோமோ என்று பின் காலத்தில் தோன்றியது. மேலும் பன்முகத்தோடு பணிகளை விரிவுபடுத்தி இருக்கலாம் என்று அடிக்கடி தோன்றும்.
ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி, டெல்லி இந்துக் கல்லூரி, தயால் சிங் கல்லூரி (இந்த கல்லூரியை நிறுவியவர் சர்தார் தயால் சிங் மஜிதியா. இவர் தான் பஞ்சாப் நேஷனல் வங்கியை நிறுவியவர்.), மிராண்டா ஹவுஸ் என தமிழர்கள் அதிகமாக படிப்பது உண்டு. புனித ஸ்டீபன் கல்லூரியில் கேரளா மாணவர்கள் அதிகமாக படித்தனர். 1970களில் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவர்களின் படிப்பு திறனும் உயர்ந்திருந்தது. டெல்லியில் இருப்பது போல பல பிரம்மாண்டமான பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் இல்லாதது குறைதான். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், பிட்ஸ் (BITS) பிலானி போன்றவை இல்லாதது ஒரு குறைதான். தமிழகத்தின் திருவாரூரிலும், புதுவையிலும் மத்திய பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டாலும் டெல்லி பல்கலைக்கழகங்கள் போல இன்னும் வசதி வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.
டெல்லியில் 7 தமிழ் பள்ளிகள் உள்ளன. இதில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் டெல்லி பல்கலைக் கழகங்களில் பல கல்லூரிகளில் சேர்வதுண்டு. அப்போது தமிழ்த்துறை இருந்தது கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக தமிழ் துறை மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது மேலும் தமிழ் மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தும் என்றுதான் தெரிகிறது.
கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அப்படியெனில் ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், யேல் போன்ற பல்கலைக்கழகங்களில் படிக்கும் நம் நாட்டு மாணவர்களிடம் வெளிநாட்டினர் காட்டும் கரிசனம் போலவே டெல்லி பல்கலைக்கழகம் காட்ட வேண்டுமல்லவா?
படங்கள்.
1. டெல்லி பல்கலைக்கழகம்,
2. புனித ஸ்டீபன் கல்லூரி.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-05-2019
No comments:
Post a Comment