------------------------------------------------------
ஓட்டப்பிடாரம் இடைத் தேர்தல்
வாக்கு சேகரிக்கும் பணிக்காக கிராமங்களுக்குச் சென்றபோது வானம் பார்த்த கரிசல் கந்தக பூமியில் கண்ட காட்சிகள் இவை....
(1) புளிய மரத்தில் காய்த்துத் தொங்கும் புளியங்காய்கள்.மாட்டு வண்டி, நாட்டு கோழிகள்.....
(2)சம்சாரிகளின் கலப்பைகள் ஒரு மூலையில் ஆர்வம் அற்ற நிலையில் சாய்த்து வைத்திருந்தது:விவசாயிகளின் கவலையாண நிலை...
நன்றாக நினைவிருக்கிறது 1965க்கு பிறகுதான் விவசாயிகள் டிராக்டரை வாங்கிப் பயன்படுத்த துவங்கினார்கள். அதற்கு முன்பெல்லாம் உழவு மாடுகள் ஐந்து ஜோடி(10 மாடுகள்) மாட்டு வண்டிக்குத் தனியாக ஒரு ஜோடி(2) ஆகப் பணிரெண்டு மாடுகள், எருமை மாடுகள் ஐந்து, மற்றும் பசு மாடுகள் என்று தொழவத்தில் கட்டப்பட்டிருக்கும். ஒன்று சினையானால் மற்ற பால் கொடுக்கும்.
அவற்றிற்கான தீவனப்படப்புகள் பத்துப் படப்புகளில் ஒரு வருடத்திற்கான தீவனம்பாதுகாக்கப்பட்டிருக்கும்.விடியற்காலை நாலு, நாலரைக்கெல்லாம் பருத்திக் கொட்டைகளை உரலில் ஆட்டி மாடுகளுக்கு கொடுப்பதும் பிண்ணாக்கு கலந்து நீர் வைப்பதும் வாடிக்கை.
வண்டி மாடுகளுக்கு காலில் இரும்பாலான லாடங்களை கட்டுவார்கள்.பால் மாடு கன்றை ஈன்றால் சீம்பால் கிடைக்கும் அதை சிலர் மிகவும் விரும்பிசாப்பிடுவார்கள்.
மாட்டுத்தீவனத்தை தீயிட்டு மசகைத் தயாரித்து வண்டியின் சக்கரங்களில் உள்ள ஆரக்கால்களின் மையத்தில் தடவுவார்கள்.அது சக்கரங்கள் எளிதாய் உருள உதவும்.
இந்த வட்டாரத்தில் கயத்தாறு, சிவகாசி அருகே வெம்பக் கோட்டை பகுதியில் வண்டிகள் சிறப்பாக செய்து விற்பனைக்கு கிடைக்கும்.
இப்படியான காட்சிகள் தற்போது மாறிவிட்டன. கார்ப்பரேட் கம்பெனிகள் வந்து இந்த அமைதியான பழக்கவழக்கங்கள் அடித்துச் செல்லப்பட்டன.என்ன செய்ய..?
மாட்டுவண்டிகளையும்,கலப்பைகளையும் தெருக்களில் ஓரத்தில் நிப்பாட்டி வைப்பது அப்போதைய பழக்கம்.கிராமத் தெருக்களில் இப்போது மாட்டு வண்டிகளுமில்லை, கலப்பைகளுமில்லை.வீட்டுத் தொழுவங்களில் மாடுகளும், எருமைகளும், பசுக்களும் இல்லை.
நமது ஐந்தாண்டு திட்டகுழுக்கள், ரோலிங் ப்ளான். நித்தி ஆயோக் மற்றும் கார்ப்ரேட் கம்பெனிக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற காரணத்தால் தான் பழமைகள் மாறி கேடுகெட்ட புதுமைகள் வந்தேறுகின்றன. உலகமயமாக்கலில் யார் நினைத்தாலும் இனி பழமையை வென்றெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே..
உண்மையான இந்தியா
கிராமங்களில்தான உள்ளது என்றார் உத்தமர் காந்தி.கிராம ராஜ்ஜியத்தையே உலை வைத்து அழிக்கப்பார்க்கிறது பன்னாட்டு நிறுவனங்கள்.நம்முடைய பழமையான நல்ல செயல்பாடுகளை இனி பதிவு செய்யப்பட்ட எழுத்துகளில்தான் பார்க்க இயலும் என்பதே இன்றைய நிலையாகும.
#கிராமியம் #கிராமராஜ்ஜியம்
No comments:
Post a Comment