நான் திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்தபோது நடிகர் கமலஹாசன் நடித்த ஹேராம் படம் தணிக்கைக்கு வந்தது. அந்த படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டுமென்று குழுவில் இருந்த சிலர் கூறினர். நான் எனது சார்பாக சில வாதங்களை எடுத்துவைத்தேன். மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டதையும் அதுகுறித்து உள்ள காட்சிகளில் எந்த தவறும் இல்லையென்று வாதாடியவன் நான். இது தொடர்பாக எனது தரவுகளையும் குழுவினர் ஏற்றுக் கொண்டனர். இன்றைக்கு ஹேராம் தொடர்பாக கமலஹாசன் பேசுகிறார். தற்போதைய இந்த சூழலில் இதை பதிவு செய்கிறேன்.
இந்தியாவின் இருண்ட காலம், கண்ணீர் விட்டு கதறி அழுத தருணம்.
கோட்சே வழக்கும், தூக்கு தண்டனையும்.
அன்று சிம்லாவில் இருந்த பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் கோட்சேவின் வழக்கு நடந்தது. நவம்பர் 8, 1949இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனையை ரத்து செய்ய கோரி, காந்தியின் மகன்களான மணிலால் காந்தி மற்றும் ராமதாஸ் காந்தி கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை அன்றைய பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல், கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரியார் ஆகியோர் நிராகரித்தனர். நவம்பர் 15, 1949இல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டார் கோட்சே.
பல கூட்டாளிகளின் துணையுடன், நன்கு திட்டமிட்டு, இந்த கொலையை கோட்சே செய்ததாக வழக்கை விசாரித்த நீதியரசர் கோஸ்லா கூறினார்.
இந்த கொலை நிகழ்வானது காந்திக்கு மிக அருகில் நின்று மூன்று முறை சுட்டார். அப்போது ஜனவரி 30, 1948 மாலை சரியாக 5.12 க்கு டெல்லியில் உள்ள பிர்லா மாளிகை, கன்னார் பிளேஸ் என்ற இடத்தில் மகாத்மா காந்தியின் பாதங்களை தொட்டு வணங்கிய பின், கோட்சே அவரை சுட்டார். சுடப்ட்ட உடனேயே மரணமடைந்துவிட்டார்.
தனது பாதகச் செயல் மூலம் தேசத்தை உலுக்கிய, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சேவின் தந்தை விநாயக் வாமன்ராவ் கோட்சே ஒரு தபால் துறை ஊழியர். மகாராஷ்டிராவில் உள்ள பாரமதியில் ஒரு மராத்திய சித்பவன் பிராமண குடும்பத்தில் பிறந்து, ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டப்பட்டார். பின்னர் நாதுராம் என்று பெயர் மாற்றப்பட்டது. இதற்கு ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியே காரணம்.
இவருக்கு முன், மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்து பின் இறந்தனர். ஆண் குழந்தைகள் பிறந்தால், அவை மரணமடையும் என்ற சாபம் இருப்பதாக பயந்த அவரின் பெற்றோர், ராமச்சந்திரனை பெண் குழந்தை போலவே சில ஆண்டுகள் வரை, மூக்குத்தி அணிவித்து வளர்த்தனர். இதனால் அவருக்கு நாதுராம் என்ற புனைப் பெயர் உருவானது. (நாது ராம் என்றால் மூக்கில் வளை அணிந்தவர் என்று அர்த்தம்) அவருக்கு ஒரு தம்பி பிறந்த பின்னர் ஆண் பிள்ளை போல வளர்க்கப்பட்டார். இளம் வயதில் காந்தி மீது பெரும் மரியாதை கொண்டிருந்தார். உயர்நிலை பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் மற்றும் இந்து மகாசபை ஆகியவற்றின் முழுநேர ஊழியரானார். இந்து மகா சபைக்காக அக்ரானி என்ற மராத்திய மொழி பத்திரிக்கையை துவங்கினார். பின்னர் இதன் பெயர் இந்து ராஷ்டிரா என்று மாற்றப்பட்டது. படிப்படியாக காந்திய கொள்கைகள் மீது நம்பிக்கை இழந்த கேட்சே பல பிரச்சனைகளுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து அதன் மூலம் இந்துக்களின் நலன்களுக்கு கேடு விளைவித்தார் என்று நம்பினார்.
#ஹேராம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-05-2019
(படம்- காந்தி படுகொலை காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை)
No comments:
Post a Comment