Monday, August 31, 2015

ஸ்மார்ட் நகரங்கள் - Smart City Infrastructure
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், வேலூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தஞ்சாவூர் என 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

உத்திர பிரதேசம், ஜம்முகாஷ்மீர் மாநிலங்களில் கூடுதலாக சில நகரங்கள் அறிவிக்கப்படலாம். இதற்கு மத்திய அரசு துவக்கமாக முதலாமாண்டு 200கோடியும், பின் வரும் ஆண்டுகளில் தலா 100கோடியும் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. 98 நகரங்கள் இதற்காகத் திட்டமிடப்பட்டு இதுவரை 90 நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைப்பதில் முதல் கட்டமாக டில்லி மற்றும் மும்பை இடையே 7 நகரங்கள் அமைய உள்ளது. வரும் 2019 ஆம் ஆண்டு முடிவில் டோலேரா , ஷென்ட்ரா-பிகின் , குளோபல் சிட்டி என மூன்று ஸ்மார்ட் சிட்டிகள் இந்தியாவில் உருவாகி இருக்கும் .

இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சாரம் வழங்கும் கிரிட்களில் இருந்து கழிவுநீர் குழாய்கள் வரை அனைத்தும் ஒரே கண்காணிப்பு தளத்தில் இணைக்கப்பட்டு இருக்கும். சிசிடிவி கேமிராக்கள், வயர்லெஸ் கருவிகள் , தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப்பட்டு முற்றிலும் தொழிநுட்ப வசதிகளோடு உருவாக்கப்பட்டிருக்கும்.

முற்றிலும் கணினி மயமாக்கப்படும் இந்த ஸ்மார்ட் நகரங்களுக்காக மென்பொருட்களைத் தயாரிக்க பல முன்னணி நிறுவனங்கள் முன்வந்துள்ளன. குறிப்பாக தற்போது ஐ.பி.எம். நிறுவனம் ஸ்மார்ட் சிட்டிகளுக்கான மென்பொருட்களை உருவாக்க முன்வந்துள்ளது.

ஏற்கனவே ஐ.பி.எம் நிறுவனம் சிங்கப்பூர் மற்றும் கலிபோர்னியாவின் போக்குவரத்து வாகனங்களைக் கணக்கிட்டு வாகன நெரிசல்கள் ஏற்படும் முன்பே தகவல் தெரிவித்து அதனைச் சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளும் மென்பொருட்களை தயாரித்து அளித்துள்ளது.

பல தொழில்நுட்பங்களை கொண்டடங்கிய இந்த ஸ்மார்ட் நகரங்களில் தண்ணீர் முதல் அத்தனையும் எலெக்ட்ரானிக் கார்டுகளால் கணக்கிடப்படும். தற்போது சீனாவில் டியான்ஜின் எகோ சிட்டி , சுஃஷோ , குயங்க்ஷோ , ஸ்செகுசான் ஆகிய 4 இடங்களில் ஸ்மார்ட் சிட்டிகள் அமைந்துள்ளது.

அகமதாபாத் விமான நிலையம் அருகில் உள்ள கிப்ட்(GIFT)-ல் தான் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சிட்டி அமைய உள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டிகளினால் 5 லட்சம் மக்கள் நேரடியாகவும், லட்சக்கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-08-2015.

‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_posts‬ #SmartCityInfrastructure

தஞ்சை விவசாயிகளை வஞ்சிக்கும் ஷேல் கேஸ் திட்டம். - Shale Gasஇயற்கை எரிவாயு என்பது மீத்தேன். ஈத்தேன், புயூட்டேன், கார்பன் டை ஆக்ஸைடு, ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் மற்றும் இதர வாயுக்களின் கூட்டுக் கலவையால் ஆனது.

ஷேல் எரிவாயு பூமிக்கடியில் 10ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள பல அடுக்குகள் கொண்ட மென்மையான களிப்பாறைகளை ஹைட்ராலி்க் பிராக்சரிங் முறையில் பாறைகளைத் துளையிடும்போது வெளியெடுக்கப்படும் எரிவாயு.

பூமிக்கு அடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கிப்போன தாவரவகைகள் மற்றும் உயிரினங்கள் தான் பல மாற்றங்களை அடைந்து இம்மாதிரி எரிவாயுப்பொருட்களாக உருமாறியுள்ளன.

தஞ்சை வட்டாரத்தில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகளை நடத்தி எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்களை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

தஞ்சையின் வடக்கே பூம்புகாரிலிருந்து, கிழக்கே நாகப்பட்டிணம், தெற்கே பட்டுக்கோட்டை மற்றும் குத்தாலம், கும்பகோணம் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டது. இப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடலிலும் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுசெய்யப்பட்ட பகுதிகளில் பெருமாலானவை பச்சைப்பசேலென்று நெற்பயிர்கள் விளையும் வயற்காடுகள்.

ஆய்வுகள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில், விவசாயிகளுக்கு முதலில் இதுகுறித்தான விளைவுகளும், பிரச்சனைகளும் தெரிந்திருக்கவில்லை. பல போராட்டங்களுக்குப் பின், மீத்தேன் வாயுத் திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு தற்போது ஷேல் கேஸ் என்ற பெயரில் மீண்டும் துளையிடத் துவங்கியிருக்கிறார்கள்.

450அடி முதல் 1500அடி ஆழம் வரை பூமிக்கடியில் துளையிட்டு, நிலக்கரிப் படிமங்களை அழுத்திக்கொண்டிருக்கும் நிலத்தடி நீரை வெளியே எடுக்கும் போது மீத்தேன் வாயு அந்த வெற்றிடத்திலிருந்து வெளியேறும். அவ்வாறு நீர் வெளியேறும் போது நிலத்தடிநீர் பாதாளத்துக்குப் போய் பற்றாக்குறை ஏற்படும். கடல்நீர் உட்புகவும் வாய்ப்புள்ளது.

ஷேல் கேஸ் எடுக்கும் முறையில், ஒரு துளைக்குள் செலுத்தப்படும் சுமார் 600வகையான ரசாயனங்கள் கொண்ட கரைசல் சுமார் 5முதல் 10கி.மீட்டர் சுற்றளவில் உள்ள நிலத்தடி நீரைப் பாழாக்கிவிடும். இந்த படிமக்கரைசல்கள் அடங்கிய தண்ணீர் மீண்டும் வெளியெடுக்கப்பட்டு நிலத்தில் மேற்பரப்பில் தேக்கிவைக்கும் போது மண்வளம் கெட்டுவிடும். சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படும்.

காவிரி டெல்டா 7சதவிகித விவசாய நிலங்களைக் கொண்டடங்கிய மண். பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வேளாண்மையே பிரதானத் தொழில். நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை பூமியின் விவசாயிகளை பாதுகாக்க முயற்சியெடுக்காமல், விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்தொழிக்கும் திட்டத்தினை Oil and Natural Gas Corporation நிறுவனமான ஓ.என்.ஜி.சி முழுமையாகக் கைவிட வேண்டும்.

ஆனால் இவ்வளவு போராட்டங்கள் தஞ்சை மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்ப்புக்குரல் கொடுத்தும் அடங்காமல் ஓ.என்.ஜி.சி தன் பணிகளை தொடர்ந்து செய்துகொண்டிருப்பது மத்திய அரசும் மாநில அரசும் நிறுத்தாமல் வாய்மூடி மௌனியாக இருப்பதற்கு பதில்சொல்லவேண்டிய காலம் வரும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-08-2015.

#ShaleGas_and_CoalBed_Methane_in_Thanjavur_DeltaDistricts.

#KsRadhakrishnan #KSR_posts
See also : http://ksr1956blog.blogspot.in/2015/08/shale-gas-and-coal-bed-methane-in.html


செல்போன் கோபுரங்கள் - Cellphone Towers.


அங்கிங்கெனாதபடி, எங்கும் தற்போது கண்ணில் படுகின்றவை எது என்று கேட்டால் அவை செல்பேசி டவர்கள் தான். இதன் மூலம் வெளியாகின்ற மின் காந்த அதிர்வுகள் சுற்றுச்சூழலை பாதிப்பதோடு மட்டுமில்லாமல், மக்களின் நல்வாழ்வையும் சீர்குலைக்கிறது என்ற கருத்தைச் சொல்லியுள்ளனர். சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையும் இந்த கதிர்வீச்சு பாதிப்பினால் குறைந்துவிட்டதாகச் சொல்கின்றனர்.

அதைக்குறித்தான இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில ஏட்டில், கடந்த 24-08-2015 அன்று புள்ளி விபரங்களோடு கூடிய வரைபடம் வெளியாகியுள்ளது. இத்துடன் அந்தப் வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜெர்மனியின் மருத்துவர்கள் புற்றுநோய் பரவுவது செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சால் அதிகமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். நார்வேயும் இதே கருத்தைச் சொல்லியுள்ளது. பிரிட்டன் ஆய்வாளர்கள் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்கின்றனர்.

கேரளா உயர்நீதிமன்றமும், அலகாபாத் உயர்நீதிமன்றமும், குஜராத் உயர்நீதிமன்றமும் இதைக் குறித்தான வழக்குகளை விசாரித்து நிபுணர்களிடம் பெற்ற அறிக்கையின்படி, செல்பேசி கோபுரங்களால் எந்த அச்சத்திற்குரிய பாதிப்பும் இல்லை என்ற கருத்தை தங்கள் தீர்ப்பில் சொல்லியுள்ளன.

எனவே செல்பேசி கோபுரங்களினால் பாதிப்பு ஏற்படுகின்றதா? இல்லையா என்பது இன்னும் தீர்க்கப்படாத விடயமாகவே உள்ளது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-08-2015.

‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬

#CellphoneTowers.

தமிழ்நாடு - TamilNadu.
ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி கருப்பண்ணன் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுகின்றது என்று அப்பகுதியை தனி மாநிலமாக தமிழகத்திலிருந்து பிரிக்கவேண்டும் என்று ஒரு பிரசுரத்தை எழுதியுள்ளார்.

இந்நூலை கடந்த 30-08-2015 அன்று நாமக்கல்லில் சிலம்பொலி செல்லப்பன் வெளியிட்டுள்ளார். சென்னையில் எல்லா தொழில்களும், வளங்களும்  குவிந்துவிட்டன. கொங்குநாடு புறக்கணிக்கப்படுகின்றது என்ற கருத்தை இந்நூலில் சொல்லியுள்ளார்.

அதேபோல தென்மாவட்டங்களான, காவிரிக்குத் தென்புறத்தில்,  திருவரங்கத்தில் அரங்கன் பள்ளிகொண்ட இடத்திலிருந்து தென் தமிழகம் வேண்டும் என்ற குரலும் ஆங்காங்கு ஒலிக்கின்றன.

ஒரு புறத்தில் தென்கோடியிலிருந்து சென்னைக்கு வருவது சிரமமான காரியம். அந்த வகையில் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு தென் தமிழகம் அமைந்தால் நல்லது என்று விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தின் வரலாறே தெற்கே இருந்துதான் துவங்குகிறது. மதுரைதான் புராதான, கலாச்சார மிக்க தமிழர்களின் தலைநகரம். அந்தவகையில் ஏன் மதுரை தலைநகராகக்கொண்டு ஏன் தென் தமிழகம் அமையக்கூடாது என்ற வினாக்களும் உள்ளன.

மற்றொருபுறம் தென் தமிழகம், வட தமிழகம், கொங்கு மண்டலம் என்று பிரிந்தால் ஜாதிய அரசியல் தலை எடுக்கும் என்று எதிர்வினைக் கருத்துகளைச் சொல்லி கடுமையான எதிர்ப்பும் உள்ளது.

இன்றைய தமிழகத்தின் எல்லைகள் அமைந்து 59 ஆண்டுகள் நிறைவாகின்ற நிலை. ஏற்கனவே தெற்கே நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, தேனி அருகே தேவிகுளம், பீர்மேடு, கொங்கு மண்டலத்தில் பாலக்காடு பகுதியில் பல கிராமங்களை கேரளாவிடம் இழந்தோம்.

கர்நாடகத்தில் கொள்ளேகால், மாண்டியா வரை உள்ள பகுதிகள் நம் கையைவிட்டுப் போனது. ஆந்திரத்தில் திருப்பதி, சித்தூர், நெல்லூரில் சில பகுதிகளை  தமிழகத்திடமிருந்து பிரித்து விட்டார்கள்.

பாரதிய ஜனதா ஆட்சிகாலத்தில் வாஜ்பாய் பிரதமராகவும்,   எல்.கே.அத்வானி உள்துறை அமைச்சராகவும் இருந்தபொழுது,  சிறுமாநிலங்களை அமைத்தால் நிர்வாகம் எளிதாக இருக்கும் என்று கொள்கை ரீதியாக முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து தெளிவான அறிக்கையும் உள்துறை அமைச்சகம் அப்போது பெற்றது.

தமிழகம் இப்படி இரண்டு மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் கடந்த 2007ல் இருந்து ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. இதைக்குறித்து மக்கள் கருத்து என்ன என்று தெரியவில்லை. இது ஒரு விவாதப் பொருள். காலம் தான் இதற்கு பதில் தரவேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-08-2015.

#TamilNadu #KsRadhakrishnan #KSR_Posts

Belgium coal

பெல்ஜியம் நிலக்கரிச் சுரங்கங்களில் நாள் முழுவதும் பணியாற்றிவிட்டு வந்த தொழிலாளர்களை காற்றோட்டமில்லாத அடுக்குப் பெட்டிகளில் அடைத்து வைத்திருக்கும் கொடூரமான காட்சி.

Belgium coal miners surface in a crammed cage elevator after a long day of work.தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலைப் பட்டியல் - 31-08-2015 வரை.. - Farmers Suicide List in Tamil Nadu.


தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் வைத்தியலிங்கம் , தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிமுக ஆட்சியில் இல்லை என்று ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யைச் சொல்லியுள்ளார். சட்டமன்றத்தில் உண்மையைப் பேச வேண்டிய அமைச்சர் இவ்வாறு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டதை வைத்தே அவர்மீது உரிமைப் பிரச்சனை கொண்டு வந்திருக்க வேண்டும். செய்தித்தாள்களில் இதுவரைத் தமிழ்நாட்டில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது கொட்டை எழுத்துகளில் வெளிவந்ததே? செய்தித்தாள் படிக்கக்கூட அமைச்சருக்கு முடியவில்லையா? அல்லது படிக்கத் தெரியாதா? அப்படிப்பட்டவர் எப்படி அமைச்சரானார்? கவிஞர் வைரமுத்து தற்கொலை செய்துகொண்ட காவிரி டெல்டா விவசாயிகள் 11பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி சென்னையில் வழங்கியதாகச் செய்திகள் வந்ததே அதுகூட அமைச்சருக்குத் தெரியாதா? கடன் தொல்லையாலும், மத்திய, மாநில அரசுகளின் விவசாயிகள் விரோத போக்கினாலும், விவசாயம் பொய்த்துப் போய் இதுவரையில் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் பட்டியல் இதோ. ஆளவந்தவர்கள் கண்களுக்கு இது போகுமா என்று தெரியவில்லை. 1.திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், வெள்ளப்பனேரி கிராமம் செந்தூர்பாண்டி. 2. திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் ஒன்றியம், வரகனூர் ஜெகந்நாதன். 3. விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், புதுக்கோட்டை கிராமத்தைச்சேர்ந்த பாண்டி. 4. நாகைமாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மாப்படுகை கிராமத்தைச் சார்ந்த முருகைய்யன். 5.நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம், மகிழி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். 6.அரியலூர் மாவட்டம், டி.பழூர் வட்டம் நடுவேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்மோகன். 7. நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் கூரத்தான் குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம். 8. திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கடம்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல். 9.புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி ஒன்றியம், காக்காத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி. 10. நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், நரிமணம் கிராமத்தைச் சேர்ந்த சாமியப்பன். 11. நாகைமாவட்டம், வேதாரண்யம் வட்டம், பிராந்தியான்கரை கிராமத்தைச் சேர்ந்த இடும்பையன். 12. கன்னியாகுமரி மாவட்டம் சரல்விளை கிராமத்தைச் சேர்ந்த மரிய மிக்கேல் ராபின்சன். 13. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் , பிள்ளையார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாத சாமி. 14. புதுக்கோட்டைமாவட்டம், ஆவுடையார் வட்டம், நரிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன். 15. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கை கிராமத்தைச் சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன். 16. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், கிலுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ். 17. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் ஆண்டாங்கரை கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக். 18. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம்,. நா.தா.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம். 19. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாம்பசிவம். 20. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கை கிராமத்தைச் சேர்ந்த கோபால். 21. தஞ்சை மாவட்டம் அண்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி எம்.சம்பந்தம். (23-01-2015) 22. தேனி மாவட்டம் உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வாழை விவசாயி ஆர்.அழகுவேல் (04-05-2015) 23. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் பூங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன், சித்தன், ராஜாராம். என இதுவரை, 25க்கும் மேலான விவசாயிகள் இனி வாழ வழியில்லை என்று தற்கொலை செய்துகொண்டார்கள். இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில ஏடு (டெல்லி பதிப்பு) 22-06-2015 வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 68விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகக் கூறியுள்ளது. இப்படியெல்லாம் உண்மைகள் இருக்கும் பொழுது ஒரு அமைச்சர், தேசியக் கொடியை பயன்படுத்திக் கொண்டு, அரசு இலச்சினையினையும் பயன்படுத்திக்கொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்பு, நாட்டையும், மக்களையும் ஏமாற்றுகின்றவகையில் சட்டமன்றத்திலேயே பொய் சொல்லுகிறார் என்றால் அவர் அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர்தானா? #தமிழகவிவசாயிகள்தற்கொலைபட்டியல் #FarmersSuicideListinTamilNadu #Agriculture See Also : http://ksr1956blog.blogspot.in/2015/05/blog-post_19.html http://ksr1956blog.blogspot.in/2015/05/urid-dhall.html http://ksr1956blog.blogspot.in/2015/06/blog-post_3.html http://ksr1956blog.blogspot.in/2015/07/organic-farming.html http://ksr1956blog.blogspot.in/2015/08/farmer-suicide.html http://ksr1956blog.blogspot.in/2015/02/formers-suicide.html http://ksr1956blog.blogspot.in/2015/03/land-acquisition4.html http://ksr1956blog.blogspot.in/2015/08/old-farmers-almanac.html http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_39.html http://ksr1956blog.blogspot.in/2015/03/get-out-from-agriculture-highly.html http://ksr1956blog.blogspot.in/2015/07/farmer-agriculture-issue-radhakrishna.html http://ksr1956blog.blogspot.in/2015/08/good-agricultural-practices-help-raise.html http://ksr1956blog.blogspot.in/2015/08/today-youths-turn-back-to-natural.html

Sunday, August 30, 2015

விவசாயம் - AgricultureAavishkara Book on Scientists  கன்னட இதழில்  ஒரு சிறு குழந்தை காளைமாடுகளை பத்திக்கொண்டு செல்கின்ற  இந்த அட்டைப் படத்தை பார்த்தபோது பெருமையாக இருந்தது. வழக்கறிஞராக இருந்தாலும், விவசாயியாகப் பிறந்து, வாழ்ந்து, இறுதிகாலத்திலும் விவசாயியாகக் கழிக்கவேண்டும் என்ற உணர்வு உதிரத்தோடு ஒட்டியது.

கம்பீரமாக நிற்கும் காளைமாடுகள், பழைமையைச் சொல்லும் மாட்டுவண்டிகள், ஈரம் வடிந்து நிற்கும் விவசாய நிலங்கள், காற்றுக்குத் தலையசைக்கும் பயிர்கள், அறுவடை செய்து களங்களில் அம்பாரமாகக் குவித்து வைத்திருக்கும் மேழிகள் என விவசாய நிலம் சார்ந்த  வாழ்வியல் தனி அழகும் அமைதியும் ஆனந்தமும் தருவன. 

மூட்டை மூட்டையாக நெல்மணிகளை அளந்து கட்டுவதும், கரும்பு விவசாயம் முடிந்தவுடன் வெல்ல ஆலைகளில், பெரிய அடுப்புகள் அமைத்து வெல்லம் காய்ச்சுவதும், விளைந்த மிளகாயை களங்களில் காயப்போடும்போது கம்யூனிஸ்டு தோழர்கள் அணிகின்ற சிகப்பு வண்ண கம்பளித் துண்டு போல ஜொளிப்பதும், காய்ந்து வெடித்த பருத்தியை மணலின் மேல் காற்றுப் புகாத அறைகளில் அடுக்கி வைக்கும் போது வெள்ளை வெளெரென்று விளக்கு வெளிச்சத்தில் காட்சியளிப்பதும், எள்ளும் நிலக்கடலையும் கொண்டுபோய் செக்கில் எண்ணெய் ஆட்டுவதும், கிணற்றடியிலும், பம்புசெட்டிலும் குளிப்பதும், என கிராமத்து நாட்கள் எல்லாமே வாழ்க்கையோடு இணைந்தது....  

இவையெல்லாம் கடந்தகாலங்களின் நினைவுகள். இன்றைக்கு டிராக்டர்கள், இயந்திரங்கள் என்று வந்தபின் உழவுக்கு மாடுகளைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஒரு சிறு குழந்தை அனுபவமிக்க விவசாயியைப் போல லாவகமாக காளைமாடுகளின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்வதைப் பார்க்கும் போது, “தமிழ் இனி மெல்ல சாகும்” என்ற பாரதியின் கூற்றைப் போல விவசாயமும் மெல்ல காணாமல் போகுமோ என்ற எங்களைப் போன்ற விவசாயிகளின் அச்சம் நீங்கியது.


அய்யன் வள்ளுவன் வேளாண்மை பற்றிச் சொன்ன மணிவாசகங்களுக்கு என்றைக்கும் மதிப்பும் மரியாதையும் மவுசும் குறையாமல் இருக்கும். 
 “விவசாயத்தை எவராலும் அழிக்க முடியாது. எங்கள் தலைமுறையிலும் விவசாயத்தையும், அதன் பாரம்பரியத்தையும் காப்போம்” என்று  இந்த சிறுபிள்ளை சொல்வது போல இருக்கின்றது இந்தப் படம். அந்த சிறுவனுக்கு ஒரு சல்யூட். 


கர்நாடகாவில் மாட்டைப் பத்திச் செல்லும் குழந்தையின் காட்சியோடு,
எங்கள் பகுதியான, கோவில்பட்டி, எட்டையபுரம், சாத்தூர், சிவகாசி சங்கரன்கோவில் வட்டாரங்களில் விடியற்காலையில் தாய்மார்கள் கஞ்சிக் கலயங்களை தலையில் வைத்துக் கொண்டு இன்றைக்கும் விவசாய வேலைகளுக்குச் செல்கின்ற காட்சியும்,  உழுதுபோட்ட நிலங்களும், வெங்காயப் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்ற விவசாயியின்  உழைப்பும், களத்தில் விவசாயிகள் தங்களுடைய சாகுபடிகளைப் பக்குவப்படுத்துவதும், நிலத்தில் பருத்தி விளைச்சலும், வேலைமுடித்துவிட்டு நண்பகல் உணவுக்காக காடுகளில் சற்று நேரம் மாடுகளை வேப்ப மரநிழலின் கீழ் கட்டிப் போடும் காட்சிகளும், 

கிடை அமைக்கப் பயன்படும் ஆடுகளுக்கு மழைக்காலங்களில் அண்டவும், இரவு நேரங்களில் அடையவும் பனை ஓலையால் வேய்கின்ற கூண்டுகள் செய்வதும், ஓய்வாக மாட்டுவண்டியில் உட்கார்ந்து சற்று ஆசுவாசப்படுத்துவதும், நதி நீர் இணைப்புக்காக உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில் முக்கிய அம்சமாக இருக்கும்  கேரளாவிலிருந்து, அச்சன்கோவில்-பம்பை நதிகளை தமிழக வைப்பாற்றோடு இணைக்கும் போது, சாத்தூர் அருகே உள்ள இந்தப் படத்தில் உள்ள வைப்பாறு பகுதி முக்கியத்துவம் பெறும். 

 


கணினியைத் தொட்ட இளந்தலைமுறையினர் எதிர்காலத்தில் நிச்சயமாக கிராமங்களை நோக்கிச் செல்வார்கள் என்ற நிலை உருவாகி வருகின்றது. என்னைச் சந்திக்கும் இளைஞர்களும் இந்த விரும்பங்களையே தெரியப்படுத்தும்போது மட்டற்ற மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது. 

1975ல் விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை என்று வருவாய்த்துறை அதிகாரிகள்  வீட்டுக் கதவுகள், பண்ட பாத்திரங்களை அள்ளிச் சென்ற அந்த கடுமையான பஞ்சகாலத்தில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் தொடுத்தவன், மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களோடு களப்பணியில் இருந்தவன் என்ற சூழலில் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையும் தனிப்பட்ட முறையில் என்றைக்கும் இருக்கின்றது. 

நூற்றாண்டு காலமாக விவசாயிகள் குறித்து தெளிவான வரலாற்றுப் பதிவுகளோடு விவசாயப் போராட்டம், மற்றும் அவர்களுடைய வாழ்வியலைக் குறித்த என்னுடைய நூல் அச்சுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது.  குலசாமிகளைப் போல குலத்தொழிலான விவசாயம் எவ்வளவு தான் ஏற்ற இரக்கங்களைச் சந்தித்தாலும் அதனைக் கும்பிட்டுத் தொழும் விவசாயியிடமிருந்து அதைப் பிரிக்க முடியாது.


Tail Piece
____________________

நான் பணித்து எங்கள் வட்டாரத்தை சிலநாட்களுக்கு முன் ,  தன்னுடைய இரண்டுசக்கர வாகனங்களில் கார்த்திக் புகழேந்தி வெயிலும் மழையும் பார்க்காமல் சுற்றித் திரிந்து அவரது காமிராவில் எடுத்த காட்சிகள். 


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 
30-08-2015.

See Also :

http://ksr1956blog.blogspot.in/2015/05/blog-post_19.html

http://ksr1956blog.blogspot.in/2015/05/urid-dhall.html

http://ksr1956blog.blogspot.in/2015/06/blog-post_3.html

http://ksr1956blog.blogspot.in/2015/07/organic-farming.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/farmer-suicide.html

http://ksr1956blog.blogspot.in/2015/02/formers-suicide.html

http://ksr1956blog.blogspot.in/2015/03/land-acquisition4.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/old-farmers-almanac.html

http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_39.html

http://ksr1956blog.blogspot.in/2015/03/get-out-from-agriculture-highly.html

http://ksr1956blog.blogspot.in/2015/07/farmer-agriculture-issue-radhakrishna.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/good-agricultural-practices-help-raise.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/today-youths-turn-back-to-natural.html


இயற்கையின் சீற்றம் - Natural Calamitiesகடற்கரையில் நேற்றைக்கு நடைபயிற்சி்க்குச் செல்லும் போது,
சக வழக்கறிஞர் நண்பரின் மகள் ஆஸ்திரேலியாவில் இருந்து அனுப்பியதாக இந்தப் படத்தை எனக்குப் பகிர்ந்தார்.

பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும் கடலின் அலைசீற்றத்தை புகைப்படத்தின் வழி அறிய முடிகிறது. நமது தீபகற்ப இந்தியாவின் வங்கக்கடல், இந்துமகா சமுத்திரம், அரபிக்கடல் ஆகிய மூன்று கடல்களின் நீரும் கருநீல நிறமுடையவை. ஆனால் இந்தப்பகுதி கடல் வான்நீல நிறத்தில் உள்ளது.

அலைகள் தாவிக்குதித்து விழும் இடைவெளிக்குள் கேமிராவை வைத்து அந்த வெற்றிடத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார்.இந்த படம் எடுத்த புகைப்பட நிபுணரின் கைவண்ணத்தைப் பாராட்ட வேண்டும்.

இந்தப் படத்தில் உலக மக்களுக்கு ஒரு செய்தி இருக்கின்றது.
என்னவெனில், இயற்கையோடு இயைந்து வாழாமல் புவியின் அமைப்பை நம் விருப்பம் போல மாற்றுகிறோம். அப்படி மாற்றும் போது கடலில் சுனாமியும், நிலத்தில் பூகம்பமும் ஏற்படு்கின்றன.

கடல்கோள்களால் தென்மதுரையும் கபாடபுரமும் மூழ்கியது என்பது வரலாற்றுச் செய்தி அதன் எச்சம் தான் இப்போதுள்ள இலங்கை. நம் கண்முன்னே தனுஷ்கோடி அழிந்ததை நாம் பார்க்கத்தான் செய்தோம். இன்றைக்கு பசிபிக் கடற்பகுதியில் கிரிபாஸ் தீவுக்கூட்டங்கள் புவி வெப்ப உயர்வின் எதிர்வினையாக கடல்நீர்மட்டம் உயர்ந்து இந்தத் தீவுகளே மூழ்கிவிட்டன.

33 தீவுக்கூட்டங்களில் இன்னும் சில சிறிதுசிறிதாக கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. இத்தீவுகளில் வாழ்ந்த மக்கள் அகதிகளாக, அருகேயுள்ள ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, டாஸ்மேனியா ஆகிய நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்தனர்.

கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடம் முன்னால் தஞ்சம் புகுந்த இந்த மக்கள் நியூசிலாந்தில் தங்கி, வேலை செய்ய அனுமதிகள் கொடுத்தபிறகும் அவர்களுடைய துயர் நின்றபாடில்லை.

நாம் வாழும் புவிப்பரப்பில் அளவில்லாத அடுக்குமாடிக் கட்டிடங்கள், வாகனப் பெருக்கத்தால் புவி வெப்பம் அதிகரிப்பு, ஆறுகளை போக்கை நாசப்படுத்தி, மலைமலையாய் மணல் அள்ளி, காடுகளின் பசுமையை அழித்ததால் இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றைத்தான் வீறுகொண்டு எழுந்துவருகின்ற இந்தக் கடல் அலை நமக்கு எச்சரிக்கையாகச் சொல்கின்ற செய்தியாகும்...

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-08-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #NaturalCalamities

Saturday, August 29, 2015

நாளந்தா பல்கலைக்கழகம் - Nalanda University.

பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு இந்திய அரசு, தொன்மை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் நிறுவ முயற்சி எடுத்தது. அதைக்குறித்தான பதிவுகளை ஏற்கனவே இந்த தளத்திலும், தினமணி ஏட்டிலும் எழுதி இருந்தேன்.

இன்றைக்கு நாளந்தாவினை கட்டமைக்க உரிய நிதி இல்லாமல் தள்ளாடுகிறது. ஆஸ்திரேலியா, புரூணை (Brunei), லாவோஸ்( Lao People's Democratic Republic ), மியான்மர் ஆகிய நாடுகள் இந்தியாவோடு 2013ல் நாளந்தா பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புப் பணிகளுக்கு உரிய பொருளுதவிகளைச் செய்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டன. சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளும் இப்பணிக்கு உதவுவதாக வாக்களித்தன. இலங்கையை இந்தப் பல்கலைக் கழக விவகாரத்தில் சம்பந்தப்படுத்தவில்லை என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன. மலேசியாவும் பட்டுபடாமல் உள்ளது. பௌத்தம் தளைத்துள்ள நாடுகள் புதிய நாளந்தாவ்வை கட்டமைக்க ஆதரிப்பதாக உறுதியளித்துவிட்டு, சொல்லியபடி நடந்துகொள்ளவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன.

பீகாரில் உள்ள “ராஜ்கிர்”-ல் நாளந்தா பல்கலைக்கழகத்தின் பழைய தடயங்கள் உள்ள பகுதியிலிருந்து, பத்து கிலோமீட்டர் தொலைவில் கிராமப்புரத்தில் திரும்பவும் நாளந்தா பல்கலைக்கழகத்தை அமைக்கத் திட்டமிட்டு ,நிலங்களைப் பெறுவதும், கட்டமைப்புத் திட்டங்களும் பிகார் அரசின் ஒத்துழைப்போடு செயல்படுத்தப்பட்டன. பழமையும், புதுமையும் கலந்து இந்தக் கலாசாலை மீண்டும் எழும் என்று இந்திய அரசு கூறியது.

பௌத்தத்தை முக்கிய ஆராய்ச்சிப் பணியாகக் கொள்ளாமல், அனைத்துப் பாடங்களையும் முறைப்படுத்தி இங்கே கற்பிக்க வேண்டும் என்பதோடல்லாமல், பன்னாட்டு பல்கலைக்கழகமாக புதிய நாளந்தா அமையவேண்டும் என்று அனைவரும் விரும்பினார்.

இந்தப் பல்கலைக் கழகத்தை பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் வழிநடத்தினார். தற்போது பா.ஜ.க ஆட்சி வந்தவுடன், அவருக்கும் மத்திய அரசுக்குமிடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.


சீனாவில் இருந்து யுவான் சுவாங்க் போன்ற பயணிகளும், அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியது வரலாறு. நாளந்தாவுக்கும், பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே உள்ள தட்சசீலத்திற்கும் சீனாவிலிருந்து வந்து பலர் கல்வி கற்றதுண்டு. சீனாவிலிருந்து 1900கி.மீட்டர் தொலைவு பயணித்து அக்காலத்தில் மாணவர்கள் இங்கு வருவதுண்டு.

இந்த தொன்மையான கல்வி நிலையங்களுக்கு அக்காலத்தில் கைபர் கணவாய் , திபெத், இன்றைய அருணாச்சல பிரதேசம் வழியாக நடந்தும், குதிரைகளிலும் மாணாக்கர்கள் வந்ததாகச் செய்திகள் உள்ளன.

இதேபோல, பஹல்பூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரம சீலாவும், கலிங்கத்தில் புஷ்பகிரியும், தமிழகத்தில் உள்ள காஞ்சி கடிகையும், நாகார்ஜுனா, உஜ்ஜயினி ஆகியவையும் அக்காலத்தில் புகழ்பெற்ற கலாசாலை கேந்திரங்களாக விளங்கின. நெல்லை மண்ணில் உள்ள கழுகுமலையும் அப்போது சிறிய அளவிலான கற்பிக்கும் மையமாக இருந்தது.

பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் திட்டமிட்டவாறு முழுவடிவம் பெற்று அதன் நோக்கம் வெற்றிபெற வேண்டுமென்றால் உரிய நிதி ஆதாரங்களைப் பெறவேண்டிய நிலையில் உள்ளது.

இதற்கு என்ன செய்யவேண்டும் எனச் சிந்தித்தபோது, பொருளாதார அறிஞர் ஜெகதீஷ் பகவதி,” திருப்பதி கோவிலில் உண்டியலில் நிதி திரட்டுவது போல நாளந்தாவிலும் திரட்டலாம்” என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அம்மாதிரி அணுகுமுறை வெற்றிபெறுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும்.

இவ்வளவு அற்புதமான நோக்கத்திற்கு, அரசியல் தலையீடு, நிதி ஆதாரங்கள் இல்லாதது மட்டுமில்லாமல், தவறான செயல் திட்டங்களும்ல் நாளந்தா பல்கலைக் கழகம் முழுமையாக எழாமல் முடங்கிப் போகிற நிலையில் உள்ளது. இதை மத்திய அரசு கவனிக்கவேண்டியது அதன் கடமையாகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-08-2015.

‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬ #NalandaUniversity #Kalugumalai

see also :

http://ksr1956blog.blogspot.in/2014/08/blog-post_31.html
http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_77.html
http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_70.html

#*மதிமுக* #*சார்பட்டா இராயபுரம் ஏழுமலை நள்ளிரவு கொலை நினைவுகள் (2)*

#*மதிமுக*  #*சார்பட்டா இராயபுரம் ஏழுமலை நள்ளிரவுகொலை நினைவுகள் (2)* ———————————— 1………அப்படியான மிகச்சிறந்த ஒரு பேரணியை1994 ஏப்ரல் 16 எழுச்சி...