Thursday, May 31, 2018

கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், டாபர் டூபாண்ட் பிரச்சனைகளில் ஆரம்பக் கட்ட போராளிகள் பற்றிய நினைவுகள்.


1.   கூடங்குளம் அணு உலை
இந்தியா – சோவியத் யூனியன் இணைந்து அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, சோவியத் யூனியன் அதிபர் கோபர்சேவ் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி 1987 வாக்கில் கூடங்குளம் அணுஉலை திட்டமிடப்பட்டது.  கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை 1988இல் ஒய்.டேவிட் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் தொடங்கினர். சமூக ஆர்வலர் ஓவியா அப்போது நாகர்கோவிலில் குடியிருந்தார். அவரும் இந்த போராட்டத்திற்கு அவ்வப்போது பங்கேற்று பணிகளை ஆற்றியதெல்லாம் நினைவுக்கு வருகின்றன. சென்னையில் இருந்து எங்களைப் போன்றவர்கள் எல்லாம் கூடங்குளத்திற்கு சென்றால் அங்குள்ள மக்கள் எங்களிடம், எதுக்கய்யா? ஒரு பெரிய தொழிற்சாலை வருது. நீங்க தடுக்கறீங்க. வேலைவாய்ப்பு, தொழில், பேச்சிப்பாறைத் தண்ணீர் எங்களுக்கு வருமேஎன்று கோபத்தோடு பேசியதெல்லாம் இன்றைக்கு நினைவுக்கு வருகின்றன.
பத்திரிக்கையாளர்கள் நாகர்ஜூனா என்கிற ரமேஷ், .எஸ். பன்னீர்செல்வம், இயற்கை ஆர்வலர் பூவுலகு நெடுஞ்செழியன் போன்றோர்கள் எல்லாம் அந்த காலக்கட்டத்தில் அணுஉலை எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். கூடங்குளம் ஏன் கூடாது என்று ஜுனியர் விகடனில் அப்போது ரமேஷும், .எஸ்.பன்னீர்செல்வமும் தொடர் கட்டுரைகளை எழுதினர். கிட்டத்தட்ட மூன்று, நான்கு மாதங்கள் இந்த தொடர் கட்டுரைகள் வந்ததாக எனக்கு நினைவு. கூடங்குளம் அணு உலை கூடாது என்று அந்த கட்டத்தில் பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் 1988இல் தாக்கல் செய்தேன். மீண்டும், இரண்டாவது முறையாக 2011லும் என்னுடைய ரிட் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்ற மனுக்களைவிட முதல் மனுவாக தாக்கல் செய்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையம் 1987 காலக்கட்டங்களில் ஒப்பந்தம் நிறைவேற்றி இருந்தாலும் சோவியத் ரஷ்யா சிதறுண்ட காரணத்தினால் இந்த நாசகார அணு உலையை அமைக்காமல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கிடப்பில் போட்டு அமைதி காத்தனர். திரும்பவும் தேவேகவுடா ஆட்சிக் காலத்தில் இதற்கு மீண்டும் உயிரூட்டப்பட்டது. நரசிம்மராவ், தனது ஆட்சிக் காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டினார்.
ஜார்ஜ் கோமஸ், ஒய்.டேவிட், ஸ்டீபன் விக்டோரியா, ஆண்டன் கோமஸ், மைக்கேல்ராஜ் போன்றோர்கள் எல்லாம் ஆரம்பக் கட்டத்தில் போராடியபோது, மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸும் இந்த திட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதும் உண்டு. மேலும் பாலபிரஜாபதி அடிகள், விவசாய சங்கத் தலைவர் மருங்கூர் செல்லப்பா, பூமி பாதுகாப்பு இயக்கத் தலைவரான பத்மதாஸ், மீனவர் சங்கத் தலைவர் பீட்டர், முன்னாள் எம்.எல்.ஏவான குமாரதாஸ் போன்ற பலர் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து களப் பணிகளை மேற்கொண்டனர்.
அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் 1989இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமென்று மாருதி ஜிப்சி ஜீப்பில் சோனியா காந்தியுடன் தமிழகம் முழுவதும் அவரே வண்டியை ஓட்டி பலமுறை சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார். அந்த காலக்கட்டத்தில் வடக்கன்குளம் பொறியியல் கல்லூரியின் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள இருந்தபோது, கூடங்குளம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பார் என்ற செய்தி வந்தவுடன் பலரது எதிர்ப்பு போராட்டத்தை நடத்த திட்டமிட்டனர். அதன் காரணமாக மத்திய அரசு அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது.
நண்பர் சுப.உதயகுமாரன் தலைமையில் புஷ்பராயன், முகிலன் போன்றோர்கள் இணைந்து நடத்திய போராட்டங்கள் தான் உலகை திரும்பிப் பார்க்க வைத்தது.


 2.  ஸ்டெர்லைட்
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 1994இல் இத்திட்டத்தை துவக்கி வைத்த போது ஆண்டன் கோமஸ் போன்றவர்கள் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஆண்டன் கோமஸ், ஜனதா கட்சியின் மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸிற்கு நெருக்கமாக திகழ்ந்தவர். எனக்கும் நண்பர். பெரிய தாட்டியான உருவம். ஸ்டெர்லைட்டைக் குறித்து சென்னைக்கு வந்த போது அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க 1994 காலக்கட்டத்தில் உடனிருந்து ஏற்பாடு செய்தேன். தூத்துக்குடிக்கு வரும்போது இதைக் குறித்து பேச வேண்டுமென்று அழைத்தார். ஒரு முறை சென்றிருந்தேன். தமிழகத்தில் 1996இல் நடந்த பொதுத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் போட்டியிட்ட போது அங்கு இருமுறை வந்தார். இது குறித்தான துண்டு பிரசுரங்களையும் என்னிடம் கொடுத்துவிட்டு, வைகோ அவர்களிடமும் சொல்லுங்கள் என்ற போது, ஏற்கனவே இதை குறித்து வைகோ அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். நாங்கள் இதை குறித்து தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம் என்பதையெல்லாம் குறிப்பிட்டேன்.
பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் வைகோவின் முழு முயற்சியால் 1996ஆம் ஆண்டு தீவிரமடைந்தது. ஒய். டேவிட், பேராசிரியர் பாத்திமா, மனோன்மணியம் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த பாலசுப்பிரமணியம் (என்று நினைவு) போன்ற பலர் ஆரம்பக் கட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு களப்பணியாளர்கள். கிரீன் பீஸ் இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்தது. இதெல்லாம் 1994லிருந்து 1997 வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி பொறுப்பாளராக அன்றைக்கு இருந்த கனகராஜ் போன்றோர்களெல்லம் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்காக காட்டிய ஆர்வமெல்லாம் நினைவில் கொள்ளவேண்டும்.

3.  டாபர் – டூபான்ட்
கும்மிடிப்பூண்டியில் நச்சு கக்கும் வாகன டயர் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை இதே காலக்கட்டத்தில் ஜெயலலிதா அரசிடம் அமைய டாபர் – டூபான்ட் நிர்வாகம் ஓரளவு அனுமதியும் பெற்றபோது, இந்த ஆலை அமையக்கூடாது என்று நண்பர் பூவுலகு நெடுஞ்செழியனுடன் அடியேனும் இரண்டு முறை கும்மிடிப்பூண்டிக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் தயார் செய்தோம். அப்போது எல்.ஆர்.ஜெகதீசன் (தற்போது பிபிசி, லண்டனில் பணியாற்றுகிறார்), இந்தியா டுடே தமிழ் வார இதழில் சிறப்புச் செய்தியாளராக இருந்தார். டாபர் – டூபான்ட் ஆலை சுற்றுச் சூழலை எப்படி பாதிக்கும் என்பதை குறித்து அந்த இதழில் எழுதியிருந்தார்.
நெடுஞ்செழியனோடு, மனித உரிமை ஆர்வலர் ரபி நாயரும் (டெல்லி. டாக்டர் காமேஸ்வரனின் உறவினர்), நானும் ஒரு முறை கும்மிடிப்பூண்டிக்கு சென்றதெல்லாம் நினைவுகள்.
நெடுஞ்செழியன், இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் பணியாளர், சுற்றுச்சூழல் ஆய்வாளர், களப்பணியாளர், பண்பாளர். வாரமொருமுறை என்னுடைய இல்லத்திற்கோ, காஸ்மோபாலிட்டன் கிளப்பில் அவரை சந்தித்து பல விசயங்களை பற்றி பேசுவதுண்டு. அற்புதமான மனிதர். அவர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்க வேண்டும். இளம் வயதிலேயே அவர் காலமானது எங்களைப் போன்றோருக்கு பெரும் இழப்பாகும். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1989இல் நான் போட்டியிட்ட போது, ஒரு வார காலம் என்னுடன் தங்கி தேர்தல் பணிகளையும் செய்தார். தமிழகத்தில் சுற்றுச் சூழல் இவ்வளவு விழிப்புணர்வு அடைந்ததற்கு காரணம் அவர் அமைத்த கட்டமைப்பும், அவருடைய செயல்பாடுகளே.
ராஜீவ் படுகொலை அன்று திருப்பெரும்புதூர் கூட்டத்திற்கு எல்.ஆர்.ஜெகதீசனும் கல்கிப் பிரியனும் நெடுஞ்செழியனை அழைத்துக் கொண்டு செல்வதாக திட்டம். குறிப்பிட்ட நேரத்திற்குள் நெடுஞ்செழியன் வராததால் அந்த நிகழ்ச்சிக்கு இவர்கள் செல்ல முடியவில்லை. நெடுஞ்செழியனால் அந்த கூட்டத்தில்  நானும், ஜெகதீசனும் கலந்து கொள்ளவில்லை. அந்த துயர நிகழ்வில் இருந்து எங்களை காப்பாற்றிய நெடுஞ்செழியன் இளம் வயதிலேயே இவ்வுலகை விட்டு சென்றுவிட்டாரே என்று வேதனையோடு பிரியன் அடிக்கடி இதைச் சொல்வார்.

#கூடங்குளம்
#ஸ்டெர்லைட்
#டாபர்_டூபான்ட்
#போராட்டங்கள்
#தமிழக_அரசியல்
#தமிழக_நச்சு_ஆலைகள்
#Tamil_Nadu_Toxic_Industries
#Sterlite
#Koodankulam
#Dabur_Dupont
#Agitations_in_Tamil_Nadu
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-05-2018

யாழ்ப்பாண நூல்நிலையம்.Jaffna library

On this day in 1984......The Jaffna library was fueled by Sinhalese state terrorists. Over a hundred thousand more rare books were burned down. This was the most important of the Sinhalese state terrorism that has committed against Tamils.

https://www.youtube.com/watch?v=eR7r7AD7RYA

31-05-1984 அன்று சிங்கள அரச பயங்கரவாதிகளால் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூல்நிலையம். ஒரு லட்சத்தூக்கும் அதிகமான மிக அரிய நூல்கள் ஏரிந்து சாம்பலாகின.


ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி கூடத்தின் அவல நிலை.



தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை பறைசாற்றும் தாமிரபரணி கரையில் அமைந்த ஆதிச்சநல்லூர் தமிழகத்தின் அடையாளமாகும். இன்றைய இந்த புண்ணிய பூமி தமிழருடைய வரலாற்றையும், தொன்மையையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் ஒரு ஆய்வுக்களமாகும். இங்கு கிடைத்த முதுமக்கள் தாழியை பாதுக்காக்க 20 லட்ச ரூபாய்க்கு மேல் ஒரு அரங்கம் கட்டப்பட்டது. ஆனால் அந்த அரங்கத்தில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக பயன்படுத்துவது மிகவும் வேதனையாக உள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு உரிய உதவியையும், கவனத்தையும் மேற்கொள்வதில்லை.
பாராமுகமாக உள்ள இந்த அகழ்வாராய்ச்சி பணியில் ஏதோ மாதிரி கட்டப்பட்ட கட்டிடத்தில் கூட பொறுப்புணர்வு இல்லாமல் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை அந்த காட்சி அரங்கத்திலேயே வீசிவிட்டு செல்லும் அற்பர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
#ஆதிச்சநல்லூர்
#Adichanallur
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-05-2018


Wednesday, May 30, 2018

ஒரு காலத்துல கிராமத்தில்....

ஒரு காலத்துல கிராமத்து கடைகள்ல லாகிரி 
வஸ்துக்கள்னா சிகரெட்,பீடி,
புகையிலை,மூக்குப்பொடி இது தான்.இதெல்லாம் இப்ப குறைஞ்சிருச்சின்னு சந்தோஷப் பட முடியல.அது வேறு ஒரு உருவம் எடுத்துருச்சி.

#பீடி : சொக்கலால் பீடி,5 பூ மார்க் பீடி.

#சிகரெட் : யானை, பாஸிங் ஷோ, புளு             பேர்டு, சார்மினார்,சிசர்ஸ்.

#புகையிலை : அங்கு விலாஸ் லூஸ்,மட்டை.தங்க ராசா புகையிலை.

#மூக்குப்பொடி : டி.எஸ் பட்டணம் பொடி, டி.ஏ.எஸ் ரத்தினம் பொடி , என்.எஸ்.பட்டணம் பொடி.

இதெல்லாம் இருந்துச்சி.

பீடிய காதுலவும் தீப்பெட்டிய மடியிலயும்
சொருவிட்டு தான் திரிவாக. வேளாண்
தொழில், கட்டுமானத் தொழில்  தொழிலாளிகலயும் இதையும் பிரிக்க 
முடியாது.

மிலிட்டரி, போலீஸ்,மில் தொழிலாளி,போக்குவரத்து தொழிலாளி,
எலக்ட்ரீசியன் ,நிலக்கிழார்க இவங்களையும் 
சிகரெட்டையும் பிரிக்க முடியாது. இதெல்லாமே பெரும்பான்மை அடிப்படையில நான் சொல்றேன்.நூறு சதம்னு சொல்லல.

இந்தப் பொடியும், பொகையிலயும் 
பெருசுக இரு பாலருக்கும் ஆனது.அந்தப்
புகையிலையை பார்த்தா ஈரத்துலயே
மக்கி கரெர்னு தாருக்குள்ள முக்கி எடுத்தா மாதிரி இருக்கும் வெத்தலையை போட்டுக்கிட்டு அதை ஒரு வாய் அள்ளிப்
போடுவாங்க பாக்கனும் யப்பா.

இந்த மூக்குப்பொடியிருக்கே அது
பேரு தான் மூக்குப்பொடி அதை எடுத்து
வாயில ரைட்டுல ஒரு இழுவு லெப்ட்ல ஒரு இழுவு இழுவுறத பாக்கனுமே எனக்கு தெரிய ரெண்டு மூனு பேருக்கு எங்க தெருவுல வாயில தான் கேன்சர் வந்துச்சி.இது உண்மை. 

இதை மூக்குல வச்சி ரைட்டுல
லெப்ட்ல பர்ர்ரு பர்ர்ர்ருன்னு இழு இழுத்து
வெரல ஒரு சொடக்கு போட்டு ஒரு ஒதறுவாங்க.பக்கத்துல நம்ம இருந்தா கண்ணுல பட்டு கண்ணுஎரியும்.டேன்ஞர்.

சிகரெட்டும்,பீடியும் அறிஞர்களுக்கானதுன்றா மாதிரி ரசிச்சி
ருசிச்சி இழுத்துட்டு திரிவாக.இவங்க
துண்ட தொட்டாலும்,படுக்கைக்கு போனாலும், பக்கத்துல உட்கார்ந்தாலும்
பொகை நாத்தம் தான்.

நெறைய விழிப்புனர்வு விளம்பரங்களால இப்ப இது கொறைஞ்சிருக்கு.
அதை விட பஸ் பயணத்துல,பொது
இடங்கள்ல முழுதுமா கொறைஞ்சிருக்குறது ஏக சந்தோஷம்.

ஆனா கிராமத்துல புதுசா ஒன்னு தலை
யெடுத்துருக்கு கமான்டோ,பான் பராக், சாந்தி,கணேஷ்னு இது என்ன பார்த்தா குட்கா புகையிலை. ஆம்பள பொம்பளக வயசு வித்தியாசமில்லாம பயன்படுத்துறாங்க.இதையும் கூட பஸ்ல தடை பண்ணலாம். வெளியே துப்புறேன்னு அடுத்தவன் மூஞ்சிக்கு தான் அனுப்புறாங்க.

இதென்னமோ தடை
பண்ணியிருக்கிறதா சொல்றாங்க.
அதென்னமோ நெறைய வித்துக்கிட்டு
தானிருக்கு.பிடிச்சிக்கிட்டு தான் இருக்காங்க.கள்ளன் பெருசா காப்பான்
பெருசானுட்டு.

ஸ்டெர்லைட் மட்டுமா? மேலும் தமிழகத்தை பாதிக்கும் நச்சு ஆலைகள்.

ஸ்டெர்லைட் மட்டுமா? மேலும் தமிழகத்தை பாதிக்கும் நச்சு ஆலைகள்.
---------------------------------

ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. வேதாந்தா குழுமம்  நீதிமன்றத்திற்கு சென்று என்ன தீர்ப்பு வாங்கப் போகிறதோ? அது ஒரு புறம். 

1. கூடங்குளம் ஆலையும், அதன் அணுக்கழிவுகள்.
2. தாமிரபரணி தண்ணீரை சுரண்டும் கேரளா பிளாச்சிமேடாவில் இருந்து விரட்டப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் கோகோ கோலா இருப்பு கொண்டுவிட்டது.
3. திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரியில் பல ஆண்டுகளாக செயல்படும் தாரங்க தாரா கெமிக்கல்ஸ் ஆலையினால் புற்று நோய் ஏற்படுவதாக அவ்வட்டார மக்கள் சொல்கின்றனர்.
4. நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டும் தென் மாவட்ட கடற்கரையோர தாது மணல் கொள்ளை.
5. கொங்கு மண்டலத்தில் கெயில் குழாய் பதிப்பதை போல திருவள்ளூரிலிருந்து மதுரை வரை மற்றும் கடலூரிலிருந்து சேலம் வரை அமைக்கும் மத்திய அரசின் திட்டங்கள்.
6. திருவண்ணாமலை மாவட்டத்தில் வேடியப்பன், கவுந்திமலை ஆகியவற்றில் இரும்புத் தாது வெட்டி எடுக்க தனியார் ஜிண்டால் நிறுவனத்திற்கு ஒப்புதல். இதனால் நச்சுக் காற்று பரவும். 
7. நாமக்கல் அருகே பிளாட்டினம் உருக்கும் போது நச்சு வாயுக்கள் வெளியேறக்கூடிய திட்டத்திற்கு ஒப்புதல்.
8. சிவகாசி, ஆலங்குளம், அரியலூர் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் ஆலையினால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள்.
9. நொய்யலாற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள்.
10. தோல் கழிவுகள் நதிகளில் கலப்பது.
11. கொடைக்கானல் பாதரசக் கழிவுகள்.
12. மீத்தேன், ஹைட்ரோ கார்பன், டெல்டாவில் இருந்து தெற்கே ராமநாதபுரம், திருச்செந்தூர் சாத்தான்குளம் வரை விவசாய நிலங்களை காவுக் கொடுக்கும் திட்டங்கள் மற்றும் நியூட்ரோனா.

13.திண்டுக்கலில்  ரங்கநாத மலையை வெடி வைத்து தகர்க்கிறார்கள் 

14. கேரளா குப்பைகளை தமிழக எல்லையில் கொட்டுவது .

இப்படி ஒரு நீண்ட பட்டியலில் உள்ள நச்சுகக்கும்ஆலைகளை,செயல்களை
தடை செய்வது எப்போது? ஆனால், தமிழ்நாட்டில் நீண்டகாலமாக போராடிப் பெற்ற சேலம் இரும்பாலையும், ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையையும், மணவாளக்குறிச்சி தாது மணல் ஆலை போன்ற பல ஆலைகளை முடக்கக்கூடிய நிலைக்கு மத்திய அரசின் முடிவுகள் உள்ளன. 

தமிழகத்திற்கு எய்ம்ஸ், ஐஐம், மேலும் ஒரு ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியன வராது, செம்மொழி நிறுவனமும் முடக்கப்பட்டுவிட்டது. நச்சுக்கழிவுகளை மட்டும் தமிழகம் ஒரு குப்பைக் கூடை போல பாவித்து மத்திய அரசு கேடான திட்டங்களை தமிழகத்தை நோக்கி தள்ளுகிறது. 

#தமிழக_நச்சு_ஆலைகள்
#Toxic_Industries_of_Tamil_Nadu
#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-05-2018

Tuesday, May 29, 2018

திரும்பவும் கண்ணகி கோவில் பிரச்சனையும், எனது வழக்கும் .....

கண்ணகி கோவிலை சீரமைக்கும் பணிகளை, திருவிதாங்கூர் தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தது கேரள அரசு. புதிய சிலை அமைக்க முடிவு - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு.

தமிழகத்தின் கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கண்ணகி கோவில் பிரச்சனை 1983இல் தொடங்கியது. அப்போது தமிழக எல்லையில் உள்ள கோவிலுக்குள் கேரளப் போலீசார் நுழைந்து சிலைகளை உடைத்து துவம்சம் செய்துவிட்டு, வழிபாட்டுக்கு வரும் பக்தர்களை விரட்டினர். அப்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்தது. பழ.நெடுமாறன் அவர்களும்,நானும் அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  கேரள அரசின் மீது வழக்கு  (வழக்கு எண். WP No. 8758 of 1988). தொடுத்தேன். அதன் பின்னர் கேரளத்தின் அத்துமீறல் குறைந்தது. தமிழக எல்லையில் உள்ள கோவிலுக்கு கேரள அரசு உரிமை கொண்டாடுவது நியாயமற்றது. 


இதேபோல தான் அட்டப்பாடி எல்லையில் பிரச்சனை செய்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தமிழக கிராமத்தில் கேரள அரசு அதிகாரிகள் ரேசன் கார்டு கொடுத்தனர். 

கண்ணகி கோவில் தொடர்பாக எனது வழக்கு விவரங்களும், விரிவான பதிவும்....


தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழக பயணிகள் செல்வது வாடிக்கை. வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி அன்று கண்ணகி கோவிலுக்குச் செல்வதற்கு தமிழக மக்களுக்கு அதீத ஆனந்தம். ஒரு வார்டு கவுன்சிலரை கூட கேள்வி கேட்கத் தெரியாதவர்களுக்கு நாட்டை ஆண்ட மன்னனை எதிர்த்துக் கேள்வி கேட்ட காவியத் தலைவி கண்ணகி. ஆனால் இந்த கோவிலில் வழிபாடு செய்ய வரும் தமிழக மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் அதிகம்.

சேர மன்னன் செங்குட்டுவனால் கண்ணகிக்கு கட்டப்பட்ட கோவில் தான் இது. மேற்குத் தொடர்ச்சி மலை மீதிருக்கும் மங்கலதேவிக் கண்ணகிக் கோயில். இந்த கோயில் தமிழகத்தின் பளியங்குடி கிராமத்தில் இருந்து 6 கி.மீ தூரத்திலும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 
கோவலனின் மறைவுக்குப்பின் கண்ணகி அமைதி வேண்டி இங்கு அமர்ந்ததாக சொல்கிறார்கள். இக்கோட்டத்திற்கு மதுரை மாவட்டத்திலுள்ள கூடலூரிலில் இருந்து இரண்டு பாதைகள் வழியாகச் செல்லலாம். இப்பாதைகளும் கோட்டமும் ‘வண்ணாத்திப் பாறை’ என்று பாதுகாக்கப்பட்ட பாறைகளில் உள்ளன. இங்கு வனவிலங்ககுள் பல உள்ளன. மற்றொரு பாதையாகக் குமுளி வழியாகப் பேருந்து மூலம் செல்லலாம். அங்கிருந்து தேக்கடி வரை சென்று காட்டுப் பாதை வழியாக இக்கோட்டத்திற்கு செல்ல வேண்டும்.

1883ஆம் ஆண்டு கூடலூர் மக்கள் அரசு அனுமதி பெற்று இக்கோட்டத்திற்கு செல்லும் பாதையைப் புதுப்பித்தனர். 1839 – 1896 ஆகிய நில அளவை ஆவணங்கள், 1893ஆம் ஆண்டு இந்திய நில அளவை வரைபடம், 1916ஆம் ஆண்டு இந்திய சர்வேயர் ஜெனரல் வரைபடம், 1932ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மதுரை மாவட்ட கெஜட், அரசு ஆணை 182 (1.5.1918) சென்னை – பொது அரசியல்) ஆகிய ஆவணங்களின்படி இக்கோட்டம் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. கி.பி.1672ஆம் ஆண்டு காட்டூர் பகுதியில் நடந்த போரில் இக்கோவில் தமிழகத்தைச் சார்ந்தது என முடிவெடுக்கப்பட்டது. அது ராணி மங்கம்மாள் மதுரையை ஆண்ட காலமே. இருப்பினும் 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நில அளவைப் பதிவேடுகள் துறை இணை இயக்குநர் கணேசன், கேரள மாநில அரசு அதிகாரிகளுடன் பேசி இது தமிழகத்திலுள்ளதே என முடிவு செய்தனர். அதன்பின்பு தமிழக அதிகாரிகள் பல்வேறு சமயங்களில் இப்பிரச்சினையை ஒட்டி நிலஅளவை செய்து தமிழகத்தில் உள்ளது என்று தெள்ளத் தெளிவாக்கியுள்ளனர். இருப்பினும் இந்த கோயிலுக்கு சாதாரணமாக தமிழக மக்கள் செல்லக்கூடிய உரிமையை 1975ஆம் ஆண்டு தமிழக அரசும் இழந்துவிட்டது. சித்திரை பௌர்ணமி அன்று மூன்று நாட்களுக்கு மட்டும் தான் கோவிலுக்குள் அனுமதி என்று கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
கடந்த 1982ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியன்று வழிபாட்டுக்கு வந்த மக்கள் கைது செய்யப்பட்டவுடன் பிரச்சையில் தமிழக அரசு கவனம் செலுத்த தொடங்கி பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்ட்டன. ஆனால் இன்னும் சுமூகமான பிரச்சனைகளை தீர்த்து கொள்ளாமல் அரசுகள் மக்களை துன்பப்படுத்துகின்றனர்.

இந்த கோவிலுக்கு பளியங்குடி வழியாக நடந்தும் போகலாம். குமுளி வழியாக ஜீப்பில் போலாம். இந்த இடங்களை கேரள வனத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தப் பக்கம் போனாலே ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் தான் செல்ல வேண்டியுள்ளது. தண்ணீர் வசதி கூட தரமாட்டார்கள். அங்கும் கேரளத்தினருக்கே முன்னுரிமை அளிப்பார்கள். அங்கே மேல் முற்றம் ஒன்று உள்ளது. சிலப்பதிகாரம் முற்றோதல் செய்யவிடமாட்டார்கள்.

குமுளியில் இருந்து கண்ணகி கோயில் போவதற்கு சாலை அமைக்க 1975இல் முடிவுசெய்யப்பட்டது. அதற்கு முன் எந்தவித தடையும் இல்லை. இந்தியத் தொல்லியல் துறைக்கு 1983ஆம் ஆண்டு கேரளத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துள்ளர்கள். கோவிலை சீரமைக்கும் பணிகளுக்காக ரூ. 60 லட்சங்கள் நிதி ஓதுக்கியதை பயன்படுத்தாமல் உள்ளது. இது தொடர்பாக ஒரு வழக்கையும் தாக்கல் செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்னால் கேரள மாநில காவல் துறையினர் தமிழக மக்களை அங்கு அனுமதிக்காமல் கடுமையாக நடந்து கொண்டார்கள். 

அப்போது நான் தாக்கல் செய்த மனு கண்ணகி கோவில் (வழக்கு எண். WP No. 8758 of 1988). இந்தியாவில் தமிழக எல்லைக்குள் இருந்த கண்ணகி கோவிலுக்கு தமிழர்கள் செல்வதையே தடுத்து, விரட்டிய அண்டை மாநிலம் கேரளாதான். 1988 ல் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து சற்று தீர்வு ஏற்பட்டவுடன் கேரள காவல்துறையினரின் அத்துமீறல் நிறுத்தப்பட்டது. தமிழர்களும் அங்கு சற்று ஆறுதலோடு செல்லக்கூடிய நிலைமையும் உருவாக்கி தந்த திருப்தி அடியேனுக்கு உண்டு. 

#சித்ரா_பெளர்ணமி 
#கண்ணகி_கோட்டம் 
#Chitra_Pournami
#Kannagi_Kottam
#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-05-2018

கரிசல் காடுகளில் நடைபாதை.....

கரிசல் காடுகளில் நடைபாதை ஓர பயிர்களின் சேதம் தவிர்க்க பாதுகாப்புக்காக விதைக்கப்பட்டு இருபுறமும் ஆளுயுயரத்துக்கு மேல் ஓங்கி வளர்ந்த நாத்துச்சோள சோகைகளின் தாலாட்டோடு 
அந்த ஒற்றையடி பாதையில் நீண்ட தூரம்
நடந்தும்,மிதி வண்டியிலும் சென்று 
திரும்பிய அனுபவம் எனக்கு மீண்டும் கிட்டுமா என்ற ஏக்கம் என் வயதை ஒத்த கிராமவாசிகளின் மனதில் தொக்கியே நிற்கும்.என்றும் நிற்கும்.

இதே ஒற்றையடிப்பாதைகளில் மழைக்
கால அனுபவம் கூடுதல் இனிமை.ஆமாம்
செருப்பணியாத கால்களோடு நடந்து வரும் பொழுது வலதும்,இடதும் கால்கள் வழுக்க அந்த சேறு உடைகளில் படாமல் இருக்க இரு 
கைகளால் சேலை தூக்கி பெண்கள் நடப்பது பார்க்க அழகாய் ஏதோ நடனமாடி வருவது போலவும்,களக்கூத்தாடிகள் கயிற்றின் மேல் நடந்து வருவது போலவும் இருக்கும் அந்த காட்சி. 

இது போல் ஒரு காட்சிகள் இனி கண்ணில் காண்பதரிது.

ஸ்டெர்லைட் ஆலை அதிபர் கொக்கரிப்பு .......

ஸ்டெர்லைட் ஆலை அதிபர் கொக்கரிப்பு .......
————————————————
ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி நடந்த போராட்டத்தில் 13 உயிர்களை பலி வாங்கியும், எண்ணற்றவர்கள் படுகாயமுற்ற நிலையில் அரசு ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக  படுபாதகன் கொக்கரிக்கின்றான். யார் கொடுத்த தைரியம்? 

ஏற்கனவே வேதாந்தா நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக  ப.சிதம்பரம் உள்ளார். மேலும் ஆதரவாக கபில்சிபில், அபிஷேக் சிங்வி, ராம்ஜெத்மலானி ஆகியோர் அல்லது ஆகியாரில் ஒருவர் ஆஜராகலாம்.  அருண்ஜேட்லி அமைச்சரவையில் இருப்பதால்  அவரது அலுவலகத்தில் இருந்து சகாக்கள் ஆஜராகலாம். மக்கள் நலனுக்காக அரசியலில் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் இவர்கள் ஆட்சியில் இருந்தால் அரசியலையும், ஆட்சியில் இல்லாவிட்டால் வியாபரத்தையும் தன்னிரு  கண்களாக கருதுபவர்கள். 

தன் வாழ்நாட்களுக்கு தேவையானதையும்,  தன்  அடுத்த சில தலைமுறைகளுக்கு தேவையான சொத்துக்களை சேர்த்த பின்னர் ஏன் இந்த பணவெறி? இறுதியில் போகும் போது எடுத்துச் செல்ல போகின்றார்களா?  சிந்திக்கட்டும்.

#ஸ்டெர்லைட்ஆலைமேல்முறையீடு 
#KSRadhakrishnanpostings 
#kSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
29-05-2018.

Monday, May 28, 2018

ஸ்டெர்லைட் மூடியது மூடியது தான்

ஸ்டெர்லைட் மூடியது மூடியது தான் 
பட்டினத்தார் பாடல் போல் மீண்டும் தலை எடுக்க  கூடாது. 
————————————————-

இன்றைய அரசு உத்தரவு நூறு நாட்களுக்கு பின்னர் வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மூன்கூட்டியே அரசானை வெளியிட்டு இருந்தால் உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம். 






மூடியது மூடியதாகவே இருக்க வேண்டும்..

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
*
இந்த பட்டினத்தார் பாடல் போல் மீண்டும் ஸ்டெர்லைட் தலை எடுக்க  கூடாது. 

ஆலை நிர்வாகம்,  சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரை நீதிமன்றத்திற்கோ அல்லது உச்சநீதி மன்றத்தையோ நாடலாம். ஆனால் அதற்கு முன்னதாக தூத்துக்குடி சுற்றிலும் உள்ள கிராமநிர்வாகம் ( கிராம சபைகள்) அழுத்தமான தீர்மானத்தை நிறைவேற்றினால் அது வழக்குக்கு வலுவாக அமையும்.  இந்த அரசு அக்கறையுடன் செயல்பட்டு கிராமசபைகளை அனுகி செயல்பட வேண்டும். 

காவிரி  வழக்கு போலாகிவிடக் கூடாது. 

#ஸ்டெர்லைட்ஆலை 
#ஸ்டெர்லைட்அரசானை
#பட்டினத்தார்பாடல் 
#KSRadhakrishnanpostings 
#kSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
28-05-2018

சில காயங்கள் காலம் கடந்தும் ஆறுவதில்லையே .......

சில காயங்கள் காலம் 
கடந்தும் ஆறுவதில்லையே .......

————————————————-

கேள்விப்பட்ட செய்தி,உண்மையா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும் . 1996 பொதுத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் போட்டியிட்ட வைகோ, ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிட்ட சி .பி.எம் கட்சியை சார்ந்த பி.சம்பத்தையும், கோவில்பட்டியில் போட்டியிட்ட எனக்கும் எதிராக அன்றைக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது செல்வாக்கினை கமுக்கமாக காட்டியதாக செய்தி. அப்போதெல்லாம் இதை அறிந்திருக்கவில்லை. 

அந்த காலத்திற்கு சற்று முன்னால் (1987-88) கூடங்குளம், 1994இல் தூத்துக்குடியில் அமைந்த ஸ்டெர்லைட், கும்மிடிப்பூண்டியில் டாபர் - டூபான்ட் ஆகிய திட்டங்கள் வந்தபோது சென்னையில் கூட்டங்களும், அதை எதிர்த்து வழக்குகளை தொடுத்த பணிகளில் எல்லாம் ஈடுபட்டோம். 

அந்த நிலையில்,ஸ்டெர்லைட் இந்த புண்ணியத்தை செய்திருக்குமோ என்று நினைக்கிறேன். இதை ஸ்டெர்லைட் நிர்வாகம் தான் இதற்க்கு பதில் சொல்லவேண்டும். இன்றைக்கு தான் இந்த செய்தியை மதுரையில் இருந்தபோது ஒரு நம்பிக்கையான நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். காலமும், வரலாறும் இதை பார்த்திருக்கும். உண்மையென்றால் அதை மக்களே பரிசீலனைக்கு தான் வைக்க முடியும். வேறென்ன செய்ய முடியும்?

நீண்டகாலமாக பொதுத்தளத்தில் இருந்தும் எந்த ஒரு பொறுப்புக்கும் வரமுடியவில்லையே என்று நண்பர்கள் பலர் வருத்தப்படுகிறார்கள். இப்படி கேடான அக மற்றும் புறச் சூழல் இருக்கும்போது நாங்கள் எப்படி வரும் வரமுடியும்.

#ஸ்டெர்லைட்
#தூத்துக்குடி
#பொது_வாழ்வு
#தகுதியே_தடை
#Public_life
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-05-2018

Sunday, May 27, 2018

அழகர் அணை

அழகர் அணை:
————————
இன்று (27-05-2018) வரகுணராமபுரம் தம்பி கார்த்திக் – ரூபா ஆகியோர் திருமணம் இராஜபாளையத்தில் நடத்தி வைத்தேன்.

இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் பகுதி பயனடையும் அழகர் அணைத் திட்ட எனது நூலை இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.பி.ராஜன் வெளியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வி. அழகிரிசாமி பெற்றுக் கொண்டார். இந்த திருமண நிகழ்வில் ஆண்டாள் கோவில் தக்கார் கே. இரவிச்சந்திரன்,விருதுநகர்  மாவட்ட காங்கிரஸ் ராஜா சொக்கர் வி.பி.ஆர். இளம்பரிதி, ஆ. பழனிச்சாமி போன்ற பலரும் கலந்து கொண்டனர். அழகர் அணை திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பயன்படும் என்று 1960களில் பேசப்பட்டும் இன்னும் நிறைவேறவில்லை. 

அழகர் அணை குறித்து விருதுநகர் பெ. சீனிவாசனுடன் நானும் சந்தித்து அன்றைய முதல்வர் கலைஞரிடம் கொடுத்தோம். அந்த மனுவும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளது. அழகர் அணையை குறித்து அனைத்து விவரங்களையும் இந்த நூலில் தொகுத்துள்ளேன். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, இதற்கு கடமையும் ஆற்றவேண்டும். 
ஏற்கனவே அழகர் அணை திட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளேன்.
#அழகர்அணை
#விருதுநகர்மாவட்டம்
#algardam
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-05-2018

http://www.dinamani.com/editorial_articles/2016/jun/17/அழகர்-அணை-திட்டம்-எப்போது-2278--1.html




Saturday, May 26, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும், எனது கிராமத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானவர்களின் நினைவுகளும்.









-------------------------
கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு, 31-12-1980 அன்று, அந்த வருடத்தின் கடைசி நாள். நானும், தி.சு.கிள்ளிவளவனும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் பாரமலை,ஏ.எஸ். பொன்னம்மாளும் மாலை 5 மணியளவில் பழ. நெடுமாறன் அவர்கள்  அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த போது,நான் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டிலிருந்த 75159 என்ற தொலைபேசிக்கு என் பெயரைக் கேட்டு பிபி டெலிபோன் கால் வந்து கொண்டிருக்கிறது என்று அந்த இல்லத்தின் சொந்தக்காரர் மறைந்த மீனாட்சி அவர்கள், நெடுமாறனுடைய தொலைபேசி 7657க்கு அழைத்தார். கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ளவர்கள் பதட்டமாக உங்களைக் கேட்டு போன் செய்து கொண்டிருக்கின்றனர் என்று என்னிடம் சொன்னபோது மணிமாலை 6.30. எப்போதும் மாநிலச் செய்திகளை வானொலியில் கேட்பதுண்டு. அப்போது தூர்தர்சன் கருப்பு-வெள்ளை தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் செய்திகள் வரும். இதுவும் சென்னைக்கு மட்டும் தான். தமிழ்நாட்டிற்கு அப்போது இல்லை.

மாலை 6.30 மாநிலச் செய்திகளை செல்வராஜ் தனது இயல்பான கனீர் குரலில் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருந்தேன். திருநெல்வேலி மாவட்டம் (அப்போது தூத்துக்குடி இணைந்த ஒன்றுபட்ட மாவட்டம்) குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்டு பலியாகியுள்ளார்கள் என்று சொன்னவுடன் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஏனெனில் அந்த கிராமம் நான் பிறந்த மண். என்ன நடந்தது என்று விசாரிக்க முடியவில்லை. இன்றைக்குள்ள தொலைத்தொடர்புகள் அன்றைக்கு இல்லை. உடனே 07.05க்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரை வரை செல்லும் ரயிலையும் பிடிக்க முடியவில்லை. பாரிமுனையில் உள்ள திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக அரசு விரைவுப் பேருந்தில் கோவில்பட்டி சென்றேன். மறுநாள் காலை 9 மணிக்கு பேருந்தைவிட்டு இறங்கிறவுடன் விவரங்கள் ஓரளவு தெரியவந்தது. அப்படியும் 20 மைல்கள் அப்பால் இருப்பவர்களுக்கு கூட முழுமையான விவரங்கள் புலப்படவில்லை. ஏனெனில் அங்கு அப்படி இறுக்கமான நிலை. எங்களுடைய பகுதி கலவரமாகி, மயான பூமியில் கேட்கும் அவலக்குரல் போல தாய்மார்கள் மத்தியில் அழுகைச் சத்தம் தான் கேட்க முடிந்தது. அன்றைக்கு 1981ஆம் ஆண்டின் புத்தாண்டாகும். வருடம் பிறந்ததும் இப்படியா கேட்கவேண்டும் என்று மனம் பதைபதைத்தது. 

இப்போது பிரச்சனைக்கு வருகின்றேன். நாராயணசாமி நாயுடு தலைமையில் அப்போது வலுவாக இருந்த தமிழக விவசாயிகள் சங்கம், 31-12-1980 அன்று விவசாயிகள் பந்த் போராட்டத்தினை தமிழகத்தில் அறிவித்தது. குறிப்பாக எங்களுடைய கோவில்பட்டி வட்டாரம் தமிழக விவசாய சங்கத்தின் கேந்திரப் பகுதி. ஒவ்வொரு விவசாயிகள் போராட்டத்திலும் சிலர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவது 1972லிருந்து ஒரு கொடுமையான வாடிக்கையாகிவிட்டது. 

அமைதியாக என்னுடைய கிராமத்தில், குருஞ்சாக்குளத்தில் பந்த் நடத்திய போது காலையிலேயே காவல் துறையினர் கிராமத்தில் புகுந்து அத்துமீறி நடந்து கொண்டனர்.
அருகாமையில் உள்ள திருவேங்கடம் நகரப் பகுதியில் 31-12-1980 அன்று காலை 11 மணியில் போலீசார் கண்மண் தெரியாமல் விவசாயகளை துவம்சம் செய்தனர். அப்படி  அடிபட்ட விவசாயிகளை அரவணைத்து ஆறுதல் சொல்லி அவரவர் கிராமங்களுக்கு திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் கமிசன் மண்டி ராமசுப்புநாயக்கர். இந்த ராமசுப்புநாயக்கர் த/பெ. மல்லப்பநாயக்கரை போலீசார் அழைத்து சென்று அடித்து காயங்களுக்கு சிகிச்சை அளிக்காமல் கொடுமைப்படுத்தியும்  உள்ளனர். 
இந்நிலையில் விவசாயிகள் நெடுஞ்சாலையில் சோளம், உளுந்து போன்றவற்றை காயவைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை அடித்து காயப்படுத்திவிட்டனர். இப்படி திருவேங்கடம் வட்டாரம் முழுவதும் உள்ள விவசாய கிராமங்களை நாசம்  செய்து வந்தனர். 

திருவேங்கடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எங்கள் கிராமத்தில் என்றைக்கும் விவசாயிகள் சங்கம் வலுவாக இருக்கும். எனவே இந்த கிராமத்தில் காவல் துறை அத்துமீறி விவசாயிகளை அடித்து துவைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் காவல் துறையினர் மாலை 4 மணியளவில் குருஞ்சாக்குளம் கிராமத்தில் பதற்றத்தை உருவாக்கிய போது சாத்துரப்ப நாயக்கர் இங்கே வரவேண்டாம், நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று கையெடுத்து கும்பிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாத்துரப்பநாயக்கரின் நெற்றிப் பொட்டுக்கு கீழேயே காவல் துறையினரின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அங்கேயே சிதறி பிணமாகி விழுந்து அந்த சாலையில் அவரின் இரத்தம் பீறிட்டு ஓடியது. அவர் அருகேயிருந்த தம்பி ரவீந்திரன்17 வயது தான். ரவீந்தரனின் தொப்புளில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார்.

அதே நேரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த போது அவர் பாய்ந்து சென்று காவலரின் துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தார். ஆனால் காவலர்கள் கன்னாபின்னா வென்று சுட்டனர். 

ஏற்கனவே, சாத்துரப்பநாயக்கரின் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகளால் அதிர்ச்சியடைந்த மக்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் மேலும் மேலும் கிராமமக்களின் மீது துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சி அன்றைக்கு மனித வேட்டையை ஆடியது எம்.ஜி.ஆர் ஆட்சியின் காவல் துறை. அன்று (31-12-1980) மாலை 5 மணிவரை துப்பாக்கி குண்டுகள் வெடித்து காற்றில் கலந்து புகைமண்டலமாக இருந்ததாகச் நேரில் பார்த்தவர்கள் என்னிடம் சொன்னார்கள். குண்டடி பட்ட ரவீந்திரனுக்கு முதலுதவி கூட கொடுக்காமல் 3 மணி நேரம் கழித்து இரவு 7 மணிக்கு மாட்டு வண்டியில் ரவீந்திரன் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குண்டடி பட்ட ராணுவ வீரர் ருத்திரப்பசாமி, அய்யாவு நாயக்கர் (எ) அழகர்சாமி, ராமசாமி நாயக்கர், ரெங்கசாமி நாயக்கர், கணபதி ஆகியோர் பேருந்துகளில் இல்லாமல் மாட்டு வண்டியில் 3 மணி நேரத்திற்கு மேலாக இரவில் பயணித்து; சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 12 மணிக்குமேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ரவீந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் அன்றிரவே இறந்தார். மற்றவர்களை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளை அநாதைப் பிணங்கள் போல 03-01-1981 அன்று பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி மயானத்தில் உறவினருக்கு கூட சொல்லாமல் காவல்துறையினரே அடக்கம் செய்தனர். பிரேதங்களின் சொந்தக்காரர் இல்லாமல் எரியூட்டியது தான் கொடுமையிலும் கொடுமை. காட்டுமிராண்டித்தனமாக இந்த நடவடிக்கை எங்களைப் போன்றோருக்கெல்லாம் பெரும் ரணத்தை ஏற்படுத்தியது. பொது வாழ்வில் இருந்து கொண்டு இந்த நடவடிக்கைகளை கூட தடுக்க முடியாமல் கையறு நிலையில் இருக்கிறோமே என்று மனம் வெம்பியது. ஆனால் அன்றைக்கு ஆளுங்கட்சியான எம்.ஜி.ஆர் தலைமையில் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடப்பதை குறித்தான ஏற்பாடுகளிலும், அந்த மாநாட்டில் ஜெயலலிதா நாட்டியமாடும் நிகழ்விலும் மாநில அரசு நிர்வாகம் மும்முரமாக இருந்தது.

நடந்த துயர நிகழ்வுகளுக்கு திரும்பவும் வருகிறேன். திருவேங்கடம் - கழுகுமலை சாலையில் சாகடிக்கப்பட்ட சாத்துரப்ப நாயக்கரின் பிரேதம் அன்று மாலை 4 மணியிலிருந்து மறுநாள் முன்பகல் வரை அப்படியே அநாதையாக கிடந்தது. இடைப்பட்ட நேரத்தில் அந்த பிரேதத்தை சிலர் எடுத்து ஊர் பொதுக் கட்டிடத்தில் வைத்திருந்தனர். நல்லடக்கம் செய்ய முடியாத நிலை. ஒரே குழப்பமான, வேதனையான, இறுக்கமான நிலையில் இருந்தது. திரும்பவும் போலீசார் அவரின் பிரேதத்தை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து திருநெல்வேலிக்கு கொண்டு சென்றனர். 

இந்த சம்பவம் நடந்தது 31-12-1980. ஆனால், சாத்துரப்ப நாயக்கர், ரவீந்திரனுடைய பிரேதங்கள் 02-01-1981 அன்று (இரண்டு நாள் கழித்து) ரவீந்திரனுடைய தாயார் கேட்ட போது போலீசார் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், 
சாத்துரப்ப நாயக்கர் (55), 
ரவீந்திரன் (20) த/பெ பெருமாள் சாமி, 
இரா.வரதராசன் (33) த/பெ இராமசாமி நாயக்கர்,
ரெ.வெங்கடசாமி (22) த/பெ நல்லைய்யா, 
ர. வெங்கடசாமி நாயக்கர் (50), 

இந்த 5 பேர் துப்பாக்கிச் சூட்டில் சாகடிக்கப்பட்டவர்கள். குண்டடிப்பட்டு நீண்டகாலம் சிகிச்சையளித்து இன்னும் உடல் உபாதைகளோடு இருப்பவர்கள்,
அய்யாவு நாயக்கர் (எ) அழகிரிசாமி,
ராமசாமி நாயக்கர், 
ரங்கு நாயக்கர் (எ) ரங்கசாமி நாயக்கர்,
ருத்திரப்பசாமி நாயக்கர்,
கணபதி த/பெ வெங்கடசாமி நாயக்கர்,

ஆகிய ஐவரை பார்க்கும் போதெல்லாம் அந்த துப்பாக்கிச் சூட்டின் நினைவுகள் தான் மனதில் நிழலாடுகின்றன. 

பத்து பேருக்கு மேல் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானவர்களில் 5 பேர் சாகடிக்கப்பட்டனர். அவர்கள் பிரேதங்கள் அனைத்தையும் சாலையில் போட்டு அராஜகம் செய்ததை ஹிட்லருடைய கொடுமையான பாசிச நடவடிக்கைகளை போல அன்றைக்கு அரங்கேறின.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கியால் சுட்ட மந்திரம் என்ற காவலரை அடக்க முடியாத ஆத்திரத்திலும், வேதனையிலும், துக்கத்திலும், பொறுக்க முடியாமல் விவசாயிகள் கல்லால் அடித்து சாகடித்தனர். காவலர் மந்திரம் அதே இடத்தில் இறந்தார். 

கோவில்பட்டி – இராஜபாளையம் (வழி. திருவேங்கடம்), கோவில்பட்டி - சங்கரன்கோவில் (வழி. திருவேங்கடம்), திருவேங்கடம் – விருதுநகர் (வழி. சிவகாசி), திருவேங்கடம் – கழுகுமலை (வழி. குருஞ்சாக்குளம், குருவிகுளம்) ஆகிய வழித்தடங்களில் பேருந்துகளே கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை இயக்கப்படவில்லை. அந்த காலக்கட்டத்தில் நாராயணசாமி நாயுடு தொலைப்பேசியில் இது குறித்து அடிக்கடி என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.மறைந்த சாத்துரப்ப நாயக்கர் விவசாய சங்கத்தின் முன்னோடி, பொதுக்கூட்டங்களில் கடுமையாக கிராமத்து பாணியில் பேசுவார். என்னுடைய மாமனார் கு.வரதராஜன் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் விவசாய சங்கத்தின் முன்னோடி ஆவார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான மறைந்த சாத்துரப்ப நாயக்கருடைய தம்பி ராமானுஜம் விவசாயிகள் சங்கத்தின் மேடைகளில் அவருடைய அண்ணனை போன்று வேடிக்கையாக பேசுவார். வெள்ளாகுளம் சுப்பாநாயக்கர், நெம்மேனி பேராசிரியர் குரு ஜெகந்நாதன், மேலப்பட்டி ஆர்.பி.இராமசாமி, வெம்பக்கோட்டை ஒன்றியப் பெருந்தலைவர் கங்கர்செவல்பட்டி பெருமாள்சாமி, டி.சண்முகபுரம் சண்முகம் போன்ற பலரும் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு துணையாக அந்த பகுதியில் களத்தில் நின்றார்கள். அன்றைக்கு விவசாயச் சங்கப் போராட்டத்தில் களத்தில் நின்றவர்கள் நீண்ட பட்டியலே உண்டு.

நெல்லை மாவட்ட தென்பகுதியில் இராதாபுரம், வள்ளியூர், சாத்தான்குளம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் சுப்பிரமணிய நாடார், பால்பாண்டியன், அதிசய மணி போன்ற பலரும் விவசாயச் சங்கப் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் என்று நினைவு கொள்ள வேண்டியவர்கள். பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.அதை என்னுடைய விவசாயச் சங்கப் வரலாறு புத்தகத்தில் தொகுத்து வருகின்றேன்.

அன்றைக்கு ஊடகங்களோ, வார இதழ்களோ, புலனாய்வு பத்திரிக்கையிசம் இல்லாத காலத்தில் இதெல்லாம் நடந்தன.
இன்றைக்கு இதே பிரச்சனை நடந்திருந்தால் என்ன மாதிரியான நிலைமைகள் இருக்கும். 37 ஆண்டுகள் மேல் கடந்து விட்டன. அன்றைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ அவர்கள், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.அழகிரிசாமி அவர்கள் அந்த கிராமத்திற்கு வந்திருந்தார்கள்.ஓரளவு நான் கிராமத்திற்கு சென்று அந்தக் காலக்கட்டத்தில் ஆறுதல்படுத்த முடிந்தது. ஆண்கள் யாரும் இல்லாமல் காட்சியளித்தது.

திருவேங்கடத்தில் வைகோ தலைமையில் திமுக சார்பில் கண்டனக் கூட்டம் 18-01-1981இல் நடந்தது.பேராசிரியர் இந்த கலவரப் பகுதி கிராமங்களை பார்வையிட்டு கண்டன உரையை ஆற்றினார்.அவரோடு நாடாளுமன்ற உறுப்பினர் தாழை கருணாநிதியும் கலந்து கொண்டார்.இதற்கிடையில் விவசாய சங்கத் தலைவர் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டிருந்தார்.முரசொலி மாறன், வைகோ அவர்கள் இந்த துப்பாக்கிச் சூடு குறித்தான பிரச்சனையை டில்லியில் பிரதமர் இந்திரா காந்தியிடம் மனு அளித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள்.

இதே நாளில் விவசாயிகள் திருத்தணி அருகேயும், அன்றைய தென்னாற்காடு மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள வேப்பூரிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன.இது குறித்து சட்டமன்றத்தில் 04-02-1981அன்று தலைவர் கலைஞர் எம்.ஜி.ஆரை நேரெதிரே நின்று விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது நியாயம் தானா என்று குற்றஞ்சாட்டி கேட்டார். அவரோடு எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவில்பட்டி எஸ்.அழகிரிசாமியும் இதை குறித்து கடுமையாக அரசை சாடியும் குரலெழுப்பினார். எம்.ஜி.ஆர் இதற்கு பதிலளிக்கும் போது ஓய்வு பெற்று ராணுவத்தினர் அந்த கிராமத்திலே உள்ளார்கள். காவல் துறையினருக்கு கடுமையான தடைகளை உண்டாக்கி உள்ளார்கள் என்று ஒரு சின்ன குழி வெட்டப்பட்ட கருப்பு-வெள்ளை புகைப்படத்தையும் காட்டினார். அவர்கள் இராணுவத்தினர் போல காவலர்களிடம் சண்டை போட்டுள்ளனர். வேறு வழியில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது என்று சட்டமன்றத்தில் கூறினார்.

நீதி விசாரணை நடத்தவும் தயார் என்று அன்று அறிவித்தார். அதற்கு முன் எதற்கெடுத்தாலும் நீதிவிசாரணை என்று கொக்கரிக்கிறார்களே என்ற எம்.ஜி.ஆர் பின்னர் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழ.நெடுமாறன் அவர்கள் பார்வையிடவும் அப்போது வந்தார். சட்டமன்றத்தில் இதை குறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தினை 23-01-1981 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சோ.அழகிரிசாமி கொடுத்தபோது, பேரவைத் தலைவர் ஆளுநர் உரையாற்ற இருப்பதால் கவன ஈர்ப்புக்கு அனுமதி வழங்க முடியாதென்று 1397/81-1 ச.பே.(ம.2), 23-01-1981 என்று எண்ணிட்ட கடிதத்தின் மூலமாக பேரவைத் தலைவர் நிராகரித்தார்.

தமிழக அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையை கடுமையாக கண்டித்தனர். அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் (எம்.பி.எஸ்), ஜனதா கட்சித் தலைவர் முகமது இஸ்மாயில் போன்ற அனைத்து கட்சிகளும் நீதி விசாரணை அமைக்க கோரியும் எம்.ஜி.ஆர் எந்த விசாரணையும் அமைக்கப்படவில்லை. இப்படியான இந்த பிரச்சனை குறித்து சொல்லிக் கொண்டே போனால் நீண்ட பதிவாகிவிடும்.

இது குறித்து அன்றைய ஆங்கில தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ்விரிவான செய்திகளை அந்த காலக்கட்டங்களில் வெளியிட்டது.அன்றைக்கு ஆங்கில இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தொடர்ந்து அன்றைய சிறப்புச் செய்தியாளர் எம். நாராயணன் விரிவாக 3,4 பத்திகள் அளவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் விரிவாக செய்திகளை சேகரித்து எழுதியது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பார்வைக்கு செல்ல வசதியாக இருந்தது.அதே போலவே தினமணி, தினத்தந்தி, தினமலர், தினகரன் ஏடுகளும் தொடர்ந்து விரிவான செய்திகளை வெளியிட்டிருந்தது. முரசொலியில் வைகோவின் அறிக்கையையும், கலைஞரின் சட்டமன்ற பேச்சும், பேராசிரியரின் திருவேங்கடத்தின் பேச்சும் அந்த காலக்கட்டத்தில் வெளியாகியிருந்தது.
குறிப்பாக கோவில்பட்டி, சங்கரன்கோவில் அப்போது ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்தது. முதல் துப்பாக்கிச் சூடு கோவில்பட்டி பழைய அப்பனேரி கந்தசாமி நாயக்கர் (55) துவங்கி சாத்தூர் வெத்தலையூரணி சீனிவாசன், இறுதியாக 1993இல் ஜெயலலிதா ஆட்சியில் இருதய ஜோசப் ரெட்டியார், வெங்கடாசலபுரம் எத்திராஜலு நாயக்கர் வரை காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் சாகடிக்கப்பட்டனர். இது தான் விவசாயிகள் மீது இறுதியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு துயரச் சம்பவம் ஆகும்.

விவசாயிகள் போராட்டம் 1979இல் நடந்த போது சங்கரன்கோவில் அருகேயுள்ள பணவடலியில் விவசாயிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தச் சென்ற பணவடலி காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் அய்யாபழம் மீது கல்லாலும், ஆயுதங்களாலும் அடித்து கொன்றுவிட்டார்கள் என்று நாராயணசாமி நாயுடு, பரமசிவம் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கோவையில் கைது செய்யப்பட்டு மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் வழியாக இரவில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டதெல்லாம் நினைவுகளாக மனதில் எழுகின்றது.

இந்த சம்பவங்கள் நடந்தது எல்லாம் தை மாதம் பிறப்பதற்கு முந்தைய காலக்கட்டம்.இந்த காலக்கட்டத்தில் தான் நெல் அறுவடை செய்ய வேண்டும். நெல் அறுவடை செய்ய முடியாமல் ஒவ்வொரு அடிமைகள் போல, அகதிகள் போல வாழ்ந்தது எனக்கெல்லாம் கண்ணீரினை வரவழைத்தது. அடியேன் பொது வாழ்க்கையில் இருந்தாலும் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மூலமாக தான் இதை குறித்தான விவரங்களை பேசி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நிலையில் இருந்தது. இதே காலக்கட்டத்தில் தான் விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்து அரசின் ஜப்தி நடவடிக்கைகளையும் ஓரளவு தடுத்து நிறுத்தி, கடன் நிவாரணங்களையும் பெற்றுத் தர முடிந்தது.

விவசாய சங்கப் போராட்டத்தில் 1972லிருந்து அக்கறையும் ஆர்வமும் எடுத்து நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமிக் கவுண்டர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கரூர் முத்துசாமிக் கவுண்டர், செங்கல்பட்டு மாவட்டம் புழம்பாக்கம் முத்துமல்லா ரெட்டியார், வி.கே. ராமசாமி, திருத்தணி வழக்கறிஞர் சின்னிகிருஷ்ணய்யா, தருமபுரி சின்னசாமி, பொன்னேரி வாசு, வேட்டுவலம் மணிகண்டன் போன்ற பலரின் பணிகளையெல்லாம் மறக்க முடியாது. இப்படி ஒரு நீண்ட பட்டியலை நாராயணசாமி நாயுடுவின் தளபதிகளாக ஒவ்வொரு வட்டாரத்திலும் இருந்தார்கள். திரு. செல்லமுத்து, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என். எஸ். பழனிச்சாமி, மயில்சாமி போன்ற பலரின் பணிகளும் நினைவிற்கு வருகின்றன. இந்த இயக்கம் கடுமையான உழைப்பில், தியாகங்களில் வளர்ந்த இயக்கம். அந்த இயக்கத்திற்கான உரிய அங்கீகாரத்தை தமிழக மக்கள் வழங்கவில்லை. அந்த காலக் கட்டத்தில் அடியேன் விவசாய சங்கப் பணிகள், அரசியல் பணிகள், வழக்கறிஞர் பணிகள், பிரபாகரனோடு விடுதலைப் புலிகளுக்கான பயிற்சி மற்றும் களப்பபணிகளுக்காக சுற்றிக் கொண்டே ஓடிய காலம். இந்த சூழல் தான் எனக்கு பொது வாழ்க்கை பயிற்சியின் உலைக்களமாக திகழ்ந்தது.

இந்த இயக்கம் வலுப்பட்டிருந்தால் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டு இன்றைய விவசாயிகள் நிம்மதியாக, கௌரவமாக இருந்திருக்கக் கூடும்.நாராயணசாமி நாயுடு தனது கள உழைப்பால் அனைவரையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுடைய ஒற்றுமையை நிலைநாட்டி ஒரு ஆளுமையாக திகழ்ந்தார்.ஆனால் அவரைகாலமும், இயற்கையும் 1984இல் தேர்தல் நேரத்தில் பறித்துக் கொண்டது. கோவில்பட்டி பயணிகள் விடுதியின் பின் அறையில் ஓய்வில் இருக்கும் போதே நெஞ்சுவலியில் உயிர் பிரிந்தது.அங்கு செல்லும் போதெல்லாம் அவரின் முகம் நினைவில் வரும்.

கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடுவுக்கு ஒரு சிலை எழுப்ப பல்வேறு முயற்சிகள் செய்தாலும் ஆட்சியாளர்கள் இவரின் முக்கியத்துவம் தெரியாமல் நடந்து கொள்வதும், அதை குறித்து பேசினாலும் செவிடன் காதில் சங்கு ஊதியது போன்ற நிலைப்பாடு தான். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் இந்த சிலை அமைக்க எடுத்த நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமைந்துவிட்டது.மறைந்த நாராயணசாமி நாயுடு ஒரு ரோல் மாடல். இவருடைய போர்குணத்தை கொண்டுதான் வடஇந்தியாவில் திக்காயத், மராட்டியத்தில் சரத் ஜோஷி, ஆந்திரத்தில் செங்கால் ரெட்டி, கர்நாடகத்தில் நஞ்சுண்டராவ் என்று பலரும் இவருடைய பாதையை மாதிரியாக கொண்டு விவசாயிகளின் உரிமைகளை காக்க அவர்களுடைய மாநிலங்களில் போராட்டக் களத்தை அமைத்தனர்.

திரும்பவும் செய்திக்கு வருகின்றேன். எங்கள் கிராமத்தில் 1981இல் தைப் பொங்கல் இல்லை. பிப்ரவரி 20க்கும் பிறகுதான் அனைவரையும் தேடிப்பிடித்து கிராமங்களுக்கு அனுப்பக்கூடிய பணிகளை செய்தோம். அதன்பிறகு தான் இயல்பு வாழ்க்கை கிராமத்தில் திரும்பியது.அப்போது அரசியலில் ஒரு பக்கம் இருந்தாலும், விவசாய சங்கத்தில் நாராயணசாமி நாயுடுவுடன் களப்பணியிலும் அடியேன் இருந்தேன்.மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஜி.ரங்கா விவசாயத்தை சங்கத்தை நடத்துப்பா., அரசியல் எதற்கு? என்று வேடிக்கையாக சொன்னதுமுண்டு.

அப்போது தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை. ஜெராக்ஸ், பேக்ஸ், கைபேசி, சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி கிடையாது. வானொலியில் தான் செய்திகள் கேட்க வேண்டும்.இந்த நிலையில் அன்றைக்கு காட்டுமிராண்டித்தனமாக எம்.ஜி.ஆர் அரசு விவசாயிகள் மீது நடந்து கொண்டபோது அவர்களை பாதுகாக்க எவ்வளவோ சிரமங்கள் பட்டோம்.அதை சொல்லி மாளாது.இன்றைக்கு தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு என்றால் உலகளவில் செய்திகள் போய்விடுகிறது. அன்றைக்கு 45 நாட்களில் விவசாயிகள் குடும்பங்களில் அமைதியை ஏற்படுத்தியது இன்றைக்கும் நினைத்தால் மலைப்பாக உள்ளது.

ஏதோ முடிந்ததை செய்தோம் என்ற ஆறுதல்.காலச்சக்கரங்கள் ஓடிவிட்டன. ஆனால் வரலாற்றுப் பதிவுகளில் எதிர்காலத்தில் இந்த சம்பவங்கள் எல்லாம் தெரியவேண்டும் என்பதால் தான் எங்கள் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களை ஓரளவு சுருக்கமாக இங்கே வைத்துள்ளேன். முழுமையான பதிவு இது இல்லை.

#விவசாயிகள்_போராட்டம்
#துப்பாக்கிச்_சூடுகள்
#ஸ்டெர்லைட்
#சி_நாராயணசாமி_நாயுடு
#தமிழக_விவசாயிகள்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-05-2018

Book on Dravidian years.

ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் (OUP)  எஸ். நாராயண் எழுதிய Dravidian Years  - Politics and Welfare of Tamil Nadu என்ற ஆங்கில நூல் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இந்த நூலில் ஆங்கிலத்தில் தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் அரசியலையும், ஆட்சிகளை பற்றியும் எழுதப்பட்டிருப்பதாக தகவல். 
இதன் அட்டைப் படத்தை பார்த்தாலே புத்தகம் எழுதியவர் எப்படி எழுதியிருப்பார் என்று சிந்தித்தபொழுது, சரியான  பார்வையிலும், அணுகுமுறையிலும் எழுதப்பட்டிருக்குமா என்று ஐயம் ஏற்படுகிறது. 
பெரியார், அண்ணா ஆகியோருடைய படங்கள் அட்டைப் படத்தில் இல்லை. திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான கலைஞரின் படத்தை மேலே வைக்காமல் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் இடையில் புகுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். நீண்ட காலமாக திராவிட இயக்கத்தை தமிழகத்தில் வழிநடத்தி தலைமை தாங்கிவரும் தலைவர் கலைஞரை இப்படி அட்டை படத்தில் காட்டப்பட்டிருப்பது சரிதானா?

இந்த நூலில் பல்வேறு தவறான விமர்சனங்களும் இருப்பதாகவும் டெல்லி நண்பர்கள் மூலமாக அறிந்தேன். புத்தகம் வெளிவரட்டும் பார்க்கலாம்.

#திராவிட_அரசியல்
#Book_on_Dravidian_years
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-05-2018

Friday, May 25, 2018

அமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் அத்துமீறல்களும்… ஆபத்துகளும்…. வல்லரசுகளின் வல்ல ஆதிக்கமும் ......



————————————————

ஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, ஹைட்ரோ கார்பன், காவிரி – முல்லை பெரியாறு போன்ற 67 நீராதாரப் பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகள் தமிழகத்தில் உள்ளன. நீராதாரங்கள் என்றால் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பற்றி மட்டுமே அறிவோம். மற்ற நீராதாரப் பிரச்சனைகளை குறித்து பலருக்கு சரியான புரிதலும், அறிதலும் இதுவரை ஏற்படவில்லை. இப்பிரச்னைகள் எல்லாம் நம் மண்ணிலே போராடக்கூடியவை.

இன்னொரு பெருங்கேடு ஒன்றை, நாம் எதிர்காலத்தில் தென் திசையில் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தமிழகம் மட்டுமல்ல, கேரளமும் கூட. அது வேறொன்றுமல்ல. அமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் சீசல்ஸின் டீகோகார்சியா பிரிட்டன் மூலமாக அமெரிக்கா குத்தகைக்கு எடுத்து ராணுவத் தளம் அமைக்க இருக்கிறது. பிரான்சும், ரஷ்யாவும் இந்த கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டங்களை தீட்டியுள்ளது. பேருக்குத் தான் இந்தியப் பெருங்கடல். நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் தயவால் அமெரிக்காவும், சீனாவும் வியாபாரத்திற்காகவும் (Silk Road), தனது போர்க்கப்பல்களை எல்லாம் அங்கு நிறுத்தவும் மட்டுமல்லாமல் கடற்படை பயிற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. 
நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் போன்றவற்றுடன் நல்ல ஒருங்கிணைப்பான உறவுகள் இந்தியாவிற்கு இல்லாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே. 

இந்தியப் பெருங்கடல் என்று பெயர் இருந்தாலும், நமது கட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அயலார்களுடைய அத்துமீறலும் வல்லரசுகளின் வல்ல ஆதிக்கமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இந்த கடலில். அமைதி மண்டலமாக இருந்த இந்த கடல் அயல்நாடுகளின் ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் புவி அரசியலில் பெரும் குழப்பங்களை உருவாக்கும் கடல் மண்டலமாக ஆகிவிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது. 

நேரு காலத்தில் வடக்கேயும், வடகிழக்கிலும் சீனாவுடன் போர். அவர் காலத்திற்கு பின் வடமேற்கில் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. தெற்கே இந்து மகா சமுத்திரத்தில் இம்மாதிரியான நெருக்கடியில் போர் மூளும் என்ற அச்சம் ஏற்படுகின்றது. அப்படி போர் மூண்டால் கூடங்குளம், மகேந்திரகிரி, தும்பா, ஐஎன்எஸ் கட்டபொம்மன், தூத்துக்குடி ஆலைகள், கல்பாக்கம் வரை தாக்குதல் நடத்தினால் பெரும் துயர விளைவுகள் ஏற்பட்டுவிடலாம். எனவே இதை முன்கூட்டியே தடுக்கக் கூடிய வகையில் இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவின் இறையாண்மை காக்கக் கூடிய நிலையில் அயல்நாட்டுடைய அத்துமீறலை கண்காணித்து உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் தென் மாநிலங்களுக்கு பெரும் ஆபத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழல் வரலாம்.
பண்டித நேரு அவர்கள் தென் தமிழகம் அமைதியான பகுதி என்று நினைத்துதான் ஒரு காலத்தில் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தென் மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடமாநிலங்களுக்கு பாகிஸ்தான், சீனா ஆகியவற்றால் போர் பிரச்சனை ஏற்படும் என்றெண்ணினார். ஆனால் இன்றைக்கு நிலைமைகள் மாறி இந்து மகா சமுத்திரத்தில் அந்நிய நாடுகளின் ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் தென்மாநிலங்களுக்கு ஆபத்துகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது அவசரமும், அவசியமான பணியாகும்.

#இந்து_மகா_சமுத்திரம்
#டீகோகார்சியா
#சீனாவின்_பட்டுப்_பாதை
#Indian_Ocean
#china_silk_road
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-05-2018

Thursday, May 24, 2018

தூத்துக்குடியை கலவரக்குடியாக்கிய ஸ்டெர்லைட்

தூத்துக்குடியை கலவரக்குடியாக்கிய ஸ்டெர்லைட்
- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டால் கலவர பூமியாகிவிட்டது. ஈழப் படுகொலைகள், ஜாலியன் வாலாபாக், மனித நேயமற்ற பாசிச அணுகுமுறை வரலாற்றையெல்லாம் நினைவில் கொண்டு தூத்துக்குடியின் துயரக் கலவரங்களை அடையாளப்படுத்த வேண்டிய வேதனையான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். நச்சு கக்கும் ஸ்டெர்லைட் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடியில் அமைந்து அந்த வட்டார மக்களை பலவிதத்திலும் வாட்டி எடுக்கின்றது.
மகாராஷ்டிராவின் ரத்தினகிரியில் 1993ல் இயங்கிய ஸ்டெர்லைட்டின் காப்பர் ஆலையை உள்ளூர் விவசாயிகள் தாக்கி உடைத்தனர், 200 கோடி மதிப்புடைய கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டன. அல்போன்ஸோ மாம்பழங்கள் விளைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை நச்சு காற்று பாதமாக என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.

தாக்கிய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸ்டெர்லைட் அனுமதியை ரத்து செய்து அங்கிருந்து துரத்தினார் முதல்வர் சரத்பவார். அதன் பின்னர் குஜராத்தும், கோவாவும், கர்நாடகமும், கேரளமும் அனுமதி மறுத்த ஸ்டெர்லைட் 1994ல் தமிழகத்தில் தூத்துக்குடியில் புகுந்து பல உயிர்களை காவு வாங்கிவிட்டது. இதே போர் குணத்தோடு மராட்டிய மக்கள் ஜெய்தாப்பூரில் அமையவிருந்த அணு உலையையும் கடுமையாக எதிர்த்தனர். அங்கு அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் இந்த கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் ஓட்டம் எடுத்தது. இறுதியாக தூத்துக்குடியில் புகுந்து சிக்கலை உருவாக்கியது. 

ஸ்டெர்லைட் போன்ற தாமிர உருக்கு ஆலைகள் மனித நடமாட்டம் அதிகமில்லாத தென் அமெரிக்க (லத்தீன் அமெரிக்கா) நாடுகளான சிலி போன்ற பகுதிகளில் தான் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஒரு துறைமுக நகரம். இங்கு இது போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

ஸ்டெர்லைட் நச்சு ஆலை அமைக்கப்பட்ட காலக்கட்டத்தில் தான் சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் டாபர் - டூபான்ட் எனும் வாகனத்தின் டயர் தயாரிப்பு ஆலை அமையவிருந்தது. எங்களைப் போன்றவர்களின் தொடர் போராட்டங்களால் அந்த ஆலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் எப்படியோ ஸ்டெர்லைட் ஆலை அமைந்துவிட்டது. கோவில்பட்டியில் கடந்த 24-2-1997 (காந்தி மைதானம்) என் தலைமையில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு முதல் மறியல் போராட்ட விளக்க கூட்டத்தில் வைகோ அவர்கள் இது குறித்து உரையாற்றினார்.

இருப்பினும் ஸ்டெர்லைட் அன்றைய அரசால் அனுமதி அளிக்கப்பட்டு விதிகளை மீறி அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த ஆலை அணில் அகர்வாலால் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் சார்பில் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு தாமிர உற்பத்திக்காக நிறுவப்பட்டது. இந்த கழிவில் இருந்து சல்ப்யூரிக் அமிலமும், பாஸ்பாரிக் அமிலமும் வெளியாகும். தூத்துக்குடியில் அமைப்பதற்கான காரணமாக இந்த நிறுவனம் தூத்துக்குடி ஒரு துறைமுக நகரம், தாமிரபரணியில் தண்ணீர் கிடைக்கும் என்ற காரணங்களை தனது அனுமதி மனுவில் குறிப்பிட்டிருந்தது.

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து 25 கி.மீ எல்லைக்குள் எந்த ஆலையும் அமைக்க கூடாது என்ற விதியை தளர்த்தி அன்றைக்கு தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசு 15 கிமீக்குள் அமைத்துக் கொள்ள அனுமதியை வழங்கியது. ஆலையைச் சுற்றி 250 மீட்டர் சுற்றளவுக்கு பசுமை மிகுந்த அடர்த்தியான காடுகளையும் அமைக்கப்பட வேண்டும். அதையும் அந்த நிர்வாகம் நடைமுறைப்படுத்தவில்லை. சில நாட்களில் இந்த பசுமைக் காடுகள் அமைக்கும்  25 மீட்டராக தளர்த்திக் கொண்டது. 

ஸ்டெர்லைட் அமைந்தவுடன் போராட்டக்களம் தூத்துக்குடி மீனவர்கள் நடத்தினார்கள். வைகோ அவர்கள் இதை குறித்து தொடர் போராட்டங்கள், தொடர்ந்து 1996 மார்ச்சில் இருந்து இன்று வரை போராடி வருகின்றார். ஆண்டன் கோமஸ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மீனவர் சமுதாயம் என்று பலரும் இதை எதிர்த்து குரல் கொடுத்தனர். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற, பசுமைத் தீர்ப்பாயத்தின் வழக்குகள் என்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மேலாகிவிட்டன. இதை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களின் விவசாய மக்களும் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடி வருகின்றனர். தாமிரத்தை உருக்கும் போது நச்சுக் கக்கும் புகையை மட்டுமல்ல விசவாயுகள் வெளிவந்து காற்றை மாசுப்படுத்தும். 

இதனால் புற்று நோய், நுரையீரல் பாதிப்பு, தோல் நோய்கள் என சகல நோய்களுக்கும் வாசலை அமைத்து விடும் இந்த ஸ்டெர்லைட் ஆலை. சுற்ற வட்ட கிராமங்களுடைய விவசாயமும் நாசமாகிவிடும். குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம் மற்றும் தூத்துக்குடி நகரவாசிகள் இதையெல்லாம் கண்டித்து 100 நாட்களாக போராடி காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 20 க்கும் மேல் சாகடிக்கப்பட்டுள்ளனர். உண்மையான கணக்கை யாருக்கும் சொல்லவில்லை. மருத்துவமனையில் பலர் கவலைக்கிடமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

அது மட்டுமல்லாமல் தூத்துக்குடி நகரத்திலும், அருகிலுள்ள கிராமங்களிலும் காவல் துறையினர் வீடு வீடாகச் அத்துமீறி உள்ளே நுழைந்து பொது மக்களைத் தாக்குகின்றனர். இப்படித் கொடூரமாக தாக்கிவிட்டு, சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த மக்களுக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு கொடுத்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் ஆறுதலடைந்துவிடுமா? என்ன கேவலமான நிலை?
நியாயமாக உரிமைக்காக போராடும் பிரஜைகளின் மீது இப்படி வன்முறையை கட்டவிழ்த்து காவல் துறையினர் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்வது பாசிசப் போக்கு தான். நானே நாடு என்று சொன்ன 14வது லூயி பிலிப்பை போல மக்களிடம் ஆட்சியாளர்கள் தண்டனை பெறுவார்கள். 
..................
படம்இ துதான் ஸ்டெர்லைட் தொடக்கம் ... அன்றைய முதல்வராக ஜெயலலிதா..



#BanSterlite

செய்தித்தொடர்பாளர், திமுக.,
நூலாசிரியர், 
இணையாசிரியர், கதை சொல்லி,
பொதிகை – பொருநை - கரிசல்
rkkurunji@gmail.com

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...