Saturday, May 12, 2018

தேர்தல்கள்....

பண்டித நேருவும், இந்திய தேர்தல்களும்
====================================

அரசியல் என்றால் தேர்தல் மட்டுமல்ல. ஆனால் நம்மிடம் அரசியல் என்றால் தேர்தல் என்று நம் உள்மனம் வரை ஊடுருவி உள்ளது. மக்களின் தேவையான இருப்பிடம், உணவு, குடிநீர், வாகன நெரிசல் இல்லாத நாடு, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் நல்ல காற்றும், மதம், ஜாதி, சமூக விரோதிகளும், குண்டர்களும் இல்லாத பூமியாக, அனைவருக்கும் எல்லாம் என்ற நிலையில் நாம் பெறுவதும்தான் உண்மையான அரசியல். நேர்மையாளர்கள் மட்டும் ஆட்சிக்கு வரத்தான் தேர்தல்கள். இந்த நோக்கங்கள்தான் அரசியலின் அடிப்படை தன்மையாகும். பக்கத்தில் உள்ள கேரளத்தில் நமது தமிழகத்தின் கலாச்சாரம் புகுந்துவிட்டது. எளிமையான அரசியல் அந்த மாநிலத்தில் இருந்தது. தமிழகத்திலிருந்து அ.தி.மு.க. அங்கும் புகுந்து, பண ஆசையை காட்டி, தேர்தல் களத்திலும் குதித்துள்ளது. தேர்தலில் பணம், குண்டர்கள், தகுதியற்ற வேட்பாளர்கள் இருந்தாலே அது தேர்தல் அல்ல. 

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலையொட்டி அன்றைய பிரதமர் நேரு அவர்கள் 22.12.1951 அன்று வானொலியில் உரையாற்றும்போது "நாட்டில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் என்ற ஜனநாயக களத்தில் பங்காற்றவேண்டும் என்றும் இதற்காகவே நாடாளுமன்றங்கள், சட்டமன்றங்கள் என 3295 தொகுதிகள் பிரித்துள்ளோம். மொத்தத்தில் முதல் தேர்தலில் மக்களின் பிரதிநிதிகளாக 4412 பேரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். ஒரு உண்மையான சவாலில் இந்திய நாடு வெற்றி பெற வேண்டும். ஓட்டு என்றால் என்னவென்று அறிந்துகொண்டு வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்" என்று நாட்டு மக்களுக்கு அறைகூவல் விட்டார். அத்தோடு உலகின் உயரமான 15,000 அடி உயரத்தில் இருக்கும் ஹிக்கிம், இமாச்சல பிரதேசம் மாநிலத்திலுள்ள லான்சே, ஹோமிக் ஆகிய இரு கிராமங்களில் மொத்தம் 80 குடும்பங்கள்தான் இருந்தன. அதற்கும் வாக்குச் சாவடிகள் அமைத்து எவரும் தப்பாமல் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை ஆற்ற வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது என்று தெளிவுபடுத்தினார். இந்த தேர்தலை முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் முதன்முதலாக இந்தியாவில் தேர்தலை அறிமுகப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, அந்தந்த நாடுகளின் தேர்தல் முறைகளை அறிந்து, அவருடைய உழைப்பில் முதல் தேர்தல் நடந்தது என்பது வரலாற்று செய்தி.

இப்படியான புனிதமான தேர்தல் சந்தை வியாபாரம் ஆகிவிட்டதே என்று வேதனைப்படுகிறேன். இன்றைக்கே வாக்காளர்களுக்கு பணத்தை வழங்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு 50 வாக்காளர்களுக்கு ஒருவர் பொறுப்பு என்று வேட்டி கட்டிக்கொண்டு வேட்டிக்குள் இருக்கும் அண்டர்வேர் பையிலிருந்து சம்பந்தப்பட்ட பொறுப்பாளர் மக்களிடம் பகல் கொள்ளையடித்த ஊழல் காசுகளை அள்ளித் தருகிறார் என்றால் அதன் நோக்கம் என்ன? பண்டித நேரு விரும்பிய தேர்தல் முறையா இது? அவர் ஆற்றிய வானொலி உரையை படிக்கும்பொழுது அவருடைய விரிந்து பரந்த ஆரோக்கியமான நோக்கங்கள் யாவும் ஈடேறாமல் அழிக்கின்ற இந்த குடிலர்களை சூரசம்ஹாரம் ஆட வேண்டாமா? வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என்று ஒரு கோடி பேருக்கு மேல் உறுதிமொழி எடுத்துக்கொண்டது இந்த தேர்தலில் நல்ல துவக்கம். 

இந்த துவக்கம் இளைஞர்கள் எடுத்து சென்று எதிர்காலத்தில் உண்மையான தேர்தல் ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டும். பண்டித நேருவினுடைய விருப்பம் நிறைவேற வேண்டும்.

#pandidnehru #elections #பண்டிதநேரு #தேர்தல் #ksrposting #ksradhakrishnanposting


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...