Tuesday, May 15, 2018

மாட்டுத் தாவணி அரசியலும், மாட்டு (வாக்கு )வியாபாரத் தேர்தல்களும்....

இன்றைய அரசியல் நிலை
—————————
கடந்த கால மக்கள் நல அரசியல் என்பது மாட்டுத்தாவணி அரசியல் (வணிக அரசியல்) ஆகிவிட்டது. மாட்டு (வாக்கு) வியாபாரமாக தேர்தல் களங்கள் ஆகிவிட்டன. மாட்டுத்தாவணியில் மாட்டை விற்கும்போது விற்பவரும், வாங்குபவரும் கையில் துண்டு போட்டு வியாபாரத்தை முடிப்பார்கள். அப்படித்தான் இன்றைக்கு தேர்தல்கள். தேர்தல்களில் கொள்கைக்கும், களப்பணிக்கும், நேர்மைக்கும் இடமில்லாமல் எவ்வளவு ஓட்டுக்கு பணம் கமுக்கமாக தருகிறார்கள் என எதிர்பார்ப்பதோடு கேட்பதுதான் இன்றைக்கு தேர்தலின் நோக்கமாகவும் அடிப்படையாகவும் அமைந்துவிட்டது.

பிறகெப்படி;நல்லவர்கள், நேர்மையான ஆளுமைகள் மக்கள் பிரதிநிதிகளாக ஆக முடியும். நல்லாட்சியும் வழங்க முடியும்.
பணத்தை கொட்டி தொழில் செய்கின்ற வியாபாரமாகிவிட்டது இந்த அரசியல். பிறகு வெற்றி பெற்றவர்கள் லாபத்தை சம்பாதிக்க துடிப்பார்களே அன்றி மக்கள் பணியா ஆற்றப் போகிறார்கள். தற்போது தேர்தல் என்பது பிசினஸ் வென்ட்ச்யூர் (Business Venture). தகுதியே தடை என்ற நிலையில் அரசியலில் சம்மந்தமில்லாத கிரிமினல்கள், கோடீஸ்வர வியாபாரிகள், புஜபல ரவுடிகள், கீழ்த்தரமான ஜாதிய அபிமானங்களோடு உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதால் தான் இன்றைக்கு நாம் காணும் பெருங்கேடுகள்.
நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் தான் நாம் மதிப்பதில்லையே...... அரசியலில் நல்ல களப்பணிகள் ஆற்றியவர்கள் தேர்தலில் பின் எப்படி வெற்றி பெற முடியும் ?இப்படியான அலங்கோலங்கள் தான் அரங்கேறிகிறது.
இதற்கு மக்களும், அரசியல் கட்சியும், ஜாதியும், ஊடகங்கள் தான் காரணம். பணம் கொடுத்து ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்ற தைரியமும், எந்தவொரு தியாகமும இல்லாமல் மூன்றாம் தர கழிசடைகளும் வெற்றி பெறுகிறார்கள். முதல் வரிசையில் இருக்க வேண்டிய ஆளுமைகளை மக்கள் புறக்கணிக்கிறார்கள்.
மக்கள் பணத்திற்கு ஓட்டை விற்றுவிட்டார்கள். அந்த பணம் கொடுத்தவர்கள் நாளை நாட்டை விற்றுவிடுவார்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தான். அதற்காக அந்த பொறுப்புக்கு வருகிறவர்களுக்கு தியாகமும், புரிதலும், தகுதியும், நேர்மையும் வேண்டாமா? இந்த இழிநிலை தொடருமானால் பாரதியின் ரௌத்திரம் பழகு என்ற வாக்குச் சொல்லுக்கேற்ப நேர்மையாளர்கள் மனதில் நெருப்பாக எரியத்தானே செய்கிறது.
நல்லவர்கள், நேர்மையானவர்கள் இன்றைக்கு சிறுபான்மையாக அரசியலில் ; எந்த தியாகமும் இல்லாமல் கல்லா கட்டுபவர்களிடம் இருந்து, துஷ்டர்களை கண்டால் தூர விலகு என்ற நிலையில் தொலைக்காட்சி ஊடகங்களை பார்க்காமல், ஒரு சில நாளிதழ்களை மட்டும் படித்துவிட்டு நாடு எப்படி போகிறது என்று ஒதுங்கியே மௌனமாக இருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம். இப்படி தான் நீடிக்க வேண்டுமென்று மக்கள் நினைத்தால் என்ன செய்வது? 
தேர்தல்களில் இப்படித்தான் முடிவுகள் அமையும்.
வாழ்க ஜனநாயகம்.....
வாழ்க மக்கள்....
வாழ்க நாடு.....
வேறு என்ன சொல்ல முடியும்.........

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-05-2018

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...