Tuesday, May 29, 2018

திரும்பவும் கண்ணகி கோவில் பிரச்சனையும், எனது வழக்கும் .....

கண்ணகி கோவிலை சீரமைக்கும் பணிகளை, திருவிதாங்கூர் தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தது கேரள அரசு. புதிய சிலை அமைக்க முடிவு - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு.

தமிழகத்தின் கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கண்ணகி கோவில் பிரச்சனை 1983இல் தொடங்கியது. அப்போது தமிழக எல்லையில் உள்ள கோவிலுக்குள் கேரளப் போலீசார் நுழைந்து சிலைகளை உடைத்து துவம்சம் செய்துவிட்டு, வழிபாட்டுக்கு வரும் பக்தர்களை விரட்டினர். அப்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்தது. பழ.நெடுமாறன் அவர்களும்,நானும் அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  கேரள அரசின் மீது வழக்கு  (வழக்கு எண். WP No. 8758 of 1988). தொடுத்தேன். அதன் பின்னர் கேரளத்தின் அத்துமீறல் குறைந்தது. தமிழக எல்லையில் உள்ள கோவிலுக்கு கேரள அரசு உரிமை கொண்டாடுவது நியாயமற்றது. 


இதேபோல தான் அட்டப்பாடி எல்லையில் பிரச்சனை செய்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தமிழக கிராமத்தில் கேரள அரசு அதிகாரிகள் ரேசன் கார்டு கொடுத்தனர். 

கண்ணகி கோவில் தொடர்பாக எனது வழக்கு விவரங்களும், விரிவான பதிவும்....


தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழக பயணிகள் செல்வது வாடிக்கை. வருடந்தோறும் சித்ரா பௌர்ணமி அன்று கண்ணகி கோவிலுக்குச் செல்வதற்கு தமிழக மக்களுக்கு அதீத ஆனந்தம். ஒரு வார்டு கவுன்சிலரை கூட கேள்வி கேட்கத் தெரியாதவர்களுக்கு நாட்டை ஆண்ட மன்னனை எதிர்த்துக் கேள்வி கேட்ட காவியத் தலைவி கண்ணகி. ஆனால் இந்த கோவிலில் வழிபாடு செய்ய வரும் தமிழக மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் அதிகம்.

சேர மன்னன் செங்குட்டுவனால் கண்ணகிக்கு கட்டப்பட்ட கோவில் தான் இது. மேற்குத் தொடர்ச்சி மலை மீதிருக்கும் மங்கலதேவிக் கண்ணகிக் கோயில். இந்த கோயில் தமிழகத்தின் பளியங்குடி கிராமத்தில் இருந்து 6 கி.மீ தூரத்திலும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 
கோவலனின் மறைவுக்குப்பின் கண்ணகி அமைதி வேண்டி இங்கு அமர்ந்ததாக சொல்கிறார்கள். இக்கோட்டத்திற்கு மதுரை மாவட்டத்திலுள்ள கூடலூரிலில் இருந்து இரண்டு பாதைகள் வழியாகச் செல்லலாம். இப்பாதைகளும் கோட்டமும் ‘வண்ணாத்திப் பாறை’ என்று பாதுகாக்கப்பட்ட பாறைகளில் உள்ளன. இங்கு வனவிலங்ககுள் பல உள்ளன. மற்றொரு பாதையாகக் குமுளி வழியாகப் பேருந்து மூலம் செல்லலாம். அங்கிருந்து தேக்கடி வரை சென்று காட்டுப் பாதை வழியாக இக்கோட்டத்திற்கு செல்ல வேண்டும்.

1883ஆம் ஆண்டு கூடலூர் மக்கள் அரசு அனுமதி பெற்று இக்கோட்டத்திற்கு செல்லும் பாதையைப் புதுப்பித்தனர். 1839 – 1896 ஆகிய நில அளவை ஆவணங்கள், 1893ஆம் ஆண்டு இந்திய நில அளவை வரைபடம், 1916ஆம் ஆண்டு இந்திய சர்வேயர் ஜெனரல் வரைபடம், 1932ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மதுரை மாவட்ட கெஜட், அரசு ஆணை 182 (1.5.1918) சென்னை – பொது அரசியல்) ஆகிய ஆவணங்களின்படி இக்கோட்டம் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. கி.பி.1672ஆம் ஆண்டு காட்டூர் பகுதியில் நடந்த போரில் இக்கோவில் தமிழகத்தைச் சார்ந்தது என முடிவெடுக்கப்பட்டது. அது ராணி மங்கம்மாள் மதுரையை ஆண்ட காலமே. இருப்பினும் 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நில அளவைப் பதிவேடுகள் துறை இணை இயக்குநர் கணேசன், கேரள மாநில அரசு அதிகாரிகளுடன் பேசி இது தமிழகத்திலுள்ளதே என முடிவு செய்தனர். அதன்பின்பு தமிழக அதிகாரிகள் பல்வேறு சமயங்களில் இப்பிரச்சினையை ஒட்டி நிலஅளவை செய்து தமிழகத்தில் உள்ளது என்று தெள்ளத் தெளிவாக்கியுள்ளனர். இருப்பினும் இந்த கோயிலுக்கு சாதாரணமாக தமிழக மக்கள் செல்லக்கூடிய உரிமையை 1975ஆம் ஆண்டு தமிழக அரசும் இழந்துவிட்டது. சித்திரை பௌர்ணமி அன்று மூன்று நாட்களுக்கு மட்டும் தான் கோவிலுக்குள் அனுமதி என்று கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
கடந்த 1982ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியன்று வழிபாட்டுக்கு வந்த மக்கள் கைது செய்யப்பட்டவுடன் பிரச்சையில் தமிழக அரசு கவனம் செலுத்த தொடங்கி பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்ட்டன. ஆனால் இன்னும் சுமூகமான பிரச்சனைகளை தீர்த்து கொள்ளாமல் அரசுகள் மக்களை துன்பப்படுத்துகின்றனர்.

இந்த கோவிலுக்கு பளியங்குடி வழியாக நடந்தும் போகலாம். குமுளி வழியாக ஜீப்பில் போலாம். இந்த இடங்களை கேரள வனத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தப் பக்கம் போனாலே ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் தான் செல்ல வேண்டியுள்ளது. தண்ணீர் வசதி கூட தரமாட்டார்கள். அங்கும் கேரளத்தினருக்கே முன்னுரிமை அளிப்பார்கள். அங்கே மேல் முற்றம் ஒன்று உள்ளது. சிலப்பதிகாரம் முற்றோதல் செய்யவிடமாட்டார்கள்.

குமுளியில் இருந்து கண்ணகி கோயில் போவதற்கு சாலை அமைக்க 1975இல் முடிவுசெய்யப்பட்டது. அதற்கு முன் எந்தவித தடையும் இல்லை. இந்தியத் தொல்லியல் துறைக்கு 1983ஆம் ஆண்டு கேரளத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துள்ளர்கள். கோவிலை சீரமைக்கும் பணிகளுக்காக ரூ. 60 லட்சங்கள் நிதி ஓதுக்கியதை பயன்படுத்தாமல் உள்ளது. இது தொடர்பாக ஒரு வழக்கையும் தாக்கல் செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்னால் கேரள மாநில காவல் துறையினர் தமிழக மக்களை அங்கு அனுமதிக்காமல் கடுமையாக நடந்து கொண்டார்கள். 

அப்போது நான் தாக்கல் செய்த மனு கண்ணகி கோவில் (வழக்கு எண். WP No. 8758 of 1988). இந்தியாவில் தமிழக எல்லைக்குள் இருந்த கண்ணகி கோவிலுக்கு தமிழர்கள் செல்வதையே தடுத்து, விரட்டிய அண்டை மாநிலம் கேரளாதான். 1988 ல் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து சற்று தீர்வு ஏற்பட்டவுடன் கேரள காவல்துறையினரின் அத்துமீறல் நிறுத்தப்பட்டது. தமிழர்களும் அங்கு சற்று ஆறுதலோடு செல்லக்கூடிய நிலைமையும் உருவாக்கி தந்த திருப்தி அடியேனுக்கு உண்டு. 

#சித்ரா_பெளர்ணமி 
#கண்ணகி_கோட்டம் 
#Chitra_Pournami
#Kannagi_Kottam
#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-05-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...