Tuesday, May 15, 2018

சிறைக் கைதிகளுக்கு வாக்குரிமையும், உச்ச நீதிமன்றத்தில் எனது வழக்கும் (1990)

சிறைக் கைதிகளுக்கு வாக்குரிமையும், உச்ச நீதிமன்றத்தில் எனது வழக்கும் (1990)
---------------

சிறைக் கைதிகளுக்கு வாக்குரிமை வேண்டுமென்று இன்றைக்கல்ல 28 ஆண்டுகளுக்கு முன் (1990இல்) இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளேன். [ Writ Petition (C) No. 1028/1990 ]. இது குறித்தான விசாரணை அன்றைக்கு தலைமை நீதிபதியாக இருந்த ஏ.எஸ்.ஆனந்த் மற்றும் நீதிபதிகள் எஸ். ராஜேந்திர பாபு, ஆர்.சி. லகோட்டி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு 17/08/1999இல் வந்தது. என்னுடைய இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எம்.என். கிருஷ்ணமணி ஆஜரானார். மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் இந்த வழக்கில் வாதாடினார். 
குற்றவாளி என்று கருதப்படுபவர்கள் தேர்தலில் நிற்கும்போது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு ஏன் வாக்குரிமை வழங்கக் கூடாது என்பது தான் இந்த வழக்கின் சாரம். இது அடிப்படை உரிமை என்றும் என் மனுவில் சொல்லியிருந்தேன். இந்த வழக்கு விசாரணையில்,

Charles Sobraj Vs. Superindent Central Jail, Tihar, AIR 1978 SC 15140.
DBM Patanik Vs. State of A.P., AIR 1974 SC 2092.
Sunil Batra (II) Vs. Delhi Administration, AIR 1980 SC 1579.
Sanjay Suri Vs. Delhi Administration, AIR 1988 SC 414; 1988 Cri. L.J. 705.
Mahendra Kumar Sastri Vs. Union of India & Others (1984), 2 SCC 442.
மேற்சொன்ன ஏ.கே. கோபாலன், சார்லஸ் சோப்ராஜ், டி.பி.எம். பட்நாயக், சுனில் பத்ரா (II), சஞ்சய் சூரி ஆகிய உச்ச நீதிமன்றத்தின் பல வழக்குகளின் தீர்ப்புகளையெல்லாம் சொல்லி வாதாடப்பட்டது. இந்த வழக்கில் அரசியல் கைதிகள் பொதுப் பிரச்சனைகளுக்காக ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டு ஒரு வாரமும், பதினைந்து நாளிலோ சிறையிலடைக்கப்பட்டால் அந்த சமயத்தில் தேர்தல் வந்தால் வாக்களிக்க முடியாது. 
இந்திரா காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி சிம்ரன்ஜித் சிங் மான் (Simranjeet Singh Mann) நாடாளுமன்ற உறுப்பினராகும் போது ஏன் சிறைக் கைதிகளுக்கான வாக்களிக்கும் உரிமையை வழங்கக் கூடாது என்று பலக் காரணங்களையும் நியாயங்களையும் சொல்லி, மக்கள் பிரதிநிதிச் சட்டம் பிரிவு 62(5) / 1951இல் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று என் தரப்பு வாதங்கள் வைக்கப்பட்டது. 
மத்திய அரசு கடுமையாக எதிர்த்து வாதத்தை வைத்தது. தலைமை நீதிபதியும், மற்ற இரு நீதிபதிகளும் ஒரு நாள் முழுவதும் இதை குறித்தான விவாதங்களை கேட்டபின், இப்போது இந்திய அரசியல் களத்தில் கிரிமினல் குற்றவாளிகள் தலையெடுத்து வருகின்றனர். இது நல்ல சூழல் இல்லை எனக் காட்டி ஏற்கனவே 1997இல் அன்றைய தலைமை நீதிபதி வர்மா தலைமையில் அமைந்த அமர்வு, 
Ankul Chandran Pradhan Vs. Union of India & Others 1997 (6) SCC P. 1. என்ற வழக்கின் தீர்ப்பின்படி அரசியல் சூழ்நிலை ஆரோக்கியமாக இருந்தால் இதை குறித்து கவனிக்கலாம் என்ற நிலையில் என்னுடைய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 
இன்றைக்கு சிறைக்கைதிகள் உரிமைகளுக்காக பல தரப்பினரும் போராடுகின்றனர். அதே போல தூக்குத் தண்டனை கூடாதென்றும் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. 
குடியரசுத் தலைவரிடம் கருணை மனு நிராகரிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இரண்டே நாளில் வீராபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு தூக்குக் கயிறைத் தழுவியபோது வெறும் இரண்டு வரித் தந்தியில் 1983இல் 35 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடி காப்பாற்றியதும் அடியேன் தான். குற்றவாளியின் தூக்குத் தண்டனை ரத்துக்கும், சிறைக் கைதிகளுக்கு வாக்குரிமைக்காகவும், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று முறையே வழக்குத் தொடுத்து கடமையாற்றியதும் அடியேன். இன்றைக்கு சிலர் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள கடமையாற்றுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இன்றைக்கு தான் இந்த செய்தியை சொல்ல வேண்டுமென்று நண்பர்கள் வற்புறுத்தியதால் தான் இந்த பதிவை செய்கிறேன். 
என்னுடைய இருப்புக்காகவோ, புகழ்ச்சிக்காகவோ இதை செய்யவில்லை. வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்த பதிவு. இருப்பினும் இப்பணிகள் எனக்கு பெருமைபடுத்துகிறது. மத்திய, மாநில அமைச்சர்களால் செய்ய முடியாததையெல்லாம் ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்து கொண்டு செய்திருக்கின்றோம் என்ற மனநிறைவு. எவ்வளவு தான் உழைப்புகளையும் பெற்று நம்மை புறக்கணித்தாலும் நமக்கான அடையாளங்களை யாரும் அழிக்க முடியாதென்ற ஆறுதல் இந்த செயல்பாடுகளால் எனக்குள்ளது. எவ்வளவு பாடுகள். 
ஆனால் அதையெல்லாம் பெற்றுக் கொண்டு நன்றியுணர்வு இல்லாமல் இருக்கின்ற இந்த வணிக பொது தளத்தில் சமூக ஊடகங்கள் வந்ததால் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் பலருக்கும் தெரியாத சம்பவங்களை எல்லாம் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்த காரணத்தால் பலர் அதை வாசித்து, என்னை தொடர்பு கொண்டு இப்படியா!!! என்று ஆச்சரியமாக கேட்கும் போது, பிரச்சனைகளையாவது அவர்கள் அறிந்து கொண்டு பேசுகிறார்களே என்ற மனநிறைவு ஏற்படுகிறது. வேறென்ன வேண்டும். தகுதியே தடை என்ற நிலையில் உழைப்பை பெற்றுக் கொண்டு திட்டமிட்டு என் தகுதியையும், உழைப்பையும் புறக்கணித்தவர்களின் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன். ஆனால் யாரும் நிரந்தரமானவர்கள் அல்ல. 
#சிறைக்கைதிகளுக்கு_வாக்குரிமை
#தூக்குதண்டனை_ரத்து
#மரண_தண்டனை
#உச்ச_நீதிமன்றம்
#Death_Sentence
#Voting_rights_for_prisoners
#Supreme_court_of_India
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
15-05-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...