Monday, January 31, 2022

#இந்தியாவின்_75வது_ஆண்டு_பட்ஜெட்.

#இந்தியாவின்_75வது_ஆண்டு_பட்ஜெட்.
-------------------------------


 மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23-ஐ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை,பிப்ரவரி 1ம் தேதி அன்று காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யவுள்ளார்.
நிதிநிலை அறிக்கையின் இறுதி கட்ட நடவடிக்கையை குறிக்கும் வகையில், இதன் தயாரிப்பில் ஈடுபட்ட நிதியமைச்சக ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வழக்கமாக இந்தப் பணி அல்வா தயாரிப்புடன் நடைபெறும். இந்தாண்டு பெருந்தொற்று சூழலை கருத்தில் கொண்டு, சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதற்காக அல்வா தயாரிக்கும் விழாவுக்கு பதிலாக இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிதிநிலை அறிக்கை ரகசியத்தை பராமரிக்க, நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், நிதி நிலை அறிக்கை வெளியாகும் வரை, பட்ஜெட் பிரஸ் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டிடத்திலேயே தங்கியிருப்பர். நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பின்பே, இந்த  அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வர். 

 மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22, முதல் முறையாக காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யப்பட்டது.  மத்திய நிதிநிலை அறிக்கை குறித்த செயலியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்காக வெளியிடப்பட்டது. அதேபோலவே, 2022-23 மத்திய  நிதிநிலை அறிக்கையும், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பின்பு கைப்பேசி செயலியில் கிடைக்கும்.

 இந்த கைப்பேசி செயலியில், பட்ஜெட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை,  மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை  முழுமையாக பார்வையிடலாம். ஆங்கிலம்,  இந்தி ஆகிய இரு மொழிகளில் இந்த செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும்.

இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 75 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தை சேர்ந்த, நீதிக் கட்சியில் இருந்த, கோவை ஆர்.கே.எஸ்.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார், நேரு பிரதமராக இருந்தபொழுது.  எத்தனையோ  மாற்றங்கள் பட்ஜெட்டுகளில். 

அன்றைக்கு நேரு அவர்கள், ரஷ்யாவில் திட்டங்களின்படி ஐந்தாண்டு திட்டத்தை இந்தியாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். திட்டக்குழு இருந்தது. இன்றைக்கு நிதி ஆயுக் என்று அது மாறிவிட்டது. 

ஒரு நீண்ட தொடர் பயணமாக இந்திய பட்ஜெட்டுடைய பரிணாமங்கள், வளர்ச்சியும், நிறைகளும், குறைகளும் அடங்கிய வண்ணமே உள்ளன. மாநில அதிகாரங்களும் சில நேரங்களில் இந்த பட்ஜெட் தாக்கலின்போது பாதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் 25வது ஆண்டு பட்ஜெட்டை ஒய்.பி.சவான் நிதியமைச்சராக இருந்து தாக்கல் செய்தார். அதேபோல ப.சிதம்பரம் 50வது ஆண்டில் தாக்கல் செய்தார். இப்போது 75 வது ஆண்டில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கின்றார். அன்றைக்கு சண்முகம் செட்டியார் பட்ஜெட் தாக்கல் செய்ய இருந்த போது, பல மாதிரியான நெருக்கடியான சூழ்நிலைகள்‌, இந்தியா முன்னேற வேண்டும், பிரிட்டிஷார் விட்டுச் சென்ற நிலையில், நாட்டில் உள்ள வருவாய்களை கூட்டி, மேலும் வளப்படுத்தி,  நாட்டுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பணிகள் அன்றைக்கு இருந்தது. 

நேரு நம் நாட்டை தொழில் மயமாக்க வேண்டுமென விரும்பி பல்வேறு முனைப்புகளை காட்டிய வகையில், அவருடைய காலம், அதாவது நேரு- சாஸ்திரி காலம் வரை அது ஒரே போக்கில் பட்ஜெட் சென்றது. பிறகு இந்திரா காந்தி பிரதரமாக வந்தபிறகு  ஒரு சில மாற்றங்கள் வந்தன. கல்வி முறைகளில் மாற்றம் வரவேண்டும், அதே போல பசுமைப்புரட்சி என்று சி.சுப்பிரமணியம்  காலத்தில் விவசாயத்தில் கொண்டு வந்து, நம்முடைய தற்சார்பு விவசாயம் அழிந்து, பாரம்பரிய விவசாயம் அழிந்து அதில் பல சிக்கல்களும் வந்தன. அன்றைக்கு இந்தியாவில் உணவுப் பஞ்சம் வேறு இருந்தது. ஒரு கட்டத்தில் அனைவருக்கும் உணவு, உடை, வீடு என்ற கோஷத்தை இந்திராகாந்தி முன்னெடுத்தார். 

ஒரு பக்கத்தில் சோஷலிஸ்டுகளாக  இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன், லோகியோ போன்றவர்களெல்லாம் சோஷலிஸ்ட் முறைகள் நடைமுறைக்கு வரவேண்டும் என்று  குறிப்பிட்டார்கள். அதேபோல கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்முனையில் இருந்து தங்கள் கடமைகளை ஆற்றினர். 

இந்த காலகட்டத்தில் 1967ல் திராவிட இயக்கம் தமிழகத்தில் வலுப்பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது. மாநில சுயாட்சி என்ற குரலும், அண்ணாவின் கொள்கையை தலைவர் கலைஞர் முன் நிறுத்தி குரல் கொடுத்தார். இதற்கும் பட்ஜெட்டுக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கக் கூடாது. நிதி ஆதாரங்களை, அதன் சம்பந்தமான தொகுப்புகளை சரிசமமாகப் மாநிலங்களுக்கு பங்கிட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் இருந்தது. 

அதன்பின் எத்தனையோ மாற்றங்கள், இந்திராகாந்தி மறைவு, ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்து தொழில்நுட்பத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அதற்கான முன்னெடுப்பு திட்டங்கள் நிதி அறிக்கையில் இருந்தன. ராஜீவ் காந்திக்கு பிறகு வி.பி.சிங், அவர் காலத்தில் நிதி அறிக்கையில் பெரிதாக ஒன்றுமில்லை, அதுவும் ஓராண்டு தான் தாக்கல் செய்யப்பட்டது. 

நரசிம்மராவ் காலத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சர். நெருக்கடியான கட்டம். சந்திரசேகர் காலத்தில் நம்மிடமிருந்த தங்கத்தை வெளியே அடகு வைத்தோம். அதை மீட்டோமா, இல்லையா என்று தெரியவில்லை. பிறகு நரசிம்மராவ் காலகட்டத்தில், பொருளாதார ரீதியாக ஒரு முக்கியமான காலகட்டம். அன்றைக்கு புதிய பொருளாதாரக் கொள்கையும்,டங்கல் திட்டத்தின்படி தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற நிலைக்கு இந்தியா வந்தது. அதற்குப்பிறகு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் மாற்றங்கள் எழுந்தன. 

அதற்குப் பிறகு தேவகவுடா, குஜரால் காலங்களில் சிதம்பரம் 50ம் ஆண்டு நிதி அறிக்கையை தாக்கல் செய்தார். மராட்டியத்தை சேர்ந்த ஒய்.பி.சவான் 25வது ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். மூத்த அமைச்சர், காங்கிரஸின் மூத்த தலைவர். அப்போது தேவகவுடா, குஜரால் பிரதமராக  இருந்தபோது ஒரு நிலையற்ற அரசாங்கம் அமைந்தது. கூட்டணி சேர்ந்து அன்றைக்கு மத்தியிலே ஒரு ஆட்சி அமைந்தது, ஒன்றரை இரண்டு ஆண்டுகள் கடந்தன. 

அதன்பிறகு, அந்த ஆட்சிக்குப்பின் வாஜ்பாய் பிரதமர் ஆகி ஐந்து ஆண்டுகள் இருந்தார். யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங் போன்றவர்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது தான், தமிழகத்தில் சேதுக்கால்வாய் திட்டத்தை அறிவித்தார்கள். அப்போதும் நரசிம்மராவினுடைய கொள்கையின் தாக்கங்கள் அடிப்படையில் தான் நிதிநிலை அறிக்கைகள் இருந்தன. 

பிறகு மன்மோகன் சிங் பிரதமர். இந்த காலகட்டத்தில் சிதம்பரம், பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்கள். மன்மோகன் சிங் உடைய ஒரு பொருளாதார பார்வையில், அவருடைய பரிந்துரையில் 2004 லிருந்து 2014 வரை உலகமயமாக்கல் என்ற நிலையில், அன்றைய பட்ஜெட்டுக்குள் அமைந்தன. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இன்றைக்கு நிர்மலா சீதாராமன் உடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தாலும், சில குறைகளும் நிறைகளும் உண்டு. 

இன்றைக்கு 75வது ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். இன்றைக்கு பட்ஜெட் தாள்களாலான ஆவணங்கள் இல்லாமல், அனைத்தும் இணையம் வழியாக தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முன்னால் பல தரப்பினருடன் விவாதங்கள் நடத்தி, ஆலோசனைகள் பெற்று என்னென்ன, எம்மாதிரியான பட்ஜெட் தயாரிக்கலாம், தொழில்துறையில் விவசாயத்தில், கல்வித்துறையில், மருத்துவத்துறையில் என்று, ஒரு மாதம் இரண்டு மாத காலம் பல்வேறு தரப்பு தொழிற்சங்கவாதிகளுடன் ஆலோசனை நடத்தி தாக்கல் செய்வது ஒரு வாடிக்கை. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னால் அந்த பட்ஜெட் ஆவணத்தை மிகவும் ரகசியமாக, யாருக்கும் தெரியாமல், மூடிய பெரிய அச்சகத்திலிருந்து அடித்து, அவர்களை வெளியே விடாமல், தாக்கல் செய்த பின்புதான் அந்தப் பணியாளர்கள் வெளியே வருவார்கள். அதுதான் மரபு. அதுபோல அந்த பணியில் இறுக்கம் இருந்த காரணத்தினால், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இனிப்பு கொடுப்பது வழக்கம். அதாவது அல்வா மாதிரி தயாரித்து நிதி அமைச்சர் முன்னிலையில் அவர்களுக்கு வழங்குவது போல எல்லாம் நடப்பது வழக்கம். இது எப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் பற்றி நான் கடந்த காலத்தில் எழுதிய விரிவான பதிவுகளும் உள்ளன. பட்ஜெட்டும், நம்முடைய அரசியல் அமைப்பு சட்டமும் தான் நம்மை வழிநடத்துகின்றன. அது முக்கியமான விடயமும் கூட. பட்ஜெட்டை பொறுத்தவரை, மத்திய பட்ஜெட் பிரதானமானது. அதைப் பொறுத்து பல்வேறு திட்டங்கள் மாநில வாரியாக பெறக்கூடிய திட்டங்கள் எல்லாம் அதில் குறிப்பிடப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும், சட்டமன்றங்களில் அந்த மாநில நிதி அமைச்சர்கள், நிதி அறிக்கையை தாக்கல் செய்வார்கள். அந்த மாநிலத்தில் இருக்கும் வருவாயைப் பொறுத்து, அங்கே கிடைக்கின்ற வருவாயைப் பொறுத்து, மத்திய தொகுப்பிலிருந்து எவ்வளவு நிதி வருகிறது, இது குறித்தான பல்வேறு குழுக்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறது. அந்தக் குழுக்களுடைய பட்டியல் ஒரு நீண்ட பட்டியலாகும். இப்படியான முறையில் மத்திய அரசினுடைய நிதிநிலை அறிக்கை என்பது ஒரு பிரதானமான விடயமாகும்.

 மத்திய அரசினுடைய நிதி அறிக்கையில், என்ன வருகின்றது என்று எதிர்பார்ப்போடு நிதி நிலை தாக்கல் செய்யும் நிலையில், பல தரப்பினரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். நிதிநிலை அறிக்கை பல காலங்களில் பிப்ரவரி 28ஆம் தேதி மாலைப்பொழுதில் தாக்கல் செய்வது வாடிக்கை. தற்போது சில ஆண்டுகளாக அதை காலையிலேயே தாக்கல் செய்யக் கூடிய நிலையில் மாற்றப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று நோய் பாதிப்பின் காரணமாக, பல்வேறு சூழலில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். கடந்த 2021-22 நிதி அறிக்கை தாக்கல் செய்யும் பொழுது, தொற்று நோய் குறித்தான வகையில், என்ன செய்யலாம், அதை கடந்து முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், 2021-22 இல் காணப்பட்ட ஜிடிபியில் 9.5 புள்ளி நிதி பற்றாக்குறையை அடுத்த 5 ஆண்டுகளில் ஜிடிபி ஐ 4.5 புள்ளியாக கொண்டு வருவதென்பது என்று ஒரு இலக்கை அன்றைக்கு அறிவித்தார். 

15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது. நிதியமைச்சர் எதிர்பார்த்ததை போல நிகழாண்டில் வருவாய் பற்றாக்குறையை ஜிடிபி ஐ 6.8 என்ற வரையறைக்குள் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஜிடிபி வளர்ச்சி பட்ஜெட் இலக்கை விட அதிகமாக இருக்கும் என்று நினைக்கக் கூடிய அளவில், சூழல் அமைந்தது. மத்திய அரசின் வரி வருவாய் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கலாம். நிகழாண்டில் மாதம் ஒத்த வரி 15.4 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. நேரடி வரி, மறைமுக வரிகள் எதிர்பார்த்தபடி அதிகமாக கிடைத்துள்ளன. இன்றைக்கு நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களை விற்பது என்பது நல்ல முடிவல்ல. நீண்டகாலமாக அதை கட்டிக்காத்து, பாதுகாத்து வருகின்ற ஒரு பாரம்பரியமான, ஒரு கம்பீரத்தை இன்றைக்கு நாம் இழந்து வருகின்றோம். ஏர் இந்தியாவை திரும்பவும் டாடாவுக்கு விற்டுவிட்டோம். இப்படியான சில குறைகள் உள்ளன. இது கடந்த வந்த புதிய பொருளாதார சூழ்நிலை, அதாவது மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட காலத்திலிருந்தே இதற்கான சூழல் அமைந்துவிட்டது. அன்றைக்கு நரசிம்மராவ் இந்த நிறுவனங்களை விற்கலாமா என்று வைத்த தீர்மானத்தால் தான், இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் கையிலிருந்து தனியாருக்கு செல்கின்றது. இன்றைக்கு என்ன நிலைமை? நிதிப்பற்றாக்குறை, இது மட்டுமல்ல விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், அதேபோல சமூகம் சார்ந்த மதம், ஜாதி என்ற பிரச்சினைகளில் நம்மிடம் முன்னேற்றத்திற்கான தடைகள் என்று வைத்துக்கொண்டாலும், பல்வேறு இனங்கள் பல்வேறு மொழிகள் கொண்ட இந்தியாவில் இதையும் தாண்டி நிதியும் சமூக அமைப்பும் தன் பணியை செய்து கொண்டிருக்கின்றன. சிக்கல்கள் இருந்தாலும் செய்யவேண்டிய பணிகள் ஏதோ ஒருவகையில் நடந்துகொண்டு சிக்கலைத் தீர்த்து கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் சண்முகம் செட்டியார் விதைத்த விதைதான் இன்றைக்கு தாக்கல் செய்கின்ற நிதி அறிக்கைகளின் முன்னெடுப்புனுடைய முக்கியமான அணுகுமுறையாகும். 

சண்முகம் செட்டியார் என்ற தமிழர் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விடுதலை பெற்று 50 ஆவது ஆண்டு பட்ஜெட்டை ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். இன்றைக்கு நிர்மலா சீதாராமன் செய்கிறார் என்றால் டெல்லி மத்திய சர்க்கார் வரலாற்றில். தமிழகம் என்றும் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. இது மட்டுமல்ல வெவ்வேறு காலகட்டங்களில் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் சி.சுப்பிரமணியம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் எல்லாம் மனதில் கொள்ள வேண்டும். ஓரளவு தமிழ்நாட்டில் இருந்து சென்ற மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் முக்கிய கட்டங்களில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பது தமிழகத்தின் பெருமையாகும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#ksrpost
31-1-2022.

Wednesday, January 26, 2022

With the Chief Minister M K Stalin

இன்று (25-1-2022) காலையில் தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர்/ கழகத்தலைவர் அவர்களை சந்தித்து பேசிய போது….

#ksrpost
25-1-2022.


Sunday, January 16, 2022

#11வது_உலகத்தமிழ்_மாநாடு

#11வது_உலகத்தமிழ்_மாநாடு
——————————————————-
தைத்திங்கள் பிறந்துவிட்டது! 2022ல் மாநாட்டு   பணிகளை துவக்க வேண்டும்  பணிகள் அதிகம். பல்வேறு தரப்பினரின் ஆதரவினைக் கோரக் கூடிய நிலையில்  தற்போது  பணிகள்
செல்கின்றது.

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக சில ஐரோப்பிய நாடுகளுக்கும் அமீரக நாடுகளுக்கு Masilamani Nandanயை அனுப்பி உள்ளோம்.நானும் இது குறித்து சில நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன்.
                              
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், மொழி வல்லுனர்கள், தமிழ் அமைப்பு, சங்கம் என  எவ்வளவு பேராளர்களை அழைப்பது எந்த நாட்டில் எப்போது திட்டமிட்ட படி நடத்துவது போன்ற விடயங்களை குறித்து பேசுவார். பிறகு IATR செயற்குழு வில் இது குறித்து விவாதித்து IATR தலைவர் டான்ஶ்ரீ மாரிமுத்து அறிவிப்பார்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன், 


ஒருங்கிணைப்பாளர்,
11வது உலகத் தமிழ் மாநாடு.

Sunday, January 9, 2022

#ரசிகமணி_டிகேசியின்_கம்பர்_தரும்_ராமாயணம். இன்றைய(9-1-2022) தினமணி கலாரசிகனில்….•••••
சென்ற வாரம் ஒரு நாள் மயிலாப்பூர் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சட்டென "அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாஸனின் நினைவு வந்தது. அவரை சந்தித்துப் பல மாதங்களாகிவிட்டதே, ஒரு எட்டு பார்த்துவிட்டுப் போகலாம் என்று அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தேன்.

வழக்கம்போல, புத்தகப் பொக்கிஷக் குவியலுக்கு நடுவே இளமைக் கோலத்தில் காட்சி தந்தார். நடைப்பயிற்சிக்குத் தயாராக இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு ஒரே மகிழ்ச்சி. 

"இந்தப் புத்தகத்தைப் பாருங்கள்' என்று ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினார். 

அப்போது நானடைந்த பூரிப்பை எழுத்தில் வடிப்பது இயலாது. ரசிகமணியின் ராமாயணம் என்று நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைப் பார்த்ததில்லை எனும்போது படிப்பது எப்படி?  "ரசிகமணி' டி.கே.சி.யின் "கம்பர் தரும் ராமாயணம்' புதுப்பொலிவுடன் "அல்லயன்ஸ்' நிறுவனத்தால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. 1953-இல் "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியாரால், திருக்குற்றாலத்திலிருந்த அவரது பொதிகைமலைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகம், ஏறத்தாழ 67 ஆண்டுகள் கழித்து மறுபதிப்பு கண்டிருக்கிறது.

1953 அக்டோபர் 31-ஆம் தேதி திருக்குற்றாலத்தில் அன்றைய முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி வெளியிட்டபோது, பெரும் வரவேற்பையும், விவாதத்தையும் ஏற்படுத்திய புத்தகம் அது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

கம்ப காதையில் இருக்கும் பத்தாயிரம் பாடல்களில் பல ஆயிரம் பாடல்கள் கம்பருடையவை அல்ல என்று சந்தத்தின் அடிப்படையில் "ரசிகமணி' அகற்ற முற்பட்டபோது எதிர்ப்பு எழத்தானே செய்யும்? "கம்பனில் கைவைக்க டி.கே.சி. யார்? என்று கோபத்தில் கொந்தளித்தார் பாரதிதாசன் என்பார்கள். கம்பனில் ஈர்ப்பு கொண்ட கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் கச்சை கட்டிக்கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

"இதுவும் கடந்து போகும்' என்று பகவான் ரமணர் சொன்னதுபோல, அவையெல்லாம் கடந்து போயின. கம்பராமாயணமும் இருக்கிறது; "'ரசிகமணி' டி.கே.சி.யின் "கம்பர் தரும் ராமாயணமும்' மறுபதிப்புக் கண்டிருக்கிறது.

கம்பராமாயணத்தில் இரண்டு முறை படித்தால் மனனமாகிவிடும் பாடல்கள் எவை என்று யாரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதில்லை. "கம்பர் தரும் ராமாயணம்' புத்தகத்தில் உள்ள பாடல்களைப் படித்தால் போதும். ரசித்துப் படிக்கவும், ரசித்துப் பாடவும் உகந்த பாடல்கள். "ரசிகமணி' அவற்றை ரசித்துப் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தனராம் ராஜாஜியும், ரசிகமணியின் நண்பர்களும்.
இந்தப் புத்தகம் மறுபதிப்புக் கண்டிருப்பதில் மிகப்பெரிய பங்கு வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு உண்டு. எழுத்தாளர் கி.ரா.விடமும், "ரசிகமணி' பெயரன் தீப.நடராஜனிடமும் இருந்த  "கம்பர் தரும் ராமாயணம்' முதல் பதிப்பைக் கேட்டு, வாங்கிக் கொடுத்து மறுபதிப்புக்கு வழிகோலியவர் அவர்தான். அதனால், அவருக்கும் நன்றி. பதிப்பித்திருக்கும் "அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாஸனுக்கும் நன்றி!

Saturday, January 8, 2022

#மார்கழி_திருப்பாவை_அரையர்_சேவை_திருவில்லிபுத்தூர்.

#மார்கழி_திருப்பாவை_அரையர்_சேவை_திருவில்லிபுத்தூர்.
——————————————————-
அரையர் சேவை, திருப்பாவை என்பது மார்கழி மாதங்களில் முக்கியமாக கொண்டாடப்படுகின்ற விஷயமாகும். திருவில்லிபுத்தூர், திருவரங்கம் மற்றும் ஏனைய வைணவ திவ்ய தேசங்களில் அரையர் சேவை முக்கியமானது. மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன். பாவை நோன்பும், திருப்பாவையும்  நினைவில் வரும். ஆண்டாள் நினைவுக்கு வந்தாலே, அவள் பிறந்த திருவில்லிபுத்தூர் நினைவில் வரும்.

அதிகாலை பனி வேலையில் அரைத்தூக்கத்தில் திருப்பாவை கேட்பது என் போன்றோருக்குச் சுகம். முன் நாட்களில்(1960களில்)விடியலில் அகில  இந்திய ரேடியோவில் தூத்துக்குடி வஉசி கல்லூரி முதல்வர் சகித்திய அகாடமி  விருது பெற்ற மறைந்த  அ.சீனிவாசராகவனின் திருப்பாவை அழகு தமிழில் கவிதை வரிகள் உரையை போர்வை போர்த்தி தூக்கத்தில் கேட்க இதமாக இருக்கும்,
மார்கழி அரையர்சேவை விமரிசையாய் நடைபெறும். அதிலும் திருவில்லிபுத்தூர் ,  நம் அரையர், சொல்லவே வேண்டாம்,. அவருடைய வியாக்கியானங்களும், அபிநயங்களும் அரையர் சேவையின் உச்ச வெளிப்
பாடுகள்.

அத்யயனோற்சவ காலம்பகல்பத்து, இராப்பத்து உற்சவங்கள்
ஜனவரி மூன்றாம் (03.01.2022) தேதி தொடங்குகியது. இச் சமயங்களில் அரையர்  அழகிய மணவாளப் பெருமாள்  அரையர் என்று அருளிப்பாடிட்டு மாலை பரிவட்ட மரியாதைகளோடு அன்றைய பாசுரங்களும் வியாக்கியானங்களும் சிறப்பாக நடைபெறும். 

முதலில்  இசையாய், பின்னர் அபிநயமாய்,அதன் பின்னர் வியாக்கியானமாய். ஒவ்வொரு நாளும் வியாக்கியானங்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது நீடிக்கும். வியாக்கியானம் முடிந்தவுடன் தினமும் அரையர் சேவைக்கான சம்பாவனை கேட்க. அவரவர்கள் தங்களின் பெயரைச் சொல்லி சமர்ப்பிப்பார்கள். இது திருவில்லிபுத்தூர் நடைமுறை.

சம்பாவனை முடிந்தவுடன் அன்றைய வியாக்கியான பாசுரத்தைத் தொடங்கி வைக்க கோஷ்டியார் ஏனைய பாசுரங்களை சேவித்து சாற்றுமுறையோடு அரையர் சேவை நிறைவடையும்.

திருவில்லிபுத்தூர் அரையரின் தந்தையார்  அரையர் சேவைக்காக 2013ல் குடியரசுத்தலைவர் விருதினைப் பெற்றவர்.

நாச்சியார் திருமொழி, திருப்பாவை என்ற இவ்விரு பக்தி பனுவல்களும்  வைணவம் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில்  ஒருவரே பெண்ணாவார்,  பெரியாழ்வரின் திருமகள் ஆண்டாள் செய்தவையாகும்.
இவர் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.  

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாகக் காணப்படுகின்றது. இவை இரண்டும் அற்புத தமிழில் பாடப்பட்டது.கோதையின் தமிழ்…..

நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவதாக வைக்கப்பட்டிருப்பது - திருப்பாவை.

திருப்பாவை பாக்கள் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையைச் சேர்ந்தவை - முப்பதும். கரவேல் என்பதன் இலக்கணக்குறிப்பு - எதிர்மறைஏவல் வினைமுற்றுபாவைஎன்பதுவகைகளுள் ஒன்று - சிற்றிலக்கியமாகும்

ஆழி என்பதன் பொருள் - கடல், சக்கரம்.உதைத்த என்பதன் இலக்கணக்குறிப்பு - பெயரெச்சம்
பெய்திடாய்என்பதன்இலக்கணக்குறிப்பு - ஏவல் வினைமுற்று

திருப்பாவை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் விடியலில் பனிப்பொழிய, முற்பனிக்காலத்தில் பாவையிசையோடு கேட்பது தனி சுகம்தான்.

#KSRPost
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
08-01-2022

Wednesday, January 5, 2022

#தமிழகத்தில்_அன்றைய_சோசலிஸ்ட்கள்_PSP_SSP….

#தமிழகத்தில்_அன்றைய_சோசலிஸ்ட்கள்_PSP_SSP….
———————————————————-
ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெ.பி.கிருபளானி ஆகியோர் தொடங்கிய பிரஜா சோசலிஸ்ட் கட்சி, பிஎஸ்பி என்பார்கள். 1951ல் துவங்கப்பட்ட அரசியல் கட்சி, வடபுலத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் சட்டமன்ற உறுப்பினராகளாக இந்த கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த கட்சியின் சின்னம் குடிசை சின்னம். 

அதேபோலவே இந்த கட்சியில் முக்கிய தலைவராக இருந்த ராம்மனோகர் லோகியா, இந்த கட்சியில் இருந்து பிரிந்து 1955 சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி அதாவது எஸ்எஸ்பி என்ற கட்சியை உருவாக்கினார். அதன் சார்பிலும் தமிழகத்தில் சில உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு சென்றார்கள்.  அதனுடைய சின்னம் ஆலமரம். 

 தமிழகத்தில் பழைய சோஷலிஸ்டுகள் எப்படி இருந்தார்கள் என்று பார்த்தால், தமிழகத்தில் சோசலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராகளாக இருந்தவர்கள், தொழிற்சங்கத் தலைவராக இருந்த எ.சுப்பிரமணியம், எம்.சுரேந்திரன், பட்டுக்கோட்டை எ.ஆர்.மாரிமுத்து, பிற்காலத்தில் இவர் காங்கிரசில் இணைந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தார், இவர்களெல்லாம் ஜே.பி தலைமையிலான பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்ந்தவர்கள். அதுமட்டுமல்ல பூதலூர் ஆறுமுகம்சாமி, சட்ட மேலவை உறுப்பினர், என் மீது பாசம் கொண்டவர், அவர் இஸ்கஸ் என்ற அமைப்பில் அவரோடும் என்.டி.சுந்தரவடிவேல், என்.டி.வானமாமலை அவர்களோடு பணியாற்றிய காலங்கள் உண்டு. 

அன்பு வேதாச்சலம் பார்வர்ட் பிளாக் கட்சியில் பங்காற்றிய முன்னாள் தமிழக சட்ட மேலவை உறுப்பினர் தலைவர் கலைஞர் அமைத்த முதல்Teso வின் உறுப்பினர் மதுரை அய்யன் அம்பலம், சோலை இருசன், மதுரை ராமர், ஹெச் எம் எஸ் என்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த ராமையா போன்றவர்களெல்லாம் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தார்கள். 

அது மட்டுமல்ல, மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேந்திரன், எ.ஆர்.மாரிமுத்து பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை சிங்காநல்லூர்  தொகுதியிலிருந்து பி வேலுச்சாமி  தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்லடத்தில் இருந்து  கே.குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சோஷலிஸ்டுகள் அன்றைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி கொடுக்கும்போது,காவேரி பிரச்சனைகளில் சட்ட மன்றத்தில் கடுமையாக வாதிட்டவர் ஈரோடு ஆர்.நல்லசிவன் அவர் மட்டுமல்ல சின்னத்துரை என்ற சட்டமன்ற உறுப்பினரும் இருந்தார்.  இவர்களெல்லாம் லோகியோவுடைய  ஆதரவாளர்களாக சின்னத்துரையும் நல்லசிவமும் எஸ்எஸ்பி கட்சியில் இருந்ததாக எனக்கு நினைவு. பெருந்துறை பாலசுப்ரமணியனும் லோகியோ தலைமையிலான சம்யுக்த சோசியலிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களாக இருந்தார். இவர்களைப் பற்றியெல்லாம் பலருக்கும் இன்று நினைவுக்கு வராது. சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த பலர் பிற்காலத்தில் காங்கிரசில் இணைந்து கொண்டார்கள். 

கடந்த 1967ல் அண்ணா ஆட்சி அமைக்கும்போது மாபெரும் கூட்டணி அமைத்தார். ராஜாஜியும் அந்த கூட்டணியில் இருந்தார். ஒரு முறை கழுதை மேல் 7 கட்சி கூட்டணி என்று ஒரு கார்ட்டூன் வந்தபொழுது அதில் சோஷலிஸ்டு கழுதைகளெல்லாம் ஏற்றிக் கொண்டுள்ளது என்று சொன்னபோது அதற்கு ராஜாஜி சொன்னார் அந்தக் கழுதை மெதுவாக நகர்ந்து சென்னையிலுள்ள கோட்டையை அடைந்துவிடும், கவலைப்பட ஒன்றுமில்லை என்று வேடிக்கையாகச் சொன்னார். 

அன்றைக்கு பிஎஸ்பி,எஸ்எஸ்பி என்று தமிழகத்தைப் பொறுத்தவரை அழைக்காமல் அண்ணா சோசியலிஸ்ட்கள் என்றே அழைத்தார். 1969ல் கிட்டத்தட்ட ஆறு ஏழு உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு சென்றார்கள். பல பிரச்சினைகளை கையில் எடுத்து சட்டமன்றத்தில் அறிவுப்பூர்வமாக பேசியதெல்லாம் மறுக்கமுடியாது. இன்றைய இளைஞர்களுக்கு சோசலிஸ்ட் கட்சி என்ற ஒன்று இருந்ததா, அது என்ன பகதூர் சோசியலிஸ்ட் கட்சியா என்று வேடிக்கையாக கேட்பதுண்டு. எஸ்எஸ்பி,  பிஎஸ்பி ஜேபி நரேந்திரதேவ்வை பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதேபோல ராம் மனோகர் லோகியா அமைத்த எஸ்எஸ்பி பற்றியும் தெரியவில்லை. இதுதான் இன்றைய தமிழக அரசியலின் புரிதலின் தன்மை இங்குள்ளவர்களுக்கு. அரசியல் என்பது கடந்தகால வரலாறு,  கடந்த கால அரசியலில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் புரிந்து கொண்டால் தானே இன்றைக்கு அரசியலில் என்ன என்று தெரிந்துகொள்ள முடியும். ஏதோ இன்றே பிறந்தோம் இன்று தான் தமிழக அரசியல் தோன்றியது போல, இன்றைக்குள்ள சூழல்தான் என்று பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் எப்படி இருக்க முடியும். பழையன கழிதல் தான், அவசியம் இல்லைதான், ஆனால் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொண்டு அதன் தொடர்ச்சி தானே இன்றைய அரசியல் என்ற புரிதல் இல்லாமல், பலரும் இருக்கின்றனர். 

சோஷலிஸ்டுகள்1960 மற்றும் 70 களில் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றினார்கள். தன்னலமற்று மிகவும் எளிமையாக அவர்கள் அன்று கம்யூனிஸ்டுகள் போல வாழ்ந்தார்கள். அவர்கள் பற்றி இன்றைக்குள்ள பலருக்கும் தெரிதல் இல்லை. அதற்கு தான் இந்த பதிவு. வேதனையாக இருக்கின்றது. எவ்வளவு பெரிய தொழிற்சங்கவாதிகள் இந்த சோசியலிஸ்ட்கள். ஏ.சுப்பிரமணியம், ஹெச்.எம்.எஸ் ராமையா போன்ற சோஷலிஸ்ட் தொழிற்சங்க தலைவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தமிழகத்தில் தொழிற்சங்கங்களை வளர்த்தார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எஸ்எஸ்பி, பிஎஸ்பி என்ற கட்சிகள் இருந்தது தெரியுமா? தெரியாது. இதுதான் இன்றைக்கு நிலைமை. கச்சத்தீவை கொடுக்கக்கூடாது, தமிழகத்துக்கு உரிமைகள் பெற வேண்டும், மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் அரசிடம் அதிகாரம் குவிந்திருக்கின்றன என்று அவர்களும் தமிழக சட்டமன்றத்தில் பேசியது உண்டு. ஈரோடு ஆர்.நல்லசிவம் அவர்களை பலமுறை சந்தித்தது உண்டு, என்னோடு அன்பு பாராட்டுவார். 

கேரளத்தில் பட்டம் தானுப்பிள்ளை முதல்வராக இவர்களின் ஆட்சியும் அமைந்தது.

 லோகியோவின் சம்யுக்த சோசியலிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள், கடுமையான வாதாடினார்கள். அதேபோல ஜேபி தலைமையில் இருந்த எஸ்எஸ்பி உறுப்பினர்களும் திட்டமிட்டு சட்டமன்றத்தில் பேச வேண்டியதை பேசி அறிவுபூர்வமாக பல கருத்துக்களை சொன்னது இன்றைக்கும் சட்டமன்ற குறிப்புகளில் உள்ளன. இதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிபோகக்கூடாது என்று வாதாடினார்கள். 356 யை கொண்டு மத்திய அரசு விரும்பியவாறு மாநில அரசுகளை கலக்கக் கூடாது என்று பேசியவர்கள். காட்சிக்கு எளிமையான சட்டமன்ற உறுப்பினராக அன்றைக்கு இருந்தார்கள்.

ஜெயபிரகாஷ் நாராயணன் என்ற ஒருவர் இருந்தார், ஆச்சாரியர் நரேந்திர தேவ் இருந்தார், ஜே.பி.கிருபளானி இருந்தார் ராம் மனோகர் லோகியா அகில இந்தியத் தலைவர் இருந்தார்,  என்று யாருக்காவது தெரியக் கூடிய வாய்ப்பு இருக்கா? இல்லை. இந்த வரலாறை நாம் அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லவில்லை. இது யாருடைய பிழை? இந்தப் பிழைகள் தான் நமக்கு காட்சி பிழைகளாகவும்… இடமாற்று பிழைகளாகவும் அமைந்து, ஒரு புரிதல் இல்லாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். இன்றைக்கு உள்ள அரசியலை மட்டுமல்ல, கடந்த கால அரசியலை அறிந்து கொண்டால்தான் இன்றைக்குள்ள அரசியலுக்கான புரிதல் வரும். கடந்தகால அரசியல் வரலாறு நமக்கு எதற்கென்றால் நீங்கள் அரசியலுக்கு லாக்கியற்வர்கள் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தைரியமாக சொல்வேன். அரசியலில் வருவோர்க்கெல்லாம் வரலாறு தெரியவேண்டும், பொருளாதாரம் தெரியவேண்டும், உலக நாட்டு அரசியல் தெரிய வேண்டும், உலக நாட்டு உறவுகள் தெரிய வேண்டும், அகில இந்திய அரசியலில் என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். இந்த புரிதல் இல்லாமல் அரசியல் வந்து என்ன செய்யப் போகிறீர்கள். எஸ்எஸ்பி, பிஎஸ்பி யின் கொள்கைகளை படியுங்கள். அருமையான கொள்கைகள். திராவிட இயக்கத்திற்கு எப்படி கொள்கைகளை அண்ணா, வகுத்தாரோ, அதேபோல சரிசமமாக அரசியலுக்கு ஏற்றவாறு, நேர்மையோடும் மக்களுக்கு ஏற்றவாறு, மக்கள் நல அரசியல் என்று கட்சியை வளர்த்தார்கள். 

பிஎஸ்பி கட்சித் தலைவர்கள் ஹிந்தி ஆதரவாளர்களாக இல்லை. லோகியா நல்ல மனிதர் ஆனால் இந்தி பற்றாளராக இருந்தார் என்பது எதிர்வினை. அதைச் சொல்லித்தான் ஆகவேண்டும் தமிழகத்தை பொறுத்தவரை.

The Praja Socialist Party, abbreviated as PSP, was was founded when the Socialist Party, led by Jayaprakash Narayan,Rambriksh Benipuri, Acharya Narendra Deva and Basawon Singh (Sinha), merged with the Kisan Mazdoor Praja Party led by J. B. Kripalani (former president of the Indian National Congress and a close associate of Jawaharlal Nehru).

It led the cabinet under Pattom A. Thanu Pillai as chief minister of State of Travancore-Cochin from March 1954 to February 1955. A section led by Rammanohar Lohia broke from the party in 1955,resuming the name "Socialist Party".[citation needed]. It again came to power in the new state of Kerala under Pattom A. Thanu Pillai from February 1960 to September 1962. In 1960, Kripalani left the party and in 1964, Asoka Mehta joined Congress after his expulsion from the party.

Another section of the party, led by the trade union leader George Fernandes, broke off to become the Samyukta Socialist Party in 1969. In 1972, a section merged with Fernandes' party to become the Samyukta Socialist Party/Socialist Party once more, before becoming part of the Janata coalition following the Emergency in 1977.

In September 1952, the Kisan Mazdoor Praja Party merged with the Socialist Party with J. B. Kriplani as the chairman and Asoka Mehta as the general secretary.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
5-1-2022

#ksrposts


Monday, January 3, 2022

சொல்ல முடியாத வலி நிரம்பியவன் சாந்தமாக இருக்கிறான். அவனுடைய காயம்,ரணம் அமைதியாக இயற்க்கைகவனிக்கிறது. காலம் வந்து பதில் அளிக்கும்…

சொல்ல முடியாத வலி நிரம்பியவன் 
சாந்தமாக இருக்கிறான். 
அவனுடைய  காயம்,ரணம் 
அமைதியாக இயற்க்கைகவனிக்கிறது.
காலம் வந்து பதில் அளிக்கும்…

'கார்திரள் மறையாக் கடலினுள் மூழ்காக்/கடையிலா தொளிர் பரஞ்சுடரே/ நீர்த்திரள் சுருட்டி மாறலையின்றி/ நிலைபெறும் செல்வநட் கடலே/ போர்த்திறள் பொருதக் கதுவிடா அரனே/பூவனம் தாங்கிய பொறையே/ சூர்த்திருள் பயக்கும் நோய்த்திரள் துடைத்துத்/துகள் துடைத்து உயிர் தரும் அமுதே'

-#தேம்பாவணி_கருணாம்பரப்பதிகம்Sylvia Nithia Kumari

நரகத்திற்கு பயந்து நான் உன்னை வணங்கினால், என்னை நரகத்தில் எரித்து விடு!
சுவனத்தின் மீது ஆசை கொண்டு
நான் உன்னை வணங்கினால்,
உன் சுவனத்தை பூட்டி விடு!
உன்னை அடைவதற்கான நான் உன்னை வணங்கினால்,
உன்னுடைய நித்திய காதலை எனக்கு தந்து விடு.

#கோணங்கி 


பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம்

இன்று வீரத்திருமகன் வீரபாண்டி கட்டபொம்மனின் பிறந்த நாள்.  நல்லவர்கள் சகுனித்தனத்தால் சூழ்ச்சியால் வீழ்த்தப்படுவது அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் என்றும் வரலாற்றில் நிற்பார்கள்.

Today the Birth anniversary of VEERAPANDIYA KATTABOMMAN , Palayakarrar and chieftain from Panchalankurichi  who refused to accept the rule of British East India Company, and fought against them.

#பாஞ்சாலங்குறிச்சி_வீர_சரிதம்

#ksrposts
3-1-2022


Sunday, January 2, 2022

#*தேன்மதுரத் தமிழோசை……?* #*UNIVERSITY DEPARTMENTS, INSTITUTES, COLLEGES OF TAMIL STUDIES IN INDIA AND OTHER COUNTRIES (other than Tamil Nadu and Pondicherry)-1982

#*தேன்மதுரத் தமிழோசை……?* 

#*UNIVERSITY DEPARTMENTS, INSTITUTES, COLLEGES  OF TAMIL STUDIES IN INDIA AND OTHER COUNTRIES
(other than Tamil Nadu and Pondicherry)-1982 
————————————
"தேன் மதுர தமிழோசையை உலகமெல்லாம் பரவச்செய்தல் வேண்டும்" என்றார் எனக்குப்பிடித்த மகாகவி பாரதியார்.  ஆனால் அவர் கனவை எவ்வளவு தூரம் நிறைவு செய்கின்றோம் என்பதே இப்பதிவின் கரு.

இந்தியா முழுவதும் அல்ல உலகெங்கும் கடந்த 1982ல் இருந்து தமிழ் மொழியை பயிற்றுவிக்கின்ற துறைகள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தன. ஆனால் இன்று படிப்படியாக பல இடங்களில் தமிழ் துறைகள் மூடப்பட்டு வருகின்றன.  பல பல்கலைக்கழகங்களில் 1982ல் இருந்த தமிழ் துறைகள் இன்றைக்கு இல்லாமல் போனது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.
அவை;

UNIVERSITY DEPARTMENTS/INSTITUTES OF TAMIL STUDIES
A. IN INDIA (other than Tamil Nadu and Pondicherry)-1982
••••
I. ANDHRA PRADESH
1. Osmani UNIVERSITY, Hyderabad. M.A, and Ph.D. in Tamil.

2.DRAVIDAN UNIVERSITY
KUPPAM

3.SRI VENKATESWARA UNIVERSITY, Tirupathi.
M.A., M.Phil, and Ph.D. in Tamil

4.SR KRISHNADEVARAYA UNIVERSITY, Ananthapur.
Certificate in Tamil

5.GOVERNMENT ARTS & SCIENCE COLLEGE, Chittoor.
A language in Degree Course

6.GOVT, JUNIOR COLLEGE, Nagari & Puttur.
A language in Intermediate Course.

II. KARNATAKA
1. KARNATAKA UNIVERSITY, Dharwar.
A Language for M.A., Kannada and Linguistic Students

2 CENTRAL INSTITUTE OF INDIAN LANGUAGES, Mysore.
Tamil Language Courses and preparation of Tamil Text Books.

3. URIGAM (Kolar Gold Field)
A Language for Under-Graduate Students.

4. Bangalore:
NIJALINGAPPA COLLEGE, CHRISTIAN COLLEGE,
VIVEKANANDA COLLEGE, ST. JOSEPH'S COLLEGE,
MAHARANI'S COLLEGE, GOVT. R.C, COLLEGE OF COMMERCE.

III. KERALA
1. UNIVERSITY OF KERALA, Kariavattom, Trivandrum.
M.A., M.Phill, Ph.D., in Tamil,

2. GOVERNMENT ARTS COLLEGE, Chittur.
M.A., in Tamil
Ph.D. in the UNIVERSITY OF CALICUT in collaboration with the P.S.G. ARTS COLLEGE, Coimbatore.

3. VICTORIA GOVERNMENT COLLEGE, Palghat.
P.U.C, and B.A.

4. Trivandrum:
GOVERNMENT COLLEGE,
UNIVERSITY COLLEGE,
MAR IVONIUS COLLEGE, and WOMEN'S COLLEGE.

IV. NEW DELHI
1. DELHI UNIVERSITY
Second Language in the Bachelor's Degree.
M.Litt., Ph.D.

2. DHAYAL SINGH COLLEGE
Tamil is taught in the evening college.

3. LADY SRI RAM COLLEGE
Second Language in the Bachelor's Degree

4. MIRANDA COLLEGE
Opportunities are only for Ladies. Tamil Music is also taught.

5. SRI VENKATESWARA COLLEGE
Second Language in the Bachelor's Degree.

6. TAMIL NADU EDUCATIONAL FOUNDATION (Thamizhnattuk Kalvik Kazhakam)
For Children.

V. PUNJAB
1. PUNJAB UNIVERSITY, Chandigarh.
In the Department of South Indian Languages Tamil is taught
Certificate, Diploma Courses.
Second Language for the Bachelor's Degree.

2. PUNJABI UNIVERSITY, Patiala.
Tamil is taught for the M.A. Linguistics Students as a Language.

VI. UTTAR PRADESH
1. AGRA UNIVERSITY, Agra.
Tamil is taught in the Khanhaya Munshi
Institute of Hindi Studies and Linguistics
Certificate and Diploma Courses.
A Language for M.A. Hindi and Linguistics Degree.

2. ALIGARH MUSLIM UNIVERSITY, Aligarh.
Tamil is taught in the Department of Hindi
Certificate and Diploma Courses
Language in B.A. Degree Course

3. ALLAHABAD UNIVERSITY, Allahabad.
Tamil is taught in the Department of Hindi
Certificate and Diploma Courses
A Language for Hindi M.A. Students

4. BANARAS HINDU UNIVERSITY, Varnasi.
Tamil is taught in the Department of Indian Language
A Language for the Graduates

5. LUCKNOW UNIVERSITY, Lucknow.
Tamil is taught in the Hindi Department.
Certificate and Diploma Courses
Language for B.A, and M.A. Courses

Other parts of Uttar Pradesh:
School of South Indian Languages
There are ten schools throughout this State where Tamil is taught for four years duration.
First year - Certificate Course
Second year - Diploma Course
Third and Fourth year Advanced Course.

VII WEST BENGAL
1. CALCUTTA UNIVERSITY, Calcutta.
A language for the under Graduate Students.

2. VISWA BHARATHI UNIVERSITY, Santiniketan.
Tamil is taught in the Hindi Department
Certificate and Diploma Courses in Tamil.

B. OTHER COUNTRIES 

CANADA
ARFITSH COLUMBIA UNIVERSITY, Ventouver
CALGARY UNIVERSITY, Calgary.

CZECHOSLOVAKIA
CHARLES UNIVERSITY, Prague.

FINLAND
HELSINKI UNIVERSITY, Helsinki,

FRANCE
PARIS UNIVERSITY, College De France

HOLLAND
KERN INSTITUTE - UNIVERSITY OF LEIDON:
STATE UNIVERSITY OF UTRECHT, Utrecht.

JAPAN
INSTITUTE OF ASIA - AFRICAN LANGUAGES AND CULTURE, Tokyo.

MALAYSIA
UNIVERSITY OF MALAYA, Kuala Lumpar.
POLAND
WARSAW UNIVERSITY, Warsaw,

SENEGAL
DAKAR ONIVERSITY, Dakar.

SRI LANKA
UNIVERSITIES of Colombo, Jaffna,
Kelaniya, Nugageda and Peradeniya

SWEDEN
INSTITUTE OF INDOLOGY, STOCKHOLM UNIVERSITY
UPPSALA UNIVERSITY.

U.K
SCHOOL OF ORIENTAL AND AFRICAN STUDIES, London.
EDINBURGH UNIVERSITY.

U. S. A
CALIFORNIA UNIVERSITY
CHICAGO UNIVERSITY
CORNELL UNIVERSITY
HAWAII UNIVERSITY
PENNSYLVANIA UNIVERSITY
TEXAS UNIVERSITY
WASHINGTON UNIVERSITY

U.S.S.R.
LENINGRAD UNIVERSITY
UNIVERSITY OF MOSCOW

WEST GERMANY
HAMBURG UNIVERSITY
HEIDELBERG UNIVERSITY
KOELN UNIVERSITY.

CHINA.
--

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
2-1-2022
#ksrposts

Saturday, January 1, 2022

#புத்தாண்டு_2022ம்_செய்யவேண்டிய_பணிகளும்_தீர்மானங்களும்.

#புத்தாண்டு_2022ம்_செய்யவேண்டிய_பணிகளும்_தீர்மானங்களும். 
——————————————————-
My experiments with silence…….                             எங்கோ தென் திசையில், வானம் பார்த்த கந்தக பூமியில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, இன்றைக்கு 50 ஆண்டு மேலாக அரசியல் வாழ்க்கையை கடந்து,  எந்தவித அங்கீகாரமும் இல்லாமல், பணிகள் மட்டுமே தொடர்ந்து, எந்தவிதமான வசதியும் இல்லாமல் பயணிக்கின்ற வாய்ப்பை இயற்கை அடியேனுக்கு வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தியாகும். 

வழக்கறிஞர், அரசியலாளர், Arbitrator (மத்தியஸ்தர்), கிரா வின் கதைசொல்லியை ஏறத்தாழ இருபது ஆண்டுகள் நடத்தியது. பொதுநல வழக்குகளை விவசாய போராட்ட காலத்திலிருந்து நதிநீர் பிரச்சனைகளிலும் உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றங்களில், இன்று வரை 45க்கும் மேலான பொதுநல வழக்குகளை 1977 காலகட்டங்களில் இருந்து இன்று வரை தாக்கல் செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ள திருப்தி எனக்கு இருக்கிறது.  தேர்தல் களத்தில் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் சிலரால் தகுதியே தடை என தடைகளும், தடங்கல்களும்,  முதுகில் குத்துவது நடந்தாலும் இன்றும் ஜீவிக்கின்றேன். இயற்கை எனக்கு வழிகாட்டுகின்றது. 
அந்த வகையில் 50 ஆண்டுகளைக் கடந்து வந்த இந்த  அரசியல் பயணத்தில் தொடர்ச்சியாக பணிகள் இருந்துகொண்டே இருக்கின்றது, தனிமனிதனாக இயங்கிக் கொண்டு இருக்கின்றேன். செய்யவேண்டிய பணிகள் காத்திருக்கின்றன. 

அவை;

1)11வது உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டிய பணிகள் உள்ளன. 

2)ஏற்கனவே குறிப்பிட்டவாறு 45 பொதுநல வழக்குகளில்;
இன்றைக்கு நிலுவையிலுள்ள 
1. மேற்கு தொடர்ச்சி மலை கிழக்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு. 
2. தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தான வழக்கு. 
3. தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளை குறித்தான வழக்கு. 
4. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஒலி எழுப்பான்கள் பிரச்சனையும், கார்பன் வாயு வாகனங்களால் வெளிவருவதும் குறித்த வழக்கு, 
இப்படி மனித உரிமை ஆணையத்திலும் சில வழக்குகள் உள்ளன. 

இது மட்டுமல்ல, நூல் பணிகள் இருக்கின்றன. அவை 

1. கரிசல் காட்டின் கவிதை சோலை பாரதி (விலையற்ற-800 பக்கங்கள் ) நூல்களை அச்சடித்து வந்துவிட்டது. முறையாகஅனைவருக்கும்,நூலகங
களுக்கும், கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
 2. கி.ரா நினைவுத் தொகுப்பு ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. (400 கட்டுரைகள் பெறப்பட்டு அதில் 160  கட்டுரைகள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.)
 3. தமிழகத்தில் 1966 இருந்து 1992 வரை நடந்த விவசாய சங்க போராட்ட வரலாறை விரிவாக இரண்டு தொகுதிகள், ஏறத்தாழ 700 பக்கங்கள் வருகிறது. 
4. தமிழகத்தில் உள்ள 70  நதிநீர் பிரச்சினைகளை விரிவாக 800 பக்கங்களுக்குகான நூல் தயாராகி கொண்டுள்ளது. 
5. தினமணி கட்டுரைகள் தொகுப்பு. 1978 முதல் நான் தினமணியில், தமிழ் இந்து, சுதேசமித்திரன், ஆங்கில பத்திரிக்கைகளில் எழுதிய தேர்வு செய்யப்பட்ட 600 மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன, 1000 பக்கங்கள் மேல் கொண்ட நூலாக தயாராகிக் கொண்டிருக்கின்றது. 
6. தமிழக உரிமைகள் மற்றும் பிரச்சனைகள் தொகுப்பு, அதுவும் 500 பக்கங்கள் வரை வருகின்றது. அறியப்படாத உரிமைகளும், இன்றைக்கும் பேசப்படாத பிரச்சனைகளும் இதில் உள்ளன. பார்த்தாலே சிலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம். அதற்கு உதாரணம், தமிழகத்தில் சென்னைக்கு வடக்கே சோழாபுரம், உளுந்தூர்பேட்டை, சிவகங்கை மாவட்ட செட்டிநாடு, கோவில்பட்டி, கயத்தார் போன்ற இடங்களிலுள்ள விமானநிலையங்கள் 70 ஆண்டுகளாகியும் பயன்படுத்தாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. இப்படிப்பட்ட அறியப்படாத செய்திகள், தமிழக உரிமைகள், பிரச்சினைகளின் ஆய்வு கட்டுரைகளாக வர இருக்கின்றன. 
7.  நிமிர வைக்கும் நெல்லை, ஐந்தாம் ஐந்தாம் பதிப்பாக வருகின்றது. இரண்டு தொகுதிகளாக வருகின்றது. இது  அனைவராலும் வரவேற்கப்பட்ட நூல். 2004ல் முதன் முதலாக வெளியிடப்பட்டது. 
8. கனவாகிப் போன கச்சத்தீவு இரண்டாவது பதிப்பாக வர இருக்கின்றது. 
9. தமிழக மேலவை இதுவும் இரண்டாம் பதிப்பாக வரவிருக்கிறது. 
10.தூக்குக்கு தூக்கு இரண்டாம் பதிப்பாக வரவிருக்கிறது. 
11. கி.ரா அவர்கள் எனக்கு எழுதிய கையெழுத்துப் பிரதிகளை தொகுத்தும், அவர் எழுதிய கடிதங்களும் சிறப்பு வெளியீடாக அவர் நூற்றாண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 
12. மாநில சுயாட்சி குறித்தான என்னுடைய கருத்துக்கள் அடங்கிய இதுவரை பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் தொகுப்பான நூல். 
13. கடந்த 1975 முதல் உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு ஆணையங்களில் தொடுத்த பொதுநல வழக்கு சம்பந்தமான மனுக்களும் உத்தரவுகளும் கூடிய ஆங்கில தொகுப்பு, 
இவை மட்டுமல்ல என்னுடைய ஐம்பதாண்டுகளுக்கு மேலாக, அரசியலில் நான் பார்த்த நிகழ்வுகள், நான் சந்தித்தவர்கள், நான் கடந்து வந்த பாதை குறித்தான ஒரு தொகுப்பு, மூன்று தொகுப்புகளாக ‘நெஞ்சில் பதிந்த சுவடுகள்’என்று எழுதிக் கொண்டு வருகின்றேன். அடுத்தாண்டு அது நிறைவுக்கு வரும். இப்படி பல நூல்கள் வெளியிட வேண்டிய நிலையில் நூல்கள் வெளியீட்டு பணிகளும் அதை உருவாக்கும் பணிகளும் அதை ஆக்கும் பணிகளும் இந்த ஆண்டு முக்கியமான ஆண்டாக கருதி பணிகள் செய்ய வேண்டும். 

அதுமட்டுமல்ல அடுத்து தனிப்பட்ட வகையில அரசியலாளர் என்ற நிலையில்  பல்வேறு ஆதாயம் கருதாத களப்பணிகள், அடுத்து ஈழத்தமிழர் பிரதிநிதிகள் இந்தியா வருவதையொட்டி ஒரு விரிவான சந்திப்பு ஏற்படுத்தி, மீனவர் பிரச்சினைக்கும், ஈழத்தமிழர் பிரச்சனைக்கும்பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டிய பணி. 

இதை தாண்டி  எனக்கு தனிப்பட்ட வகையில் வழக்கறிஞர் ரீதியாக ஆர்பிட்டேடராக இருக்கும் வழக்குகளை விசாரிக்க வெளிமாநில பயணத் திட்டங்கள், 
என்னுடைய கிராமத்தில் விவசாய பணிகளை சற்று சீர்திருத்தம் செய்ய வேண்டியது, 

இவை மட்டுமல்ல இதுவரை செல்லாத நாடுகளுக்கும், இந்தியாவிலுள்ள செல்லாத  பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை. 

இதுவரை சேகரித்த 25000 வரை உள்ள நூல்களில் படித்து மீதி உள்ள நூல்கள்  சிலவற்றை பிரித்து சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் வழங்கக்கூடிய பணிகளும் உள்ளன. 

இப்படியாகத் இந்தாண்டு முழுமையாக பல்வேறு பணிகள் உள்ள ஆண்டாக இருக்கும். 

கிராமத்தில் பிறந்தோம், தவழ்ந்தோம், வளர்ந்தோம், கல்வியை கற்றோம். கடந்த 1971முதல்காமராஜர், இந்திராகாந்தி காலம் முதல் பிரபாகரன் கலைஞர் என பல தலைவர்கள் வரை அரசியல் களத்தில் பெயர் சொல்லி அழைக்க கூடிய அளவில் இருந்துவிட்டோம் இதைவிட வேறு என்ன வேண்டும் என நிம்மதியோடு இருக்கின்ற எஞ்சிய காலத்தில் நமக்கான பணிகளும், கடமைகளையும் செய்வோம். எந்த அரசியல் ஆதாய அங்கீகாரத்துக்கோ எதிர்பார்க்காமல், வந்தால் வரட்டும், வரவில்லை என்றால் அதைப்பற்றி ஒன்றுமில்லை. ஒரு காலத்தில் இதை பற்றிய அக்கறையும் ஆர்வமும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. படிப்படியாக வயது மட்டுமல்ல ஒரு முதிர்ச்சி, இதன் காரணமாக இதெல்லாம் பெரிதாக தற்பொது தெரியவில்லை. நம்ம பணியை நாம் செய்து கொண்டிருப்போம். அடுத்தவர்கள் எவரையும் குறை பார்க்காது, குறை ஒன்றும் இல்லை என்று, நிமிர்ந்து நடந்து நமக்கான கடப்பாடுகளை கவனிப்போம் என்று உறுதி கொண்டுள்ளேன். அதறக்கு புத்தாண்டு 2022 இதற்கு இடம் கொடுக்க வேண்டும். இயற்கையை அதற்கான வழிவகை செய்யும்  என்று இயற்கையை வேண்டுகிறேன். 

யாரும் எந்த சூழ்நிலையிலும் துவண்டு விடாதீர்கள்...

காலம் வரும், காட்சிகள் மாறும்... உங்கள் கனவு, லட்சியம் பழிக்கும்... நினைத்தது நிறைவேறும்...


(படம்நான் பிறந்து வளர்ந்த கிராமத்து வீடு, என் வீட்டின் தலைவாசல், என் வீட்டின் முற்றம், இதில்தான் பிறந்து, தவழ்ந்து 1950 காலக்கட்டங்களில் விளையாண்டு, தவழ்ந்து எனக்கு சூரியனையும் சந்திரனையும் வானத்தையும், வெளி உலகத்தையும் காட்டிய இந்த இடம்தான், இந்த முற்றம் தான் எனக்கு சிறு பிரயத்தில் எல்லாமே……)
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
1-1-2022


என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு  The beauty of village.  The beauty Of nature  Love of everything  village #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost  20-6...