Showing posts with label Land_Acquisition_Bill.. Show all posts
Showing posts with label Land_Acquisition_Bill.. Show all posts

Monday, April 6, 2015

நிலம் கையகப்படுத்தும் மசோதாவால் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார் - வெங்கையா நாயுடு. பாவப்பட்ட மனிதனாக ஏழை விவசாயிகள் -6 . Land Bill, ready to face any consequences -Venkaiah Naidu. -6







நிலம் கையகப்படுத்தும்  அவசரச் சட்டத்தை முதலில் மத்திய அரசு பிறப்பித்த பொழுது, என்ன இவ்வளவு அவசரம் நாடாளுமன்றத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்கலாமே என்று கண்டனங்கள் தெரிவித்தும், மோடி அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது.

இதுகுறித்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் திடீரென அ.தி.மு.க ஆதரவோடு நிறைவேறியது. மாநிலங்கள் அவையில் இதுவரை சட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே சட்டமாக்காத நிலையில், முதலில் பிறப்பித்த அவசரச் சட்டத்தினுடைய காலவரை முடிவடைந்தது. அதன்பின்னும், வேண்டுமென்றே பல கண்டனங்களுக்கிடையே விவசாயிகளைக் காவு கொடுக்கும் வகையில் மறுபடியும் இரண்டாவது முறையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு கேலிக்குத்தாகிவிட்டது.

ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியா ஒரு துக்ளக் அணுகுமுறை என்று அனைவரும் விம்ர்சிக்கக் கூடிய வகையில் மோடி அரசு நடந்துகொண்டது. தற்போது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு எந்த விளைவுகள் வந்தாலும் நில கையகப்படுத்தும் மசோதாவைச் சட்டமாக்கிவிடுவோம் என்ற பேச்சு அதிர்ச்சியலையை தந்துள்ளது.

வெளிநாட்டு கார்ப்ரேட்  கம்பெனிகளுக்கு கூஜா தூக்க மோடி அரசு தயாராகி விட்டதின் விளைவுதான் வெங்கையா நாயுடுவின் இந்தப் பேச்சு.

நாடு விடுதலையடைந்த பின்பு, இதுபோல  நான்குமுறை  அவசரச் சட்டங்கள் மீண்டும் இரண்டாவது தடவையாகப்  பிறப்பிக்கப்பட்டுள்ளது.


      

1956ல் பண்டிதர் நேரு காலத்தில்  திருவாங்கூர் - கொச்சின் மாநிலத்தின் நிதிநிலை ஒதுக்கீடு குறித்தான மசோதா மற்றும்  அவசரப்பணிகள் குறித்தும் முதல் தடவையாக அவசரச் சட்டம் இரண்டாவதுமுறையாகப் பிறப்பிக்கப்பட்டது.

1987ல் இராஜீவ் காந்தி காலத்தில் தடா மற்றும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை கடத்தல் தடுப்புச் சட்டம் குறித்தும் அவசர மசோதா இரண்டாவது தடவை பிறப்பிக்கப்பட்டது.

அதைப்போலவே 1994ல் நரசிம்மராவ் காலத்தில்  மணிப்பூர் -பஞ்சாப்- புது டெல்லி மாநகராட்சி குறித்து அவசரச்சட்டம் இரண்டாம் தடவையாகப் பிறப்பிக்கப்பட்டது.

நான்காவது முறையாக  தற்போது மோடி அரசு,  நில கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற இரண்டாம் தடவை  திரும்பவும் அவசரச் சட்டத்தை  பிறப்பித்துள்ளது.

விவசாய நாடான இந்தியாவில் 60சதவித வேலை வாய்ப்பும், 60சதவித நிலப்பரப்பும் வேளாண்மையை நம்பி  இருந்தாலும் ,  அரசின் மெத்தனத்தால் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வெறும் 18சதவிகிதம்.

தவிர விவசாயிகளிடம் ஏற்கனவே கையகப் படுத்திய நிலங்களையும் அரசுகள் இன்னமும் பயன்படுத்தாமல் வைத்துள்ளது .
கோல் இந்தியா நிறுவனம் வசம் உள்ள 2லட்சம்  ஹெக்டேர் நிலத்தில் வெறும் 50,000ஹெக்டேர் நிலப்பரப்பைத் தான் இந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. எஞ்சிய நிலம் எந்தப் பயன்பாடும் இல்லாமல் வெறுமனே உள்ளது.

2005ம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற சட்டத்தின் மூலமாக 60,374ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 576-சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டாலும், அதில் வெறும் 37சதவிகித நிலப்பரப்பு கூட முழுமையாக பயன்படுத்தாத நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள 63சதவிகித விவசாய நிலங்கள் பயன்படுத்தப் படாமலே உள்ளது.

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 32,87,260 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் நிலப்பகுதி மட்டும் 29,73,190  (மலைகள், நதிகள், நீர்நிலை பரப்புகள் நீங்கலாக) சதுர கிலோமீட்டர் ஆகும். வனப்பகுதி மட்டும்  6,77,598 சதுர கிலோமீட்டர், மீதமான  விவசாய நிலப்பகுதி வெறும் 1,79,900 சதுர கிலோமீட்டர் மட்டுமே.

இந்நிலையில் மேலும் விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தாமல், ஏற்கனவே கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலங்களையே பயன்படுத்தலாமே,

விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு தொழில் வளர்ச்சி என்று பேசுவதும், விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் என்று திமிர்ப்பேச்சு பேசுவதும் இந்தியா போன்ற விவசாய நாட்டிற்கு பொறுத்தமான  அணுகுமுறையாக இருக்காது.

இஸ்ரேல் நாடு ஒருகாலத்தில் உணவு தானியங்களுக்கு வெளிநாடுகளிடம் கையேந்தி பெரும் சோதனைகளைச் சந்தித்தது. இப்போது விவசாயத்தை முழுமையாக அந்நாடு விரிவு படுத்தியதால்  உணவு ஏற்றுமதியில் உலக அளவில்  சிறந்துவிளங்கி, பொருளாதார வளர்ச்சியையும் எட்டியுள்ளது

திரைப்படங்கள்  தொடங்கும் முன்பு காட்டப்படும் செய்திப் படங்கள் போல இந்தப் புள்ளிவிபரங்களை எல்லாம்  படிக்க மக்களுக்குப் பொறுமையில்லை என்றாலும், அவசியம் இதுபற்றி சிந்திக்கவேண்டிய நிலையில் நாமெல்லாம் இருருக்கின்றோம்.

கையகப் படுத்திய நிலங்களே பயன்படுத்தப் படாமல் இருக்க, நில ஆர்ஜிதச் சட்டத்தை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் கொண்டு வந்தே தீருவோம் என்று  ஏன் இவ்வளவு அக்கறையும் அலம்பலும் மோடி கூட்டாளிகளுக்கு.

மக்களிடமிருந்து  எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று  வெங்கையா நாயுடு போன்றவர்கள்  கூச்சலிடுவது  மக்கள் நலனுக்காகவா?

உண்மைகள் உறங்குகின்றன, நியாயங்கள் நிராயுதபாணியாக உள்ளன. பாவப்பட்ட மனிதனாக ஏழை விவசாயிகள்.....


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-04-2015.


Wednesday, March 25, 2015

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் . -- Land Acquisition.(4)







நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வரும் 5ம் தேதியோடு காலக்கெடு முடிவடைகிறது. அதேவேளையில்  அவசரச் சட்டமும் காலாவதி ஆகின்றது. இப்படியான சூழ்நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.

கடந்த டிசம்பர் 31ம் தேதி நில கையக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. மக்களவையில் புதிய மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது. நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 20ம் தேதிமுதல் துவங்குகின்றது. மாநிலங்கள் அவையில் இம்மசோதா நிறைவேறுமா என கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில், அனைத்து எதிர்கட்சிகளும் இந்தச் சட்டம் கூடாது என்று குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளது.

கடந்த இரண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகளிலும் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாக்களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. மோடி அரசு அவ்வாறு திருத்தங்களைச் செய்யாமல் விவசாயிகள்,  பழங்குடியினர், மீனவர்கள் நலன்களை புறக்கணித்துவிட்டு, புணரமைப்பு , மறுகுடியமர்த்தல், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை எனச்  தெளிவான பரிகாரங்கள் எதுவுமில்லை.

பொதுநோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் என்பதற்கு தெளிவான வரையறைகளோ விபரங்களோ சரியாக இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்தும் போது 80சதவிகிதம் நில உரிமையாளர் ஒப்புதலும், பொது மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது 70சதவிகித நில உரிமையாளர் ஒப்புதல் வேண்டுமென இருந்ததை 50சதவிகிதம் இருந்தாலே போதும் என இப்பொழுது மோடி அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு, வீட்டு வசதி, தொழில்வளர்ச்சி, உள்கட்டமைப்பு என்ற ஐந்து துறைகளிலும் தனியார் கூட்டு நிறுவவங்களோடு செயல்படும்போது விவசாயிகள் தங்கள் ஒப்புதல்களை அளிக்கத் தேவையில்லை என்று இப்பொழுது மோடி கொண்டுவந்துள்ள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது நோக்கமென்று சொல்லப்படுகின்ற திட்டங்களுக்கு எந்த மதிப்பீடும், சமூக அக்கறையோ, தாக்கமோ மதிப்பிடத் தேவையில்லை என்று, அடாவடியாக நிலங்களை அபகரித்துக்கொள்ளும் வகையில் இப்போதைய மசோதா அமைந்துள்ளது.

வளமான விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று முந்தைய சட்டத்திலிருந்த பிரிவை மாற்றி, எதைப்பற்றியும் சிந்திக்காமல் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றநிலையில் மசோதா அமைந்துள்ளது. இந்தவகையில் எளிதாக மீத்தேனுக்கும், நியூட்ரினோவுக்கும் நிலங்களை கையகப்படுத்த முடியும்.

முந்தைய சட்டத்தில், நிறுவனங்கள் கம்பெனி திட்டம் 3வது பிரிவின் கீழ்
பதிவு செய்திருக்க வேண்டும். இப்பொழுது அதை அறவே நீக்கி தனியார் நிறுவனங்கள், பங்குதாரர்கள், கார்ப்ரேஷன்கள் என யார்வேண்டுமானாலும் பெரிய முதலாளிகளுக்கு உதவியாக நிலத்தை கையகப்படுத்தும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

நிலம் இழந்தோர்கள் இழப்பீடு வழங்குவதற்கு தவறும் பட்சத்தில் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படலாம். இம்மாதிரி பிரச்சனைகளுக்கு ஐந்தாண்டுகள் காலவரையில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்பதை மாற்றி, நீதிமன்றம் சென்று நிவாரணம் கேட்டோ, இடைக்கால தடைகேட்டோ செல்ல முடியாதபடி நீதியே மறுக்கப்பட்டுள்ளது.

இப்படியான கொடிய முறையில் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த மசோதா அமைந்திருக்கிறது என்று பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.


The UPA's 2013 Act made it mandatory to obtain the consent of 70-80% of farmers in case land was acquired for private and PPP projects.

The NDA's amendments to the UPA's land law severely compromise farmer rights and violate the Article 14th of Our Constitution of India.

The Fight for Land will go on....

ஆங்கிலேயர்கள் நில கையகப்படுத்தும் சட்டம் 1894ல் பிறப்பித்து நாட்டின் விடுதலைக்கு முன்னால் ஜமீன்தார்களுக்கும், ஜாகிர்தார்களுக்கும் நிலத்தை அள்ளி வழங்கினார்கள். அதே நிலைமையாக இப்போதைய மோடிதலைமையில் உள்ள  மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்கத்தான் இந்தச் சட்டம்.



தேர்தல் நேரத்தில் மோடி பேசியதென்ன?
இப்போது செய்துகொண்டிருப்பதென்ன?

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
25-03-2015.

Tuesday, March 17, 2015

விவசாயிகளை வஞ்சிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் - உரிமைப் போருக்குத் தயாராவோம் - Land Acquisition and Agriculturist. (3)








வரலாற்று காலத்திலிருந்து மண்ணாசை அரசாளும்  யாரையும் விட்டதில்லை. இந்தியாவின் ஜனநாயக ஆட்சியிலும் அப்பாவி விவசாயிகளின் தலையில் கைவைத்து அவர்களுடைய நிலங்களைக் கபளீகரம் செய்து, பெரிய தொழில் அதிபர்களுக்கு வழங்கவும்,  சிறப்புப் பொருளாதார  மண்டலங்கள் அமைக்கவும் என பல்வேறு சூழல்களில் கோமணம் கட்டிய விவசாயிகளின் நிலஉடமைகளை பிடுங்கிக் கொள்வதுதான் இன்றைய அரசாங்கத்தின் தலையாய பணியாக இருக்கின்றது. மக்கள் நல அரசு என்பதை மக்களை மதியாத அரசு என்றுதான் இன்றைக்கு அழைக்கவேண்டி இருக்கின்றது.

புதிய பொருளாதாரக் கொள்கை என்று 1991ல் ஒரு பிசாசு  உள்நுழைய  இந்தியாவின் கதவுகளை எப்போது திறந்துவிட்டோமோ அன்றையிலிருந்து வெளிநாட்டுக்காரர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நமது சட்டங்களும், நிதிநிலை அறிக்கைகளும் அமைகின்றன.  இதில் ஓர் அங்கம் தான் விவசாயிகளின் நிலங்களைப் அபகரிப்பது .  இது ஒரு அப்பட்டமான பகல்கொள்ளை.

எப்படி சுந்தந்திரத்துக்கு முன், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம் இந்தியாவில் காலூன்றி வெள்ளையர் வைத்ததுதான் சட்டம் என்று இருந்தததோ அதே நிலைமைக்கு இந்தியா இப்போது போய்க்கொண்டு இருக்கின்றது. நம்முடைய இறையாண்மை உலகவங்கியின் கைக்குள் போய்விட்டது. அதன் ஆளுமைதான் இந்தியாவின் ஆட்சிபீடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது.

நிலம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. நிலமில்லாமல் எந்த ஜீவனும் கிடையாது. மானிடங்கள் வருவார்கள் செல்வார்கள். இந்த நிலம் காலம் தாண்டியும் நிலைத்திருக்கும்.

 கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்றோர் இந்தியாவைக் கண்டுபிடிக்க கடல்மார்க்கமாக வர முயற்சித்ததன்  நோக்கமென்ன? வரலாற்று ரீதியாக எல்லா செல்வங்களும் சூழ்ந்த பூமியாக இந்த மண் ஒருகாலத்தில் இருந்தது. ஏன் ஆங்கிலேயர்கள் , பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள்,  போர்த்துகீசியர்கள் என சகலரும் இந்தியாவை நோக்கி வந்து கோவா, கள்ளிக்கோட்டை, மாஹி,  தூத்துக்குடி, காரைக்கால், பரங்கிப்பேட்டை- சதுரங்கப்பட்டிணம், புதுவை, சென்னை, பழவேற்காடு, ஏனாம்,சந்திரநாகூர், கொல்கத்தா, என்ற பல கேந்திர நகரங்களில்  கால்பதித்தார்கள். ஒவ்வொரு நாட்டவருக்கும் இந்தியாவின் மீது ஈர்ப்பிருந்தது. எல்லாம் மண்ணால் விளைந்த பேராசை. இன்றைக்கு அடிமைத்தளைகளை அறுத்து, வெள்ளையர்களை விரட்டிய பின்னும் நமக்குநாமே அமைத்துக்கொண்ட அரசுகளும் நம்முடைய நிலங்களைப் பிடுங்குகிறது.

கடந்தகால வரலாற்றிலும் இதே நிலை நீடித்திருக்கிறது.
பீகாரில் சம்ரான் பகுதி செழிப்பான கங்கையின் கிளைநதியான பூரி கந்தஹி மற்றும் பாகுபதி பாயும்  தீராவாசப்பகுதி. அதனை ஆங்கிலேய அரசு ஜமீந்தார்களுக்கு ஒதுக்கி அங்குள்ள விவசாயிகளை அப்போது தெருவில் விட்டது. அந்த விவசாயிகள் ஜமீந்தார்களுக்கு வரிகட்டி சாகுபடி செய்யவேண்டி இருந்தது. இந்நிலங்களைப் பிடுங்கி அவுரி சாகுபடி செய்ய பிரிட்டிஷ்காரர்கள் முயற்சி செய்தபோது உத்தமர் காந்தி தலைமையில் பெரும் போராட்டமே அங்குவெடித்தது.

உத்திரபிரதேசத்தில் ரேபரலி வட்டாரத்தில் நிலங்களைக் கையகப்படுத்திய ஆங்கிலேயருக்கு எதிராக கடும் போராட்டம் நடந்தது.  கொந்தளிப்புகளில் ரேபரலியே பற்றி எரிந்தது. விடுதலைக்குப் பின்னும் இதேநிலை தான். அன்றைக்கு பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் இதற்காகப் போராடினார்கள். இதே காங்கிரஸ் ஆட்சியில் தான் முதல்முதலாக நில ஆர்ஜித சட்டத்தில் அவசியமென்றால், நிலத்தைக் கையகப்படுத்தலாம் என்ற சட்டமே வந்தது.


விடுதலை பெற்றவுடன் காங்கிரஸ் ஆட்சியில், விவசாய நிலங்கள் குறித்து அறிய  கிராமியப் பொருளாதார அறிஞர்,  உத்தமர் காந்தியின் சகாவான குமரப்பா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.



 <<<<< இந்த இடத்தில் குமரப்பாவைப்பற்றி சொல்லவேண்டும். உத்தமர் காந்திக்கு உதவியாகவும், அவருடைய நிதிநிர்வாகத்தை கவனிக்கக்கூடியவராகவும் இருந்தவர் குமரப்பா!

காந்தியார் இவரிடம் அவசர நிமித்தமாக பணம் கேட்டால் கூட
  “எதற்கு? அவசியமில்லையென்றால் பணம் தரமுடியாது” என்று சொல்லக்கூடிய உரிமையும், நட்பும் பெற்றவர். வெளிநாட்டில் கல்வி பெற்றவர்.  தஞ்சாவூரில் பிறந்து , மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் கல்லுப்பட்டியில் காந்தி நிகோதன் ஆசிரமத்தை நிறுவினவர். இறுதி வரை எளிமையாக வாழ்ந்த அறிஞர்.

நேரு அமைச்சரவை முதல் அமைச்சரவையில்  இவரை  சேரச்சொன்னபோது, “No Mr.Nehru" என்று அசால்ட்டாக மறுதலித்தவர். இவரைப்போன்று அன்றைக்கு லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் , கிருபளானி, அச்சுத பட்டோவர்த்தன் போன்றவர்கள்  அமைச்சரவையில் சேர பிரதமர் நேரு கேட்டுக்கொண்டபோது பதவியை வேண்டாமென்று துச்சமாக தூக்கி எறிந்தவர்கள்.

அச்சுத பட்டோவர்தன் நேருவிடம் தன் ஜோல்னாப்பையையும், அணிந்திருந்த ஆடையினையும் காட்டி ”எனக்கு இது இரண்டும் போதும், நான் பார்க்கவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது”  என்று பதவி வாய்ப்புகளை நிரகரித்தவர். சுதந்திரத்திற்காக  சிறைக்கொட்டடியில் இவர்கள்பட்ட துன்பமெல்லாம் வார்த்தைகளால் சொல்லமுடியாது. இன்றைக்குள்ளவர்கள் இப்படி எல்லாம் எளிதாகச்  சொல்வார்களா!

இவர்கள் அனைவரும் சர்வோதயம், விவசாயிகள் நலன் என்ற போக்கில் தங்களுக்கான தளத்தை அமைத்துக் கொண்டு செயல்பட்ட பெருந்தகைகள். நாட்டு விடுதலைப்போரில் தியாகஞ்செய்த இப்படிப்பட்ட திருமகன்கள் வாழ்ந்த மண் இது என்று இன்றைக்கு எத்தனை இளைஞர்களுக்குத் தெரியும். இம்மாதிரியான வேதனையான நிலைதான் நாட்டில் காட்டாட்சிகளும், வல்லான் வகுத்த வழியே வழியாகக் கொண்டு அறமற்ற போக்கு நம்மிடையே இருக்கின்றது. >>>>

திரும்ப பிரச்சனைக்கு வருகிறேன். குமரப்பா குழு இந்தியாமுழுவதும் பயணித்து நில நிர்வாகங்களையும், நிலச்சீர்திருத்தங்களையும் குறித்து விரிவான அறிக்கையை வழங்கியது. நில உச்சவரம்புச் சட்டம் வருவதற்கே குமரப்பா குழுவின் அறிக்கையே அடிப்படையாக அமைந்தது. இந்த அறிக்கையை பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டு, ஐந்தாண்டு திட்டங்களில் இந்த அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்றார். அப்படிச் சொன்னதோடு சரி. இந்த அறிக்கையின் மேல் விரிவான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.



வினோபா அவர்கள் பூமிதான இயக்கத்தில் நிலங்களை இனாமாகப்பெற்று, நிலமற்றோருக்கு வழங்க ஒரு தவம்போல இந்தியாமுழுவதும் கால்நடையாக நடந்து  பிரச்சாரம் மேற்கொண்டதெல்லாம்  “எல்லோருக்கும் நிலம்” என்ற கொள்கையின் அடிப்படையிலே. இன்றைய நிலைமையோ ”நிலமெல்லாம் பெரும் முதலாளிகளுக்கு”.

இப்படியெல்லாம் விவசாய நிலங்களைப் பற்றி வரலாறும், பதிவுகளும் இருக்கும்பொழுது, விவசாயி தன்  உயிராக நினைக்கும் நிலத்தை பிடுங்க நினைக்கிறது அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம். இதற்கும் ஒரு சட்டம். அந்தச் சட்டத்திலும் அடிப்படை நியாங்கள் எதுவும் கிடையாது.

இதையெல்லாம் எங்கேபோய் சொல்ல? மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்.,கங்கையே சூதகமானால் எங்கே போவது ?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-03-2015.

#KSR_Posts
#Agriculturist
#Land_Acquisition_Bill.

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...