Saturday, January 30, 2021


———————————-
சுனாமி ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் இரண்டரை லட்சம் உயிர்களை பறித்துக்கொண்டது. தமிழகத்தில் 2004 டிசம்பர் 26 என்பது ஒரு கறுப்பு நாள் என்றும் சொல்லலாம். சுமத்ரா தீவில் 8.9 ரிகடர் அளவில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியாக உருமாறி பேரலையாக கரையைத் தொட்டது. இந்தியாவில் மட்டுமல்ல அதை சுற்றியுள்ள நாடுகளான இலங்கை, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, மலேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளும் சுனாமியால் பெரிதும் பாதிப்படைந்தது.

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, கன்னியாகுமரி மாவட்டங்கள் சுனாமியால் பெரிதும் பாதிப்படைந்தது. ஆயிரக்கான மக்கள் நீரில் மூழ்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர். பலர் தங்களின் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து நின்றது இன்றைக்கும் மறக்கமுடியாத சம்பவமாக இருக்கிறது. இந்தப் பேரலைகளுக்கு கால்நடைகளும் உயிரிழந்தது. கணக்கிடமுடியாத இழப்புகளை சுனாமி பேரலைகள் ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 அன்று சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுனாமி பேரலைகள் வரலாற்றில் ஆறாத வடுவாக இருக்கிறது.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்
26-12-2020


———————————————————
சுமார் ஆறுநூறு கோடியே தொள்ளாயிரத்து நாற்பத்தி ஒன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டது. இதற்கு மேலும் செலவாகும் என்றும் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் முதல் நிலையாக காவிரி கட்டளை கால்வாய் தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோமீட்டர் இனைப்பது என்பது முதல் நிலை. தெற்கு வெள்ளாறு வைகை ஆறு வரை 107 கிலோமீட்டர் இரண்டாவது நிலை. வைகை குண்டாறு 34 கிலோமீட்டர் இணைப்பது மூன்றாவது நிலையாகும். இப்படி மூன்று நீர்நிலை இணைப்பதுதான் இத்திட்டம்.
இந்த திட்டத்தில் மேட்டூர் அணையிலிருந்து வருகின்ற 8.5டிஎம்சி மேட்டூர் அணையிலிருந்து வரும் காவிரி நீரை இந்த திட்டத்திற்கு திருப்பப்படிகிறது. கட்டளை கால்வாய் இதற்கு தலையாக அமைந்தால் தெற்கே ராமநாதபுரம், விருதுநகர் வரை இந்த நீர் சென்றடையும். 9.25 கிலோமீட்டர் உள்ளார்ந்த சுரங்கமாக வெட்டி சீர்படுத்தி இந்த தண்ணீரை எடுத்து செல்லவேண்டும். 25 துணை பெரிய கால்வார்ய்களும் இதில் அமையலாம். இதனால் திருச்சிக்கு அடுத்துள்ள புதுக்கோட்டை, கரூர், ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பயன்படும்.

ஏற்கனவே தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு பணிகளும் நடந்து வருகின்றது, அத்தோடு தாமிரபரணி-வைப்பார் இணைப்பு, வடமாட்டங்களில் தென் பெண்ணை,பாலாறு இணைக்கப்பட்டுவிட்டால் தமிழக்கத்தில் ஒடிசா மகாநதி, கிருஷ்ணா,கோதாவரி நதிகளை தமிழகத்தோடு இணைக்க இது அடிப்படையாக இருக்கும். தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான பணியும் கூட, உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த தேசிய நதிகள் இணைப்பு, கங்கை நதி குமரி மாவட்டத்தில் தொடவேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு திரு பி.என்.நவலவாலா தலைமையில் நதிநீர் இணைப்பு ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டது.
அந்த குழு மத்திய அரசிடம் கொடுத்த பரிந்துரையால் தான் இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குகின்றது. இப்படி எல்லாம் உள்ளார்ந்த விசங்கள் இருக்கும் போது, மக்கள் நாட்டில் வெத்து பெருங்காய டாப்பாக்கள் போலிருக்கும் அரசியல்வாதிகளை கூத்தாடவது தறுதலைத்தனமான நடவடிக்கையாகும்.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
25.12.2020


சமீபத்தில் புரவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழு வரும் டிசம்பரில் ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது. புரவி புயல் நவம்பர் 25 மற்றும் 26 ஏற்பட்டு தமிழகத்தில் 41,000 ஏக்கருக்கு பத்து மாவட்டங்களில் பெரும் பாதிப்படைந்தது. மத்திய அரசின் குழு இதை ஆய்வு நடத்த ஒரு மாதம் கழித்து டிசம்பர் 28 தான் ஆய்வுக்கு வருகிறது. புயல் தாக்கி ஒரு வாரத்திகுள் மத்திய ஆய்வு குழு வந்தால்தானே உண்மையான பாதிப்புகள் தெரியவரும்.
கடந்த 1977-லிருந்து கவனித்து வருகிறேன், அன்று சென்னை மாநகரில் கோட்டூர்புரம், அடையார் கல்பாலம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அன்றைக்கு மூடிய அந்த கல்பாலம் சத்யா ஸ்டுடியோ அருகில் தனுஸ்கோடி சின்னம் போல் அடையாளமாக இன்றைக்கும் காட்சியளிக்கிறது. புயல் பாத்திக்கப்பட்டால் உடனுக்குடன் ஆய்வு செய்தால்தான் அதற்கான நிவாரணத்தை உடனடியாக வழங்கமுடியும்.
இப்படி காலந்தாழ்த்தி புயல் பாதிப்புக்குப்பின் மத்திய அரசு தொடர்ந்து தாமதமாக வருவதை வாடிக்கையாக்கிவிட்டார்கள். இது தவறான போக்காகும். புயல் கோரம் முடிந்தவுடனே மத்திய அரசு ஆய்வு குழுக்களைஅனுப்பியிருக்கவேண்டும்.
உடனே ஆய்வு நடத்த வேண்டும்.

India has a long coastline stretching over 7,000 km; so tropical cyclones are frequent, most originate as a deep depression in the Bay of Bengal and move in the north-westerly direction. On the west coast, the numbers are limited and intensity is low. The deadliest cyclone was in 1964, the Rameswaram cyclone that wiped out the ancient township of Dhanushkodi and Talaimannar Town in Sri Lanka. The cyclone in 1990 that hit Andhra resulted in over 950 deaths. In the recent past, the most severe cyclone was the one in 1999 that hit the Odisha coast.
Kerala had its worst experience during Cyclone Ochki near end of 2017. This caused around 100 deaths and many fishermen went missing. One can say that we were caught totally unawares by the onset of Ochki. Its origin was over the southwest Bay of Bengal as a deep depression near Cape Comorin in the last week of November 2017. A well-marked low-pressure system was observed over Comorin Sea at 0530 IST on November 29. This became a depression, crossed the Lankan coast and moved north-westward. Due to favourable conditions, the deep depression turned into a cyclonic storm by 0830 IST on November 30. The IMD issued a warning as early as November 28. But it was about a deep depression which in normal circumstances causes heavy rainfall. Nobody in the state took it seriously; though the cyclone warning was issued later, the official mechanism failed to act in a timely manner.
This was a lesson to strengthen the disaster management system and the result was that the state was fully prepared to face the recent Cyclone Burevi. However, this Cyclone weakened considerably before touching the Tamil Nadu coast. Hence Kerala was totally spared. But it has established that the disaster management authority could indeed take into account IMD’s real time predictions.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
25.12.2020


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்,
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே,
புற்றர வல்குல் புனமயிலே ! போதராய்,
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி !, நீ
ஏற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
---------------------------
பதவுரை
கன்று – தலையீற்றுக்களாயிருக்கிற, கறவை – பசுக்களுடைய, பல – அநேக, கணங்கள் – சமூகங்களை, கறந்து – (முலைக்கடுப்புத்தீரும்படி) கறப்பவனாயும், செற்றார் – தம்பெருமை பொறாத பகைவர்களுடைய, திறல் – பலம், அழிய – நசிக்கும்படி, சென்று – அவர்களிருந்த இடத்திற்கு போய், செருச்செய்யும் – போர் செய்யுமவனாயும், குற்றம் – தோஷங்கள், ஒன்று – ஒன்றும், இல்லாத – இல்லாதவனுமான, கோவலர்தம் – கோபாலனான ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு, பொற்கொடியே – பொன்கொடி போல் மிகவும் ஆசைப்படும்படியான வடிவையுடையவளே, புற்று அரவு – புற்றில் கிடக்கும் பாம்பின் படமும் கழுத்தும் போலே ஒளியையும் அகலத்தையுமுடைய, அல்குல் – ஜகநத்தையுடையவளே, புனம் – காட்டில் தன்னிச்சைப்படி திரிகிற, மயில் – மயிலின் தோகை போன்ற அளகபாரத்தையுடையளே, போதராய் – புறப்பட்டு வாராய் (என்றழைக்க நான் புறப்படும்படி எல்லோரும் வந்தார்களோ என்ன), சுற்றத்து – பந்துக்களான, தோழிமாரெல்லாரும் – எல்லாத் தோழிகளும், வந்து – திரண்டுவந்து, நின்முற்றம் புகுந்து – உன் திருமுற்றத்திற்கு புக்கு, முகில்வண்ணன் – நீலமேகஸ்யாமளனான ஸ்ரீ க்ருஷ்ணனுடைய, பேர் – திருநாமங்களைப், பாட – பாடச்செய்தேயும், செல்வம் – க்ருஷ்ணகுணானு ஸந்தாநமாகிற ஸம்பத்தையுடைய, பெண்டாட்டி – பெண் பிள்ளாய், நீ – நீ, சிற்றாதே – அசையாமலும், பேசாதே – பேசாமலும், என் – என்ன, பொருளுக்கு – ப்ரஜோநத்துக்காக, உறங்கும் – உறங்குகிறாயென்கிறார்கள்.
“கன்றுகள் ஈன்று அதிகம் பால் சுரக்கும் பசுக்களை உடையவர்களும், பலம் மிக்க பகைவர்களானாலும் அவர்களது இடத்திற்கே சென்று பகைவர்களை அழிக்கும் வீரர்களுமான ஆயர்குலத்தில் தோன்றிய பொற்கொடி போன்ற அழகிய பெண்ணே.
புற்றிலிருந்து வந்து படமெடுக்கும் பாம்பின் கழுத்திற்கு நிகரான மெல்லிடையும், கானக மயிலைப் போன்ற சாயலையும் உடையவளே.. விழித்தெழுந்து வருவாயாக.!
தோழியர் நாங்கள் அனைவரும் உனது வீட்டு முற்றத்தில் நின்றபடி கார்மேகக் கண்ணனின் திருநாமங்களைப் போற்றிப் பாடுவதைக் கேட்டப் பின்னும், நீ சிறிதும் அசையாமல், பேசாமல் உறங்குவது ஏனோ திருமகளே.!” என்று தோழியிடம் கேட்கிறாள் கோதை..!
-------------
கண்ணன் ஊருக்கெல்லாம் ஒரு பிள்ளை என்று பெயர் பெற்றது போன்று அவ்வாயர்பாடியில் ஊரே மெச்சத் தகுந்த ஒரு பெண்பிள்ளையாக விளங்கினாள் ஒருத்தி. அவனன்றோ என்னைத் தேடி வர வேண்டும். நான் ஏன் நோன்பு நோற்க வேண்டும் என்று வைகறைப் பொழுதில் உறங்கிக் கிடந்தாள். அவளை எழுப்ப முற்படுகிற ஆய்ப்பாடிப் பெண்களின் முயற்சியைக் கூறுகிறது இப்பாசுரம்.
கன்றுகளாய் இருக்கும் காலத்திலேயே கறவையாய்ப் பால்பொழியும் பசுக்கள் நிரம்பியது ஆயர்கள் மனை. இப்பசுக்கள் கண்ணன் திருக்கரம்பட்டு இளங்கன்றுப் பருவத்தே கறவைகளாகிப் பால் சொரிந்தன. அல்லது கண்ணன் கைபடும் காரணத்தால் கறவைப் பசுக்களும் கன்றுகள் போல் இளமை கொண்டன போலும், இத்தகைய கறவைகள் எண்ணி முடியாதனவாய்ப் பல்கிப் பெருகியுள்ளன. எனினும் இப்பசுக்கள் ஒருவனே அடக்கி கறக்கும் வலிமை மிக்கது ஆயர்குலம்.
பகைவர்களின் ஆற்றல் அழியும்படி அவர்கள் இருப்பிடம் சென்று போரிடும் குற்றமற்ற வீரர்கள் நிரம்பியது இடைக்குலம். கண்ணன் பெருமை பொறாதவர்களே இவர்களுக்குப் பகைவர்களாம். படையெடுத்துப் பகைவர் வருதல், புறமுதுகு காட்டுதல், நிராயுதபாணிகளுடன் போரிடுதல் முதலிய குற்றங்களை எள்ளளவும் புரியாதவர்கள் இவ்வீரர்கள், இந்த ஆயவீரர்களின் மரபிலே வந்த பொற்கொடி இவ்வில்லத்தின் செல்வி, காண்பதற்கு இனிமையுடையள் என்பதாலும், கணவனாகிய கொழு கொம்பின்றி வாழாதவள் என்பதாலும் ‘பொற்கொடியே’ என்று அழைக்கிறார்கள்.
’கோவலர் தம் பொற்கொடியே, நீ புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலை உடையவள், பெண்களையும் ஆண்களாக ஆக்கும் அவாவைத் தூண்டும் அழகி எனக்காட்ட இவ்வாறு அழைக்கின்றார்கள். மேலும் அவள் காட்டு மயிலைப் போன்று கண்ணனையும் தங்களையும் பித்தேற்றும் கூந்தலையும் சாயலையும் கொண்டவள். அவளைத் தாங்கள் உகக்கும்படி நடந்து காட்டாய் என வேண்டிப் ‘போதராய்’ என விண்ணப்பிக்கின்றனர்.’

‘நான் புறப்பட்டு வருவது இருக்கட்டும் எல்லோரும் வந்து விட்டார்களோ’ என்று அவள் கேட்கின்றாள். அதற்கு விடையாக, ‘இந்த ஊரங்கலும் இருக்கின்ற உன் சுற்றத்தார் எல்லோரும் உன்னுடைய முற்றத்திற்கு வந்துள்ளனர். நீயும் நேசிக்கும் கொண்டல் வண்ணனாகிய கண்ணன் திருநாமத்தை அனைவரும் பாடுகின்றோம். ஆனாலும் நீயோ அவனை நினைத்து அசைவுறாமலும் பேசாமலும் உறங்குகின்றாயே’ என்றனர் ஆயர்குல மகளிர். (சிற்றாதே சிதறாதே- அசையாமலும் பேசாமலும்)
‘எங்களுக்கு மட்டுமன்று, ஊருக்கெல்லாம் ஒரு பெண் பிள்ளையாகிய செல்வமன்றோ நீ? இவ்வாறு கண்ணையும் செவியையும் பட்டினி போட்டு உறங்குவது ஏனோ?’ என்றும் வினாவினார்கள். ‘கண்ணன் குணங்களை எண்ணும் செல்வியான நீ, அதே பணியில் உள்ள எங்களோடு கூட வேண்டாமோ? எங்களை மகிழ்விக்க வேண்டாமோ? இவ்வின்பப் பயனைப் பகிர்ந்து கொள்ளாமல் உறங்குகின்றாயோ’ என்ற கருத்தில் ‘எற்றுக்குறங்கும் பொருள்?’ என ஆற்றமையால் கேட்கின்றனர் இடைக்குலப் பெண்கள்.
இப்பாசுரத்திள் கண்ணன் இருக்கும் கோகுலத்தில் கறவைகள் சிறந்துள்ள வளமும், அவன் அன்பிற்குரிய கோவலர் குற்றமில்லாத வீரமும் வியந்துரைக்கப்படுகிறது. கண்ணனின் பேரன்புச் செல்வம் பெற்றாள் ஒருத்தியின் உறுப்பழகும் சாயலும் மெச்சப்படுகின்றன. வாழி வழங்கும் மாரி முகில் போன்றவன் கண்ணன் என்பது சுட்டப்படுகின்றது.
கண்ணன் திருநாமத்தை விதந்தோதுதலும், புகழ்ந்து பாடுதலும் வாழ்வின் பயன் என்பதை எடுத்தோதுகிறது இப்பாசுரம்.
கண்ணிடம் கொண்ட காதலும் பிரேமையும் அன்பு கொண்டார் அனைவரும் பகிர்ந்து கொண்டாடத் தக்கது என இப்பாசுரம் போற்றுகின்றது.
‘பிருந்தவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வம் அன்றோ ?’
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
25.12.2020


———————————————————-
மூதறிஞர் இராஜாஜி மறைந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டன. இராஜாஜி இல்லை என்றால் சென்னை மாநகர் நமக்கு கிடைத்திருக்காது, இராஜாஜியின் அனுக்கமான தோழராகவே மாபொசி விளங்கினார். அவர் மீது எதிர்வினைகள் பல இன்றைக்கு வரை வைக்கின்றனர், தன் இறுதி காலத்தில் அரசு மருத்துவமனை சிகிச்சை எடுத்துக்கொள்வேன் என்று தனக்கு உதவ வந்தவரிடம் சொல்லிவிட்டார். காமராஜர் இராஜாஜியின் புதல்வர் சி.ஆர். நரசிம்மனை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியதுக்கு என் குடும்பத்தாரை எப்படி நியாயம் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பிராக அனுப்புவதை நான் கண்டிக்கிறேன் என்று காமராஜரிடம் நேரிடையாக கூறினார். மதுவிலக்கே கூடாதென்று 1937-ல் தன்னால் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட நடைமுறையைத் தொடர்ந்து நடைமுறையில் இருக்கவேண்டுமென்று இராஜாஜி எடுத்துக்கொண்டதை எல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆச்சாரமான தன்னுடைய குடும்பத்தில் மரணம் நிகழ்ந்த போது ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உதவியை நாடியதால் இவரது குடும்பத்தை இவர் சார்ந்த சமுதாயம் இவரை ஒதுக்கிவைக்கப்பட்டதெல்லாம் கடந்த கால செய்திகள்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக, தீண்டத்தகாதவர்களுக்காக ஏதேதோ செய்து இருக்கிறோம் என்று தம்பட்டமடித்து கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், 55 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இராஜாஜி சேலம் நகரசபைத் தலைவராக இருந்தபோது சில தெருக்களுக்குள் நுழையக்கூடாதென தடை விதிக்கப்படிருந்த தோட்டிகளை கட்டாயப்படுத்திப் போகச் செய்திருக்கிறார்.

இராஜாஜியின் ஆளுமை, இலக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அவர் காட்டிய அக்கறை என பல விசயங்களில் புரிதல் வேண்டும். வெற்று கோசங்களுக்கும் வெத்து பேச்சுகளுக்கும் என்றும் துணை போகாமாட்டார் இராஜாஜி.
இராஜாஜி,அவர் நிறுவிய சுதந்திராக் கட்சிப் பற்றி பின்னாட்களில் விரிவாக பதிவு செய்கிறேன்.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
25.12.2020


———————————————-
இன்றைக்கு (25/12/2020) *நல்லாட்சி நாள் - Good Governance day* என்று வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி அறிவித்துள்ளனர். அவர் ஒரு நல்ல நிர்வாகி, மென்மையானவர், நல்ல ஆளுமையான பிரதமர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
இந்தியாவில் நல்லாட்சி இருக்கிறதா என்பதை ஆளும் ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடும் நிலையில் தான் மக்கள் உள்ளனர்.
சிவில் சட்டங்கள், கிரிமினல் சட்டங்கள் போல *நிர்வாக சட்டங்கள் - Administration Law* என இருப்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன்படி இன்றைக்கு ஆளும் ஆட்சிகள் நடக்கின்றனவா என்பது கேள்விக்குறியே.
நல்லாட்சி என்பது நல அரசாக (welfare state)அமைய வேண்டும். இன்றைக்கு ஜனநாயகமும் ஆதாயம் தருகின்ற சந்தை ஜனநாயகமாக (Market Democracy) மாறிவிட்டது. மக்களுக்கான ஜனநாயகம் (People's Democracy) இல்லை.
பிறகு நல்லாட்சி நாள் என கொண்டாட நமக்கு என்ன தகுதிகள் இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். எதிலும் பணம், ஆதாயம் என்று பொது வாழ்வும், அரசியலும், அரசும் இருக்கும்போது நல்லாட்சிக்கான வாய்ப்பு எங்கே இருக்கும். மக்களின் வாக்குகளை பணத்திற்க்கு வாங்கி ஆட்சிக்கு வருபவர்கள் வியாபாரிகள் தானே. வெற்றி பெற்றால் சம்பாதிப்பது தானே அவர்களின் ஆக்கறையானபணி. பிறகெப்படி நல்லாட்சி தருவார்கள்.

இந்தியாவில் கிரேக்கத்தில் பிறந்த ஜனநாயகம், இத்தாலியில் பிறந்த குடியரசு என்று இரண்டையும் கொண்டாடுகிறோம். நம் நாடு ஜனநாயக நாடா, குடியரசு நாடா என்று கூட பதிலளிக்க முடியாத நிலை. பிரிட்டன் நாடாளுமன்ற முறையை நாம் பின்பற்றினால் ஜனநாயக மரபியல் தான் நம்மை சாரும். பிறகெப்படி குடியரசு என்று வகைப்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை. அமெரிக்காவும், பிரான்சும் குடியரசு நாடுகளாகும். இந்தியா குடியரசு நாடா, ஜனநாயக நாடா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
பன்மையில் ஒருமை என்ற நிலையில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ள இந்தியாவில் சமஷ்டி அமைப்பும் (Federal) ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் சீராக பௌதிகம் சொல்கிற மாதிரி டைனமிசம் இருக்கும். சென்ட்ரி பியூகல்,சென்ட்ரி பெட்டல் என்ற வீச்சில் எந்த வகையில் அமைப்பியல் ரீதியிலான ஆட்சி இந்தியாவில் நடத்துகிறோம் என்று தெரிந்தால் தான் பல்வேறு தேசிய இனங்கள் உள்ள இந்தியாவில் கூட்டாட்சி சரியாக இயங்கும். இங்கு கூட்டாட்சியும் கேள்விக்குறியாக இருக்கிறது. நல்லாட்சியும் அப்படித்தான் ...........?
#சமஷ்டி அமைப்பு
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
25-12-2020


------------------------------------
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் ?
நாற்றத் துழாய்முடி நாராயணன், நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால், பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்,
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ?
ஆற்ற அனந்த லுடையாய் ! அருங்கலமே !
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
--------------------
பதவுரை
நோற்று – ஒருநோன்பு நோற்று, சுவர்க்கம் புகுகின்ற – ஸுகத்தை அநுபவிக்கின்ற, அம்மனாய் – ஸ்வாமியானவளே, வாசல் திறவாதார் – வாசல் கதவைத் திறக்காமல் போனாலும், மாற்றமும் – பதிலாக ஒரு பேச்சாவது, தாராரோ – பேசக்கூடாதோ ?, நாற்றம் – வாசனை வீசுகிற, துழாய் – திருத்துழாய் மாலையையுடைய, முடி – க்ரீடத்தையுடைய, நாராயணன் – எங்கும் பரந்து நின்று ரக்ஷகனான நாராயணனும், நம்மால் – அவனையே அண்டின நம்மால், போற்ற – ஸ்தோத்ரம் செய்யும்படி, பறைதரும் – வேண்டின புருஷார்த்தங்களைக் கொடுக்கிற, புண்ணியனால் – தார்மிகனான ஸ்ரீ ராமனால், பண்டு ஒருநாள் – முன்பு இலங்கையில் போர்,நடந்த காலத்தில், கூற்றத்தின் – யமனுடைய, வாய் – வாயிலே, வீழ்ந்த – விழுந்தவனான, கும்பகர்ணனும் – கும்பகர்ணனும், தோற்றும் – தோல்வியடைந்தும், உனக்கே – உனக்கே, பெரும் துயில் தந்தானோ –தன்னுடைய பெரிய தூக்கத்தை தந்தானோ – கொடுத்து விட்டுப்போனானோ, ஆற்ற – அதிகமான, அனந்தல் உடையாய் – சோம்பலை உடையவளே, அருங்கலமே – எங்கள் கோஷ்டிக்கு ஆபரணமாய் இருப்பவளே, தோற்றமாய் வந்து – தள்ளித் தடுமாறுதே வந்து, திற – கதவைத்திற, ஏல் ஓர் – எம்பாவாய்.
----------------------------
”பாவை நோன்பிருந்து, அந்தப் புண்ணியத்தால் சொர்க்கம் செல்ல நினைக்கும் பெண்ணே…!” அம்மனாய்…!
வாசல் திறவாமல் போனாலும் பேசவும் கூடாதா என்ன…?
நறுமணமிக்க துளசிமாலையை அணிந்த நாராயணனை நாம் போற்றிப் பாடினால் நமக்கு புண்ணியம் தர ஆயத்தமாக இருக்கிறான்…!
பெருந்தூக்கத்தை வரமாகப் பெற்று, பின் இராவணனுக்காகப் போரிட்டு இறந்த கும்பகர்ணன், அவனது பெருந்துயிலை உனக்கு வரமாகத் தந்துவிட்டானோ…?
ஆழ்ந்த தூக்கத்தை உடையவளே…! அழகிய ஆபரணம் போன்றவளே…!
உறக்கம் தெளிந்து கதவைத் திறந்திடுவாயாக…!”
என்று தனது தோழியை, பாவை அழைக்கிறாள்…!

‘பாவை நோன்பு நோற்று எங்கள் கண்ணனை அடைவதற்கு எண்ணாநின்றோம். ஆனால் நீயோ வேண்டிய நோன்பெல்லாம் மேற்கொண்டு முன்னே கண்ணன் என்கிற சுவர்க்கத்தை நெருங்கிவிட்டவளாய் இருக்கிறாய். நீ அல்லவோ எங்களுக்கெல்லாம் தலைவியாகிற பக்குவம் உடையவள்’ என்று தோழிப்பெண்கள் ஒருத்தியை எழுப்புகின்றார்கள். பேசினாலும் வம்பு, பேசாவிட்டாலும் வம்பு என்று இவள் வாய் திறக்கவுமில்லை. அதனால் வாசல் திறக்காவிட்டாலும் வாயையாவது திறக்கலாகாதா? என்று விண்ணப்பிக்கின்றார்கள். ‘நோற்றுச் சுவர்க்கம் புகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் ?’
அப்போது இவளோ ‘என்னைப் பழி சிமத்துவதற்கென்றே படை திரட்டி வந்திருக்கிறீர்கள் போலும், கண்ணனைக் கண்டது யார்? அன்றிக் கேட்டது யார்? வீண் பேச்சை ஒழியுங்கள்’ என்பதாக நொந்து கொள்கிறாள்.
அதற்காகச் சொல்லவில்லை, அவனது திருத்துழாய் நறுமணம் கமழ்கிறதே உன் வீட்டில் என்பதனால் சொன்னோம் என்கிறார்கள் அவர்கள். ‘அவன் இங்கு மட்டுமா? எங்கும் பரந்திருப்பவன் அல்லவா ?’ என்கிறாள் இவள்.
‘நீ சொல்வதும் சரிதான்… தலைவியே… அந்த நாற்றத்துழாய் முடிநாராயணனைப் போற்றிப் பரவ நீயும் வா…நிச்சயமாய் நமக்கு, கைங்கர்யமாகிற சேவை செய்யும் பேற்றை அவன் நல்குவான்’ என்கிறார்கள் அவர்கள்.
நாராயணன் திருப்பெயரை உச்சரித்த மாத்திரத்தில் தன்னை மறந்து, ‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து நாராயணன் நம்பி நடக்கின்ற’ பேரழகில் லயித்தாள் போலும். இவள் மௌனமே உருவாகப் படுக்கையில் கிடக்கின்றாள்.
இந்த மௌனம் வெளியிலே நிற்பவர்களுக்கு – இவலையும் கொண்டு நந்தகோபன் மாளிகைக்குச் செல்ல வேண்டுமே, காலம் கழிகிறதே என்று கைவிதிர்த்து நிற்பவர்களுக்கு மெல்லிய கோபத்தை ஊட்டுகின்றது. சம்ர்த்துப் பெண்ணான இவளையும் கொண்டு சென்றால் கண்ணனோடு உறவு பெறுதல் எளிதாகுமே… அதற்கு இடையூறு செய்கிறார்களே என்று மனம் வருந்தினார்கள். கிண்டலும் கேலியும் வருத்தமும் ஒன்று கலந்த நிலையில் அவளைக் கும்பகர்ணனோடு ஒப்பிட்டுப் பேசினார்கள். ‘முன்பு ஒரு நாள் இந்த நாராயணனாலே எமலோகம் அனுப்பப்பட்ட கும்பகர்ணன் இராமபிரானுக்குத் தோற்றுப் போனானோ? தோற்றவர் தன் செல்வத்தையும் சிறப்பையும் வென்றவருக்கு விட்டுச் செல்வது உலகின் வழக்கம் அல்லவோ? அதுபோல உனக்குத் தன் செல்வமான தூக்கத்தைத் தந்து விட்டுச் சென்றானோ? அவனுடையதைத் துயில் என்றால் நீ பெற்றிருப்பது பெருந்துயிலுமாயிற்றே’ என்றார்கள். ‘பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்று உனக்கே பெருந்துயில் தந்தானோ ?’ என்றனர்.
தன்னைப் பொல்லாத ராட்சசனோடு ஒப்பிடுகிறார்களே என வருத்த மேலீட்டால் உள்ளிருந்தாள், ‘கிருஷ்ண- கிருஷ்ண’ என்று சொல்லி காதைப் பொத்திக் கொண்டாள்.
அப்போது அன்புமிக்க தோழிகள், ‘நீ கண்ணன் பெயரை உச்சரிப்பதே அழகு. அந்த அழகை நாங்களும் காணும்படி புறத்தில் வரலாகாதா? நீ எங்களுக்கு மட்டுமின்றி கண்ணபெருமானுக்குக் கிடைத்தற்கரிய ஆபரணமான அருங்கலம் அல்லவோ?’ என்று சொல்லி புகழ்ச்சி செய்தார்கள்.
இவளும் அவர்களோடு அன்பு கலந்து பரிமாறி கண்ணனை இன்புற்றிக் காணுமாறு எழுந்து புறப்பட்டாள். அப்படி வருகின்றவர்களை ‘மாடத்திலிருந்து இறங்கி வரும் நங்கையே, உறக்கக் கலக்கமும் கண்ணனோடு மகிழ்ந்த கிறக்கக் கலக்கமும் புலனாகாதபடி திருத்தமுள்ளவளாய் வருவாயாக’ என்று கருத்துப்பட, ‘தோற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்’ என்று விண்ணப்பித்துக் கொள்ளுகின்றார்கள்.
பாவனையினால் ஆயர் குலப் பெண்ணாய் ஆண்டாள் நாச்சியார் பாடிய போதிலும், இறைவனோடு இணைந்து கலக்கத் துடிக்கும் உயிரின் தவிப்பையே திருப்பாவையின் இதயத் துடிப்பாகக் கேட்கிறோம்.
’பாதகங்கள் தீர்க்கும் பரம னடிகாட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் – கோதைதமிழ்
அய்யைந்தும் அய்ந்தும் அறியாத மானுடரை
வையம் சுமப்பதும் வம்பு’
என்று அதனால் சொன்னார்கள் ஆன்றோர்கள்.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
25-12-2020


———————————————————-
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்திக்கும்போதெல்லாம் சோர்வு நீங்க மன அமைதி கிடைக்கும். ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மத்திய முன்னாள் அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களுடன் கிரீன்வேஸ் சாலையிலுள்ள ஜே.கே இல்லத்தில் சந்திதேன். இரண்டு முறை பொது நிகழ்ச்சிகளில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து.
||’’ஜே.கிருஷ்ணமூர்த்தி எப்போது பேசுவதை நிறுத்துகிறாரோ அப்போது அவருக்கு இறப்பு நேரிடும் என்று அவரே 1980ல் ஒருநாள் சொல்லியிருக்கிறார். அவருடைய உடலுக்கு ஒரே ஒரு வேலை மட்டுமே இருந்தது. தன்னுடைய போதனைகளை வெளிப்படுத்துவது ஒன்றேதான் அது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை முடிந்து விட்டது. 1986ம் வருடம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி பசிபிக் ஸ்டாண்டர்டு நேரப்படி மதியம் 12.10க்கு ஓஜெய்யிலுள்ள ‘பைன் காட்டேஜில்’ உயிர் நீத்தார்.
அந்த ‘காட்டேஜில்’ அவர் ஐந்து வாரங்களாக கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு அதனால் அவதியுற்றார். மிளகு மரத்திற்கு எதிராக உள்ள அறையில்தான் இறந்தார்.
65 வருடங்களுக்கு முன்பு, இதே அறையில்தான் தன் நிலையை உணர்ந்த பெரிய மாறுதலை அடைந்திருந்தார்.
கலிபோர்னியாவிலுள்ள ‘வென்துரா’ என்ற இடத்தில் அவருடைய உடல் தகனம் நடந்தது. உடலை எரித்த சாம்பலை மூன்று பாகங்களாகப் பிரித்து ஒன்று ஓஜெய்யிக்கும், இன்னொன்று இந்தியாவுக்கும், மூன்றாவது இங்கிலாந்திற்கும் எடுத்து செல்லப்பட்டது.
இந்தியாவில் அவருடைய சாம்பல் கங்கை ஆற்றிலும் நடு நீரோட்டமான ராஜ்காட்டில், வாரணாசி நதியிலும் இமயமலையின் ஆழத்திலுள்ள, இந்த நதியின் உற்பத்தி ஸ்தலமான கங்கோத்திரியிலும் சென்னையிலுள்ள அடையாறு கடற்கரையிலும் கரைக்கப்பட்டது.
இவருடைய சாம்பல் மெலிதான கட்டுமரத்தில் ஏற்றப்பட்டு வலிமை வாய்ந்த அலைகள் நிறைந்த கடலினூடே எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
ஜே.கிருஷ்ணமூர்த்தி தன் சாவுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். இறந்த பிறகு உடலுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று. பெரிய மரக்கட்டைகள் போன்று, உயிர் இழந்த உடலும், தீ நாக்குகளால் விழுங்கப்பட வேண்டும் என்றிருக்கிறார்.

நான் மிக எளிமையானவன். அதைப்போலவே என்னுடைய இறுதி யாத்திரையும் மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அவருடைய சாவுக்குப் பிறகு ஈமக்கிரியைகளோ இறை வணக்கமோ, பெரிய ஆடம்பரமான ஊர்வலங்களோ, ஆர்ப்பாட்டமோ இருக்கக் கூடாது. அவரை தகனம் செய்த இடத்திற்கு மேல் ஞாபகச் சின்னம் எதுவும் எழுப்பக் கூடாது.
எந்த சந்தர்ப்பத்திலும், போதனைகளைப் போதித்த ‘ஆசான்’ தெய்வப் பிறவியாக கருதப்படக் கூடாது.
‘ஆசான்’ முக்கியத்துவமானவரல்ல. அவருடைய போதனைகளே மிகவும் முக்கியமானது.
அவருடைய போதனைகளே அழிவிலிருந்தும், களங்கத்திலிருந்தும், திரிபிலிருந்தும், பாதுக்காக்கப்பட வேண்டியது. “ போதனைகளைப் பொறுத்த வரையில் வாரிசு, தலைவன் என்ற பேச்சுக்கே இடமில்லை.
என்னை அடுத்து பொறுப்பேற்று எனக்கும் பிரதிநிதியாக என் பெயர் சொல்லிக் கொண்டு என்னுடைய போதனைகளை இப்போதும் எதிர்காலத்தில் எப்போதும் எவரும் சொல்லக் கூடாது.
ஆயினும், தன் நண்பர்களிடம் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், இந்தியாவிலும், இங்கிலாந்திலும், இவர் பெயர் தாங்கி நிற்கும் கல்வி நிறுவனங்கள், அவர் இட்டு சென்ற வழியிலேயே செயல்படலாம் என்று சொல்லியிருக்கிறார்.
அவருடைய அஸ்தியின் ஒரு பகுதி டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அவற்றை விமானத்தின் காலடியில் நின்று பெற்றுக் கொண்டவர் பாபுல் ஜெயகர் என்ற பெண்மணி. அவர் தன்னுடைய வீட்டிற்கு பயணமானார்.
வெளி வாசற்கதவு வழியாக உள்ளே நுழைந்தபோது திடீரென்று கனத்த மழை வரை வரவேற்று அவர் மீது விழுந்தது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அஸ்திக் கலசத்தை அந்தப் பெண்மணியின் வீட்டுத் தோட்டத்திலுள்ள ஆலமரத்தடியில் வைக்கும் வினாடி வரை தொடர்ந்து சில நிமிடங்கள் பெய்தது.
எப்படி திடீரென்று பொழிய ஆரம்பித்ததோ அதேபோல் திடீரென்று நின்றுவிட்டது.
சுவிட்ஜர்லாந்திலுள்ள ரோஜ்மண்டில் ஜூலை மாதம் 1985 ஆம் வருடம் அவரை நெருங்கிக் கொண்டிருக்கும் சாவின் அறிவிப்பு ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உடலில் எழுந்தது. அது தெளிவாக தெரிந்தது.
பாபுல் ஜெயகர் ஜே.கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தபோது, “பிராக்வுட்” பார்க்கில் அதே வருடம் செப்டம்பர் மாதம் பிற்பகுதியில் மேற்குப் பகுதியிலுள்ள சிறிய சமையலறையில், சந்திக்க முடிந்தது.
அப்போது ஜே.கிருஷ்ணமூர்த்தி அவரிடம், சொல்வதற்கு மிகவும் சீரியஸ்ஸான விஷயம் இருக்கிறது என்றும், சுவிட்சர்லாந்தில் இருக்கும் எனக்கு எப்போது உயிர் நீப்போம் என்பது தெரிகிறது என்றும்.....எந்த இடத்தில், எந்த நேரத்தில் என் இறப்பு நேரிடும் என்பதும் தெரியும். ஆனால் யாரிடமும் நான் அதை வெளிப்படுத்தப் போவதில்லை என்று சொன்னார்.
மேலும் சொல்கையில், “என்னுடைய உரு அழிய ஆரம்பித்துவிட்டது” என்றார்.
அதிர்ச்சியான இந்த விஷயத்தைக் கேட்ட பாபுல் ஜெயகர் என்ற பெண்மணி அமைதியாகவே உட்கார்ந்திருந்தார்.
அக்டோபர் 15ஆம் தேதி, வாரணாசிக்குப் போகும் முன்னர் டெல்லிக்கு வந்திருந்தார். சில நாட்கள் ஓய்வெடுப்பதற்காக வந்திருந்தார். அக்டோபர் 29ம் தேதி அப்போதைய துணை ஜனாதிபதியும், நெருங்கிய நண்பருமான, பிற்பாடு பாரத ராஷ்டிரபதியாகவும் பதவி ஏற்ற திரு. ஆர். வெங்கட்ராமனைச் சந்தித்தார்.
பிறகு ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் வீட்டில் விருந்தின் போதும் பாபுல் ஜெயகர் வீட்டில் நடந்த விருந்தின் போதும் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார்.
இந்திரா காந்தி இறந்த ஒரு வருடத்திற்கு பின், ராஜீவ் காந்தி ஜே.கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தது இதுதான் முதல் தடவை. இந்தச் சந்திப்பில் ஒரு ஆழ்ந்த நெருக்கமும், நெகிழ்ச்சியும் இருந்தது.
டெல்லியிலிருந்து வாரணாசிக்குப் பயணம் செய்த ஜே.கிருஷ்ணமூர்த்தி அங்கு குழுமியிருந்த சுமார் மூவாயிரம் பேர் கொண்ட முகாமில் கலந்து கொண்டார்.
வெகுநேரம் ஜோராகப் பெய்த பருவ மழையால் புது வாழ்க்கையில் வரவுக்கான அடையாளங்கள் மரங்களிலும், புதர்களிலும் தெரிகின்றது. ஒளிமிக்க மஞ்சள் பச்சை வண்ண கடுகுசெடிகள், ஆற்றங்கரையில் தோன்ற ஆரம்பிக்கின்றன.
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவருடைய வீட்டில் இருந்தபோது தீபாவளிப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆயிரக் கணக்கான எண்ணெய் விளக்குகள் அவர் குடியிருக்கும் வீட்டைச் சுற்றி ஏற்றி வைக்கப்பட்டன.
கங்கை ஆறு, மிதக்கும் எண்ணெய் விளக்குகள் காரணமாக ஒளி மிகுந்து காணப்பட்டது. மாலைத் தென்றலில் அவ்விளக்குகள் விட்டு விட்டு எரிந்தன.
அங்கு கூடியிருந்த கூட்டத்தில் கிருஷ்ணாஜி பேசினார்.
“வாரணாசிப் பண்டிதர்களிடம் விவாதத்தில் ஈடுபட்டார். வேதாந்த புத்தமத கோட்பாடுகலை நன்கு படித்தறிந்த கல்விமான்களிடம் பேசி கொண்டிருந்தார்.
மேலும் ராஜ்காட்டின் எதிர்காலம் குறித்து அந்நிறுவனத்தின் அங்கத்தினர்களிடம் விவாதித்தார்.
பெனராஸ் இந்து சர்வகலாசாலையில் பெளதீக ஆசிரியராக இருந்த ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு பல வருடங்கள் தெரிந்த பேராசிரியர் கிருஷ்ணா என்பவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, “ ராஜ்காட் கல்வி நிறுவனத்தின்” தலைவராக அமர ஒத்துக் கொண்டார்.
ஆர். உபசானி, மகேஷ் சாக்ஸேனா என்ற இரு யாத்திரிகர்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தி அந்த நிலத்தை சுற்றி பார்க்கும்போது தாங்களும் அவருடன் சேர்ந்து சுற்றி பார்த்தார்கள்.
உழவர்களையும், யாத்திரிகர்களையும் பார்த்ததும், சிரித்தும், அந்தப் பழமையான நகரின் நாடித்துடிப்பைக் கேட்டும் வந்தார்.
முப்பது வருடங்களாக ராஜ்காட்டில் வாழும் உபசானி நில வேலைகளை கவனித்துக் கொண்டு வந்தார்.
அவரின் பொறுப்பும், கரிசனமும், அவரை ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு வெகு அருகில் கொண்டு சென்றது. புதிதாக வந்த மகேஷ் ஸேக்ஸான் என்பவர் முன்னாள் மத்திய போலீஸின் தலைமை அதிகாரியாக டெல்லியில் இருந்தவர்.
வளைந்து கொடுக்கக் கூடிய உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் சேக்ஸானா தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காவி உடை உடுத்தி, ”உண்மை”யைத் தேடிச் செல்பவராக ஆனார்.
பல வருடங்கள் ஹிமாலயத்திலேயே வாழ்ந்தார். அதன் பிறகு ராஜ்காட் வந்தடையும் வரை, ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து உண்மையை தேடிக் கொண்டிருந்தார்.
அவருடைய தோற்றமும், ஆழ்ந்த நிலையும், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அருகாமைக்கு அவரை இட்டு சென்றது.
உடனே அவரும், அந்த நிறுவனத்தில் சேர்ந்து, அதனுடைய செயலாளராக ஆனார். ‘’
(செண்பகா பதிப்பகம் வெளியிட்ட ஜே.கே நூலிலிருந்து சில பகுதிகள்.)
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
24-12-2020

தோல்வி இல்லாத வாழ்க்கை உப்பு இல்லாத உணவு போன்று...!

 தோல்வி இல்லாத வாழ்க்கை உப்பு  இல்லாத  உணவு போன்று...! உற்சாகமான மனநிலை   பாதி  வெற்றியை   கொடுத்து  விடும்...!!