Wednesday, January 13, 2021

 

#திருப்பாவை

#பாசுரம்_5

****************************

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது,

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,

தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.

------------------

பதவுரை

மாயனை – ஆஸ்சர்யமான சேஷ்டிதங்களையுடையவனை, மன்னு – (பகவத் ஸம்பந்தம்) ஸ்திரமாயிருக்கிற, வடமதுரை – வடமதுரையில், மைந்தனை – நித்யயுவா ஆனவனை, தூய – ஸுத்தமான, பெரு – மிகவும் அழகான, நீர் – ஜலத்தையுடைய, யமுனைத் துறைவனை – யமுனை ஆற்றின் கரையிலுள்ளவனை, ஆயர்குலத்தில் – இடையர்கள் குலத்தில், தோன்றும் – தோன்றிய, அணிவிளக்கை – மாணிக்க ரத்நம் போன்ற விளக்கைப் போன்றவனும் (ரத்நம் போல் அணைக்க முடியாத விளக்கை), தாயை – தேவகிப் பிராட்டியுடைய, குடல் – திருவயிற்றை, விளக்கம் செய்த – ப்ரகாஸப்படுத்திய, தாமோதரனை – வயிற்றிலே கட்டுண்ட ஸுலபனான கண்ணனை, நாம் – நாமெல்லாரும், தூயோமாய் – பரிசுத்தர்களாய், வந்து – வந்துசேர்ந்து, தூமலர் – ஸுத்தமான புஷ்பங்களை, தூவி – ஸமர்பித்து, தொழுது – ஸேவித்து, வாயினால் பாடி – நாக்கினால் அவன் குணங்களைப் பாடி, மனத்தினால் – மனதினால், சிந்திக்க – த்யாநம் பண்ண, போய பிழையும் – முன்பு செய்த பாபங்களும், புகுதருவான் நின்றனவும் – பின் வருகிற பாபங்களும், தீயினில் – அக்நியில் (பொகட்ட), தூசாகும் – தூசிபோல் ஆகிவிடும் துறும்பு போல் ஆகும், செப்பு – அவன் திருநாமங்களை சொல்லுங்கோள், ஏல் ஓர் – எம்பாவாய்.

 


“மாயச் செயல்களை செய்தவன்… வடமதுரையில் (மதுரா) பிறந்தவன்…

தூய்மையான யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவன்…

தனது புகழால் தனது தாயை, உலகம் முழுவதும் அறியச் செய்தவன்…

இப்படிப்பட்டக் கண்ணனை மனதார வணங்கி, தூய்மையான மலர்களால் தொழுது, அவனை உளமாரப் பாடினோமேயானால், நாம் செய்த பிழைகள் அனைத்தும் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்கிவிடும்…

அவனை வாழ்த்திப் பாடுவோம் வாருங்கள் பெண்களே….!”

என்று மாயவனைப் பாட, தனது தோழிகளை அழைக்கிறாள் கோதை…!”

 

இடைச் சிறுமிகளிலேயே ஒருத்தி வினவுகின்றாள். ‘நம்பிக்கையோடுதான் நாம் நோன்பு மேற்கொள்கிறோம், ஆனாலும் நம் பூர்வ கர்மங்களால் துன்பங்கள் நேர்ந்தால் என்ன செய்வது?’

 

இவ்வினாவிற்கு விடை கூறுவதுபோல் அமைந்தது திருப்பாவையின் ஐந்தாம் பாட்டு. நம்முடைய நெஞ்சார்ந்த தொழுகையால், மன, மொழி, மெய்கள் ஒன்றுபட்ட வழிபாட்டால் கர்மங்கள் கட்டோடே அழியுமென்ற நம்பிக்கையின் வாசகமாகிறது இப்பாட்டு.

 

கண்ணன் என்னும் கருந்தெய்வத்தை முதல் நான்கு வரிகளிலே போற்றி மகிழ்கின்றார் ஆண்டாள்.

 

அவன் பரம்பதத்தில் பரிபூர்ணனாகத் திகழ்வதனால் ‘மாயனை’ என்று சிறப்பித்தார் அடுத்தபடியாக ‘மன்னு வடமதுரை மைந்தனை’ என்று அழைக்கிறார்.

 

‘மன்னுதல்’ என்றால் நிலைபெறுதல் வடமதுரை திருமாலோடு நெருக்கம் கொண்டு நிலவி வரும் திருத்தலமாதலால் ‘மன்னு வடமதுரை’ என்கின்றார்.

 

ஆதியில் சித்தாசிரமமாய் வாமனனாகத் திருமால் பலகாலும் தவம் செய்த இடம் அது பின்னர் இராமவதாரக் காலத்தில் சத்த்ருக்கனன் படைவீடமைத்து அரசு புரிந்த இடம் அது. இன்று கண்ணன் அங்கு பிரந்து, தன் அருள் தொடர்பை மீண்டும் நிலைநாட்டிக் கொண்டான்.

 

மைந்தன் என்று சிறப்பித்தமைக்கும் காரணம் உண்டு. இவன் மதுரைச் சிறையில் வாசுதேவ – தேவகி குமாரனாய்ப் பிறந்தபோது தாய் தந்தையருக்கு இடப்பட்டிருந்த விலங்குகள் தாமே அகன்றன. இதனால் பிறக்கும்போதே வலிமையொடு பிறந்தவன் எனப் பொருள்படும்படி ‘வடமதுரை மைந்தனை’ என மொழிந்தார்.

 

மேலும் ‘தூயபெருநீர் யமுனைத் துறைவன்’ என்கின்றார். குழந்தைக் கண்ணனை எடுத்துச் சென்றபோது வழிவிட்ட பெருமையால் யமுனை தூயபெருநீராயிற்று, அதன் கரையும் துறையும் ஆய மகளிரொடு அவன் ஆடிக்களித்த இடமாதலால் அவன் ‘யமுனைத் துறைவன்’ எனப்படுகின்றான்.

 

பின்னும் செல்வார்: ‘ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு’ என்று. இவன் பிறந்தது வடமதுரையில் என்றாலும் சிறந்ததும் வளர்ந்ததும் ஆயர்பாடியில் ஆதலினால் ஆயர்குலத்தின் ஒளிவிளக்கு என்றார். இருட்டு இருக்கின்ற இடத்தில்தானே ஒளிக்கு நன்மதிப்பு. பிற்பட்ட இடைக்குலத்தில் இவன் பேரொளிப் பிழம்பானமையால் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

மேலும் கண்ணனைத் ’தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்’ என்கின்றார். யசோதை கண்ணன் குறும்புகளை இயன்றளவு கண்காணித்தாள். அதற்காக அவனைக் கயிற்றால் கட்டியும் போட்டாள். இந்தக் கயிற்றுத் தழும்பைத் தாங்கியதால் அவன் தாமோதரன் ஆனான். அந்தக் கயிற்றுத் தழும்பினாலே யசோதையின் பெயரை விளங்க வைத்துக் கொண்டிருக்கிறானாம் அவன்.

 

‘என்ன நோன்பு நோற்றாள் கொல்லோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் நாட்டார் புகழ்ச்சியாலே பெற்ற வயிற்றுக்குப் பட்டம் கட்டியவன்’ இவன்.

 

இப்படிப்பட்ட பெருமைக்குரியவனை ‘தூயோமாய் வந்து, தூமலர்த் தூவித்தொழுது’ என்றார். தூய்மையாய் வருவது இடைப்பெண்களின் உடல் தூய்மை என்று கொள்ள வேண்டுவதில்லை என்பர் உரையாசிரிய வித்தகர்கள்.

 

விபீஷண சரணாகதியில் அவன் கடல் முழுகி வரவில்லை. அர்ச்சனை கீதை கேட்ட குருஷேத்திரத்தில் தீர்த்தமாடி வரவில்லை. திரௌபதி ராஜசபையில் அபயம் கேட்டபோதும் அப்படியே. ஆயினும் உள்ளத் தூய்மையோடு இருந்தார்கள். அல்லவா? அவ்வாறே உடல் தூய்மையினும் மனத் தூய்மையே பக்குவமாதலால் ‘தூயோமாய் வந்து’ என்கின்றார்.

 

தூமலர் தூவிக் கையினால் தொழுது, மனத்தினால் சிந்தித்து, வாயினாலும் பாடுகின்றார்கள். இங்கே மனம், வாக்கு, காயம் என்கிற திரிகரண சுத்தியோடு செய்யப்படுகிற உயர்ந்த வழிபாட்டு நெறி உணர்த்தப்படுகிறது. இப்படித் தன்னை மறந்த லயம் ஏற்படும் உன்னத நிலைமையை இப்பாட்டு எடுத்தோதுகின்றது. இதன் ஒப்பற்ற விளைவு யாதெனில், பூர்வ கர்மங்கள் ஆனாலும் இனிப் புகவிருக்கும் பாவங்களானாலும் அவையெல்லாம் பக்தி நெருப்பில் பஞ்சுபோல் எரிந்து அழிந்து போகின்றது. ‘போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்’ என்று நிலைவுறுகிறது இத்திருப்பாட்டு.

 

நம்பிக்கை மந்திரமாகிறது, திருப்பாவை ஐந்தாம் பாசுரம்.

 

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்

#KSR_Post

20-12-2020

 

 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...