Saturday, January 30, 2021


———————————————————-
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்திக்கும்போதெல்லாம் சோர்வு நீங்க மன அமைதி கிடைக்கும். ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மத்திய முன்னாள் அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களுடன் கிரீன்வேஸ் சாலையிலுள்ள ஜே.கே இல்லத்தில் சந்திதேன். இரண்டு முறை பொது நிகழ்ச்சிகளில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து.
||’’ஜே.கிருஷ்ணமூர்த்தி எப்போது பேசுவதை நிறுத்துகிறாரோ அப்போது அவருக்கு இறப்பு நேரிடும் என்று அவரே 1980ல் ஒருநாள் சொல்லியிருக்கிறார். அவருடைய உடலுக்கு ஒரே ஒரு வேலை மட்டுமே இருந்தது. தன்னுடைய போதனைகளை வெளிப்படுத்துவது ஒன்றேதான் அது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை முடிந்து விட்டது. 1986ம் வருடம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி பசிபிக் ஸ்டாண்டர்டு நேரப்படி மதியம் 12.10க்கு ஓஜெய்யிலுள்ள ‘பைன் காட்டேஜில்’ உயிர் நீத்தார்.
அந்த ‘காட்டேஜில்’ அவர் ஐந்து வாரங்களாக கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு அதனால் அவதியுற்றார். மிளகு மரத்திற்கு எதிராக உள்ள அறையில்தான் இறந்தார்.
65 வருடங்களுக்கு முன்பு, இதே அறையில்தான் தன் நிலையை உணர்ந்த பெரிய மாறுதலை அடைந்திருந்தார்.
கலிபோர்னியாவிலுள்ள ‘வென்துரா’ என்ற இடத்தில் அவருடைய உடல் தகனம் நடந்தது. உடலை எரித்த சாம்பலை மூன்று பாகங்களாகப் பிரித்து ஒன்று ஓஜெய்யிக்கும், இன்னொன்று இந்தியாவுக்கும், மூன்றாவது இங்கிலாந்திற்கும் எடுத்து செல்லப்பட்டது.
இந்தியாவில் அவருடைய சாம்பல் கங்கை ஆற்றிலும் நடு நீரோட்டமான ராஜ்காட்டில், வாரணாசி நதியிலும் இமயமலையின் ஆழத்திலுள்ள, இந்த நதியின் உற்பத்தி ஸ்தலமான கங்கோத்திரியிலும் சென்னையிலுள்ள அடையாறு கடற்கரையிலும் கரைக்கப்பட்டது.
இவருடைய சாம்பல் மெலிதான கட்டுமரத்தில் ஏற்றப்பட்டு வலிமை வாய்ந்த அலைகள் நிறைந்த கடலினூடே எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
ஜே.கிருஷ்ணமூர்த்தி தன் சாவுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். இறந்த பிறகு உடலுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று. பெரிய மரக்கட்டைகள் போன்று, உயிர் இழந்த உடலும், தீ நாக்குகளால் விழுங்கப்பட வேண்டும் என்றிருக்கிறார்.

நான் மிக எளிமையானவன். அதைப்போலவே என்னுடைய இறுதி யாத்திரையும் மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அவருடைய சாவுக்குப் பிறகு ஈமக்கிரியைகளோ இறை வணக்கமோ, பெரிய ஆடம்பரமான ஊர்வலங்களோ, ஆர்ப்பாட்டமோ இருக்கக் கூடாது. அவரை தகனம் செய்த இடத்திற்கு மேல் ஞாபகச் சின்னம் எதுவும் எழுப்பக் கூடாது.
எந்த சந்தர்ப்பத்திலும், போதனைகளைப் போதித்த ‘ஆசான்’ தெய்வப் பிறவியாக கருதப்படக் கூடாது.
‘ஆசான்’ முக்கியத்துவமானவரல்ல. அவருடைய போதனைகளே மிகவும் முக்கியமானது.
அவருடைய போதனைகளே அழிவிலிருந்தும், களங்கத்திலிருந்தும், திரிபிலிருந்தும், பாதுக்காக்கப்பட வேண்டியது. “ போதனைகளைப் பொறுத்த வரையில் வாரிசு, தலைவன் என்ற பேச்சுக்கே இடமில்லை.
என்னை அடுத்து பொறுப்பேற்று எனக்கும் பிரதிநிதியாக என் பெயர் சொல்லிக் கொண்டு என்னுடைய போதனைகளை இப்போதும் எதிர்காலத்தில் எப்போதும் எவரும் சொல்லக் கூடாது.
ஆயினும், தன் நண்பர்களிடம் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், இந்தியாவிலும், இங்கிலாந்திலும், இவர் பெயர் தாங்கி நிற்கும் கல்வி நிறுவனங்கள், அவர் இட்டு சென்ற வழியிலேயே செயல்படலாம் என்று சொல்லியிருக்கிறார்.
அவருடைய அஸ்தியின் ஒரு பகுதி டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அவற்றை விமானத்தின் காலடியில் நின்று பெற்றுக் கொண்டவர் பாபுல் ஜெயகர் என்ற பெண்மணி. அவர் தன்னுடைய வீட்டிற்கு பயணமானார்.
வெளி வாசற்கதவு வழியாக உள்ளே நுழைந்தபோது திடீரென்று கனத்த மழை வரை வரவேற்று அவர் மீது விழுந்தது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அஸ்திக் கலசத்தை அந்தப் பெண்மணியின் வீட்டுத் தோட்டத்திலுள்ள ஆலமரத்தடியில் வைக்கும் வினாடி வரை தொடர்ந்து சில நிமிடங்கள் பெய்தது.
எப்படி திடீரென்று பொழிய ஆரம்பித்ததோ அதேபோல் திடீரென்று நின்றுவிட்டது.
சுவிட்ஜர்லாந்திலுள்ள ரோஜ்மண்டில் ஜூலை மாதம் 1985 ஆம் வருடம் அவரை நெருங்கிக் கொண்டிருக்கும் சாவின் அறிவிப்பு ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உடலில் எழுந்தது. அது தெளிவாக தெரிந்தது.
பாபுல் ஜெயகர் ஜே.கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தபோது, “பிராக்வுட்” பார்க்கில் அதே வருடம் செப்டம்பர் மாதம் பிற்பகுதியில் மேற்குப் பகுதியிலுள்ள சிறிய சமையலறையில், சந்திக்க முடிந்தது.
அப்போது ஜே.கிருஷ்ணமூர்த்தி அவரிடம், சொல்வதற்கு மிகவும் சீரியஸ்ஸான விஷயம் இருக்கிறது என்றும், சுவிட்சர்லாந்தில் இருக்கும் எனக்கு எப்போது உயிர் நீப்போம் என்பது தெரிகிறது என்றும்.....எந்த இடத்தில், எந்த நேரத்தில் என் இறப்பு நேரிடும் என்பதும் தெரியும். ஆனால் யாரிடமும் நான் அதை வெளிப்படுத்தப் போவதில்லை என்று சொன்னார்.
மேலும் சொல்கையில், “என்னுடைய உரு அழிய ஆரம்பித்துவிட்டது” என்றார்.
அதிர்ச்சியான இந்த விஷயத்தைக் கேட்ட பாபுல் ஜெயகர் என்ற பெண்மணி அமைதியாகவே உட்கார்ந்திருந்தார்.
அக்டோபர் 15ஆம் தேதி, வாரணாசிக்குப் போகும் முன்னர் டெல்லிக்கு வந்திருந்தார். சில நாட்கள் ஓய்வெடுப்பதற்காக வந்திருந்தார். அக்டோபர் 29ம் தேதி அப்போதைய துணை ஜனாதிபதியும், நெருங்கிய நண்பருமான, பிற்பாடு பாரத ராஷ்டிரபதியாகவும் பதவி ஏற்ற திரு. ஆர். வெங்கட்ராமனைச் சந்தித்தார்.
பிறகு ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் வீட்டில் விருந்தின் போதும் பாபுல் ஜெயகர் வீட்டில் நடந்த விருந்தின் போதும் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார்.
இந்திரா காந்தி இறந்த ஒரு வருடத்திற்கு பின், ராஜீவ் காந்தி ஜே.கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தது இதுதான் முதல் தடவை. இந்தச் சந்திப்பில் ஒரு ஆழ்ந்த நெருக்கமும், நெகிழ்ச்சியும் இருந்தது.
டெல்லியிலிருந்து வாரணாசிக்குப் பயணம் செய்த ஜே.கிருஷ்ணமூர்த்தி அங்கு குழுமியிருந்த சுமார் மூவாயிரம் பேர் கொண்ட முகாமில் கலந்து கொண்டார்.
வெகுநேரம் ஜோராகப் பெய்த பருவ மழையால் புது வாழ்க்கையில் வரவுக்கான அடையாளங்கள் மரங்களிலும், புதர்களிலும் தெரிகின்றது. ஒளிமிக்க மஞ்சள் பச்சை வண்ண கடுகுசெடிகள், ஆற்றங்கரையில் தோன்ற ஆரம்பிக்கின்றன.
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவருடைய வீட்டில் இருந்தபோது தீபாவளிப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆயிரக் கணக்கான எண்ணெய் விளக்குகள் அவர் குடியிருக்கும் வீட்டைச் சுற்றி ஏற்றி வைக்கப்பட்டன.
கங்கை ஆறு, மிதக்கும் எண்ணெய் விளக்குகள் காரணமாக ஒளி மிகுந்து காணப்பட்டது. மாலைத் தென்றலில் அவ்விளக்குகள் விட்டு விட்டு எரிந்தன.
அங்கு கூடியிருந்த கூட்டத்தில் கிருஷ்ணாஜி பேசினார்.
“வாரணாசிப் பண்டிதர்களிடம் விவாதத்தில் ஈடுபட்டார். வேதாந்த புத்தமத கோட்பாடுகலை நன்கு படித்தறிந்த கல்விமான்களிடம் பேசி கொண்டிருந்தார்.
மேலும் ராஜ்காட்டின் எதிர்காலம் குறித்து அந்நிறுவனத்தின் அங்கத்தினர்களிடம் விவாதித்தார்.
பெனராஸ் இந்து சர்வகலாசாலையில் பெளதீக ஆசிரியராக இருந்த ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு பல வருடங்கள் தெரிந்த பேராசிரியர் கிருஷ்ணா என்பவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, “ ராஜ்காட் கல்வி நிறுவனத்தின்” தலைவராக அமர ஒத்துக் கொண்டார்.
ஆர். உபசானி, மகேஷ் சாக்ஸேனா என்ற இரு யாத்திரிகர்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தி அந்த நிலத்தை சுற்றி பார்க்கும்போது தாங்களும் அவருடன் சேர்ந்து சுற்றி பார்த்தார்கள்.
உழவர்களையும், யாத்திரிகர்களையும் பார்த்ததும், சிரித்தும், அந்தப் பழமையான நகரின் நாடித்துடிப்பைக் கேட்டும் வந்தார்.
முப்பது வருடங்களாக ராஜ்காட்டில் வாழும் உபசானி நில வேலைகளை கவனித்துக் கொண்டு வந்தார்.
அவரின் பொறுப்பும், கரிசனமும், அவரை ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு வெகு அருகில் கொண்டு சென்றது. புதிதாக வந்த மகேஷ் ஸேக்ஸான் என்பவர் முன்னாள் மத்திய போலீஸின் தலைமை அதிகாரியாக டெல்லியில் இருந்தவர்.
வளைந்து கொடுக்கக் கூடிய உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் சேக்ஸானா தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காவி உடை உடுத்தி, ”உண்மை”யைத் தேடிச் செல்பவராக ஆனார்.
பல வருடங்கள் ஹிமாலயத்திலேயே வாழ்ந்தார். அதன் பிறகு ராஜ்காட் வந்தடையும் வரை, ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து உண்மையை தேடிக் கொண்டிருந்தார்.
அவருடைய தோற்றமும், ஆழ்ந்த நிலையும், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அருகாமைக்கு அவரை இட்டு சென்றது.
உடனே அவரும், அந்த நிறுவனத்தில் சேர்ந்து, அதனுடைய செயலாளராக ஆனார். ‘’
(செண்பகா பதிப்பகம் வெளியிட்ட ஜே.கே நூலிலிருந்து சில பகுதிகள்.)
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
24-12-2020

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...