“தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உம்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!”
................
பதவுரை
தூமணி - பரிசுத்தமான ரத்தனங்களால் செய்யப்பட்ட,
மாடத்து - மாளிகையில்,
சுற்றும் - நான்கு பக்கங்களிலும்,
விளக்கு எரிய - தீபங்கள் ஜொலிக்க
தூபம் கமழ - அகில் சந்தன கட்டைகளின் புகை வாசனை வீச,
துயில் - உறங்கப் பண்ணும் ஸ்வபாமுள்ள,
அணைமேல் - படுக்கையின் மேல்,
கண் வளரும் - கண்ணுறங்குகிற,
மாமான் மகளே - அம்மான் பெண்ணே,
மணி - ரத்நமயமான,
கதவம் - கதவுகளுடைய
தாள் - தாழ்ப்பாளை
திறவாய் - திறக்கவேணும்,
மாமீர் - மாமிமாரே,
அவளை - உன் பெண்ணை,
எழுப்பீரோ - எழுப்பக் கூடாதோ?
உன்மகள்தான் - உன்னுடைய பெண் தான்.
ஊமையோ - பேச முடியாத ஊமையோ,
அன்றி - அல்லது,
செவிடோ - காது இல்லாதவளோ,
அனந்தலோ - சோம்பலுள்ளவளோ,
ஏம - எழுந்திராதபடி பயங்கரமான,
பெரும் துயில் - பெரிய உறக்கம் கொள்ளும்படி,
மந்திரப்பட்டாளோ - மந்திரவாதம் செய்யப்பட்டாளோ,
மாமாயன் - அளவில்லாத, சேஷ்டிதங்களையுடையவன்,
மாதவன் - லக்ஷ்மி தேவியின் பர்த்தா,
வைகுந்தன் - ஸ்ரீவைகுண்டநாதன்,
என்று என்று - என்று இம்மாதிரியாக
நாமம் பலவும் - எல்லா நாமங்களையும்
நவின்று - சொன்னோம்,
ஏல் ஓர் - எம்பாவாய்.
............................................
“தூய்மையான மாணிக்கக் கற்களால் இழைக்கப்பட்ட மாளிகையைச் சுற்றி விளக்குகள் எரிகிறது. மணம் வீசும் தூபம் கமழ்கிறது.
அங்குள்ள படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் மாமன் மகளே. உன் வீட்டின் கதவுகளைத் திறந்திடு.
மாமியே..! உன் மகளை எழுப்ப மனமில்லையா..?
உன் மகள் எதுவும் பேசாத ஊமையா? அல்லது எச்சொல்லும் கேட்கவியலாத செவிடா?
நீண்ட உறக்கம் கொள்பவளா? அல்லது உறங்குவதற்கான மந்திரத்தால் கட்டப்பட்டவளா..?
அந்த மாயக் கண்ணனை, மாதவனை வைகுண்டத்தில் வாழும் வேங்கடவனை நாங்கள் பாடுகிறோமே..!
இதைக் கேட்டாவது உன் மகள் துயிலெழக் கூடாதா...?”
என்று துயிலெழாமல் உறங்கும் ஆயர்குலப் பெண்ணை துயிலெழுப்பப் பாடுகிறாள் கோதை.
..........................................
இத்திருப்பாவைப் பாடலில் துயிலெழுப்பப் படுபவள் கண்ணனிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்ட பெருமைக்குரியவள். ‘அவனது உரிமைப் பொருளான நம்மை அழைத்துக் கொண்டு போவது அவனுக்கே உரிய பொறுப்பன்றோ? என்று உறங்கி கிடந்தாள்.
செல்வச் சீமாட்டியாய்த் திகழும் இவளது திருமாளிகையின் எழிலெல்லாம் துலங்கும்படி சொல்லி இவளை அழைக்கின்றார்கள். குற்றமில்லாத நவரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாட மாளிகையாதலால் இயல்பாகவே சுடர்விடும் இல்லம் இவளுடையது. இங்கு இவளே ஒரு ரத்தினம் போல் ஒளிவீசும் பாவை. அதற்கும் மேலாக எங்கு பார்த்தாலும் இந்தத் திருவிளக்குப் போல் அவளைச் சுற்றி பல விளக்குகள் எரிகின்றன.
இன்னும் அம்மனை முழுதும் சந்தனமும், அகிற்புகையும் கமழ்ந்து நறுமணம் வீசுகின்றன.அவள் படுத்துறங்கும் மெல்லணையோ கிடந்த மாத்திரத்தில் உறக்கத்திற்கு இட்டுச் செல்லும் இனிமையுடையது. அதனால் துயில்வது என்பதே ஒரு சுகமாகவும் சம்பத்தாகவும் உடையவள் இவள். இன்னும் இவள் நெருக்கமான உறவுக்குரிய மாமன் மகளாகவும் இருக்கிறாள். இத்தனையும் சொல்லி இவளைத் துயிலெழுப்பினார்கள்.
“தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே”
இவள் மீண்டும் சோம்பலாய் உறங்கி இருக்க செல்வமணிக் கதவாதலால் ‘நீயே திற, எங்களால் திறக்க ஒண்ணாது’ என்றும் செப்புகின்றார்கள். அப்போதும் இவள் பதில் பேசவில்லை.
இவளிடம் பேசித் தோல்வியே கண்டோம். ஆதலால் இவளது தாயாரைக் கெஞ்சியேனும் கதவு திறந்து இவளைக் காண வேண்டும் என்னும் அவாவினாலே, ‘மாமீர் அவளை எழுப்பீரோ?’ என்று வேண்டி நின்றார்கள். அப்பொழுதும் பனிதலைப் பெய்ய நின்றார்க்கு இனித்தலைத் தடும் மறுமொழி ஏதும் கிடைக்கவில்லை.
இப்போதும் அவர்கள் சலித்துப் போகாத முயற்சி உடையவர்களாய் மாமியிடம் கேட்கிறார்கள். ‘மாமீர், உங்கள் பெண் எங்கள் விண்ணப்பங்கள் கேட்டும் பதில் கூறாமையால் அவள் ஒரு ஊமையோ? அப்படியே ஊமையாக இருந்து பேச முடியாவிட்டாலும் எழுந்து வந்து நாங்கள் பேசுவதைச் செவிகளாரக் கேட்கவும் கூடாதா? அல்லது அவள் செவிடும் ஆனவளோ? அல்லது அவள் கட்டும் காவலுமாய்ச் சிறைப்பட்டு கிடக்கிறாளா? அல்லது யாராவது பெருந்துயிலில் கிடக்கும்படியாக மந்திரம் போட்டு மயக்கி விட்டார்களா?’ என்று இவளது தாயாரிடம் பேசுவது போல இவளும் கேட்கும்படி குறை கூறுகிறார்கள்.
“ஊமை, செவிடு” என்றெல்லாம் சொன்னால் கோபித்துக் கொண்டு மறுவார்த்தை சொல்லுவாளோ? என்று பார்த்தால் இவள் அதற்கும் மசிந்து கொடுப்பவளாய் இல்லை. அவர்களும் அசைந்து கொடுப்பவர்களாய் இல்லை.
அப்போது இவள் தாயார், ‘போகட்டும் பெண்களே, என் மகள்தான் மந்திர வசப்பட்டு மயங்கிக் கிடப்பதாகவே இருக்கட்டும், மயங்கியவர்களைத் தண்ணீர் தெளித்து எழுப்புவதன்றோ முறை’ என்கின்றார்.
உடனே அப்பெண்கள் ஆன்மாவின் மயக்கத்தைத் தெளிவிப்பதெல்லாம் அப்பெருமானின் திருநாமங்கள் அல்லவோ என்று எண்ணியவர்களாய், ‘மாமாயன் மாதவன், வைகுந்தன் என்று நாமம் பலவும்’ நவில்கின்றனர். நவிலுதல் என்றாலே இனிமையாகச் சொல்லுதல் என்று பொருளல்லவா? சித்தம் இனிக்க, செப்பும் இதழ் இனிக்க குண விசேடங்களால் மனங்கவரும் மாமாயன் என்றும், திருவின்கேள்வனான மாதவன் என்றும், பரமபதத்திற்குரியவனான வைகுந்தன் என்றும் போற்றி செய்கின்றார்கள்.
இந்தத் திருநாமங்களைக் கேட்டு நெஞ்சம் சிலிர்ப்பதற்காகவன்றோ இவளொருத்தி உறங்குவதுபோல் பாவனை செய்திருந்தாள். இப்போது இவளும் அவர்களோடு சேர்ந்து கொள்ள நாமம் பலவும் நவின்று திளைக்கின்றார்கள்.
பரம பாகவதர்களாகிய அடியார்களோடு திவ்யத் திருநாமங்கள் சொல்லும் பேரின்ப பெருக்கை நாமும் அனுபவிக்குமாறு செய்கின்றார் ஆண்டாள் நாச்சியார்.
No comments:
Post a Comment