Friday, January 22, 2021

 · 

விவசாயிகள் ஒன்றிணையச் சிந்தித்தது உழைத்த தலைவர் நாராயணசாமி நாயுடு அவரர்கள் நினைவைப் போற்றி வணங்குவோம்.
இந்த படத்தில் இருப்பதுதான் நாராயணசாமி நாயுடுவின் வையம்பாளையம் வீடு. இன்னொரு படம் அந்த வீட்டின் கூடம். இந்த வீட்டில் மின்சாரம் வசதி இருந்தும், அதை பயன்படுத்தாமலே நாயுடு வாழ்ந்து வந்தார். இந்த கூடத்தில் வைத்துதான் பிரதமர் இந்திரா காந்தி, நாயுடுவை சந்தித்தார். எம்.ஜி.ஆரும் அவரை சந்திக்க இங்கே வர முயன்றார். பலமுறை இந்த கூடத்தில் நாயுடுவோடு அமர்ந்து பேசியதும், உணவு உண்டதும் என் நினைவில் இன்றைக்கும் இருக்கின்றது. இந்த கூடத்தில், நெடுமாறன் அவர்களோடு அமர்ந்து பல விஷயங்களை பேசியது நினைவுக்கு வந்து செல்கிறது. எளிமையாகவே வாழ்ந்தார். நாயுடு முயற்சியின் விளைவாகதான் இந்தியாவிலேயே உழவர்கள் ஒற்றுமை வலுப்பெற்று அகில இந்திய அளவில், விவசாயத் தலைவர்கள் தோன்றினார்கள்.
உத்திரப்பிரதேசத்தில் திக்காயத் தலைமையிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் ஜோசி தலைமையிலும், கர்நாடகத்தில் நஞ்சுண்டசாமி தலைமையிலும், ஆந்திரத்தில் வெங்காள் ரெட்டி தலைமையிலும் விவசாயிகளுக்காக அந்தந்த வட்டாரங்களில் குரல் எழுப்பினார்கள்.
நாயுடு விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடியவர், எந்த பதவிகளுக்காகவும், தன்னை முன்னிறுத்தவும் இல்லை. அவர் வாழ்வே ஒரு போராட்டம். அவர் வாழ்க்கை வரலாறு, தன்னலமற்ற நேர்மையான அரசியல் களப்பணியாளருக்கு முன்மாதிரி.
•••••




21-12-1984
விவசாய போராட்டங்களை முன்னெடுத்து அவர் நடத்தியபோது,கல்லூரிகளில் மாணவர் அமைப்புகளை அடியேன் ஏற்படுத்தினேன் .சென்னைக்கு வந்தால் சுவாகத், Old woodlands ஹோட்டலில் தான் அவர் தங்குவார் . மாலையில் என்னுடைய இருப்பிடமான 39 ,சாலைத்தெரு மயிலாப்பூர்க்கு வருவார் . அங்கு என்னொடு தங்கி இருந்த விடுதலை புலிகளின் தலைவர் #பிரபாகரனும் இவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொள்வார்கள. கொங்கு மண்டல கிராமப்புற மொழியில் இவர் பேசுவதை பிரபாகரன் ரசித்து கேட்ப்பார் .
தம்பி எனக்கு ஒரு நல்ல துப்பாக்கி ஒன்றை குடு என்று பிரபாகரனை கேட்டுக்கொண்டே இருப்பார் . சில சமயங்களில் மறைந்தபத்திரிக்கையாளர் சோலையும் அங்கு வருவார் .
என்னுடைய சமயல்காரர் சீனி செய்துகொடுக்கும் அடையும் வடையும் அவருக்கு பிடிக்கும் . அப்போது நான் பயண்படுத்தும் தொலைப்பேசி எண் 75159,STD வசதியோடு இருந்தது . அதையும் அங்கே இருக்கும் போது அதை பயன்படுத்திக்கொள்ளவும் அவருக்கு வசதியாக இருந்தது. மூத்தபத்திரிக்கையாளர்கள் ஏ.என் . சிவராமன் , கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் ,விகடன் குழும தலைவர் பாலசுப்பிரமணியம் ,இந்து என் ராம் போன்றோர்களிடம் இவரை துவக்ககட்டத்தில் அழைத்து சென்றதுண்டு , விவசாய சங்க போராட்டத்தின் காரண காரியங்களை அவர்களிடம் தெளிவாக எடுத்து சொன்னார் .


விவசாயசங்க வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் கவனித்துக்கொண்டேன் .விவசாயிகள் மீது ஏவபட்ட #ஜப்தி நடவடிக்கைகளை தடுத்தும் , #விவசாயிகளின் கடன் நிவாரண சட்டங்களில் உரிமைகள் கிடைக்க கூடிய வகையில் வாதாடி விவசாயிகளுக்கு நிவாரணம் அடியேன் 1970,80களில் பெற்று தந்தேன் . கோவில்பட்டி பயணியர் விடுதியில் மாரடைப்பால் நாராயணசாமி நாயுடு இறந்த காலத்தில் (1984)அங்கு அவரோடு இருந்தவன் .கோவில்பட்டி பயணியர் விடுதிக்கு செல்லும்போது எல்லாம் பின் பக்கம் உள்ள வடக்கு பார்த்த அறையை பார்த்தாலே நாராயணசாமி நாயுடு நினைவு வரும் .
#கோவில்பட்டியில் அவர் மறைந்ததால் அங்கு அவரின் முழு உருவ சிலையை வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் . அவர்குறித்தான முழு வாழ்க்கை குறிப்புகளை என் சமுகவளைதளத்தில் பலதடவை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் .


•••••
“மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்”
என்று New York Times போன்ற உலகப் பத்திரிக்கைகள் எழுதக் காரணமான,
கோயம்புத்தூர் விவசாயிகளின் மாபெரும் மாட்டுவண்டி போராட்டத்தை
வெற்றிகரமாக ஜூன் 1972ல் நடத்திய நாராயணசாமி நாயுடுவை
தலைவராகக் கொண்டு, முதன்முதலாக
“தமிழக விவசாயிகள் சங்கம்”
துவங்கப்பட்ட தினம் 13 நவம்பர் 1973.
1970ல், அன்றைய தமிழக அரசு, மின் கட்டணத்தை, யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 1970ம் ஆண்டு மே 9ல் பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள், கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்கள். நகரம் அதிர்ந்தது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறாவிட்டால், ஜூன் 15ல் அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டமும், ஜூன் 19ல் பந்த்தும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
போராட்டத்தின் உச்சத்தில், அரசாங்கம் ஒடுக்குமுறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள் அரசைப் பணியவைத்தன. மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. கடன் வசூல், தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதன் காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே, மாநில அரசு, மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 01.01.1972 முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்ட விவசாயிகள் முதலில் கிளர்ந்தெழுந்தனர். 1972 மார்ச்சில் 12 கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து, நிறைவேற்றக் கோரினார்கள் விவசாயிகள். 15.04.1972குள் நிறைவேற்றக் கெடு விதித்தார்கள்.
மே 9ல் மறியல் தொடங்கியது. போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நகரவாசிகள் தினமும் வாங்கும் காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள், நகரங்களுக்கு அனுப்புவதை 02.06.1972 முதல் 04.06.1972 வரை நிறுத்தினார்கள். இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தனர்.
இதற்கும் அரசு பணியாததால் கோவை விவசாயிகள், அன்று புதுமையாக, மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள், கோயம்புத்தூரின் பிரதான சாலைகளிலும், தெருக்களிலும், அரசு அலுவலகங்களுக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோயம்புத்தூர் நகரமே ஸ்தம்பித்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் விவசாயிகளைப் பாராட்டி, ‘மாட்டு வண்டிகள், இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்’ என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. இதற்குக் காரணமாக இருந்த பல தலைவர்களில் நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர், டாக்டர் சிவசாமி போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். அப்போது, இதன் மாணவர்
அமைப்பை பல கல்லூரிகளில் அமைத்தேன்.


போராட்டத்தின் விளைவை உணர்ந்த அரசு, பணிந்தது. நாராயணசாமி நாயுடு தலைமையில் 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்படி, ஜூலை 19 ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக, மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.


பின்னர் ‘தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு நாராயணசாமி நாயுடு இதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாராயணசாமிநாயுடு
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-12-2020.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...