Saturday, January 30, 2021


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்,
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே,
புற்றர வல்குல் புனமயிலே ! போதராய்,
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி !, நீ
ஏற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
---------------------------
பதவுரை
கன்று – தலையீற்றுக்களாயிருக்கிற, கறவை – பசுக்களுடைய, பல – அநேக, கணங்கள் – சமூகங்களை, கறந்து – (முலைக்கடுப்புத்தீரும்படி) கறப்பவனாயும், செற்றார் – தம்பெருமை பொறாத பகைவர்களுடைய, திறல் – பலம், அழிய – நசிக்கும்படி, சென்று – அவர்களிருந்த இடத்திற்கு போய், செருச்செய்யும் – போர் செய்யுமவனாயும், குற்றம் – தோஷங்கள், ஒன்று – ஒன்றும், இல்லாத – இல்லாதவனுமான, கோவலர்தம் – கோபாலனான ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு, பொற்கொடியே – பொன்கொடி போல் மிகவும் ஆசைப்படும்படியான வடிவையுடையவளே, புற்று அரவு – புற்றில் கிடக்கும் பாம்பின் படமும் கழுத்தும் போலே ஒளியையும் அகலத்தையுமுடைய, அல்குல் – ஜகநத்தையுடையவளே, புனம் – காட்டில் தன்னிச்சைப்படி திரிகிற, மயில் – மயிலின் தோகை போன்ற அளகபாரத்தையுடையளே, போதராய் – புறப்பட்டு வாராய் (என்றழைக்க நான் புறப்படும்படி எல்லோரும் வந்தார்களோ என்ன), சுற்றத்து – பந்துக்களான, தோழிமாரெல்லாரும் – எல்லாத் தோழிகளும், வந்து – திரண்டுவந்து, நின்முற்றம் புகுந்து – உன் திருமுற்றத்திற்கு புக்கு, முகில்வண்ணன் – நீலமேகஸ்யாமளனான ஸ்ரீ க்ருஷ்ணனுடைய, பேர் – திருநாமங்களைப், பாட – பாடச்செய்தேயும், செல்வம் – க்ருஷ்ணகுணானு ஸந்தாநமாகிற ஸம்பத்தையுடைய, பெண்டாட்டி – பெண் பிள்ளாய், நீ – நீ, சிற்றாதே – அசையாமலும், பேசாதே – பேசாமலும், என் – என்ன, பொருளுக்கு – ப்ரஜோநத்துக்காக, உறங்கும் – உறங்குகிறாயென்கிறார்கள்.
“கன்றுகள் ஈன்று அதிகம் பால் சுரக்கும் பசுக்களை உடையவர்களும், பலம் மிக்க பகைவர்களானாலும் அவர்களது இடத்திற்கே சென்று பகைவர்களை அழிக்கும் வீரர்களுமான ஆயர்குலத்தில் தோன்றிய பொற்கொடி போன்ற அழகிய பெண்ணே.
புற்றிலிருந்து வந்து படமெடுக்கும் பாம்பின் கழுத்திற்கு நிகரான மெல்லிடையும், கானக மயிலைப் போன்ற சாயலையும் உடையவளே.. விழித்தெழுந்து வருவாயாக.!
தோழியர் நாங்கள் அனைவரும் உனது வீட்டு முற்றத்தில் நின்றபடி கார்மேகக் கண்ணனின் திருநாமங்களைப் போற்றிப் பாடுவதைக் கேட்டப் பின்னும், நீ சிறிதும் அசையாமல், பேசாமல் உறங்குவது ஏனோ திருமகளே.!” என்று தோழியிடம் கேட்கிறாள் கோதை..!
-------------
கண்ணன் ஊருக்கெல்லாம் ஒரு பிள்ளை என்று பெயர் பெற்றது போன்று அவ்வாயர்பாடியில் ஊரே மெச்சத் தகுந்த ஒரு பெண்பிள்ளையாக விளங்கினாள் ஒருத்தி. அவனன்றோ என்னைத் தேடி வர வேண்டும். நான் ஏன் நோன்பு நோற்க வேண்டும் என்று வைகறைப் பொழுதில் உறங்கிக் கிடந்தாள். அவளை எழுப்ப முற்படுகிற ஆய்ப்பாடிப் பெண்களின் முயற்சியைக் கூறுகிறது இப்பாசுரம்.
கன்றுகளாய் இருக்கும் காலத்திலேயே கறவையாய்ப் பால்பொழியும் பசுக்கள் நிரம்பியது ஆயர்கள் மனை. இப்பசுக்கள் கண்ணன் திருக்கரம்பட்டு இளங்கன்றுப் பருவத்தே கறவைகளாகிப் பால் சொரிந்தன. அல்லது கண்ணன் கைபடும் காரணத்தால் கறவைப் பசுக்களும் கன்றுகள் போல் இளமை கொண்டன போலும், இத்தகைய கறவைகள் எண்ணி முடியாதனவாய்ப் பல்கிப் பெருகியுள்ளன. எனினும் இப்பசுக்கள் ஒருவனே அடக்கி கறக்கும் வலிமை மிக்கது ஆயர்குலம்.
பகைவர்களின் ஆற்றல் அழியும்படி அவர்கள் இருப்பிடம் சென்று போரிடும் குற்றமற்ற வீரர்கள் நிரம்பியது இடைக்குலம். கண்ணன் பெருமை பொறாதவர்களே இவர்களுக்குப் பகைவர்களாம். படையெடுத்துப் பகைவர் வருதல், புறமுதுகு காட்டுதல், நிராயுதபாணிகளுடன் போரிடுதல் முதலிய குற்றங்களை எள்ளளவும் புரியாதவர்கள் இவ்வீரர்கள், இந்த ஆயவீரர்களின் மரபிலே வந்த பொற்கொடி இவ்வில்லத்தின் செல்வி, காண்பதற்கு இனிமையுடையள் என்பதாலும், கணவனாகிய கொழு கொம்பின்றி வாழாதவள் என்பதாலும் ‘பொற்கொடியே’ என்று அழைக்கிறார்கள்.
’கோவலர் தம் பொற்கொடியே, நீ புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலை உடையவள், பெண்களையும் ஆண்களாக ஆக்கும் அவாவைத் தூண்டும் அழகி எனக்காட்ட இவ்வாறு அழைக்கின்றார்கள். மேலும் அவள் காட்டு மயிலைப் போன்று கண்ணனையும் தங்களையும் பித்தேற்றும் கூந்தலையும் சாயலையும் கொண்டவள். அவளைத் தாங்கள் உகக்கும்படி நடந்து காட்டாய் என வேண்டிப் ‘போதராய்’ என விண்ணப்பிக்கின்றனர்.’

‘நான் புறப்பட்டு வருவது இருக்கட்டும் எல்லோரும் வந்து விட்டார்களோ’ என்று அவள் கேட்கின்றாள். அதற்கு விடையாக, ‘இந்த ஊரங்கலும் இருக்கின்ற உன் சுற்றத்தார் எல்லோரும் உன்னுடைய முற்றத்திற்கு வந்துள்ளனர். நீயும் நேசிக்கும் கொண்டல் வண்ணனாகிய கண்ணன் திருநாமத்தை அனைவரும் பாடுகின்றோம். ஆனாலும் நீயோ அவனை நினைத்து அசைவுறாமலும் பேசாமலும் உறங்குகின்றாயே’ என்றனர் ஆயர்குல மகளிர். (சிற்றாதே சிதறாதே- அசையாமலும் பேசாமலும்)
‘எங்களுக்கு மட்டுமன்று, ஊருக்கெல்லாம் ஒரு பெண் பிள்ளையாகிய செல்வமன்றோ நீ? இவ்வாறு கண்ணையும் செவியையும் பட்டினி போட்டு உறங்குவது ஏனோ?’ என்றும் வினாவினார்கள். ‘கண்ணன் குணங்களை எண்ணும் செல்வியான நீ, அதே பணியில் உள்ள எங்களோடு கூட வேண்டாமோ? எங்களை மகிழ்விக்க வேண்டாமோ? இவ்வின்பப் பயனைப் பகிர்ந்து கொள்ளாமல் உறங்குகின்றாயோ’ என்ற கருத்தில் ‘எற்றுக்குறங்கும் பொருள்?’ என ஆற்றமையால் கேட்கின்றனர் இடைக்குலப் பெண்கள்.
இப்பாசுரத்திள் கண்ணன் இருக்கும் கோகுலத்தில் கறவைகள் சிறந்துள்ள வளமும், அவன் அன்பிற்குரிய கோவலர் குற்றமில்லாத வீரமும் வியந்துரைக்கப்படுகிறது. கண்ணனின் பேரன்புச் செல்வம் பெற்றாள் ஒருத்தியின் உறுப்பழகும் சாயலும் மெச்சப்படுகின்றன. வாழி வழங்கும் மாரி முகில் போன்றவன் கண்ணன் என்பது சுட்டப்படுகின்றது.
கண்ணன் திருநாமத்தை விதந்தோதுதலும், புகழ்ந்து பாடுதலும் வாழ்வின் பயன் என்பதை எடுத்தோதுகிறது இப்பாசுரம்.
கண்ணிடம் கொண்ட காதலும் பிரேமையும் அன்பு கொண்டார் அனைவரும் பகிர்ந்து கொண்டாடத் தக்கது என இப்பாசுரம் போற்றுகின்றது.
‘பிருந்தவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வம் அன்றோ ?’
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
25.12.2020

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...