மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்,
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு,
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்”
பதவுரை
கீழ்வானம் - கிழக்கு திக்கில் ஆகாயம்.
வெள்ளென்று - வெளுத்தது.
எருமை - எருமைகள்,
சிறுவீடு - புறம்போக்கு நிலங்களில்,
மேய்வான் - மேய்வதற்காக,
பரந்தனகாண் - பரவலாகப் போகின்றன.
மிக்குள்ள - உன்னைத் தவிர மற்றுள்ள,
பிள்ளைகளும் - இளம்பெண்களை,
போவான் போகின்றாரை - நோன்புக்குப் போவதே பிரயோஜனமாகக் கருதி போகிறவர்களை,
போகாமல் - போகாதபடி,
காத்து - தடுத்து வைத்து,
உன்னை - உன்னை,
கூவுவான் - கூப்பிடுவதற்காக,
வந்து நின்றோம் - உன் வாசலிலே வந்து நின்றுவிட்டோம்.
கோது ஹலமுடைய - கெளதூகலம் உடைய (உத்ஸாஹமுடைய)
பாவாய் - பெண்ணே,
எழுந்திராய் - எழுந்திருக்க வேணும்,
மாவாய் - கேசி என்கிற குதிரையின் வாயைப் பிளந்தவனும்,
மல்லரை - முஷ்டிகள் முதலிய மல்லர்களை,
மாட்டிய - அழியச் செய்தவனுமான,
தேவாதி தேவனை - தேவர்களுக்கு முழு முதல் தேவனை,
பாடி - பாடி
பறைகொண்டு - பறை முதலிய வாத்தியங்களை எடுத்துக் கொண்டு,
நாம் சென்று - நாம் அவனிருக்குமிடம் சென்று,
சேவித்தால் - வணங்கினால்,
ஆராய்ந்து - நம் குறைகளை அவன் ஆராய்ந்து பார்த்து,
ஆ - ஆ என்று அருள் - ஹா-ஹா ஐயோ என்று இரங்கி கிருபை செய்வான்.
ஏல் ஓர் - எம்பாவாய்.
..............................................................
“கிழக்கு வானம் வெளுத்து பொழுது புலர ஆரம்பித்துவிட்டது. பனி படர்ந்த சிறு புல்வெளிகளில் மேய்வதற்கு எருமைகள் கிளம்பிவிட்டன.
ஆயர்குலப் பெண்களும், பாவை நோன்பிற்குப் புறப்பட்டு விட்டனர். உன்னையும் எங்களோடு அழைத்து செல்வதற்காக சில தோழியரைத் தடுத்து நிறுத்தி, உன் வாசலில் வந்து நிற்கின்றோம்.
குதூகலம் நிறைந்த பெண்ணே.....இனியும் உறங்காது எழுந்திரு......
கேசி என்ற அரக்கனின் வாயைக் கிழித்துக் கொன்றவனை, கம்சனால் ஏவி விடப்பட்ட மல்லர்களை அழித்தவனை, தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனை, நமது மனம் கவர் கண்ணனைப் போற்றிப் பாடிட.............
‘ஆஹா’............என்று அவன் மனம் குளிர்ந்து, நமக்கு அருள் அனைத்தும் தருவான்...!”
என்று தனது தோழியை அழைக்கிறாள் கோதை...!
.....................................
ஆய மடமகளிர் தூய உள்ளத்தோடு ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அன்புத் தோழியர்களை எழுப்பிக் கொண்டே வருகின்றார்கள். கண்ணனுடைய அன்பை முழுமையாகப் பெற்று மகிழ்ந்தாள் ஒருத்தியை இப்பாடலிலே துயிலெழுப்புகின்றார்கள்.
இவளிடத்திலே முன்னையோரிடம் வாய் கொடுத்து அகப்பட்டுக் கொண்டாற்போல் அகப்படலாகாது என்று எச்சரிக்கை கொண்டார்கள். ஆதலினாலே விடியற்காலைக்கு அடையாளமாகக் ‘கிழக்கு வானமே வெளுத்துப் போய் விட்டது காணாய்’ என்கிறார்கள்.
ஆனால், இவளோ அவர்களைக் காட்டிலும் அழுத்தம் மிக்கவள் என்று சித்தரிக்கிறார் வில்லிபுத்தூர் செய்த தவக்கொழுந்து ; அவரையே மணவாள மாமுனிகள் ‘பிஞ்சிற் பழுத்தாள்’ என்பார் அல்லவோ? ஆதலால் இவளையும் கைகாரியாகக் காட்டுகின்றார் அன்ன வயல் புதுவை ஆண்டாள்.
கிழக்கு வானம் வெளுத்ததன்றோ?’ என்ற மாத்திரத்தில் இவள் சிந்தித்துக் கொண்டு சொன்னாளாம். ‘நீங்கள் தாம் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் ஆயிற்றே, அதனால் உங்கள் முகத்தின் ஒளி பிரதிபலித்துக் கிழக்கு வானத்திலும் வெளிச்சம் உண்டாகி இருக்கலாம்’ என்று உறங்குபவளே, இன்னும் கேள்- ‘கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண்’ - எருமைகளும் பனிப்புல் மேய்வதற்குப் புறப்பட்டு விட்டன என்றார்க்கு இவள் சொல்லுகின்றாள். ‘நான்தான் ஏற்கனவே சொன்னேனே, அப்படிப்பட்ட உங்கள் முகச்சோதியினாலே சிதறிப் போகிறது இருளின் கூட்டம். அதனைத்தான் எருமைகள் என்று அறியாது சொல்லுகின்றீர்கள் போலும்’ என்று வம்பு பேசுகின்றாள்.
‘மெய்யாகவே எருமைகள் மேய்வான் பரந்தன’ என்று அவர்கள் சத்தியம் சொன்னார்கள். அப்போது இவள், ‘எருமைகள் போனால் மேய்ப்பானாய் நம் இலட்சியமானவனும் போயிருப்பானே. இனி அவனைத் தேடிப் போவதில் என்ன பயன்?’ என்று முணுமுணுக்கிறாள்.
உடனே அழைக்க வந்த தோழியர்கள் விடாப்பிடியாக ‘மிக்குள்ள பிள்ளைகள்’ - உன்னைத் தவிர மற்ற பெண்கள் எல்லாரும் முன்பே போய் விட்டார்கள். அதனால் அவன் தப்பிப்போக மார்க்கமில்லை’ என்கின்றனர். அப்படியானால் என்னை அழையாமலும் போனார்களே என்றாள் இவள். ‘இல்லையடி பெண்ணே அப்படிப் போகின்றபோது இன்னார் வரவில்லை, என்று சொன்னோம். உடனே அத்தனை பேரும் ஒன்று சொன்னாற்போல் உன்னை விட்டுப் போவதில்லை என்று உன் வாசலில் வந்து நின்று விட்டோம் என்கிறார்கள்.
எல்லோர்க்கும் கண்ணனோடு உறவு இருக்கும்போது என்னை ஏன் வலிந்தழைக்கிறீர்கள்? என்கின்றாள் இவள். ‘அடடா உன்னைப் பார்த்தால் கண்ணனைப் பார்த்தது போல் மங்கலமன்றோ? அந்த அளவுக்கு கண்ணனால் உச்சிமேல் வைத்து கொண்டாடப்பட்ட கோதுகலமுடைய பாவை நீயன்றோ?” என்று இவளை மெச்சி பூரித்து நின்றார்கள்.
எழுந்திருந்த பின் செய்வதென்ன? என்று இவள் கேட்கிறாள். முன்பு நாம் கண்ணனை நெஞ்சுக்குள் மறைத்து வைத்து நேசித்தோம். இனி நாட்டார் அறிய நெஞ்சிலே பொங்கும் கிருஷ்ணப் பிரேமைக்கும் அணைக்கட்டி வாய்க்காலும் வெட்டி அவன் புகழைப் பாடுவோம். அவனைச் சேவிக்கும் பலனாகிய பறை கொள்வோம் என்கின்றார்கள்.
அவனும்தான் உலகைக் காக்கும் பொருட்டாகக் கேசியை வாய் பிளந்தவன். சாணூர முட்டிகரான மல்லரை அழித்தவன். ‘மாவாய் பிளந்து மல்லரை மாட்டிய தேவாதி தேவன்’ இப்படி உயர்ந்து நிற்கும் அவன் எளிய ஆய்ப் பெண்களின் வேண்டுகோளுக்கும் செவி தருவானோ? என்ற ஐயத்தை எழுப்புகின்றாள் இவள்.
’அவன் இருந்தபடியே இருக்கும் இடத்திற்கு சென்று நாம் சேவிப்போம் காதல் மிகுதியால் குறைக் கொள்ளியான நம், உடலை அவன் கண்டு புண்படும்படி நாம் செல்லுவோம் என்கின்றார்கள். அவ்வாறு சென்றால், நாம் சென்று அருள வேண்டிய இவர்கள் நம்மைத் தேடி நம்மிடத்திலே வந்தார்களே என்று கண்ணன் அருள்புரிவான் அன்றோ? - “ஆஆவென் றெழுந்து அருளேலோர் எம்பாவாய்’ என்று நம்பிக்கையுடன் பேசுகின்றார்கள்.
இறைவன் அருமையும் அவனை விடாது நாடுங்கால் அவன் தவறாது கொடுக்கும் அருளினது பெருமையும் பாவைப் பாட்டின் சாரமாகின்றன.
No comments:
Post a Comment