Saturday, March 31, 2018

சமீபத்தில் காவிரிப் பிரச்சனை குறித்து மின்னம்பல இணைய இதழில் வெளியான என்னுடைய கட்டுரை.

காவிரிப் பிரச்சினை - இனி என்ன செய்ய வேண்டும்?
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
நீண்ட காலம் எதிர்பார்ப்போடு காத்திருந்த காவிரிப் பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிவிட்டது. ஐம்பதாண்டு தவிப்பில் தமிழகம் 264 டிஎம்சி தண்ணீரை கோரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவில் 205 டிஎம்சி தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட்டது. இதனை நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் 192 ஆக குறைத்தது. உச்ச நீதிமன்றம் இறுதியாக 177.25 டிஎம்சி ஆக குறைத்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையான நிலை தான். 14 .75 டிஎம்சியைக் குறைத்த காரணங்கள் சரியானவையாக தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த இறுதித் தீர்ப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை எப்படியெனில் நன்றாக உபசரித்து, தலை வாழை இலை போட்டு சோற்றைப் பரிமாறி, அதற்கான கூட்டுப் பொரியல், சாம்பார், ரசம், பாயசம், தயிர் எனக் கொடுக்காமல் வெறும் சோற்றை உண்ணுங்கள் என்ற கதை தான்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையமும் அமைக்கலாம் என்று உத்தரவில் இருந்தாலும்கூட கர்நாடகம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தன் எதிர்ப்புக் குரலைக் காட்டியுள்ளது. அம்மாநில முதல்வர் சித்தராமையா தண்ணீரைக் குறைத்துள்ளதைக் குறித்து, கர்நாடகத்தைக் காவிரித் தாய் காப்பாற்றினாள் என்று வரவேற்றுள்ளார். இப்படி மகிழ்ச்சியாகச் சொல்லிக்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எப்படியான முரண்பட்ட நிலையில் கர்நாடகம் காவிரிப் பிரச்சினையில் தொடர்ந்து நடந்துகொள்கிறது என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு. இப்படி உச்ச நீதிமன்ற, நடுவர் மன்றத் தீர்ப்புகளை மதிக்காத அரசாகத்தான் கர்நாடகம் இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியானாலும், பாஜக ஆட்சியானாலும் இதுதான் கர்நாடக அரசின் நிலைப்பாடு. நியாயத்தை ஒரு போதும் மதித்ததே இல்லை கர்நாடகம். கர்நாடக நிலைப்பாட்டின் வரலாறு இந்தப் பிரச்சினையில், இன்னொரு அபத்தத்தையும் சொல்லியாக வேண்டும். முன்னாள் பிரதமர் தேவகவுடா. 1996இல் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாகச் சேர்த்து பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பிரதமர் பொறுப்பையும் எப்படி ஏற்க முடிந்தது? இந்தக் கேள்வியை எழுப்பி, 1996இல் தேவகவுடா பிரதமர் பதவியில் இருக்கத் தகுதியற்றவர் என Quo Warranto ரிட் மனுவை நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் பிரதமர் தேவகவுடாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதை அறிந்தவுடன் அலறியடித்துப் பிரதமர் தேவகவுடா தன்னுடைய மனுவைத் திரும்பப் பெற்றார். பிரதமர் பொறுப்புக்கு வந்த பின்னும் தமிழகம், கேரளம், புதுவை மாநிலத்தை எதிர் மனுதாரராக வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர் தேவகவுடா, எப்படிக் கூட்டாட்சி இந்தியாவின் பிரதமராக உறுதிமொழி எடுக்க இயலும்? மற்ற மாநிலங்களை எதிரியாகப் பார்க்கும் தேவகவுடா, முன்னாள் பிரதமருக்கான சலுகைகளை எப்படிப் பெற முடியும்? பொதுவான நபராக இருந்து, காவிரிப் பிரச்சினையை மாநிலங்களிடையே மத்தியஸ்தம் செய்ய வேண்டிய இவர், வாட்டாள் நாகராஜன் போல உண்ணாவிரதம் இருப்பது முன்னாள் பிரதமருக்கு அழகா? அது மட்டுமா? இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த இ.எஸ்.வெங்கட்ராமையாவும், கர்நாடகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து கர்நாடக அனைத்துக் கட்சியினரோடு டெல்லிக்கும் சென்றார். இப்படி அரசியல் சாசனக் கடமைகள், மரபுகள், பண்பாடுகளைக் கடைப்பிடிக்காத நபர்கள் கர்நாடகத்தில் காவிரிக்கு உரிமை கோரி முரட்டுத்தனமாக, அர்த்தமற்ற முறையில் நடந்துகொள்வதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு கூடாது என்று சொன்னவுடன் மத்திய அரசு என்ன சொன்னது? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று சொன்னது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் மத்திய அரசு மதிக்கவில்லை? இப்படியும் மத்திய அரசு முரணாக நடந்துகொள்கிறது. எல்லாம் தேர்தல் அரசியல். பெங்களூரு நகரம் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது என்றும், அதற்காகக் கூடுதலாகத் தண்ணீர் தருகிறோம் என்றும் உச்ச நீதிமன்றம் ஒரு வாதத்தைத் தெரிவித்தாலும், ஏற்கனவே பெங்களூரு மாநகரம் நாளென்றுக்கு 140 கோடி லிட்டர் காவிரி நீரைப் பெற்று அதில் 52% வீணாக்குகிறது என்று சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகமே தனது அறிக்கையில் கூறுகிறது. பெங்களூருவில் பிரமாண்டமான பூங்காக்களிலும், மால்களிலும், மைதானங்களிலும் ஆடம்பரத்துக்காகக் குடிநீர் வீணாக்கப்படுகிறது. இனி தமிழகம் செய்ய வேண்டியது என்ன? நதிகள் தேசியச் சொத்தாகும். இயற்கையின் அருட்கொடை. எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. இதுகுறித்து 1983இல் நான் தாக்கல் செய்த நதிகளை தேசியமயமாக்கி, கங்கை முதல் கிருஷ்ணா - காவிரி - வைகை - தாமிரபரணி - குமரியின் நெய்யாறு வரை இணைத்து கங்கை குமரியைத் தொட வேண்டும் என்ற என்னுடைய வழக்கில் உச்ச நீதிமன்றம் 2012இல் அளித்த தீர்ப்பில் அப்போதே இதைக் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவு 20 டிஎம்சியாகக் கணக்கில் வைத்துக்கொண்டு, தமிழகத்துக்கு வர வேண்டிய 14.75 டிஎம்சி நீரை உச்ச நீதிமன்றம் குறைத்துவிட்டது. கர்நாடகத்தில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதையும், அங்குள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதையும், அது குடிநீராகப் பயன்படுத்த ஏற்புடையது என்பதை உச்ச நீதிமன்றம் ஏன் பரிசீலிக்கவில்லை? ஐநா அமைப்பின் UNDP என்ற நிறுவனம் 1972இல் அளித்த அறிக்கையையும், இந்திய அரசு 1980இல் வழங்கிய அறிக்கையையும் கொண்டு உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கிட்டுள்ளது. ஏன் இதேபோல கர்நாடகத்தையும் கேரளத்தையும் கணக்கிடவில்லை? 20 டிஎம்சி நிலத்தடி நீர் என உச்ச நீதிமன்றம் எப்படிக் கணக்கில்கொண்டது என்பது குறித்தும், தமிழக அரசின் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில் இந்தப் பிரச்சினை குறித்து சரியாக எடுத்துவைத்தார்களா என்பது குறித்தும் சந்தேகமாக உள்ளது. மொத்தம் 802 கி.மீ நீளம்கொண்ட காவிரி நதிநீர்ப் படுகையில் தண்ணீரின் அளவு 740 டிஎம்சி என்று கணக்கிட்டு, நடுவர் மன்றத்திடம் தமிழகத்தின் சார்பில் 562 டிஎம்சி தண்ணீரும் கர்நாடகத்தின் சார்பில் 465 டிஎம்சி தண்ணீரும் கேட்கப்பட்டது. தமிழகத்திலுள்ள 384 வட்டங்களில் 142 வட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 33 வட்டங்களில் மிகவும் குறைவு. 54 வட்டங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறையில் உள்ளது. தஞ்சை டெல்டா பகுதிகளில்கூட நிலத்தடி நீர் தரை மட்டத்திலிருந்து 21.5 மீட்டர் கீழே சென்றுவிட்டது. திருவாரூர் 9.2 மீட்டர், பூம்புகார் அருகே மிகவும் குறைந்துவிட்டது. பல ஆண்டுகளாகப் பருவமழை பெய்தபோதும் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் உப்பு நீராகவும் மாறிவிட்டன. இந்தச் சூழலில் தமிழகத்துக்கு வரவேண்டிய நீர் அளவை நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்துள்ளன. தமிழகத்தின் நிலத்தடி நீருக்கும், காவிரியின் கடைமடைப் பகுதியான தமிழகத்துக்கு நீர் வருவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தமிழகத்தைப்போல கர்நாடகம், கேரளம், புதுவை பகுதிகளின் நிலத்தடி நீரையும் கணக்கில் எடுக்காமல் தமிழகத்தை மட்டும் கணக்கில் எடுப்பது எவ்விதத்தில் நியாயம்? அதுவும் காவிரி டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடல் நீரும் நிலத்தடி நீரில் சேருவதால் இந்தக் கணக்கு சரியான வாதமாகவும் காரணமாகவும் இருக்குமா என்பது நமது கேள்வி. ஆனால், நடுவர் மன்றம் ஒப்புக்கொண்டவாறு கேரளத்துக்கு 30 டிஎம்சியும், புதுவைக்கு 7 டிஎம்சியும் வழங்குவதில் உச்ச நீதிமன்றம் குறைக்கவில்லை. நதிநீர் பங்கீடு குறித்து சர்வதேச அளவில் முக்கியமாகப் பின்பற்றப்படும் 1966இல் உருவாக்கப்பட்ட ஹெலன்ஸ்கி கோட்பாட்டைப் பின்பற்றுகின்றோம் என்று உச்ச நீதிமன்றமும், நடுவர் மன்றமும் தங்களுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தன. அப்படியென்றால், கீழ்ப் பாசனப் பகுதிகள்தான் பயன் பெற்றிருக்க வேண்டும். ஹர்மன் கொள்கை, கேம்பியோன் விதிமுறைகள், பெர்லின் விதி ஆகியவை நீர்ப் பங்கீடு குறித்த பிரச்சினைகளில் கடைப்பிடிக்கும் வழிகாட்டு முறைகளாகும். ஆனால், காவிரிப் பிரச்சினையில் ஹெலன்ஸ்கி வழிகாட்டு முறையே முக்கியமாகக் கருத்தில்கொள்ளப்பட்டது. அப்படியெனில், தமிழகத்துக்குத்தான் அதிகமான நீர் அளவு கிடைத்திருக்க வேண்டும். சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா? இப்படியான பிரச்சினைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழக அரசு தாக்கல் செய்யலாம். ஏனெனில், இப்போது இந்தப் பிரச்சினையைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இனி 15 ஆண்டுகளுக்கு நீர் அளவைக் குறித்துத் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியாது. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. சீராய்வு மனு தாக்கல் செய்தால், இந்தச் சீராய்வு மனு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தட்டிக் கழிக்கலாம். சென்னை மாகாணமும், மைசூர் அரசும் 1892ஆம் ஆண்டு கையொப்பமிட்ட ஒப்பந்தம். அதனடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கிரிஃபின் என்ற ஆங்கிலேயரை நடுவராக நியமித்தது. 1910இல் கண்ணம்பாடியில் மைசூர் அரசு 41.5 டிஎம்சி, கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டும்போது சென்னை மாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு அரசும் 11 டிஎம்சிக்கு ஒப்புக்கொண்டு, அதையும் மீறி 41.5 டிஎம்சிக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது. இப்படியான சிக்கல் இருக்கும்போது அதைத் தீர்க்க 1924இல் இரண்டாவது ஒப்பந்தமும், மெட்ராஸ் மாகாணமும், மைசூர் சமஸ்தானமும் கையெழுத்திட்டது. அந்த கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறித்து 1974இல் மேலும் அமர்ந்து பேச வேண்டுமென்ற நிலைப்பாடுதான் இருந்தது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் சில பிரச்சினைகளைக் குறித்து துணை ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. 1929 ஒப்பந்தத்தின்படி கிருஷ்ணராஜ சாகர் அணையும், சென்னை மாகாண மேட்டூர் அணை திட்டத்தையும் நிறைவேற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது. விடுதலைக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் சில பகுதிகளான கொள்ளேகால், கோலார், குடகு பகுதிகள் கர்நாடக மாநிலத்துக்குச் சென்றுவிட்டன. இந்த இரண்டு ஒப்பந்தங்களுமே காலாவதி ஆகிவிட்டன என்று தொடர்ந்து கர்நாடகம் சொல்லி வந்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாமல் 1892 மற்றும் 1924, துணை ஒப்பந்தங்களான 1929 மற்றும் 1933 ஆகிய ஒப்பந்தங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்துவிட்டது. இதனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தமிழகத்தின் உரிமைகளை சீராய்வு மனுவின் மூலமாக என்னென்ன உரிமைகளை மீட்க முடியுமோ, அதை மீட்க தமிழக அரசு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகவில்லை என்பது தமிழகத்துக்குக் கிடைத்த பாதுகாப்பாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, சாரங்கி, கபினி ஆகிய நான்கு அணைகளின் கட்டுப்பாடும், அதனுடைய நிர்வாகத்தை மேலாண்மை வாரியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். அணைகளின் அனைத்துத் திறவுகோல்கள் கர்நாடகத்திடம் இருந்து மேலாண்மை வாரியத்தின் கைகளுக்கு வந்துவிடும். இதேபோல தமிழகத்தின் மேட்டூர், பவானிசாகர், அமராவதி ஆகிய மூன்று அணைகளும், கேரளத்தின் பாணாகர சாகர் அணையும் மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். தீர்ப்பிலிருந்து ஆறு வாரங்களுக்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும். கர்நாடகம் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் எப்போதும் போல வம்பு செய்யும்போது இதை உச்ச நீதிமன்ற கவனத்துக்குத் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும். பின்வாங்கிய மத்திய அரசு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று மேலாண்மை வாரியத்தை முதலில் அமைப்போம் என்று உறுதியளித்த பின் அந்த நிலையிலிருந்து பின்வாங்கியது. மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமென்று மாற்றி உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை வைத்தது. மத்திய அரசு மாநிலங்களுக்கிடையே நீர்ப் பங்கீடு சட்டப்பிரிவு 6 (ஏ) கீழ் செயல்திட்டம் என்ற ஸ்கீம் (Scheme) அமைப்பு முறையின் கீழ்தான் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் உருவாக்க முடியும் என்று வாதத்தையும் வைத்தது. காவிரி நீர் விடுவதில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான பிலிகுண்டுலுவில் அளவெடுப்பதை விட, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் இடத்திலிருந்தே அளவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் சீராய்வு மனுவிலும் மேலாண்மை வாரியத்திலும் வலியுறுத்த வேண்டும். ஏனெனில், பிலிகுண்டுலுவில் இருந்து மேலே 70 கி.மீ தொலைவு வரையில் காவிரியின் மேற்கு பகுதி தமிழகத்தின் எல்லையாகும். பிலிகுண்டுலுவில் இருந்து இயற்கையாக உற்பத்தியாகின்ற தண்ணீர் சிற்றாறுகளின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி நீரை பிலிகுண்டுலு முன்பே, கர்நாடக அணையிலிருந்தே கணக்கிட்டு அதன் அளவை நிர்ணயிக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு, மாதேஸ்வரன் மலைப் பகுதியில் வரும் தண்ணீரையும் காவிரித் தண்ணீர் என்று கர்நாடகம் கணக்குக் காட்டியது உண்டு. எனவே, பிலிகுண்டுலுவைத் தவிர்த்து கர்நாடக அணைகளைக் கணக்கிட்டால் 15 முதல் 20 டி.எம்.சி., தண்ணீர் நமக்குக் கிடைக்கும். இந்த நியாயத்தையும் கர்நாடகம் மறுக்கிறது. கர்நாடகா அணைகளைக் கட்டும்போது தமிழகத்தின் அனுமதியைப் பெறாமலேயே கண்ணம்பாடி திட்டத்திலிருந்து, கபினி, ஹேமாவதி, ஹேரங்கி தற்போது மேகதாது, ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே நான்கு மிகப் பெரிய அணைகளைக் கட்ட முடிவு செய்தது. அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மேகதாது அணையின் உயரம் 441.8 மீட்டர் [1546 அடி உயரம்]. அதில் 75 டிஎம்சி நீரைத் தேக்க முடியும். இது நம் மேட்டூர் அணையின் கொள்ளளவைவிட மிக அதிகம். ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள மூன்று அணைகள் மூலம் மேலும் 45 டிஎம்சி நீர் தேக்கப்படும். இதோடு தடுப்பணைகளையும் காவிரியின் குறுக்கே கட்ட திட்டங்களைத் தீட்டியது. இந்தத் தீர்ப்பின் விளைவாக கர்நாடகம் நிறைவேற்றவோ, மத்திய அரசு அனுமதி கொடுக்கவோ முடியாது. இந்த அணைகளைக் கட்ட ஒருகாலும் தமிழகம் அனுமதிக்கக் கூடாது. தீர்ப்பின் பலன் இந்தத் தீர்ப்பினால் தமிழகத்தின் இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யும் சமூக விரோதிகள் மணல் அள்ளுவது தடுக்கப்படும். காவிரி ஆற்றில் கரூர், டெல்டா பகுதிகளில் மணல் அள்ளிக் குவிப்பதை இனிமேல் செய்ய முடியாது. ஏனெனில், காவிரி நதி மேலாண்மை வாரியத்தின் கைகளுக்கு சென்றுவிட்டால் தமிழக அரசு இந்த மணல் அள்ளும் உரிமையைத் தவறாகப் பயன்படுத்த முடியாது. காவிரியில் தொழிற்சாலைக் கழிவுகளும், கழிவுநீர் கலப்பதும் தடுக்கப்படும்.மேட்டூர் அணையைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல், காவிரி பாசனக் கால்வாய்கள், அதையொட்டிய நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும். காவிரியின் ஆக்கிரமிப்புப் பகுதிகளெல்லாம் மேலாண்மை வாரியத்தினால் கையகப்படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே திட்டமிட்டவாறு, தமிழக அரசு காவிரியில் 40 தடுப்பணைகள் வரை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நடுவர் மன்றம் மாத வாரியாகப் பட்டியலிட்டுத் தமிழகத்துக்கு வர வேண்டிய நீரை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி 14.75 டிஎம்சி தண்ணீர் குறைத்த நிலையில் எப்படிச் சரியாக வரும் என்பதையும் சீராய்வு மனு மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். தமிழகத்தின் பாதிப்புகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தமிழகத்தில் சாகுபடிப் பரப்பு குறையும். 14.75 டிஎம்சி நீர் இழப்பால் 88,500 ஏக்கர் நெற்பயிர் விளைச்சல் இல்லாமல் போய்விடும். காவிரி வெண்ணாற்றிலிருந்து பிரியும் 36 கிளை ஆறுகள் ஏ பிரிவு வாய்க்கால் மற்றும் சாதாரண வாய்க்கால்கள் என்பதெல்லாம் காவிரியின் உள்ளடக்கம். இம்மாதிரியான ஆயிரக்கணக்கான நீர் நிலைகள் நீர்வரத்து இல்லாமல் பாதிக்கும். அதனால் முறையான சாகுபடிப் பணிகள் நடக்காது. எனவே, டெல்டா மாவட்டங்களுக்கு மாற்று நீராதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். கர்நாடகத்தின் 13 ஆறுகளில் 2000 டிஎம்சி தண்ணீர் அரபிக் கடலுக்குச் செல்கிறது. இந்த உபரி நீரைத் திருப்பினால் கர்நாடக அணைகளுக்கே அதிக தண்ணீர் கிடைக்கும். உதாரணத்துக்கு ஹேமாவதி அணைக்கே 200 டிஎம்சி தண்ணீர் திருப்பலாம். காவிரிப் பிரச்சினையில் கர்நாடகம் தமிழகத்தை எவ்வாறு வஞ்சிக்கின்றதோ, அம்மாதிரியே மகதாயி அணைப் பிரச்சினையில் கோவா மாநிலம் கர்நாடகத்துக்குத் தண்ணீர் காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து புலம்பும் கர்நாடகம், தமிழகத்தின் உரிமைகளுக்கு மட்டும் நியாயம் வழங்க மறுக்கிறது.கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் சோமநாதபுரம் அருகில் சிவசமுத்திரம் அருவி விழுகின்ற ககனசுக்கியில் அணை கட்டி சிவசமுத்திர நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அரசு 3.4 கிலோமீட்டர் தூரமும், 15.5 மீட்டர் உயரத்தில் தடுப்புச் சுவரைக் கட்டி நீரைத் தேக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 165 ஹெக்டேர் வனப்பகுதியும், புறம்போக்கு நிலங்களையும் இணைத்து அணை கட்டுவதற்கான திட்டங்கள் உள்ளன. இதை 1987லிருந்தே கர்நாடக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இதனால் 300 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதுகுறித்து 14/11/2017இல் மத்திய அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பித்தது. மீண்டும் புதிய விண்ணப்பத்தை முன்வைக்கலாம் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தையும் தமிழக அரசு, மத்திய அரசிடம் நிராகரிக்க வலியுறுத்த வேண்டும். காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே 21 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனற்றுப் போய்விட்டது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 02/06/1996 அன்று காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அமைத்த 17 ஆண்டுகளில் 568 முறை கூடி விசாரித்து தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. காவிரி நதியிலிருந்து 20 மாவட்டங்களுக்குக் குடிநீரும், காவிரி – குண்டாறு இணைப்பும் முக்கியமான தமிழகத் தேவைகளாகும். நதிநீர்ப் பங்கீட்டில் உலக நிலவரம் என்ன? தற்போது, உலக மத்திய கிழக்கு பகுதியில் யூப்ரேடிஸ் – டைகிரீஸ் நதிகள் சிக்கல், துருக்கி – சிரியாவும் – ஈராக்கும் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள நினைக்கின்றன. ஜோர்டான் நதி பிரச்சினையை இஸ்ரேல் – லெபனான் – ஜோர்டான் – பாலஸ்தீனத்தோடு சுமூகமான பேச்சுவார்த்தையில் உள்ளன. ஆப்பிரிக்காவில் நைல் நதி எகிப்து – எத்தியோப்பியா – சூடானோடு பேச்சுவார்த்தையில் உள்ளது. மத்திய ஆசியாவின் ஏரல் கடல் பிரச்சினையில் கஜகஸ்தான் – உஸ்பெகிஸ்தான் – துர்கெமெனிக்கஸ்தான் – தஜிகிஸ்தான் – கிரிகிஸ்தான், ஐரோப்பாவில் எட்டு நாடுகளிடையே ஓடும் தனுபியாறு போன்ற நாடுகள் தண்ணீர் பகிர்வுக்குப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. ஏன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம், பூடான் போன்ற அண்டை நாடுகளோடு கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிநீர் தாவாக்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்தியும் உள்ளது. உலகத்தில் 3,600க்கும் மேற்பட்ட நதிநீர் ஒப்பந்தங்கள் இன்றைக்கு நடைமுறையில் உள்ளன. இப்படி உலகத்தில் பல நதிநீர் தீரங்களின் பிரச்சினைகளை நாடுகளுக்குள்ளே பேசித் தீர்த்துக்கொள்ளும் நிகழ்வுகளை நீண்ட பட்டியலிடலாம். கடைமடைப் பாசனப் பகுதியான காவிரிக்குச் சகல உரிமைகள் இருந்தும் ஒரு கூட்டாட்சியில் கர்நாடகத்தால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் உரிய நியாயங்கள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்க நிலையில், இனிமேல் என்ன காவிரிப் பிரச்சினையில் செய்ய வேண்டுமோ அதை இதயசுத்தியோடு செய்ய வேண்டியது இன்றைய சூழலில் அவசியமாகிறது. காவிரி நீர் பங்கீடு குறித்து உச்ச நீதி மன்ற இறுதிப் தீர்ப்பு வந்த நாளன்று ,புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துக் கொண்டேன். அப்பொழுது கூட " இந்த தீர்ப்பு மெக்கானிசத்தை ஏற்படுத்த சொல்கின்றதே தவிர மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தவில்லை, குழப்பமாகயுள்ளது" எனக் கூறினேன். காரணம் தீர்ப்பின் வரிகளில் CMB என சுருக்கி எழுதப்பட்டு இருந்ததே தவிர வார்த்தையில் கூட Cauvery management board என விரிவாக குறிப்பிடவில்லை. அப்போது என்னுடன் விவாதத்தில் கலந்துக் கொண்ட அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கூட "அதெல்லாம் இல்லை, நிச்சயம் மேலாண்மை வாரியம்உள்ளது ‘’என குறுக்கிட்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்கின்றது. மத்தியில் பிஜேபி ஆட்சி புரிகின்றது. நேற்றைய தினம் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிஜேபி, காங்கிரஸ் கட்சிகள் வெளியில் மோதல் போக்கை கொண்டாலும் காவிரி விசயத்தில் ஒற்றுமையாக பம்மாத்து வேலையை செய்கின்றார்கள். அந்த அனைத்துக்கட்சி கூட்டத்தின் இறுதி முடிவாக மேலாண்மை வாரியம் அவசியமற்றது என முடிவெடுத்து அதனை கர்னாடக தலைமை செயலாளர் ரத்ன பிரபா மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். ‘’Karnataka government proposed a two-layer “scheme” to the Centre for the implementation of the Supreme Court verdict. The proposed scheme comprises a six-member Cauvery Decision Implementation Committee (CDIC) headed by the Union Water Resources Minister, and an 11-member monitoring agency under it, headed by the Union Water Resources Secretary.’’ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் பக்கம் 335இல் குறிப்பிட்டவாறு பொறிமுறை என்பது காவிரி மேலாண்மை வாரியம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் (CMB) அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு 29-3-2018 மாலை சூரிய அஸ்தமனத்துடன் முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வெளியிட்ட நாள்முதல் பல்வேறு பத்திரிக்கைகளில் கட்டுரைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தொடர்ச்சியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என்று கவலையுடன் கூறி வருகிறேன். இன்று அது மெய்ப்பட்டுவிட்டது என்பதை நினைக்கும்போது மனது சற்று ரணப்படுகிறது. ஏற்கனவே கடந்த காலங்களில் மத்திய அரசு காவிரியில் தமிழகத்திற்கு ஏதோவொரு தீர்வு கிடைத்தாலும்,அது நடைமுறைக்கு வராத துயரமும் எஞ்சியுள்ளது. கடந்த காலத்தில் காவிரி நடுவர் மன்றம் 1991இல் வழங்கிய இடைக்காலத் உத்தரவையும், 2007இல் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் நிறைவேற்ற கர்நாடகா மறுத்ததும், இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க உச்சநீதிமன்றம் வரை போயும் கர்நாடகம் திமிர் போக்கில் இருந்து வருகிறது. வழக்காடியதில் எந்த பயனுமின்றி போய்விட்டது. உச்ச நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க ஆணையிட்டும் கர்நாடகம் கண்டுகொள்ளாமல் இருந்தது. தற்போது உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் கர்நாடகா ஏற்க மறுக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பிலும் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் நியாயங்களை வழங்கவில்லை என்பது வேறு விசயம். இருப்பினும், மத்திய அரசு கர்நாடகத்திற்கு பாதுகாப்பாக இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போலாகும். பக்ரா-பியாஸ், நர்மதை, மகாநதி ,கோதாவரி, கிருஷ்ணா ரணமே போன்ற நதிநீர் சிக்கல்கள் பல மாநிலங்களுக்கு இடையில் நிலவி அதற்கான விசாரணைகள் முறையாக நடந்து உத்தரவுகள் வந்து, அந்த உத்தரவுகளை மத்திய அரசு செயல்படுத்தும் போது காவிரியில் மட்டும் இந்த பாகுபாடு ஏன்? காவிரியில் தமிழகத்தின் ஆதிபத்தியமான கீழ்ப்பாசன உரிமைகளை திட்டமிட்டு மத்திய அரசும், கர்நாடக அரசும் கபளீகரம் செய்கிறது. அதற்கு தான் அதிகாரமில்லாத ஒரு அமைப்பை ஏற்படுத்திட மத்திய அரசு துடிக்கிறது. ஏற்கனவே சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் (Indus Water Treaty) இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே 1966இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்லஜ்,, பியாஸ், ரவி ஆகிய நதிகளை இந்தியாவின் பயன்பாட்டுக்கு என ஒப்புக்கொள்ளப்பட்டது. மற்ற நதிகளை பாகிஸ்தான் பயன்படுத்தும். இந்தியா பயன்படுத்தி வரும் நான்கு நதிகள் குறித்தான பெருந்திட்டம் (Master Plan) என்ற வகையில் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஒப்புதலாலும், முயற்சியாலும் இந்த மகா திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த நவம்பர், 1ஆம் தேதி 1966 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநில எல்லைகள் மறு சீரமைக்கப்பட்ட போது பக்ரா மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்படி பக்ரா நங்கல் திட்டத்தின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் வழங்கப்பட்டது. இதுவொரு அதிகாரம்பெற்ற சுயாட்சி வாரியமாகும். அதேபோல, பியாஸ் நதியின் பணிகள் முடிந்து அதையும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1976ஆம் ஆண்டு மே மாதம் 15ம் தேதியிலிருந்து இதை பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் என்றே அழைக்கப்படுகின்றது. அமைக்கப்பட்ட பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், புதுடெல்லி மற்றும் சண்டிகார் பகுதிகளிலிருந்து தண்ணீரை பாசனத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் முறைப்படுத்தி வினியோகிக்கிறது. இதன் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் ஏனைய பணிகளை தடையில்லாமல் இன்று வரை நடந்து வருகிறது. பியாஸ் - சட்லஞ் இணைப்புத் திட்டம் - 1 (பிரிவு 1) போங் அணை (பிரிவு 2) ஆகியவற்றின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை முறையாக இந்த வாரியம் கவனிக்கிறது. ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகளிலிருந்து தண்ணீரை முறைப்படுத்தி வழங்குகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை பிரச்சனை இல்லாமல் வினியோகிக்கப்படுகிறது. இப்படியெல்லாம் சரிவர பணியாற்றுகின்ற மேலாண்மை வாரியம் வடபுலத்தில் அமைக்ககப்படுகிறது. ஆனால் நியாயமாக தமிழகத்தின் நலன் கருதி அமைக்கப்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் வஞ்சித்து, தற்போது கைவிரித்துவிட்டது. கடந்த 21/03/2018 அன்று மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்படவில்லை என்றும் ஒரு செயல் திட்டம் தான் வகுக்கச் சொல்லியுள்ளது என்று சொன்னபோதே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்ற துயர செய்தி தெரிந்துவிட்டது. பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று அமைத்திட என்ன சிரமங்கள் உள்ளது. அங்கு அவ்வப்போது ஏற்பட்ட சில பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டது. காவிரியில் மட்டும் இப்படி செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி ரணப்படுத்துவது போல உள்ளது. வடக்கே ஒரு நியாயம். தெற்கே ஒரு நியாயமா? தமிழக வரலாறு, நாகரிகம், அன்றாட வாழ்க்கை முறையில் இணைந்த காவிரி உரிமையை நிலைநாட்டத் தியாக உணர்வோடு தொலைநோக்கிலான சாத்தியக்கூறுகளை மனதில்கொண்டு அணுக வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது. காவிரிப் பிரச்சினையில் இதுவொரு முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தை சமயோசிதமாக அணுகி சாத்தியப்பட்ட உரிமைகளையாவது நிலைநாட்ட அரசியல் மனமாச்சரியங்களைக் கடந்து கடமைகளையாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.
#காவிரி_மேலாண்மை_வாரியம் #காவிரி_விவகாரம் #தமிழக_விவசாயிகள் #Cauvery_Management_Board #KSRadhakrishnanpostings #KSRpostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 31-03-2018.

Friday, March 30, 2018

ஸ்டெர்லைட் குறித்து மின்னம்பல இணைய இதழில் வெளியான என்னுடைய கட்டுரை.

ஸ்டெர்லைட் ஆலை ஏன் அகற்றப்பட வேண்டும்?
------------------------------------

ஸ்டெர்லைட் ஆலைக்கு 1994இல் அனுமதி கொடுத்தவர் ஜெயலலிதா. தொடர்ந்து, 1996இல் மேலும் சில அனுமதிகள் மாநில அரசிடமிருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றது. 2007இல் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் கொண்டு வரவும் அனுமதி பெற்றுவிட்டனர். கிராம மக்களிடம் இருந்து 1,616 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அதில் 600 ஏக்கர் நிலத்தை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு கொடுத்தாகிவிட்டது. ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு 2009ஆம் ஆண்டே மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற்றுவிட்டனர். இந்த அனுமதியெல்லாம் டிசம்பர் 31, 2018 ஆம் தேதியோடு முடிகிறது.


ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும்போதே தாங்க முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் தூத்துக்குடி மக்கள். இப்போது 8 லட்சம் டன் என்றால் மக்களின் பாடு திண்டாட்டம் தான். இப்போதே 20 எம்.ஜி. திட்டத்தின் கீழ் ஸ்ரீ வைகுண்டம் அணையில் இருந்து குடி தண்ணீரை உறிஞ்சிக் கொண்டுள்ளார்கள். விரிவாக்கப் பணி முடியும் பட்சத்தில் தாமிரபரணி தண்ணீர் ஸ்டெர்லைட் ஆலைக்கே போதாது என்ற நிலை வரும். அப்போது கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
ஸ்டெர்லைட் என்ற தாமிரத் தொழிற்சாலையினால் சுற்றுச் சூழல் பாதிப்புகள் மட்டுமல்லாது மக்களுக்கு பல நோய்களை ஏற்படுத்தும். குறிப்பாக புற்று நோய், நுரையீரல் நோய்கள், சிறுநீரகம் பாதிப்பு என சகலவிதமான நோய்களை இந்த செம்புத் தொழிற்சாலையின் நச்சுப் புகையினால் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் உள்ள புற்று நோய் மருத்துவமனையில் நிச்சயம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒன்றிரண்டு பேராவது இருப்பார்கள். ஏனெனில் அதற்கு காரணம் ஸ்டெர்லைட்  ஆலை. சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்துமா, நுரையீரல் புற்று நோய், ஒவ்வாமை (Allergy), சி.ஓ.பி.டி – க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிசீஸ், சுவாச நோய், தோல் நோய், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்ற பல நோய்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு மக்களுக்கு சீதனமாக நோய்களை தருகிற ஸ்டெர்லைட் ஆலை இதை பற்றியெல்லாம் சற்றும் அக்கறைப்படுவதில்லை.
வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் குஜராத், கோவா, கேரள மாநிலங்களில் தாமிர உருக்காலை அமைக்க முயன்றார். ஆனால் மகாராஷ்டிர மாநிலம், ரத்தினகிரியில் 1989ஆம் ஆண்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த மண் சுவையான மாம்பழம் விளையும் மண். தாமிர உருக்காலை இங்கு வந்தால் தங்களின் விவசாயம் பாதிக்கும் என்று விவசாயிகள் போராடியதன் விளைவாக அப்போதைய அந்த மாநில முதல்வர் சரத் பவார் 01/05/1994இல் இந்த தாமிரத் தொழிற்சாலை அமைய தடைவிதித்தார்.
30/10/1994இல் இந்த ஆலை தூத்துக்குடியில் அமைய முயற்சி எடுக்கப்பட்டது. 18/03/1996இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல்லும் நாட்டினார்.
அப்போதே இதற்கான எதிர்ப்பு தொடங்கிவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டுவந்த எம்.வி.ரீசா என்ற கப்பலைத் தூத்துக்குடி மீனவர்கள் விரட்டியடித்தனர். நாட்டுப் படகுகள், விசைப் படகுகள் கொண்ட 500 மீனவர்கள் இந்த ரீசா கப்பலை விரட்டியடித்தனர். அந்தக் கப்பல் கொச்சிக்குச் சென்று அங்கிருந்து கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கடுத்து 10/04/1996இல் இரண்டு பெண்கள் உள்பட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் கடலில் கலக்காது எனத் தமிழக அரசின் சார்பில் 18/04/1996 அன்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பு அந்தக் காலகட்டத்தில் தமிழ் மாந்தன் தலைமையில் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநாடு 20/07/1996இல் மக்கள் பெரும் எதிர்ப்பு மாநாடாக நடந்தது. திரும்பவும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு எம்.பி. பரங்கவி கப்பலில் தாமிரத் தாதைக் கொண்டவந்தபோது மீனவர்கள் அதை எதிர்த்து அக்கப்பலை முற்றுகையிட்டனர். நவம்பர் 1996இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதற்கு மத்தியில் 05/07/1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுவால் ஆலையில் இருந்த ரமேஷ் பிளவர் நிறுவனத்தில் இருந்த 165 பெண்கள் மயங்கி விழுந்தனர். அகில இந்திய ரேடியோவில் பணியாற்றிய 11 பேரும் நச்சு வாயுவால் மயங்கி விழுந்தனர். நீதிமன்றங்களில் வழக்காடியும் பயனில்லை.
வேதாந்தா நிறுவனம் சுற்றுச் சூழல் பாதிப்பை பற்றி எந்தக் கவலையும் கொள்வதில்லை. நீரி போன்ற அமைப்புகள் தான் காற்று மாசுபடுதல் அளவீடுகளை நிர்ணயம் செய்துள்ளது. அதை குறித்து அறிய கருவிகளும் அமைக்கப்படுகிறது. வெறும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்து விட்டாலே எந்த தொழிற்சாலையும் ஆபத்தில்லை என நினைப்பது தவறான நோக்கமாகும். சில இடங்களில் காற்று மாசு அளவிடும் கருவிகள் கூட சரிவர இயங்குவதில்லை. அதன் அளவீடுகளையும் நமது விருப்பம் போல மாற்றிக் கொள்ளலாம். ஸ்டெர்லைட் ஆலையில் புதியதாக இரண்டாம் அலகு நிறுவுவதற்கு சுற்றுச் சூழுல் பாதுகாப்பிற்காக தேவையான கருவிகளை 500 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறியுள்ளது. 
எற்கனவே முதல் அலகுக்கு அத்தகைய வசதிகளை செய்யவில்லை. ஏற்கனவே ஓடும் ஆலையினால் காற்று மாசுபடுகிறது. புதிதாக நிறுவும் இரண்டாவது பிரிவிற்கு மட்டும் 500 கோடி ரூபாய் செலவிடுதல் போதுமா? இரும்பு அல்லாத (Non-ferrous) உலோகங்களான அலுமினியம், செம்பு, ஈயம், துத்தநாகம், எவர்சில்வர், வெள்ளி போன்ற வேதிப் பொருட்கள் உற்பத்தியில் ஆபத்துகள் நிரம்பியுள்ளது. இதன் கருவிகளை மறுசுழற்சியும் செய்ய முடியாது. இப்படியான நிலைதான் ஸ்டெர்லைட்டில் உள்ளது. நோயை விலை கொடுத்து வாங்குகின்ற கதை தான்.
போபாலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விசவாயு விபத்தை பற்றி இன்றும் அச்சத்தோடு பேசுகிறோம். ஆனால் ஸ்டெர்லைட்டில் அப்படி இல்லை. ஒரு விபத்து நடந்தபின்னர் ஒப்பாரி வைத்து, கூப்பாடு போடுவதால் என்ன பயன். போபால் வழக்கிற்கு பின்னர் தான் நச்சுக் கலக்கும் தொழிற்சாலைகள் பற்றிய சிந்தனையையும், விழிப்புணர்வையும், தரத்தை சோதிக்கும் ஐ.எஸ்.ஓ முறையும் நடைமுறைக்கு வந்தது. தூத்துக்குடியில்பல தொழிற்சாலைகள் இந்த ஐ.எஸ்ஓ முறைக்கு கட்டுப்படாமல் நடப்பதாக செய்திகள் உண்டு. இந்த தொழிற்சாலைகள் புகை ஒரு பக்கம், நச்சுப் புகை ஒரு பக்கம், விசக் கழிவுகள் அதிகப்படியாக சேருகின்றன. 
இந்த சூழலில் ஸ்டெர்லைட் ஆலை மனித இனத்தை அழிக்கும் தூக்கு மேடைகளாகும். பண்டித நேரு தொழிற்சாலைகளை வழிபாடு ஆலயங்கள் என்றார். இன்றைக்கு தொழிற்சாலைகள் மனித உயிர்களை காவு வாங்கும் கூடங்களாக அமைந்துவிட்டது. 
அதில் ஒன்று தான் இந்த ஸ்டெர்லைட்.
பல ஆலைகள் தமிழகத்தின் பல வட்டாரங்களில் பல்வேறு கேடுகளை மக்களுக்கு விளைவிக்கின்றன.
அந்த ஆலைகள் வருமாறு:
- அரியலூர் சிமென்ட் தொழிற்சாலை,
- மதுரை பொய்கைக்கரைப்பட்டியிலுள்ள கெமிக்கல் தொழிற்சாலை,
- தூத்துக்குடி சிப்காட்,
- கடலூர் சிப்காட்,
- திருப்பூர் பின்னலாடை - நொய்யலாற்றின் பாதிப்பு,
- சேலம் கஞ்சமலை தாது கம்பெனி,
- மேட்டூர் அனல்மின் நிலையங்கள்,
- மதுரை அபிலாஷ் கெமிக்கல்ஸ்,
- நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,
- கெயில் திட்டம்,
- திருவண்ணாமலை - ஜிண்டால் தாது கம்பெனி (இன்னும் தொடங்கவில்லை),
- ஊட்டி ஸ்டெர்லிங் ஆலை,
- கொடைக்கானல் பாதரச (மெர்குரி) தொழிற்சாலை,
- நாகார்ஜுனா ஆலை
இப்படி நீண்ட பட்டியல் உண்டு.
அது போல தான், தேனியில் நியோட்னிரோ ஆராய்ச்சி நிறுவனம், கூடங்குளம் அணுமின் நிலையம், ஹைட்ரோகார்பன் கிணறுகள், மீத்தேன் எடுக்கும் ஆலைகள், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் துத்தநாகம், பிளாட்டினம் போன்றவற்றை உருக்கி எடுக்கும்போது வரும் நச்சுப் புகையால் ஏற்படும் பாதிப்புகள், நரிமனம் பெட்ரோல் ஆலை போன்ற பாதுகாப்பற்ற ஆலைகள் தமிழகத்தை என்றைக்கும் அபாயகரமான பகுதிகளாக்கும்.
தேனி மாவட்டம், தேவாரம் - பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள மலையில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்ற உத்தரவும் வந்துள்ளது.
காந்தத் தூண்டுதலால் துகள்களை ஆய்வு செய்யும் பொருட்டு அண்டவெளியில் சக்தி மிகுந்த கதிரலைகள் உருவாகும். அதை உருவாக்க 1000 டன் ஜெலட்டின் வெடி மருந்துகளை 800 நாள்களுக்கு வெடிக்கச் செய்து 11,25,000 டன் பாறைகளுடன் மலைகளும் தகர்க்கப்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் தேனி மாவட்டத்துடன், கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. பூமியே சிதறுண்டுவிடும் போன்ற விளைவுகள் ஏற்படுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் கரிசல் மண்பகுதியில் ராஜபாளையத்திலுள்ள தமிழ்நாடு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீர் வசதியில்லாமல், மக்களுக்குச் சுவாசநோய், புற்றுநோய் என 1970களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் விருதுநகர் பெ.சீனிவாசன் (காமராஜரைத் தோற்கடித்தவர்), அன்றைய மக்களவை உறுப்பினராக இருந்த சிவகாசி வி.ஜெயலட்சுமி போன்றோர் போராடி எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு (வழக்கு எண். 10589/1986) நான் தாக்கல் செய்தேன். அதன்படி, உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று ஆலையிலிருந்து தூசி வெளியேறாமல் பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்களும் கருவிகளும் பொருத்தப்பட்டன. அப்போதே ஆலையை விற்றுவிடலாம் என்று தமிழ்நாடு அரசு யோசித்தபோது 1986இல் என்னுடைய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததனால் ஆலையை விற்க முடியாமல் போனது.
மேலும், 2015ஆம் ஆண்டு (WP No. 4696 of 2015) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கின் தீர்ப்பின்படி 80 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டு, தமிழக அரசு ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தியது.
கேரளாவின் மருத்துவக் கழிவுகள், குப்பைகளைத் தமிழக எல்லைப் பகுதிகளான நெல்லை மாவட்ட செங்கோட்டையில், குமரி மாவட்டத்தின் எல்லைகளில் லாரிகளில் கொண்டுவந்து கொட்டிச் செல்லும் பிரச்சினையைத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன்.
தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது மத்திய அரசு.
1959ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சேலத்தில் 1982ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சேலம் இரும்பாலை தற்போது முடக்கப்படுகிறது.
ஊட்டியில் முக்கியமாக இயங்கிவந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடி நைனிட்டாலுக்கு மத்திய அரசு அனுப்பிவிட்டது. பல தமிழக திட்டங்கள் முடக்கப்பட்டன.
இப்படி, தமிழகத்துக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை முடக்கிவிட்டு, சுற்றுச்சூழல் விரோத திட்டங்களுக்குத் தாராளமாக அனுமதியை வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை.
இன்று பெரும் பிரச்சினையாக வெடித்துள்ள ஸ்டெர்லைட் ஆலை குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவருகின்றன.
இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்க தமிழகம் தன்னை பாதுகாக்குமா என்பது தான் வினா?

கே.எஸ்.இராதா கிருஷ்ணன் 
30-03-2018.

பல நதி நீர் மேலாண்மை வாரியங்கள் செயல்பாட்டில் உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மட்டும் டெல்லி பாதுஷாக்களுக்கு மனமில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் (CMB) அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்று 29-3-2018 மாலை சூரிய அஸ்தமனத்துடன் முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வெளியிட்ட நாள்முதல் பல்வேறு பத்திரிக்கைகளில் கட்டுரைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தொடர்ச்சியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என்று கவலையுடன் கூறி வருகிறேன். இன்று அது மெய்ப்பட்டுவிட்டது என்பதை நினைக்கும்போது மனது சற்று ரணப்படுகிறது.
ஏற்கனவே கடந்த காலங்களில் மத்திய அரசு காவிரியில் தமிழகத்திற்கு ஏதோவொரு தீர்வு கிடைத்தாலும்,அது நடைமுறைக்கு வராத துயரமும் எஞ்சியுள்ளது.
கடந்த காலத்தில் காவிரி நடுவர் மன்றம் 1991இல் வழங்கிய இடைக்காலத் உத்தரவையும், 2007இல் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் நிறைவேற்ற கர்நாடகா மறுத்ததும், இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க உச்சநீதிமன்றம் வரை போயும் கர்நாடகம் திமிர் போக்கில் இருந்து வருகிறது. வழக்காடியதில் எந்த பயனுமின்றி போய்விட்டது.
உச்ச நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க ஆணையிட்டும் கர்நாடகம் கண்டுகொள்ளாமல் இருந்தது.
தற்போது உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் கர்நாடகா ஏற்க மறுக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பிலும் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் நியாயங்களை வழங்கவில்லை என்பது வேறு விசயம். இருப்பினும், மத்திய அரசு கர்நாடகத்திற்கு பாதுகாப்பாக இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போலாகும்.

பக்ரா-பியாஸ், நர்மதை, மகாநதி ,கோதாவரி, கிருஷ்ணா ரணமே போன்ற நதிநீர் சிக்கல்கள் பல மாநிலங்களுக்கு இடையில் நிலவி அதற்கான விசாரணைகள் முறையாக நடந்து உத்தரவுகள் வந்து, அந்த உத்தரவுகளை மத்திய அரசு செயல்படுத்தும் போது காவிரியில் மட்டும் இந்த பாகுபாடு ஏன்?
காவிரியில் தமிழகத்தின் ஆதிபத்தியமான கீழ்ப்பாசன உரிமைகளை திட்டமிட்டு மத்திய அரசும், கர்நாடக அரசும் கபளீகரம் செய்கிறது. அதற்கு தான் அதிகாரமில்லாத ஒரு அமைப்பை ஏற்படுத்திட மத்திய அரசு துடிக்கிறது.
ஏற்கனவே சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் (Indus Water Treaty) இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே 1966இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்லஜ்,, பியாஸ், ரவி ஆகிய நதிகளை இந்தியாவின் பயன்பாட்டுக்கு என ஒப்புக்கொள்ளப்பட்டது. மற்ற நதிகளை பாகிஸ்தான் பயன்படுத்தும். இந்தியா பயன்படுத்தி வரும் நான்கு நதிகள் குறித்தான பெருந்திட்டம் (Master Plan) என்ற வகையில் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஒப்புதலாலும், முயற்சியாலும் இந்த மகா திட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த நவம்பர், 1ஆம் தேதி 1966 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநில எல்லைகள் மறு சீரமைக்கப்பட்ட போது பக்ரா மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்படி பக்ரா நங்கல் திட்டத்தின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் வழங்கப்பட்டது. இதுவொரு அதிகாரம்பெற்ற சுயாட்சி வாரியமாகும். அதேபோல, பியாஸ் நதியின் பணிகள் முடிந்து அதையும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1976ஆம் ஆண்டு மே மாதம் 15ம் தேதியிலிருந்து இதை பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் என்றே அழைக்கப்படுகின்றது. அமைக்கப்பட்ட பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், புதுடெல்லி மற்றும் சண்டிகார் பகுதிகளிலிருந்து தண்ணீரை பாசனத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் முறைப்படுத்தி வினியோகிக்கிறது. இதன் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் ஏனைய பணிகளை தடையில்லாமல் இன்று வரை நடந்து வருகிறது.
*பியாஸ் - சட்லஞ் இணைப்புத் திட்டம் - 1 (பிரிவு 1)*
*போங் அணை (பிரிவு 2)*
ஆகியவற்றின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை முறையாக இந்த வாரியம் கவனிக்கிறது. ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகளிலிருந்து தண்ணீரை முறைப்படுத்தி வழங்குகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை பிரச்சனை இல்லாமல் வினியோகிக்கப்படுகிறது. 
இப்படியெல்லாம் சரிவர பணியாற்றுகின்ற மேலாண்மை வாரியம் வடபுலத்தில் அமைக்கப்படுகிறது. ஆனால் நியாயமாக தமிழகத்தின் நலன் கருதி அமைக்கப்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் வஞ்சித்து, தற்போது கைவிரித்துவிட்டது. கடந்த 21/03/2018 அன்று மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்படவில்லை என்றும் ஒரு செயல் திட்டம் தான் வகுக்கச் சொல்லியுள்ளது என்று சொன்னபோதே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்ற துயர செய்தி தெரிந்துவிட்டது. 
பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று அமைத்திட என்ன சிரமங்கள் உள்ளது. அங்கு அவ்வப்போது ஏற்பட்ட சில பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டது. காவிரியில் மட்டும் இப்படி செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி ரணப்படுத்துவது போல உள்ளது.
*வடக்கே ஒரு நியாயம். தெற்கே ஒரு நியாயமா?*

#தமிழக_விவசாயிகள்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன் 
29-3-2018.

இவர்களும் எம்.பிகள்! இந்த பிரகஸ்பதிகளுக்கம் வெட்டி விளம்பரங்கள் .....



Image may contain: outdoor and nature
காலையில் செய்தித்தாள்களை புரட்டும் போது வயதான முன்னாள் எம்.பிவிஜய் மல்லையாவின் மூன்றாவது திருமணம் குறித்த செய்தி....

தகுதியில்லாத, எந்த அரசியல் அனுபவங்களும் இல்லாத, மக்களின் ஜீவாதாரப் பிரச்சனை குறித்தும் எந்தவொருபுரிதல்இல்லாதவர்களுக்கு ;திடீரென ஜாக்பாட் போன்று எம்.பி. பதவி கிடைத்த பெணின் இரண்டாவது திருமணம்........
பதவியை ராஜினாமா செய்வேன் என்று சொல்லாமல், தற்கொலை செய்து கொள்வேன் என்று பேடித்தனமாக பேசும் ஓர் எம்.பி........
பிறகு எப்படி?
நமது உரிமைகளையும், பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் எவ்வாறு பெற முடியும். இதுபோன்ற தகுதியற்றவர்கள் தான் இன்றைக்கு கொண்டாடப்படுகிறார்கள். மக்களின் பிரச்சனைகளைப் பற்றி அறியாதவர்கள், புரியாதவர்கள் கொண்டாடப்படுவது தான் மக்களுக்கு பிடிக்கிறது எனில் காவிரியில், முல்லை பெரியாறில் தண்ணீர் திறந்தால் என்ன? திறக்காவிட்டால் என்ன? நச்சும், ஆட்கொல்லி அபாயத்தினை உருவாக்கும் திட்டங்களை பற்றி நமக்கு என்ன அக்கறை......

இவர்களும் எம்.பிகள்!
இந்த பிரகஸ்பதிகளுக்கம் வெட்டி விளம்பரங்கள் .....

This is our celebrated Democracy and
mass celebrities to save country persons.....
தகுதியே தடை

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-03-2018

Thursday, March 29, 2018

Chelameshwar Letter

“We, the judges of the Supreme Court of India, are being accused of ceding our independence and our institutional integrity to the Executive’s incremental encroachment. The Executive is always impatient, and brooks no disobedience even of the judiciary if it can.
Attempts were always made to treat the Chief Justices as the Departmental Heads in the Secretariat. So much for our “independence and preeminence” as a distinct State organ.”

Wednesday, March 28, 2018

தற்கொலை செய்துக் கொள்வேன் என பேசுவது போலித்தனமானது

காவிரி பிரச்சனைக்காக தற்கொலை செய்துக் கொள்வேன் என பொதுதளத்தில் பேசுவது வீரமும் விவேகமும் அற்ற போலித்தனமானது. போர்குணத்துடன் சுய மரியாதையோடு போராடி, குரல் எழுப்பி வெற்றியை ஈட்ட வேண்டுமே தவிர பேடித்தனமாக பேசக்கூடாது.
தற்கொலை செய்துக் கொள்வேன் என்பதற்கு பதிலாக ராஜினாமா செய்வேன் எனக் கூறியிருந்தால் அது நம்பக் கூடியதாக இருக்கும்.

தண்ணீர் பெற ரேசன் கடை வாசலில் வரிசையில் நிற்கும் மக்கள்.



தண்ணீர் தட்டுப்பாடும், பஞ்சமும் உலகளவில் ஆரம்பித்துவிட்டது. தென்ஆப்பிரிக்காவில் கேப் டவுன் நகரில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு காரணமாக அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை வரிசையில் வழங்குவதைப் போல தண்ணீரையும் ரேசனில் விநியோகம் செய்யும் அளவுக்கு பிரச்சனை தலைதூக்கிவிட்டது.
இந்த டே ஜீரோவை (தண்ணீர் முற்றிலும் தீர்ந்து போகும் நிலை) எதிர்நோக்கி இந்தியாவின் பெங்களூரு, சீனாவின் பீஜிங், துருக்கியின் இஸ்தான்புல் போன்ற நகரங்கள் மட்டுமல்லாமல் சென்னை நகரும் தண்ணீர் இன்றி வற்றிவிடுமென்ற அச்சம் எழுகிறது.
இந்த செய்தியை ஈரோட்டில் நடந்த திமுக மாநாட்டில் நதிநீர் சிக்கல்கள் என்ற தலைப்பிலும் பேசினேன். தண்ணீர் தானே என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது. நீர் என்பது திரவத் தங்கம். அதை சரியாகவும், அளவாகவும் பயன்படுத்துவது மட்டுமின்றி நீர் மேலாண்மை  வேண்டும். ஐ.நா. மன்றத்தின் அறிக்கைகளும் தமிழகம் எதிர்காலத்தில் பாலைவனம் ஆகிவிடும் என்று பலமுறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக டவுன் டு எர்த் (Down To Earth) என்ற மாதாந்திர இதழ் உலகளவில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளவும்.
இப்படிப்பட்ட தகவல்களை வருங்கால சந்ததிகளுக்கு சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் இந்த பதிவை இடுகிறேன்.
ஏனெனில் தண்ணீர் தட்டுப்பாடு செய்திகளை விட ஒரு பெண் எம்.பி. யின் இரண்டாவது திருமணம் போன்ற புறந்தள்ள வேண்டிய செய்திகள் வெளி வருவதையே ஊடகங்களும், மக்களும் விரும்புகின்றனர்.
இப்படியான நிலையில் தமிழக உரிமைகள் யாவும் காவு கொடுக்க வேண்டியது தான். தமிழகத்தின் பிரச்சனைகளை எல்லாம் நாடாளுமன்றத்தில் புரிதலுடன் சொல்லக்கூடியவர்கள் அந்த அவையில் இல்லை. தகுதியே தடை என்ற நிலையில் தரமானவர்கள், நுண்மான் நுழைபுலம் கொண்டவர்கள், தகுதியானவர்கள் நாடாளுமன்றம், சட்டமன்றம் செல்ல வழியில்லை.
இப்படியான நிலையில் பிறகு எப்படி முக்கிய பிரச்சனைகளுக்கு நாட்டில் தீர்வு கிடைக்கும்.
கே. பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர்.. தண்ணீர்.. திரைப்படத்தை கரிசல் மண்ணான கோவில்பட்டி வட்டாரத்திலும், எட்டயபுரம் அருகேயுள்ள ஏழுபட்டி கிராமங்களிலும் எடுக்கப்பட்டது. அந்தப் படம் வந்த சமயத்தில் நான் கோவில்பட்டியில் திமுக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டேன். எனது வட்டாரங்களில் தண்ணீர் பஞ்சம் எப்படியிருந்தது என நேரடியாக கண்டவன். அதே நிலைமை எதிர்காலத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இதை பதிவிடுகிறேன்.
இந்தியா தண்ணீருக்கு வரிசையில் நிற்கும் கேப் டவுன் மாதிரி மாறிவிடக் கூடாது. இந்த பிரச்சனையில் விழிப்புணர்வும், கவனமும் மக்களிடம் ஏற்பட வேண்டும்.


#தண்ணீர்_தட்டுப்பாடு
#ஜீரோ_டே
#Water_Scarcity
#Zero_day
#TamilNadu_Farmers
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-03-2018

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பிஏபி) பிரச்சனையும், ஆந்திர அணை பிரச்சனையும் சிக்கலாக உள்ளது.

பி.ஏ.பி. என்று கொங்கு வட்டாரத்தில் அழைக்கப்படும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் தமிழகம், கேரளா இடையே பிரச்சினைகள் இருந்து வந்தன. 58 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் உருவாகிய திட்டத்தில் பிரச்சினைகள் அவ்வப்போது எழுந்தன. ஆனால்தற்போதுகேரள அரசியல்வாதிகளின் செயல்களால் சிதையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு ஒரே தீர்வான ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 70 அங்குலம் மழை பொழியும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலை பகுதிகளில், மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலந்து வீணாகும் நீரைத் தடுத்து அவற்றை சமவெளியில் பாயும் ஆறுகளுடன் இணைத்து, கிழக்கு நோக்கித் திருப்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கும், கேரளத்தின் சித்தூர் பகுதிக்கும் பாசன வசதி அளிப்பதுதான் பிஏபி திட்டம்.

பரம்பிக்குளம் - ஆழியாறு - பாசனத் (பி.ஏ.பி.) திட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள 6 ஆறுகளையும் சமவெளிகளையும் இணைத்து 9 அணைக்கட்டுகள் மூலமாக தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் நீர் ஆதாரம் பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு 30.5 டி.எம்.சி. யும், கேரளத்திற்கு 19.5 டி.எம்.சி. யும் நீர் பகிர்மானம் செய்துகொள்ளள ஒப்பந்தமும் பல ஆண்டுகளுக்கு முன்னால் கையெழுத்தானது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரும் நேரடியாகப் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 200 மெகா வாட் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது. கிடைக்கும் நீரில் 30.50 டி.எம்.சி. அளவு தமிழகமும், 19.55 டி.எம்.சி. அளவு நீரை கேரளமும் பகிர்ந்து கொள்கின்றன. தமிழகத்துக்கு முழுமையான அளவு தண்ணீர் ஒருமுறை கூடக் கிடைக்கவில்லை என்றாலும், கேரளத்துக்குப் பெரும்பாலான ஆண்டுகளில் முழுமையாகத் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இரு மாநிலத்துக்கும் பயன்பட்டாலும் இதன் மொத்த செலவு ரூ.44 கோடியை தமிழகமே ஏற்றது. ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு, பெருவாரிப்பள்ளம் ஆறு என ஆனைமலைக் குன்றுகளில் உள்ள 6 ஆறுகளும், ஆழியாறு, பாலாறு என சமவெளிகளில் பாயும் 2 ஆறுகளும் என மொத்தம் 8 ஆறுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைக்கும் வகையில் 10 அணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டதில், அப்பர்நீராறு, லோயர் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டு நீர்ப் பகிர்மானம் நடைபெறுகிறது. ஆனைமலையாறு அணை மட்டும் கட்டப்படவில்லை. கேரளத்துக்குள் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் இருந்தாலும் பராமரிப்பது தமிழக பொதுப் பணித் துறைதான். இதற்காகத் தமிழக அரசு கேரளத்துக்கு குத்தகை செலுத்துகிறது. கேரளப் பகுதிக்குள் தமிழக கட்டுப்பாட்டில் இருக்கும் 3 அணைகளையும் கையகப்படுத்த கேரள அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த 2013-இல் தில்லியில் நடைபெற்ற தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியதால் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகளை கேரள அணைகள் என்ற பிரிவில் சேர்ப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த அணைகளில் பணியாற்றி வரும் தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத் துறையினர், காவல் துறையினர் மூலம் தொடர்ந்து நெருக்கடிதான். கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரிகள் உள்ளிட்ட தமிழர்கள் 18 பேரை கேரள காவல் துறையினர் கடுமையாகத் தாக்கினர். மழை குறைந்ததால் தமிழகப் பாசனத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் குறைவான நீரை விநியோகித்தாலும், கேரளத்துக்கு வழங்க வேண்டிய நீர் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு வழங்க வேண்டிய 7.25 டி.எம்.சி.யில் பிப். 24 வரை 5.50 டி.எம்.சி. வழங்கப்பட்டுள்ளது., மீதமுள்ள நீரை வழங்க 4 மாத அவகாசம் இருந்தாலும் உடனடியாக நீரை வழங்க வேண்டும் என்று கேரள மாநிலம் சித்தூர் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் குட்டி உள்ளிட்டோர் தமிழகத்துக்கு நெருக்கடி கொடுத்தனர். தமிழக வாகனங்களைத் தாக்கியும், தடுத்து நிறுத்தியும் போராட்டங்களில் ஈடுபட்டதால் தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நீர் கேரளத்துக்கு மாற்றப்பட்டது. இது தமிழக விவசாயிகளைப் போராட்டத்துக்குத் தள்ளியது. கேரளத்தின் இடையூறின்றி தமிழக விவசாயிகளுக்கு பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டுமானால் ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.நல்லாறு அணைத் திட்டம்:பிஏபி ஒப்பந்தப்படி மேல் நீராறு அணை நீர் (சராசரியாக 9 டி.எம்.சி.) முழுவதும் தமிழகத்துக்கு சொந்தம். ஆனால், இந்த நீரை சமவெளியில் உள்ள திருமூர்த்தி அணைக்கு கொண்டு வர சுமார் 100 கி.மீ. தொலைவு உள்ளது. ஆனால், மேல் நீராறில் கிடைக்கும் நீரை சுமார் 14.40 கி.மீ.க்கு சுரங்கம் அமைத்து நல்லாறுக்கு கொண்டு வருவது, பின்னர் அங்கு ஓர் அணை கட்டி திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் கொண்டு செல்வதுதான் நல்லாறு திட்டம். இந்தத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு பொதுப்பணித் துறை சார்பில் சுமார் ரூ. 715 கோடி செலவாகும் என காவிரி தொழில்நுட்ப ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் மூலம் 250 மெ.வா. மின் உற்பத்தி செய்யமுடியும். இப்போது இந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனைமலையாறு, இட்லியாறு ஒன்று சேரும் இடத்தில், அப்பர் நீராறு, லோயர் நீராறு அணைக்கு மேல், இட்லியாறுக்கு குறுக்கே சிறிய அணை கட்டி, அங்கிருந்து 6 கி.மீ.க்கு சுரங்கம் அமைத்தால் தண்ணீர் கீழ்நீராறு அணைக்கு வந்துசேரும். அங்கிருந்து சோலையாறு, பரம்பிக்குளம் வழியாக தண்ணீரைத் தமிழகம் கொண்டு வரலாம். இத்திட்டப்படி தமிழகத்துக்கு கூடுதலாக 4.25 டி.எம்.சி. நீர் கிடைக்கும். இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான உத்தேச மதிப்பீடு ரூ.585 கோடி. பிஏபி திட்டம் தொடங்கி 60 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், தற்போது வரை ஆனைமலையாறு அணைத் திட்டம் விவசாயிகளின் கனவாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும் இடம் பெறுகிறது. தமிழகம் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் போனதற்கு முக்கிய காரணம், கேரள அரசு இடைமலையாறு அணையைக் கட்டி முடிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான், தமிழகம், ஆனைமலையாறு அணைத் திட்டத்தைக் கட்ட வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது கேரளம். கடந்த சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அணை கட்டி முடித்து, 75 மெகாவாட் மின்உற்பத்தி செய்தாலும், ஒரேயொரு கால்வாயைக் கட்டாமல் அத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்கிறது கேரளம். திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாகக் கூறினால் நீராறில் கிடைக்கும் 4.25 டி.எம்.சி. நீரை தமிழகம் எடுத்துக் கொள்ளும் என்ற அச்சமே இதற்குக் காரணம். இந்தத் திட்ட அதிகாரிகளுக்கே ஒப்பந்தத்தின் கூறுகள் தெரியாமல் இருப்பதுதான் தமிழகத்தின் நீர் இழப்புக்குக் காரணம். இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும். கடந்த 1991ஆம் ஆண்டு போடப்பட்ட திருமலை கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். கேரளத்துக்கு தண்ணீர் வழங்குவது நமது கடமை மட்டுமல்ல, சகோதர உணர்வும் ஆகும். பருவ காலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்வதைப் போல், வறட்சிக் காலத்திலும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல மனதும் வேண்டும். ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களைச் செயல்படுத்தினால் சுமார் 13 டி.எம்.சி. கூடுதல் நீர் கிடைக்கும். இதன் மூலம் இத்திட்டத்தில் உள்ள 4.25 லட்சம் ஏக்கருக்கும் ஆண்டு முழுவதும் தண்ணீர் வழங்க முடியும். பிஏபி திட்டத்தில் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரை தண்ணீர்ப் பங்கீடு ஆண்டாக கணக்கிடப்படுகிறது. தமிழகத்துக்கு 30.50 டி.எம்.சி.யும், கேரளத்துக்கு 19.55 டி.எம்.சி.யும் பங்கு உள்ள நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2018 வரை இரு மாநிலங்களும் நீரைப் பங்கீடு செய்து கொண்ட விவரம்: (அளவு டி.எம்.சி.யில்) ஆண்டு தமிழகம் கேரளம் 2008-2009 18.46 19.97 2009-2010 27.00 19.89 2010-2011 28.48 19.89 2011-2012 16.83 20.13 2012-2013 15.79 16.24 2013-2014 22.82 20.47 2014-2015 26.87 20.19 2015-2016 13.17 18.41 2016-2017 12.67 12.58 2017-2018 (பிப்ரவரி வரை) 14.35 15.77 -----------------------------------------
ஆந்திர அணை பிரச்சனையும் சிக்கலாக உள்ளது.
தமிழக ஆந்திர நதிநீர் சிக்கலில், ஆந்திர மாநில அந்திரி – நீவா நதி தமிழகத்தின் பாலாற்றோடு இணைத்தால் மழை காலங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தை வேலூர் – ஆம்பூர் பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதை குறித்து தமிழக அரசும் இதுகுறித்தான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை.
ஒரு பக்கம் சிந்து – கங்கை – பிரம்மபுத்திரா என்ற வடபுல நதி தீரங்களில் வெள்ளமானது பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மூன்று நதிதீரங்களில் 70 மில்லியன் மக்கள் பயனும் அடைகின்றனர். இப்படி வட இந்தியாவில் நீர்வளங்கள் அதிகரித்து வெள்ளமாக போவதைத் தான் வறட்சியில் வாடும் தெற்கே தீபகற்ப இந்தியாவிற்கு திருப்ப வேண்டும் என்று நான் 1983இல் வழக்குமன்றத்தில் தாக்கல் செய்து இதன் தீர்ப்பை கடந்த 27/02/2012 இல் பெற்றேன். வட இந்திய நதிகளான கென்வாட் – பேத்வா இணைப்பு, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களின் பயனடைய இணைக்கப்படுகின்றன. பிரம்மபுத்திரா நதி தீரத்தில் சீனா பிரச்சனைகளை மேற்கொள்கிறது. மணிப்பூர் மாநிலத்தில், தௌபால் அணையை மியான்மர் நாடு கட்டி வருவதால் மணிப்பூர் மாநில மக்கள் தங்களுடைய பாசன வசதி பாதிக்கப்படும் என்று குரல் எழுப்பியுள்ளனர். இப்படியான வட இந்திய நதிகள் பிரச்சனைகள், சிக்கல்கள் எல்லாம் உடனுக்குடன் பேசப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் நதிநீர்ச் சிக்கல்கள் யாவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலேயே உள்ளன. அப்படிப்பட்ட தமிழகம் எதிர்பார்க்கின்ற திட்டம் தான் ஆந்திர மாநில அந்திரி – நீவா நதி தமிழகத்தின் பாலாற்றோடு இணைத்தல் ஆகும்
#பாலாறு_நதிகள்_இணைப்பு #Palar_River_Linking #KSRadhakrishnanpostings #KSRpostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 28-03-2018

Tuesday, March 27, 2018

நச்சும், ஆட்கொல்லி அபாயத்தினை உருவாக்கு திட்டங்களை டெல்லி பாதுஷாக்களால் தமிழகத்தில் திணிக்கப்படுகிறதே...

இன்றைக்கு (27/03/2018), தேனி மாவட்டம், தேவாரம் - பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள மலையில் சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தது மட்டுமல்லாமல், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்ற கொடுமையான உத்தரவும் வந்துள்ளது. காந்தத் தூண்டுதலால் துகள்களை ஆய்வு செய்யும் பொருட்டு அண்ட வெளியில் சக்தி மிகுந்த கதிரலைகள் உருவாகும். அதை உருவாக்க 1000 டன் ஜெலட்டின் வெடிமருந்துகளை 800 நாட்களுக்கு வெடிக்கச் செய்து 11,25,000 பாறைகளுடன் மலைகளும் தகர்க்கப்படும். சுற்றுச் சூழல் மாசுபடுவது மட்டுமல்லாமல் தேனி மாவட்டத்துடன், கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. பூமியே சிதறுண்டுவிடும் போன்ற விளைவுகள் ஏற்படுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான திட்டங்கள் தமிழகத்திற்கு தேவைதானா? குப்பை கூழம் போல தமிழகத்தில் திணிக்கப்படுகிறதே. இது என்ன நியாயம்? ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இருபத்தைந்து ஆண்டுகளாக வைகோவுடன் இணைந்து களப்பணியாற்றி பல்வேறு போராட்டங்ளை செய்துள்ளேன். இன்றைக்கு தூத்துக்குடி மக்களே வெகுண்டெழுந்து அதை தடுக்க சதுக்கத்தில் போராடுகின்றனர். கூடங்குளம் அணுமின் திட்டத்தை அறிவித்தவுடன் அது மிகவும் ஆபத்தானது என்று 1989ஆம் ஆண்டிலேயே வழக்க தொடுத்தவன் அடியேன். இரண்டாவது முறையாக கூடங்குளம் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன் *(வழக்கு எண் / WP No. 22771 of 2011)*. எங்கள் கரிசல் பகுதியில் ராஜபாளையத்திலுள்ள தமிழ்நாடு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாதிக்கப்பட்டு, குடிநீர் வசதியில்லாமல், மக்களுக்கு சுவாச நோய், புற்று நோய் என 1970களில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அதை எதிர்த்து விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, சட்டப்பேரவைத் துணைத் தலைவரும், விருதுநகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான பெ. சீனிவாசன் (காமராஜரை தோற்கடித்தவர்), அன்றைய மக்களவை உறுப்பினராக இருந்த சிவகாசி வி.ஜெயலட்சுமி போன்றோர் போராடி எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு (*வழக்கு எண். 10589/1986*) தாக்கல் செய்து அதன்படி, உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று ஆலையிலிருந்து தூசி வெளியேறாமல் பலகோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும் கருவிகளும் பொறுத்தப்பட்டன. அப்போதே ஆலையினை விற்றுவிடலாம் என்று தமிழ்நாடு அரசு யோசித்தபொழுது 1986ல் என்னுடைய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததனால் ஆலையினை விற்கமுடியாமல் போனது. மேலும், 2015ம் ஆண்டு (*WP No. 4696 of 2015*) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கின் தீர்ப்பின்படி 80 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டு, தமிழக அரசு ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தியதெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வு இல்லாத காலத்திலேயே இது போன்ற வழக்குகள் நான் தொடுத்துள்ளேன். கேரளாவின் மருத்துவக் கழிவுகள், குப்பைகளை தமிழக எல்லைப் பகுதிகளான பாலக்காடு, நெல்லை மாவட்ட செங்கோட்டையில், குமரி மாவட்டத்தின் எல்லைகளில் லாரிகளில் வந்துகொட்டுவது என இந்த பிரச்சனையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். தமிழகத்தின் கெயில் குழாய்கள் பதிப்பு கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் திருத்தணி அருகே இருந்து மதுரை வரை பதிக்கும் பணிகளும், கடலூர் முதல் சேலம் வரை பதிக்கும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளது. விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் கிணறுகளை தமிழகத்தில் பல பகுதிகளில் தோண்ட திட்டமும் உள்ளது. ஏற்கனவே இது நடைமுறைக்கு வந்துவிட்டது. இறால் பண்ணைகளும் விவசாய நிலங்களை களர் நிலங்களாக்கியது. விவசாய நிலங்களில் மின்சார கடத்தி கோபுரங்களை அமைத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இம்மாதிரி ஆலைகளால் ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் இருக்கும் தண்ணீர் ஒரு பக்கம் மாசடைகின்றது. இன்னொரு பக்கம் தொற்று வியாதிகள் பரவுகிறது. இது மாதிரி பல ஆலைகள் பல வட்டாரங்களில் பல்வேறு கேடுகளை மக்களுக்கு விளைவிக்கின்றன. அந்த ஆலைகள் வருமாறு.
- அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை, - மதுரை பொய்கைக்கரைப்பட்டியிலுள்ள கெமிக்கல் தொழிற்சாலை, - தூத்துக்குடி சிப்காட், - கடலூர் சிப்காட், - திருப்பூர் பின்னலாடை - நொய்யலாற்றின் மரணம், - சேலம் கஞ்சமலை தாது கம்பெனி, - மேட்டுர் அனல்மின் நிலையங்கள், - மதுரை அபிலாஷ் கெமிக்கல்ஸ், - நெய்வேலி நிலக்கரி சுரங்கம், - கெயில் திட்டம், - திருவண்ணமாலை - ஜிண்டால் தாது கம்பெனி (இன்னும் தொடங்கப்படவில்லை), - ஊட்டி ஸ்டெர்லிங் ஆலை, - கொடைக்கானல் பாதரச (மெர்குரி) தொழிற்சாலை, - நாகர்ஜூனா ஆலை தமிழகத்திற்கு பலனளிக்க வேண்டிய சேது சமுத்திரத் திட்டம், மீனவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசு. மேலும் 1959ஆம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சேலத்தில் 1982ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சேலம் இரும்பாலை தற்போது முடக்கப்படுகிறது. ஊட்டியில் முக்கியமாக இயங்கிவந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடி நைனிட்டாலுக்கு மத்திய அரசு அனுப்பிவிட்டது. இவ்வாறு பல்வேறு ஆபத்தான நஞ்சைக் கக்கும், சுற்றுச் சூழுலுக்கு தீங்கிழைக்கும் தொழிற்சாலைகளே அதிகம். இப்படி தமிழகத்திற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முடக்கிவிட்டு, சுற்றுச் சூழல் விரோத திட்டங்களுக்கு தாராளமாக அனுமதியை வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது. #KSRadhakrishnanPostings #KSRPostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 27-03-2018


Monday, March 26, 2018

உலகின் மிகப்பெரிய தாமிர உருக்காலை

Retweeted BBC News Tamil (@bbctamil):
''உலகின் மிகப்பெரிய தாமிர உருக்காலை சீனாவில் உள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு பின்னர், உலகின் இரண்டாவது பெரிய உருக்காலையாக இந்த ஆலை செயல்படும்.”
"ஆபத்தான ரசாயனங்கள் பயன்படுத்தப்படும் இந்த ஆலையை, குடியிருப்புப் பகுதிக்கு அருகில் செயல்பட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதை மீண்டும் விசாரிக்க வேண்டும்.''
Like @[BBC News தமிழ்]

ஐ நா மனிதஉரிமைகள் எதிரான ஆணையரின் அறிக்கை : ஈழத்தமிழ் மக்களுக்கான ஒரு கவுன்சிலிங்....

இலங்கை அரசுக்கும் எதிரான அறிக்கையை ஐநா மனிதஉரிமைகள் ஆணையர் இவ்வாரம் வெளியிட்டுள்ளார். இன-மத வன்முறைகள் நிறைந்த நாடு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நிகழும் நாடு, மனிதஉரிமைகள் பெரிதும் மீறப்படும் ஒரு நாடு எனப் இவ்வறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

இறுதிகட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசு மேற்கொண்ட யுத்தக் குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான கடும் வார்த்தைகள் இவ்வறிக்கையில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாதிக்கப்பட்ட ஈழத் தமிழருக்கான நீதி தேடும் பாதையில் இவ்வறிக்கை முன்னெற்றகரமானது என பொதுவாக கூறப்படுகிறது. இதுவரைகாலம் வெளிவந்த அறிக்கைகளுள் இது மிகவும் காட்டமானது என்பது உண்மை.
ஐநா மனிதஉரிமைகள் ஆணையர் சையது அல்-ஹசைன் அவர்களினது எழுத்துபூர்வமான இந்த அறிக்கை இவ்வாணைத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் தமிழ் மக்கள் தரப்பில் ஆறுதலும், திருப்தியும் ஏற்பட்டுள்ளது. உண்மையில் இப்படியொரு காட்டமான அறிக்கை வெளிவரும் என்று பொதுவாக விபரம் அறிந்தோர் மத்தியில் ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது.
இவ்வறிக்கைக்குப் பின்னால் தெளிவான இராஜதந்திர இலக்குகள் உண்டு. இவ்வறிக்கை ஒருபுறம் தமிழ் மக்களுக்கு உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தலை வழங்கவல்லதாக அமைந்துள்ளது. அத்தகைய ஓர் இலக்கு இந்த அறிக்கைக்குப் பின்னால் தெளிவாக உண்டு. அத்துடன் இந்த அறிக்கை ராஜபக்சாக்களுக்கு ஓர் இறுக்கமான செய்தியை சொல்வதில் கவனம் செலுத்தியுள்ளது. இந்த அரசாங்கத்தை கவிழவிடாது பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கம் இவ்வறிக்கைக்குப் பின்னால் உள்ள மேற்குல அரசுகளிடமுண்டு.
நடந்து முடிந்த உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களில் ராஜபக்சா அணி பெருவெற்றியீட்டியதைத் தொடர்ந்து பதவியில் இருக்கின்ற இன்றைய அரசாங்கம் கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சம் பெரிதும் ஏற்பட்டது. இந்த அரசாங்கத்தை கவிழ்த்தால் போர்க்குற்ற விசாரணை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பனவற்றின் பேரால் தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை ராஜபக்‌ஷக்கள் சரிவர உணர்ந்திருக்கிறார்கள். ஆதலால் உடனடியாக அரசாங்கத்தை கவிழ்கும் நோக்கம் அவர்களிடம் இல்லை. ஆனாலும் இந்த அரசாங்கத்திற்கு பெரும் சவால் இதனால் ஏற்பட்டுள்ளது என்பதும் இதன் பின்னணியில் இந்த அரசாங்கம் கவிழ்ப்படுவதற்கான எத்தனங்கள் எழுந்திடக்கூடும் என்ற அச்சமும் மேற்குலகிடம் உண்டு.
ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் சீனசார்பு நிலைப்பாட்டால் 
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், அண்டை நாடான இந்தியாவும் ராஜபக்‌ஷவை பதவியில் இருந்து அகற்ற இறுதிகட்டத்தில் நிகழ்ந்த யுத்தக் குற்றச்சாட்டுக்களை முக்கிய ஏதுவாக பயன்படுத்தி அவரை பதவியில் இருந்து அகற்றுவதில் வெற்றிபெற்றன. ஆனாலும் அவர் மக்கள் ஆதரவுடன் எழுச்சிபெறும் நிலை பெரிதும் உள்ளதை உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களில் அவர்கள் பெற்றுள்ள வெற்றிகள் நிரூபித்துள்ளன.
இரண்டு ஆண்டுகளின் பின்பு வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்‌ஷ நிறுத்தப்பட்டு வெற்றியீட்டுவார் என்ற அச்சமும் பெரிதாகிவிட்டது. எப்படியோ உடனடியாக ராஜபக்‌ஷக்களுக்கு அச்சம் தரும் நகர்வை மேற்கொள்ள வேண்டியது அவசியமென ராஜபக்‌ஷ எதிர்ப்பு நாடுகள் கருதுகின்றன.

ஐநா சபையானது பெரிதும் அமெரிக்காவின் செல்வாக்கிற்கு உட்பட்ட சபையாகும். சர்வதேச ரீதியில் தனக்குச் சாதகமான விடயங்களை மேற்கொள்வதற்கு ஐநா சபையை பயன்படுத்துவதில் அமெரிக்கா பெரிதும் அக்கறையாக உள்ளது, இதில் அமெரிக்காவின் பலம் மிகப்பெரியது.
போர்க்குற்ற விசாரணை தொடர்பான பிரேரணையை ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா முன்வைத்தது. அப்போது பதவியில் இருந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் இப்பிரேரணை மிகப்பெரும் வெற்றியை ஈட்டியது. இதனால் தமிழ் மக்கள் அடைந்த பலனைவிடவும் இப்பிரேரணையை முன்வைத்த மேற்படி அரசுகளின் இராஜதந்திர நோக்கம் பெரிதும் நிறைவேறியது.

தற்போது ஐநா ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பின்னால் முக்கிய மூன்று இராஜதந்திர இலக்குகள் உண்டு. இதில் முதன்மையானது தற்போது பதவியில் இருக்கும் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் அது நெருக்கடிக்கு உள்ளாகமல் தொடர்ந்து செயற்படக்கூடிய வகையில் நிலைமைகள் அமையவேண்டும் என்பது. இந்த வகையில் ராஜபக்‌ஷக்களுக்கு இராஜதந்திர பரிபாசையில் ஓர் எச்சரிக்கையை இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது என்றே கூறவேண்டும். இரண்டாவது தமிழ் மக்கள் மத்தியில் போர்க்குற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அதிர்ப்திகள் மேலோங்கி ஐநா சபை மீதான நம்பிக்கை சரிந்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை தணிக்கவும், தமிழ் மக்களை உளவியல் ரீதியாக சாந்தப்படுத்தவும் வேண்டிய வகையில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ் மக்களுக்கான ஒரு கவுன்சிலிங் உண்டு என்பதில் சந்தேகமில்லை.
இவ்வறிக்கையில் 40வது உறுப்பு காட்டமான செய்திகளை கூறுகிறது. இலங்கை அரசின் நீதித்துறை மீது பெரிதும் அவநம்பிக்கையை வெளியிட்டுள்ளதுடன் போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு நீதி தேடும் பாதையில் முன்னெறவில்லையென்றும் அதற்கான மனவிருப்பத்தையோ, செயல் ஊக்கத்தையோ இலங்கை அரசு காட்டவில்லையென்றும் இலங்கை கோரியுள்ள இரண்டு வருட கால காலநீட்டிப்பிற்குள் அது நீதிகாணும் நடவடிக்கையில் வெற்றிபெறுவது சந்தேகத்திற்குரியது என்றும் அதற்கான முன் முயற்சிகள் எதுவும் இதுவரை தோன்றவில்லையென்றும் அது கூறுகிறது.

இந்நிலையில் சர்வதேச நீதிகாணும் பொறிமுறை மூலம் நீதிகாண வேண்டுமென்கின்ற வாதத்தை முன்வைப்போரின் கருத்து இதன் மூலம் மேலோங்கியுள்ளது என்றும் எனவே அத்தகைய விசேட சர்வதேச நீதிமன்ற விசாரணை முறை வேண்டுமென்ற கோரிக்கையோடு ஐநா மனிதஉரிமைகள் ஆணையர் உடன்படுவதாகவும் அது கூறுகிறது. இந்நிலையில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய நீதி விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ளதவிடத்து நீதிகாண்பதற்கான உலகளாவிய வகையிலான ஓர் அதிகாரம் உள்ள ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமென்று ஐநா உறுப்புநாடுகளிடம் ஆணையாளர் கோருவார் என்ற விடயமே இங்குள்ள அச்சமூட்டும் விடயமாகும்.
இச்செய்தி முக்கியமாக இராஜதந்திர பரிபாசையில் ராஜபக்‌ஷக்களுக்கு பெரும் எச்சரிக்கையாகும். குறிப்பாக நடப்பில் உள்ள அரசாங்கத்தை கவிழ்க்கக்கூடாது அவ்வாறு கவிழ்த்தால் இலங்கை அரசு சர்வதேச ரீதியான போர்க்குற்ற விசாரணைக்கு உள்ளாகும் என்பதுடன் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளானது அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் இனிவரும் காலத்தில் அத்தகைய நடவடிக்கையில் பௌத்த நிறுவனங்களோ, ராஜபக்‌ஷக்களுக்கு ஈடுபடக்கூடாது என்ற செய்தியையும் இது கூடவே அறிவிக்கிறது.
இறுதியாக ஐநா சபை மீது ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை சரிசெய்யவும், போர்க்குற்றவிசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்புக்களை தணிக்கவும்வல்ல வகையிலான ஒரு கவுன்சிலிங்காக இந்த அறிக்கை அமைந்திருக்கிறது.

அரசாங்கத்தை பாதுகாப்பதில் இவ்வறிக்கை 100 வீதம் வெற்றிபெற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதிகாணும் விடயத்தில் இது ஒரு கவுன்சிலிங்காக மட்டும் அமைவதுடன் தன் பணியை முடித்துவிடும் என்ற அச்சம் இராஜதந்திர அடிப்படையில் எழ இடமுண்டு.
எப்படியோ இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான முயற்சியிலும், இந்த அரசாங்கத்திற்கு ராஜபக்‌ஷக்களுக்கு கொடுக்கக்கூடிய நெருக்கடியை தணிப்பதிலும் ஈழத் தமிழர்களுக்கான நீதிகாணும் விவகாரம் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதுவெறும் துருப்புச் சீட்டாக மட்டும் போகாமல் தமிழ் மக்களுக்கான நீதிகாணும் படலத்தில் அர்த்தபுஷ்டியான செயற்பாட்டிற்கு போவதற்கு தமிழ்த் தரப்பில் உள்ள அரசியல் சக்திகள் எடுக்கவல்ல நிலைப்பாடுகளே வழிவகுக்க வேண்டும் என்கின்ற கண்ணோட்டமும் காணப்படுகிறது.
எப்படியோ மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கம் தலையிடியின்றி தொடர்ந்து பதவியில் இருப்பதை இவ்வறிக்கை உறுதிபடுத்திவிட்டது என்பது மட்டும் உண்மை.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-03-2018

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...