மிளகாய் சாகுபடி பொய்த்துப் போனதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?
-----------------------------------------------
மிளகாய் சாகுபடி பொய்த்துப்போனதால், மானாவாரி விவசாயிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டி கோட்டம் விளாத்திகுளம், எட்டையபுரம், சங்கரன் கோவில், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளில் மிளகாய் சாகுபடி மானாவாரி நிலங்களில் புரட்டாசி மாதம் ரபி பருவத்தில் வெங்காயத்துடன் ஊடு பயிராகவும், தனித்தும் பயிரிட்டுள்ளனர். போதிய மழை இல்லாததால் செடிகள் வீரியத்துடன் வளரவில்லை.
இச்செடிகள் 80 வது நாளில் பூப்பிடித்து காய் பிடிக்கக்கூடியதாகும். 2 மாத காலம் வாரம் ஒரு முறை பழம் பறிக்கப்படுகிறது. களத்தில் மணல் பரவலாக போட்டு அதன் மீது பழங்களை காய வைப்பார்கள். மூன்று முறைகளை பறித்து உழுது, உரமிட்டு மருந்து தெளிப்பு ஆகிய வற்றுக்கு ஏக்கருக்கு ரூ 10 ஆயிரம் வரை செலவாகிறது. பூமியில் ஈரப்பதம் இல்லாததால் இலை சுருட்டு நோய் தாக்கி செடிகள் காய்ந்து வருகின்றன. சராசரியாக ஏக்கருக்கு 4 குவிண்டால் வரை கிடைக்கவேண்டிய வத்தல் இந்தாண்டு 1 குவின்டால் கிடைப்பது குதிரை கொம்பாக மாறிவிட்டது. தவிர காய்ந்து வரும் செடிகளை காப்பாற்ற கடைசி முயற்சியாக தண்ணீரை விலைக்கு வாங்கி டிராக்டர்கள் மூலம் கொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றுகின்றனர்.கடந்த ஆண்டு வத்தல் குவிண்டால் ரூ 27 ஆயிரம் வரை போனது. இந்தாண்டு ரூ 12 ஆயிரம் விலை மட்டுமே உள்ளது. இதர பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்படும் போது கோடையில் மிளகாய் விவசாயிகளுக்கு கை கொடுக்கும்.
ஆனால் இந்தாண்டு அதற்கு நேர்மாறாக உள்ளது. மிளகாய் மானாவாரி கரிசல் மண் நிலங்களிலும், சம்பா மிளகாய் பாசன நிலங்களிலும் விளையக்கூடியதாகும். உணவு தயாரிப்பில் வத்தல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தாண்டு 2017-18 மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். இரண்டு மாதத்திற்குள் அதற்கான கோப்புகள் பரிசீலனை செய்து உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். தவிர அனைத்து மானாவாரி நிலங்களுக்கும் கோடை உழவு இலவசமாக அரசு உழுது தரவேண்டும் என அவ்வட்டார விவசாயிகள் கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர்.
#மிளகாய்_சாகுபடி
#விவசாயிகள்
#Chillies_Cultivation
#Agriculturist
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-03-2018
No comments:
Post a Comment