கடந்த ஞாயிற்றுக் கிழமை (11/03/2018) எனது நண்பர், அவருடைய துணைவியாருடன் மாமல்லபுரம் செல்லும் வழியில் கிழக்கு கடற்கரைச் சாலையில், பாலவாக்கத்தில் உள்ள எனது வீட்டில் சந்தித்தார். எப்போதும், இந்த வழியே செல்லும் போது என்னை சந்தித்து உலக விசயங்கள் மற்றும் நாட்டு நடப்புகளை பற்றி உரையாடிவிட்டு செல்வது அவரின் வாடிக்கை.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்களில் நான் போட்டியிட்ட போது எனக்காக தேர்தல் பணிகளை ஆற்றியவர். நல்ல நண்பர் எனக்கு, மிகவும் திறமையான வழக்கறிஞர். எனது பரிந்துரையால் மத்திய அரசின் வழக்கறிஞராகவும் இருந்தார். இன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.
நீதிபதியாக இருப்பதால் அவரை சந்திப்பதையும், நட்பு பாராட்டி பேசுவதையும் நான் தொடர்ந்து தவிர்த்து வருகிறேன். அவர் என் மேல் உள்ள பாசத்தின் காரணமாக என் துணைவியார் இறந்த பின்,ஆறுதல்காக என்னை வந்து சந்திப்பது வாடிக்கை. இப்போது விசயத்திற்கு வருகிறேன்.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குறித்து தி இந்து நாளிதழில் எனது முழுப் பக்க பேட்டி சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. இறுதித் தீர்ப்பு வெளியான அன்றே புதிய தலைமுறை தொலைக்காட்சியிலும் விவாதத்தில் கலந்து கொண்டேன். இந்த இரண்டையும் படித்தேன், பார்த்தேன் என்றார். காவிரி பிரச்சனையில் பலருக்கும் தெரியாத விவரங்களை நீங்கள் சொல்லியதை நான் கவனித்தேன்.
இந்த விவரங்கள் ஆட்சியில் உள்ளவர்களுக்கு கூட தெரிவதில்லை. என்ன செய்வது?
மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியாதவர்கள் எம்.பி., எம்.எல்.ஏ., போன்ற பொறுப்புகளில் உள்ளனர். மக்களோடு மக்களாக அவர்களின் பிரச்சனைகளை களப்பணியாற்றி கண்டறிந்து தீர்த்து வைப்பவர்கள், மேலான பொறுப்புகளுக்கு வர முடியவில்லை. ஏனென்றால், ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள். மக்களைப் பற்றி அக்கறையில்லாத குற்றவாளிகளும், பணம் படைத்தவர்களும் தான் பொறுப்புகளுக்கு வரமுடியும்.
இந்த உண்மைகளை உச்ச நீதிமன்றமே தன்னுடைய தீர்ப்புகளில் வெளிகாட்டியுள்ளது. பிரச்சனைகளை நன்கு அறிந்து அதை குறித்து உரத்தக் குரல் எழுப்பும் தங்களைப் போன்ற களப்பணியாளர்கள் எல்லாம் நாடாளுமன்றத்திற்குள் செல்ல முடிவதில்லை. இது தான் இன்றைய யதார்த்த நிலை.
மக்களுக்காக உழைக்கும் பிரச்சனைகளை நன்கு தெரிந்தவர்கள் தெருவில் இருக்கிறார்கள். தெருவில் நிற்க வேண்டியவர்கள் விஷய ஞானமற்றவர்கள் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். இது தான் இன்றைக்கு நாட்டின் போக்காக இருக்கிறது என்று கவலையோடு சொன்னார். இதை கேட்டவுடன் அவரது துணைவியாரும் அவர் சொன்னது 100% உண்மை என கனத்த மனதுடன் தலையாட்டினார்.
நான் சொன்னேன், என்ன செய்ய?
தகுதியே தடையாக இருக்கிறது. சரி இப்போது தேர்தலில் நான் நின்றாலும் ஜாதி, பணம், காசு போன்றவை பேசும் நிலையில், நான் 48 வருடங்களாக உழைத்து, தமிழக பிரச்சனைகளுக்காக உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடுத்து போராடியதை எல்லாம் சொன்னாலும், யார் வாக்களிக்கக் போகிறார்கள். அப்படியே அங்கு சென்றாலும் கூட நாடாளுமன்றம் சரிவர இயங்குவதும் இல்லை. முக்கிய பிரச்சனைகளை குறித்தும் விவாதிப்பதில்லை. எப்போதும் கூச்சல், குழப்பம், வெளிநடப்பு, நாடாளுமன்றத்தை முடக்கி மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் போக்கே நிலவுகிறது.
ஊழலில் திளைத்தவர்கள், குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடதகுதியற்றவர்கள், பணம் படைத்தவர்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு செல்லட்டும். நாட்டு மக்களும் அதை கவனிக்கட்டும்....
இது தான் இன்றைக்கு ஜனநாயகத்தின் நிலை என்று நான் சொல்லும் போது, அவர் சொன்னார்,
நீங்கள் வழக்கறிஞராக மட்டும் இருந்திருந்தால் இன்றைக்கு நீதிபதியாகி உச்சநீதிமன்றம் வரை சென்றிருக்கலாம். ஐ.நா. சபையிலும் உங்களுக்குபெரும்பொறுப்புகிடைத்தது. இருப்பினும் போகவில்லை. இதை பார்க்கும் போது எனக்கு, என்ன நாடு, என்ன மக்கள் என்றுசொல்லிவிட்டு கிளம்பினர்.
நாட்டின் இந்த போக்கால் போலியான அதிகார வர்க்கம் நாட்டை
வஞ்சிக்கிறது....
இதை எதற்கு சொல்கிறேன் என்றால், நாட்டிலுள்ள எல்லோர் மனதிலும் நாட்டைப் பற்றிய கவலையும், இழப்பும் என்ற இறுக்கமான நிலை இருக்கின்றது. இந்த செய்தியைச் சொல்வதற்கு தான் இந்த சம்பவம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14/03/2018
No comments:
Post a Comment