Sunday, March 18, 2018

திராவிட நாடு

No automatic alt text available.
இந்தியா என்ற கூட்டாட்சியில் பல்வேறு இனங்களும், மொழிகளும், கலாச்சாரங்களும்,பழக்கவழக்கங்களும் பரவியுள்ளன. பன்மையில் ஒருமை என்ற நிலையில் சமஷ்டி அமைப்பு ஆரோக்கியமாகவும், நேர்மையாகவும் இந்திய மக்களின் நலனுக்காகவும் இயங்க வேண்டும். 


அரசியலமைப்பு சாசனத்தில் கூட்டாட்சி (Federal) என்ற சொல்லை பயன்படுத்தாமல் திட்டமிட்டு தவிர்த்துவிட்டனர்.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் இப்படி பல கோளாறுகள் உள்ளன. நாடு விடுதலைக்குப் பின் டெல்லியில் மத்திய ஆட்சியில் இருக்கும் பாதுஷாக்கள் மாற்றாந்தாய் போக்கில் மாநிலங்களை பார்க்கின்றது. மாநிலங்களை சமமாக பாவிக்கவேண்டும். எப்படி மக்களால் மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்படுகிறதோ, அதே போலத்தான் மாநில அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 
மத்திய அரசு மாநில அரசுகளை சமன்பாடுகளோடு (Balance) நடத்தாமல், சமன்பாடற்ற (Imbalance) நிலையில் நடத்துகின்றது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் பல உண்டு. ஆனால் தனக்கு வேண்டிய மாநில அரசுகளின் பிரச்சனைகளை தீர்ப்பதும், சில மாநிலங்களை அரசியல் காரணங்களுக்காக தீர்க்காமல் மத்திய அரசு பழி வாங்குவதில் என்ன நியாயம் உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை காவிரி, முல்லை - பெரியாறு, நெய்யாறு, பாலாறு போன்ற 60 க்கும் மேற்பட்ட நீராதாரப் பிரச்சனைகளும், பழவேற்காடு ஏரி பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, சேது கால்வாய் பிரச்சனை, கடலூர், நாகப்பட்டினம் போன்ற துறைமுகப் பிரச்சனைகள், வாலிநோக்கம், மூக்கையூர் போன்ற மீன்பிடித் துறைமுகப் பிரச்சனை, அகல ரயில் பாதை சில இடங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ள பிரச்சனை, ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை இடமாற்ற பிரச்சனை, சேலம் இரும்பாலை பிரச்சனை, நெய்வேலி நிலக்கரிச் சுரங்க பிரச்சனை, சிப்பெட் நிறுவனப் பிரச்சனை, எண்ணூர் துறைமுக விரிவாக்கப் பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை, கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர் பசுமைப் பாதுகாப்பு திட்டங்கள், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தாது மணல் ஆலை புனரமைப்பு பிரச்சனை, மதுரை, திருச்சி, கோயமுத்தூர் விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக மாற்றுவதற்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்கப் பிரச்சனை, கோயமுத்தூர் பஞ்சாலை பிரச்சனை, தமிழகத்தில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமைவது குறித்த பல பிரச்சனைகள் என 120க்கும் அதிகமான முக்கிய தமிழக பிரச்சனைகள் மத்திய அரசால் பல ஆண்டுகளாக செயல்படுத்தாமல் புறக்கணிக்கப்
படுகிறது. இதற்கு நியாயம் வேண்டாமா? 

தமிழகத்திலிருந்து மத்திய சர்க்காருக்கு செலுத்தும் வரிப்பணத்தில் 7லிருந்து 10 சதவீதம் தான் திரும்பி வழங்குகிறது. இது ஒரு சமன்பாடற்ற, தவறான அணுகுமுறையல்லவா?

தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மட்டும் 70% வரி வருவாயை மத்திய அரசுக்கு வழங்கின்றன.தமிழ்நாடு 100 ரூபாய் கொடுத்து விட்டு மத்திய அரசிடமிருந்து 10 ரூபாய் மட்டும் வாங்குகிறது என்றால், உத்தர பிரதேசம் 10 ரூபாய் கொடுத்துவிட்டு 100 ரூபாய் வாங்குகிறது. பக்தவத்சலம் ஆட்சிகாலத்திலேயே, 1966ல் நிதிக் குழுவிடம் காங்கிரஸ் கட்சி முதல்வராக 
இந்த குறையை சுட்டிக்காட்டினார் .

மத்திய அரசின் வரி திரும்பத் தரப்படும்போது, மாநிலங்களின் பங்கு என்று ஒரு பகுதியாகவும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு என்று ஒரு பகுதியாகவும் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி என்பது, பல்வேறு நிபந்தனைகளுடன் வருகிறது. அந்தத் திட்டங்களைக் கட்டாயம் செயல்படுத்தி, பங்கை பெற வேண்டியுள்ளது. ஆகவே, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படுவதோடு, கூடுதல் வரி செலுத்தும் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள், தேவைக்கேற்றபடிமாற்றக்கூடியவையாக இருக்க வேண்டும். 

வரலாற்று ரீதியாகவே, தென்னிந்திய மாநிலங்கள் வட இந்திய மாநிலங்களுக்கு தங்கள் செல்வத்தைப் பகிர்ந்துவந்திருக்கின்றன. விந்திய மலைக்குக் கீழே உள்ள ஆறு மாநிலங்களும் கூடுதலான வரியைச் செலுத்தி, குறைவாகத் திரும்பப் பெறுகின்றன. உதாரணமாக, உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாயை வரியாகச் செலுத்தினால், அதற்கு 1.79 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது. கர்நாடகம் ஒரு ரூபாய் செலுத்தினால், வெறும் 47 காசுகளே திரும்பக் கிடைக்கின்றன. பிராந்திய ரீதியாகக் காணப்படும் வேறுபாடுகளைக் களைய வேண்டிய தேவை இருப்பது உண்மைதான். ஆனால், வளர்ச்சிக்கான வெகுமதி எங்கே? தென்னிந்திய மாநிலங்களில், இறப்பு விகிதமும் பிறப்பு விகிதமும் சரிசமமாகிவிட்டன. இருந்தபோதும், மக்கள் தொகையை வைத்து வரி பகிரப்படுகிறது. மக்கள் தொகையை அதிகரித்துச் செல்வதற்காக, அந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நாட்களுக்கு கூடுதலாக நிதி தரப்போகிறோம்?

இந்திய வர்த்தகத்தை பாதிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் மாநிலங்களையும் பாதிக்கும். ஆனால், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. உதாரணமாக, தெற்காசிய தாராளமான வர்த்தக ஒப்பந்தத்தின்படி, வியட்நாமிலிருந்து இலங்கை வழியாக குறைந்த விலையில் மிளகாய் வற்றல், மிளகை இறக்குமதி செய்யலாம். ஆனால், அது தமிழக மிளகாய் விவசாயிகள், கேரளாவிலும் கர்நாடகத்திலும் உள்ள மிளகு விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும். 

மத்திய அரசின் வர்த்தகக் கொள்கையானது விவசாய இறக்குமதியை ஆதரிக்கிறது. உபரியாக உற்பத்தி செய்திருக்கும் எங்கள் விவசாயிகளின் லாபத்தை இந்தக் கொள்கை கடுமையாகப் பாதிக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளால் விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கலை மாநிலங்களால் மட்டும் சரிசெய்ய முடியாது. ஜிஎஸ்டி கவுன்சிலில் இருப்பதைப் போல, வர்த்தகக் கொள்கைகளை வகுப்பதற்கும் விவசாயப் பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் ஒரு அமைப்பு தேவை. அப்படி இருந்தால்தான், விவசாயிகளைப் பாதிக்கும் கொள்கைகளின் மீது எங்களால் தாக்கம் செலுத்த முடியும். 

நிதி ஆயோக் மூலம் முன்பிருந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கலைக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்குப் பதிலாக கலந்தாலோசனை செய்யக்கூடிய எந்தவிதமான அமைப்பும் உருவாக்கப்படவில்லை. நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதில் மாநிலங்களின் குரல்களுக்கு அதிக பங்கு அளிக்கும் ஒரு அமைப்பு உடனடியாகத் தேவை. 

பீகாருக்கும், காஷ்மீருக்கும் சிறப்பு சலுகைகளை கொடுக்கும் போது தேவையான, பாதிக்கப்படும் மாநிலங்களை கவனிக்காமல் மத்திய அரசு புறந்தள்ளுகிறது. ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானா, சீமாந்திரா எனப் பிரிந்த போது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் புதிய ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி நிர்வாகத்தினை சீர்செய்யவும், தலைநகராக அமையவிருந்த அமராவதி நகருக்கு தேவையான சிறப்பு சலுகைகளை வழங்கவும் உறுதியளித்தார். அன்றைய 14வது நிதி ஆணையமும் (Finance Commission) இதை ஆமோதித்தது. மோடி பிரதமரானவுடன் புதியதாக உருவான ஆந்திர மாநிலத்திற்கு உதவிகள் தரப்படும் என உறுதியளித்தார். ஆனால் உறுதியளித்தவாறு அதை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தி வந்தார். பொறுமையாக இருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேறு வழியின்றி மத்திய அரசில் இருந்து வெளியேறி உள்ளார். 

கேரளத்தில் மத்திய அரசை எதிர்த்து மாட்டிறைச்சி அரசியலில் கடுமையாக போராடியதுண்டு. கர்நாடகத்தில் தங்களுக்கென்று தனியாக ஒரு கொடியை சுவிட்சர்லாந்து நாட்டினைப் போல உருவாக்கிக் கொள்கிறோம் என போர்க்குரல். தெலுங்கானா மாநிலமும் மத்திய அரசிடம் தொடர்ந்து போராடி வருகிறது. உச்ச நீதிமன்றம் சொல்லியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

'திராவிட நாடு’ ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என தென்னகத்தில் சுமார் 50 ஆண்டுகள் முன்பு வரை வீறுகொண்டொலித்திருந்த வரிகள். 
திராவிட காண்போம் வா என கேரளம் அழைக்கிறது, திராவிட தேசம் பிரிவதை பார்க்க நேரிடும் என பாராளுமன்றத்தில் பேசுகிறார் காங்கிரஸ், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜீன கார்கே, 
50,60 ஆண்டுகளுக்கு பின், இன்று வந்து 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்கிறார் சந்திரபாபு நாயுடு. கர்நாடகம் இந்திமயம் ஆவதைக்கண்டு பொறுக்க முடியாமல் எதிர் வினை ஆற்றுகிறது . 

இப்படியான கட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு என்பதை மத்திய அரசு சிதைத்துவிடுமோ என்ற வினா எழுகிறது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17-03-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...