Saturday, September 11, 2021

#பாரதி_நினைவு_நூற்றாண்டு_ #அவசியம்_சிலரின்_பார்வைக்கு_என்ன_நடந்தது_என…….. #எட்டையபுரம்_பாரதி_பிறந்த_இல்லமும்_தலைவர்_கலைஞரும்_எனது_நினைவுகள்

 #பாரதி_நினைவு_நூற்றாண்டு_

---------------------------------



கலைஞர் முதல்வராக இருந்தபோது, அப்போது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் 12-05-1973 அன்று பாரதி பிறந்த இல்லத்தினை நாட்டுடமையாக்கி அதை நினைவில்லமாக அறிவித்தும் திறந்தும் வைத்தார். அந்த நிகழ்வில் கூட்டுறவு அமைச்சராக இருந்த சி.பா.ஆதித்தனார், உணவு அமைச்சராக இருந்த மன்னை பா. நாராயணசாமி, அன்றைய அகழ்வராய்ச்சி இயக்குநர் நாகசாமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ரா. சண்முகசிகாமணி, இ.ஆ.ப., ஆகியோர் பங்கேற்று சிறப்பாக நடைபெற்றது.
கலைஞர் இந்த இல்லத்தை திறந்துவைத்து நினைவுப் கல்வெட்டையும் திறந்துவைத்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 1981இல் பாரதியின் நூற்றாண்டு விழா எட்டையபுரத்தில் நடந்த போது கலைஞர் திறந்துவைத்த நினைவு கல்வெட்டுப் பலகையை பாரதியார் நினைவில்லத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு காணாமல் செய்துவிட்டனர்.
அடியேன் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டேன். திமுக 1989இல் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. அப்போது கோவில்பட்டி தொகுதியில் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்வது எனது வாடிக்கை. ஒரு முறை எட்டையபுரத்திற்கு 1990களில் சென்றபோது, பாரதியால் நினைவில்லத்திற்கு சென்றேன். பாரதி நினைவில்லத்தில் இருந்த நண்பர்கள் இந்த நினைவில்லத்தினை திறந்து வைத்த கலைஞர் பெயர் அடங்கிய கல்வெட்டினை எம்.ஜி.ஆர் ஆட்சியில் எடுத்துவிட்டார்கள். அதை வைக்க வேண்டுமென்றும் என்னிடம் வலியுறுத்தினார்கள். அதற்ககான பணிகளை நான் மேற்கொண்டபோது 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் அந்த முயற்சியை மேலும் தொடர்ந்து என்னால் எடுக்க இயலாமல் போய்விட்டது.
இந்த நிலையில் ஒன்றை அழுத்தமாக சொல்லவேண்டும். அந்த பகுதியில் வலம் வந்த கட்சி முக்கியப் பிரமுர்களுக்கு இதைப் பற்றிய அக்கறை இல்லை. 1990இல் இந்த முயற்சியில் நான் இறங்கியபோது, வெட்டிப் பேச்சை பேசிய சவுடல் நாட்டாமை செய்த ஒருவர் பாரதியார் விட்டிற்கு இந்த கல்வெட்டு தேவைதானா என்று அவர் பேசும்போது, இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்று கடுமையாக எச்சரித்தேன். அவர் இன்றைக்கு இல்லை. அந்த காலக்கட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய எங்களுக்கான அரசியலில் மரியாதை இருந்தது.
பாரதி நினைவில்லத்தில் 29 ஆண்டுகளாக கலைஞருடைய கல்வெட்டினை அப்புறப்படுத்தப்பட்டதை அறியாதவர்கள் எல்லாம் அந்த வட்டாரத்தில் வெற்று சவடால் அடித்து கொண்டு வலம்வந்தது தான் வேடிக்கையான செய்தி. இந்த ‘போர்டு’(கல்வெட்டு என்று சொல்ல தெரியாத பிரகஸ்பதி) எதற்கென்று சொல்பவர் தான் நல்லவராக பிற்காலத்தில் திகழ்ந்தார்.
திரும்பவும் கடந்த 2009இல் இதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டேன். தமிழக அரசின் அனுமதியையும் பெற்று அப்புறப்படுத்தப்பட்ட கலைஞர் பெயரோடு இருந்த நினைவுக் கல்லை பாரதி இல்லத்தில் வைக்க தமிழக அரசின் உரிய அனுமதி பெற்று கடந்த 11-12-2009 இல் பாரதி நினைவில்லத்தின் சுவற்றில் பதிக்கப்பட்டது.
அந்த சமயம் திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் இருந்தபோது, திரும்பவும் கல் வைக்கும் நிகழ்ச்சியில் நானும், அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ச.தங்கவேலு மட்டும் கலந்து கொண்டோம்.பலரை அழைத்தும் வேறு யாரும் கலைஞர் சம்பந்தமான நிகழ்வுக்கு வரவில்லை,. அவர்களுக்கு இதை விட முக்கிய பணிகள் அன்று இருந்திருக்கலாம்.
இந்த செய்திகள் அனைத்து ஏடுகளிலும் அப்போது வந்தது. தினமணி 12-12-2009லும், அந்த வாரம் ஜுனியர் விகடனில் வெளிவந்த பெட்டிச் செய்தியையும் இத்துடன் இணைத்துள்ளேன். பதவிகள் இல்லை என்பதிலும் வருத்தம் கிடையாது.
செய்ய வேண்டுவதை செய்கின்றோம் கடமையாற்றுகின்றோம் என்ற நிம்மதியோடு,
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”
என்று நம்முடைய பயணத்தை செய்தால் நமக்கு நல்லது. பதவி, பவுசுகளுக்காக சுமைகளை தூக்குவதும், நமக்கு அவசியமில்லை, கடமைகள் ஆற்றிக் கொண்டிருப்போம். பொது வாழ்வில் 48 ஆண்டுகள் பதவிகள், விளம்பரங்கள் இல்லாமல் பயணித்த சுவடுகளை திரும்பிப் பார்க்கும்போது செய்த பணிகள் ஏராளம். அது கம்பீரத்தையும், பிரம்மிப்பும் தருகிறது. பெரிய பதவியில் இருந்தவர்கள் கூட இந்தளவு பணிகளை செய்துள்ளார்களா என்பது காலத்திற்கும், இயற்கைக்கும் தெரியும். தொடர்ந்து என்னுடைய அரசியல் வாழ்க்கை தகுதியே தடை என்ற நிலையில் அமைதியாக இயங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். மனதில் தெம்பும், உடலில் வலுவும் இருக்கின்றது. இந்த பாரதியின் நினைவில்ல கல்வெட்டு பணிகளை பெரிய பொறுப்பில் இருந்தவர்கள் செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை.
இன்று பாரதியின் நினைவு நாள். திரும்பவும் கலைஞரைக் குறித்தான செய்தி.
முண்டாசுக் கவி பாரதியாரை குறித்து தலைவர் கலைஞர் அவர்கள் அக்கினிக் குஞ்சு என்ற தலைப்பில் ஒரு அருமையானநீண்ட சொற்பொழிவாற்றியிருந்தார். அந்த சொற்பொழிவு பேச்சு திமுக தலைமைக் கழகத்தால் ஒரு பிரசுரமாக வெளியிடப்பட்டது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-09-2021

#காணி நிலம் வேண்டும் - பராசக்தி

 காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
                                            -பாரதி.





#பாரதி_நினைவு_நூற்றாண்டு_நிகழ்வை

 இன்று, 11-9-2021 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நடத்திய #பாரதி_நினைவு_நூற்றாண்டு_நிகழ்வை காணொளியில் உரையாற்றிய போது.

கடமை

கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறிவோம் தொழிலறியோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை,சிறுமை,துன்பம்,பொய்,
வருத்தம்,நோவு,மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே
                                                -மகாகவி பாரதி.
11-9-2021



#ஆசிரியர்_பாரதியின்

 மதுரை #ஆசிரியர்_பாரதியின் இன்றைய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வகுப்புக் கூடம்.

11-9-2021.


#தமிழக முதல்வருக்கு நன்றி….

 தமிழக முதல்வருக்கு நன்றி….



#வெள்ளந்தி விவசாயிகள்.

 வெள்ளந்தி விவசாயிகள்.



#Somewhere, village…. Not in India….

Somewhere, village….
Not in India….


 

Friday, September 10, 2021

#காங்கிரஸ்காரரான_தமிழறிஞர்_கு_ராஜவேலு_மறைவு:(வயது 101)

 #காங்கிரஸ்காரரான_தமிழறிஞர்_கு_ராஜவேலு_மறைவு:(வயது 101)

——————————————————
தமிழகத்தில் காங்கிரஸ், ஆட்சி நடத்தியபோது தி.மு.க அறிஞர் அண்ணா தலைமையில் எதிர் கட்சியாக இருந்தது. தி.மு.க தமிழ் மொழியின் மேல் உள்ள அக்கறை வெளிப்பாட்டை அடர்த்தியாக காட்டியபோது, காங்கிரஸில் இருந்தத் தமிழ் அறிஞர்கள்,பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை, அவினாசிலிங்கம் செட்டியாருர் தெ.பொ.மீ., தூரன்,நா.பார்த்தசாரதி, திரவியம்,அகிலன், கம்யூனிஸ்டாக இருந்த ஜெயகாந்தன் இந்த வரிசையில் தமிழறிஞர் கு.ராஜவேலுவும், அடங்குவர்.
கு.ராஜவேலு மணிமேகலை, சீவக சிந்தாமணி குறித்தான அவரது எழுத்துகள் இன்றைக்கும் அவர் பெயரை சொல்கின்றன. கு.ராஜவேலு அவர்கள் நான் மாணவ அரசியலில் இருக்கும் போது காமராஜர் காலத்தில் அவரை அடிக்கடி சந்திப்பதுண்டு.
முதுபெரும் ௭ழுத்தாளர் கு. ராஜவேலு நேரடியாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற படைப்பாளர். தீவிர காந்தியவாதி . தேசிய நீரோட்டத்தில் இணைந்தார். பின்னாளில் தமிழ் நாடு ௮ரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் முக்கிய பொறுப்பு வகித்தார். நேர்மை, கம்பீரம், தான் கொண்ட கொள்கையில் முழு ஈடுபாடு கொண்டவர..
கு.ராஜவேலு சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் கடந்த 1920-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி பிறந்தவர். இவர் தனது 14-ஆவது வயதிலேயே சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். மாணவராக பச்சையப்பர் கல்லூரியில் தன் கல்வி வாழ்வைத் தொடங்கிய போதே தமிழ் முதுகலை (ஆனர்ஸ்) பயிலும்போது "காதல் தூங்குகிறது' என்ற புதினம் எழுதிக் கலைமகள் இதழின் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றார். இந்த படைப்பு 1942 வெளியான காதல் தூங்குகிறது என்பது தொலைக்காட்சித் தொடராக வந்தது என நினைவு.
குடந்தை அரசுக் கல்லூரியிலும், சென்னை கலைக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழக அரசின் செய்தித்துறை, மொழிபெயர்ப்புத்துறை ஆகியவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். ஓய்வு பெற்ற பிறகும் இரு ஆண்டுகள் தமிழக அரசின் தமிழ்ப் பண்பாட்டு இயக்ககத்தில் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார். முன்னாள் தமிழக முதல்வர் காமராஜருக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர். காந்தி, நேரு, நேதாஜி போன்ற தேசியத் தலைவர்களைக் கண்டு உரையாடியவர். 11 ஆண்டுகள் முழு நேர அரசியல் வாழ்க்கையும், ஈராண்டுகள் சிறை வாழ்வையும் கண்டவர். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றினார்.
கொடை வளம், சத்தியச் சுடர்கள், வைகறை வான் மீன்கள், வள்ளல் பாரி, வான வீதி, காந்த முள், மகிழம்பூ, தேயாத நிறை நிலா, இடிந்த கோபுரம் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவரது நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்புச் செய்துள்ளது.ஆழ்ந்த இரங்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10.09.2021

#எதிலும் உண்மையான புரிதல் வேண்டும்.


 

#Marriage anniversary wishes to ideal couple

 Marriage anniversary wishes to ideal couple Telugu Desam party leader Nara Chandrababu Naidu garu and Mrs. Nara Bhuvaneshwari..



#மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு

 நாளை,11-9-2021



#காவிரி_வைகை_குண்டாறு_இணைப்பு:

 #காவிரி_வைகை_குண்டாறு_இணைப்பு:

———————————————————

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மழை வெள்ளக்காலங்களில் 40 டி.எம்.சி.க்கும் அதிகமான உபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை கால்வாய் மூலம் வறட்சி மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் 1958-ல் காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு ரூ.189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். ஆனால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
அதற்கு பிறகு அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்த திட்டத்தை பற்றி கவலைப்படவில்லை. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு மத்தியில் இப்போது இதற்கு ஒரு வெளிச்சம் கிடைத்துள்ளது வரவேற்க தகுந்ததாகும்.
காவிரி நதியை வைகை மற்றும் குண்டாறு நதிகளோடு இணைக்கும் திட்டம் ரூ.3290 கோடியில் நிறைவேற்றலாம் என்று 2008-ல் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் புங்கா ஆறு, நப்பண்ணை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினியாறு, கொண்டாறு, வெள்ளாறு, பம்மாறு, விருசுழியாறு, மணிமுத்தாறு, சருகணியாறு, உப்பாறு, வைகை, கிருதுமால்நதி, கானல் ஓடை என 15 நதிகளை இணைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
இந்ததிட்டம்செயல்படுத்தப்பட்டால் முதல் பயனாக காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். இதில், கிடைக்கும் உபரி நீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள சுமார் 8 லட்சம் ஏக்கர் பாசன நிலம் விவசாய சாகுபடிக்கு பெரும் அளவில் பயன்பாடு உள்ளதாக இருக்கும். இதன் மூலம் 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.மேலும் நிலத்தடி நீர் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த 7 மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சனை தீர வழிவகுக்கும். இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள இன்னும் சில மாவட்டங்களும் பயன்பெற முடியும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை அரசு நிறைவேற்றுவது மிக எளிதுதான். ஆனால் இந்த பிரச்சனைக்காக விவசாயிகள் அமைப்பு போராடும் ஒவ்வொரு சமயமும் அதிகாரிகளும் அப்போதைய அமைச்சர்களும் அரசுக்கு பரிந்துரைப்பதாகவே தெரிவித்து வந்துள்ளனர். பிறகு கிடப்பில் போட்டுவிடுகின்றனர். காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி விவசாய சங்க அமைப்புகள் பல கட்ட போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயில் உள்ளிட்ட இன்னும் சில ஒன்றியங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் எந்த காலத்திலும் தூர்வாரப்படுவதில்லை. தப்பித் தவறி தூர்வாரினால் அரையும் குறையுமாகத்தான் தூர்வாரும் பணிகள் நடைபெறும். இதன் காரணமாக நீர் ஆதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க வழியின்றி வீணாக கடலில் கலக்கும் நிலையுள்ளது. அது மட்டுமில்லாமல் பல்வேறு கிராமங்களில் குடிநீர் உப்புநீர் கலந்தது.
இந்நிலையில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக ரூ.700கோடி நிதி ஒதுக்கப்பட்டு நில அளவீடு உள்ளிட்ட பணிகள் தொடங்கின. திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா விராலிமலை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடந்தது. அப்போதைய முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கால்வாய் வெட்டும் பணிகளும் தொடங்கின. புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் 350மீட்டர் நீளம் 110மீட்டர் அகலத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது.
காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தையும் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்படுத்திட முடியும். அதை வேகப்படுத்திடுவதே இன்றைய தேவையாகும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09.09.2021

#பொருநை

 


#தாமிரபரணிாஆற்று_தீரத்தில்_பொருநை_நாகரீகம்.

 #தாமிரபரணிாஆற்று_தீரத்தில்_பொருநை_நாகரீகம்.

தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது.
ஆந்திர மாநிலத்திலுள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

#KSRposting
09.09.2021


#கம்பராமாயணம்.

 வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லைபொய் உரை இலாமையால்
ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09.09.2021


#Mightiness!

 #Mightiness!



#யாதர்த்த மனிதர்கள்….

 யாதர்த்த மனிதர்கள்….



#Kovalam_Trivandrum

 #Kovalam_Trivandrum



#தமிழகத்தில் #அகழ்வாராய்ச்சி #புதைந்து_கிடக்கும்_தமிழர்_வரலாறு !

 #தமிழகத்தில் #அகழ்வாராய்ச்சி

-------------------------—
சாத்தூரில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல்மேடு கண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் தொல்லியல் சான்றுகள் தொடர்ந்து கண் டறியப்பட்டு வருகின்றன. தற்போது சாத்தூர் வைப்பாறு அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் மேடு கண்டறியப்பட் டுள்ளது.
இதுகுறித்து, சாத்தூர் எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் பா.ரவிச்சந்திரனின் தொல்லியல் ஆய்வில்தெரிந்தது வருமாறு;
சாத்தூர் பகுதியானது பண்டைக்காலம் தொட்டே “சாத்தனூர்” என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது என்பதை முற்காலப் பாண்டிய வேந்தன், மாற வல்லபனின் காலத்தைச் சேர்ந்த கி.பி. 823-ம் ஆண்டு கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. அக்கல்வெட்டில் “இருன்சோ நாட்டுச் சாத்தனூர்” என்ற பெயர் காணப்படுவதில் இருந்து இவ்வூரின் தொன்மையை அறிய முடியும்.
இப்பகுதியில் சங்க காலம் முதல் மக்கள் வாழ்ந்த தடயங்களான தொல்லியல் மேடுகள், முதுமக்கள் தாழிகள், கல்வெட்டுகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன.
அண்மையில், சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்துக்கு அருகில் வைப்பாற்றுக்கு தெற்கே உயரமான, தொல்லியல் மேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தொல்லியல் மேட்டின் ஊடாக ரயில்வே பாதை செல்கிறது.
இப்பகுதியில் சிதிலமடைந்த பானை ஓடுகள் இருந்த இடத்தை களஆய்வு செய்தபோது பழங்கால மக்கள் பயன்படுத்திய நுண் கருவிகள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், குறியீட்டுடன் கூடிய பானை ஓடுகள், குறுகிய துளை யுடைய நீர்க்குடுவை மற்றும் மண்ஜாடி மூடியின் கொண்டைப்பகுதி, சங்கு அறுத்து செய்த வளையல்கள், அதற்கு பயன்படுத்திய சங்குகள் மற்றும் வட்ட சில்லுகள், பலவண்ண கற்பாசிகள், ஒளி ஊடுருவாத கருப்பு நிற கண்ணாடி வளையல்கள், பிற்காலத்திய நாயக்கர் கால செப்புக் காசு ஆகியன கிடைத்துள்ளன.
மேலும் 1.7 மீட்டர் அளவு விட்டமுடைய உறைகிணறு ஒன்றும் அண்மையில் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.
பழைய கற்காலத்தின் இறுதிக் காலமான நுண்கருவிக் காலம் தொடங்கி, பெருங்கற்காலமான சங்க காலம் கடந்து, பிற்கால பானை ஓடுகள் வரை தடயங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பல நூற்றாண்டுகளாக மக்கள் தொடர்ச்சியாக இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணி நடந்துவருகிறது. சித்தன்னவாசல், குடுமியான்மலை, கலசமங்களம் எனப் பல கிராமப் பகுதிகளில் அகழாய்வுத் தரவுகள் பூமிக்குக் கீழ் உள்ளதை மீட்க வேண்டும்.
சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் அகழ்வாராய்ச்சி செய்யவேண்டிய பகுதிக்கும், ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழ்வாராய்ச்சி பகுதிக்கும் செல்ல நேரிட்டது. கொடுமணல் மற்றும் இங்குள்ள அரச்சலூரில் இசை சார்ந்த பல அகழ்வாராய்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. நன்னூல் எழுதிய பவனந்தி முனிவர் வாழ்ந்த திங்களூர் இங்கேதான் உள்ளது. இங்கிருந்து நொய்யலாற்றில் பரிசல், சிறு படகுகள் மூலம் பொருட்களை ரோமாபுரிக்கு அப்போதே அனுப்பியது பெரும் வியப்பை தந்தது. இன்னும் பல தரவுகள் தோண்டி எடுத்தால் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தொடர்புடையது. கொடுமணல் நாகரிகம் அல்லது நொய்யலாற்று நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதி எப்படி அழிவுக்கு உள்ளானது, இதனுடைய உண்மை வரலாறு என்ன என்பது இன்னும் வெளி உலகத்திற்கு வெளிவரவில்லை.
இங்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொல்லியல் ஆய்வு அமைப்பான இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது.
கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய எடுத்திருக்கும் பகுதி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த இடம் கல்லறைப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆய்வு செய்த ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வுகளின் போது கல்லறைகள், சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 15 ஹெக்டேர் பரப்பளவில் கற்கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
இங்கு முதல் ஆய்வினை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து 1985 ஆம் ஆண்டு நடத்தியது. பின்னர் 1986, 1989,1990ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தியது. இதில் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 48 இடங்களில் தோண்டப்பட்டு பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அகழாய்வு நடந்தது.
அப்போது 15 அகழிகள் தோண்டப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு கருதப்படுகிறது. காரணம் ஒரே பகுதியில் 15 அகழிகள் தோன்டுவது என்பது மிகப்பெரிய விஷயமாகும். இது இந்த பகுதியில் பல்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. காரணம் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளும் வெவ்வேறு விதமாக உள்ளன. இங்கு கிடைத்த பொருட்கள் கிமு 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வில் தெரியவந்தது.
இரும்பு பொருட்கள், கல், கோமேதகம், விலையுயர்ந்த குண்டு மணிகளும் கிடைத்துள்ளன. ஆயிரக்கணக்கான வளையல்கள் கிடைத்துள்ளன. மாணிக்கக் கற்கள், ரத்தினம் உள்பட விலையுயர்ந்த கற்களும் கிடைத்துள்ளன. முழுமையான ஆராய்ச்சி கொடுமணலில் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த இந்த நிலையில் இந்திய தொல்லியல் ஆய்வு மையம் தொடங்கியிருக்கும் ஆய்வு முழுமையான வரலாற்றை கொண்டு வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர்.
அதே போலவே, வரலாற்றில் திருவில்லிப்புத்தூருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்த பகுதியை இராணி மல்லி என்பவர் ஆண்டார். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர். தமிழை ஆண்டாள், கோதை நாச்சியாருடைய திருத்தலம். ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோவில். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்விச் சாலைகள், நூலகங்கள் சூழ்ந்த ஊர். திருப்பாவை என்ற தமிழ் இலக்கியத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அர்ப்பணித்த ஊர். பெரியாழ்வாரின் தீந்தமிழ் பாசுரங்கள் இன்றைக்கும் வியக்க வைக்கின்றது. இப்படி பல வரலாற்றுத் தரவுகளை திருவில்லிப்புத்தூருக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.
திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகே கிருஷ்ணன் கோவில் வட்டாரத்தில் உள்ள விழுப்பனூர் கிராமத்தில் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் முதுமக்கள் தாழிகள் நிரம்ப புதைந்துள்ளது. இது குறித்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறையை சார்ந்த உதவிப் பேராசிரியர் கந்தசாமியும், பேராசிரியர் திருப்பதி, பேராசிரியர் தங்க முனியான்டி, பேராசிரியர் முத்துகுமார் ஆகியோர் இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த பூமியில் காணப்பட்ட முதுமக்கள் தாழிகளின் தொடர்ச்சி பல இடங்களில் இந்த வட்டாரத்தில் உள்ளதாக தரவுகள் சொல்கின்றன. அதன்மீது கற்பாறைகளால் அடுக்கி மூடப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையான மூன்றுவித ஓடுகள் ஆங்காங்கு காணப்படுகின்றன.
ஏறத்தாழ 2 அங்குலம் கனப் பரிமாணத்தில் களிமண், செம்மண் முதுமக்கள் தாழிகள் தென்பட்டுள்ளன. இதில் வண்ணப் பூச்சும், பூ வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கற்கள் யாவும் கனம் அதிகமாகவும், அவை இரும்புத் தாது கலந்து சுட்ட மண்ணால் கலவைபடுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழிகளும் பூமியில் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் வடபுறமும், கீழ்மேலாகவும் ஒரு சிறு ஓடை உள்ளது. இந்த சிற்றோடையின் வடகரை மிகப் பழமையான சுவர் தடுப்புகளும் கொண்டுள்ளது. எனவே அங்கு கட்டுமானப் பணிகள் அந்த காலத்தில் நடந்துள்ளதாக தெரிகிறது.
மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் கீழும் முதுமக்கள் தாழிகள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எனவே இந்த பகுதி தொல் மூத்த தமிழ் குடியினர் வாழ்ந்துள்ளனர். இவர்களுடைய பண்பாட்டையும், நாகரிகத்தையும் வெளிக் கொணர வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இதே போல, இதன் அருகேயுள்ள மம்சாபுரம், குறவன்கோட்டை ஆகிய இடங்களின் அருகேயும் பழமையின் அடையாளங்கள் பூமியில் புதைந்துள்ளன என்றும் பல கருத்துகளை சொல்கின்றனர். இவையாவும் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்று குறிப்பிடுகின்றனர்.
சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அடிக்கல் நாட்டிய நிலத்திலும் அகழ்வாராய்ச்சி செய்தால் தமிழர்களின் தொல் நாகரிகத்தின் அடையாளம் கிடைக்கும் என்று திருவில்லிப்புத்தூரை சேர்ந்த கள ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், செவல்பட்டி, கோபால்சாமி மலை போன்ற சில பகுதிகளும், திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு, கழுகுமலை போன்ற பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் மட்டுமல்லாமல், பாறை ஓவியங்களையும் ஆய்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் உள்ளன.
கீழடியில் மத்திய தொல்லியல் அகழாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் வடமொழி எழுத்து, மண்பானைகள் உட்பட 5,300 சங்கக்கால பொருட்கள் கிடைத்துள்ளன. அது குறித்து உரிய ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டன. மாமதுரை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை நகரம் ஆகும். ஏதென்ஸ், ரோம்-க்கு ஒப்ப தமிழகத்தின் கலாச்சார தலைநகரம் மதுரை.
தமிழ்நாட்டில் நெடுங்காலமாக சிறப்புப் பெறுகிற நகரங்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறது மதுரை. இந்நகரின் தொன்மையை பேசும் சான்றுகள் நிறையவே உண்டு. பிளினி, தாலமி போன்ற கிரேக்க அறிஞர்கள் மற்றும் மாவீரன் அலெக்ஸாண்டரின் தூதரான மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டவரின் எழுத்துக் குறிப்புகளும், சங்க இலக்கியங்களின் பாடல் வரிகளும் விளக்குகிற தகவல்கள், இந்நகரம் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையையும் இந்தியாவின் தொன்மை நகரங்களில் ஒன்று என்பதையும் சொல்லுகிற சான்றுகளாகின்றன. இருந்தாலும் மதுரை மாநகரைப் பற்றிய சொல்லும்படியான அகழ்வாய்வு சான்றுகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்றே தெரிய வருகிறது.
அந்நகரின் வரலாற்றைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய கால கட்டத்திற்கு நகர்த்துவதற்குத் தோதான வலுவான ஆதாரங்கள் எதுவும் மதுரை நகர் சார்ந்து இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை என்பதே அதிகமான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரையில் கடந்த 2015 ஆண்டு முதல் மத்திய தொல்துறை அகழாய்வுத் துறை பெங்களூர் பிரிவு கீழடியில் நிலத்தை வெட்டி ஆகழராய்ச்சி செய்ததில் பல தரவுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 43 தொல்லியல் குழிகள் வெட்டப்பட்டன. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் கிடைத்துள்ளன. அன்றைக்குள்ள நாகரீகம் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் இருந்து திரும்பவும் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள்.
ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 3000 ஆண்டின் தொன்மையை காட்டுகிறது. 1872, 1876, 1903 1914 என பல கட்டங்களில் இங்கு ஆய்வுப் பணிகள் நடந்தன. முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலம் போன்ற பண்டைய பயன்பாட்டுப் பொருட்கள் கிடைத்தன. இது குறித்தான சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கையும் வெளிவராமல் மத்திய அரசிடம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
பழனி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பொருந்தல் கிராமம், கோவை மாவட்டம் சூலூர், ஈரோடு மாவட்டம் அரச்சலூர், நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவி, கண்டியூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ஈரோடு சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல், அழகன்குளம், மருங்கூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பானையோடுகள், கரூரில் கிடைத்த மோதிரம்; மதுரையில் கொங்கற்புளியக்குளம், விக்கிரமங்கலம் மலைகளில் காணப்படும் எழுத்துக்கள்; கேரளவின் எடக்கல் மலை, இலங்கை ஆனைக்கோட்டை செப்பு முத்திரை போன்றவற்றில் உள்ள தமிழ் எழுத்துக்களை கொண்டே தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள முடியும். ஆகவே, மிகவும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழையே, மௌரிய மன்னனும், திபேத்திய மன்னனும் பயன்படுதியிருப்பர் என்று கூறப்படுகின்றது.
தமிழகத்தில் அகழராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதற்கான முடிவுகளும் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லை. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர், ஆதிச்சநல்லூர், கொற்கை, முசிறி, வைகை ஓரத்தில் வருசநாடு, அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கரூர் அருகே அமராவதி ஆற்றங்கரை, பாடியூர் போன்ற இடங்களில் அகழ் ஆய்வில் பல தரவுகள் கிடைத்தன. குறிப்பாக இறந்தவர்களின் எலும்புகள், முதுமக்கள் தாழிகள்தான் கிடைத்தன. ஆனால் கீழடியில் வேறு சில அரிய பொருட்கள் அகழ் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொகஞ்சதரோ, ஹரப்பாவில்தான் இங்கு கிடைத்த கழிவுநீர் கால்வாய் மாதிரி இருந்தன என்கிறது செய்திகள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இப்படியான தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற செய்திகள் உள்ன. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டால் இன்னும் பல தரவுகள் நடக்குக் கிடைக்கும். இந்திய திருநாட்டின் வடபுலத்தில் பாடலிபுத்திரம், கன்னோஜி, உஜ்ஜயினி, இந்திரப்ரஸ்தம், தட்சசீலம் போன்ற ஒரு சில பெருநகரங்களையே சிறப்பாக சொல்ல முடியும். ஆனால் பண்டைய தமிழகத்தில் சிறிய நிலப் பரப்பிலேயே சிறப்பு வாய்ந்த நகரங்களாக, தெற்கேயிருந்து களக்காடு, திருச்செந்தூர், மணப்பாடு, உவரி, கொற்கை, பழைய காயல், ஆதிச்சநல்லூர், தென்காசி, திருவில்லிப்புத்தூர், இராமநாதபுரம், மதுரை, பரம்புமலை, தொண்டி, உறையூர், கரூர், தகடூர், முசிறி, காங்கேயம், காவிரிப்பூம்பட்டினம், மாமல்லபுரம், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் சானூர், குன்றத்தூர், பட்டறைப்பெரும்புதூர், அத்திரம்பாக்கம், பரிக்குளம், பூண்டி மற்றும் திருக்கோவிலூர் என வரலாற்றை சொல்லும் எண்ணற்ற நகரங்கள் இருந்துள்ளன. இதிலிருந்து வடபுலத்து நாகரிகத்தைவிட தமிழனின் நாகரிகமும், ஆளுமையும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.
வடக்கில் மகதப் பேரரசு, மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, முகலாயப் பேரரசு என பெரிய பேரரசுகள் இருந்திருந்தாலும், அத்தகைய நிலப்பரப்பைவிட தமிழகத்தில் அமைந்த சிறியப் பரப்பில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சி மேலோங்கிதான் இருந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் அனுபாமாவும் இலங்கை நாட்டைச் சேர்ந்த முனைவர் பிரேமதிலகாவும் இணைந்து தமிழகத்தில் அகழாய்வு மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வு மூலம், தமிழ் மண்ணல் ஆதிகாலத்தில் நெல் பயிரிடப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நெல்லின் தாவரப் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,
1. அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.
3. தமிழகத்தில் ஆதிச்சநல்லுர், கீழடி, அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் போன்ற தொன்மைமிக்க பல இடங்களில் வரலாற்று, தொல்லியல் ஆர்வலர்கள் மூலமாகவே பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனவே அரசும் இதில் கூடுதல் அக்கறை எடுத்து அந்த இடங்களில் முறைப்படி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.
அது போன்று, சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல தரவுகள் கிடைத்துள்ளது.
ஆனால் தமிழனுடைய வரலாறு சரியாக, சீராக, நேராக எழுதப்படாததால், ஏதோ குப்தர் காலம் தான் பொற்காலம் என்றும், மௌரியப் பேரரசு பலம் வாய்ந்தது என்பது போலவும் கூறப்படுகின்றது. சரியான தரவுகள் இல்லாததால் தமிழனுடைய சிறப்பை சொல்ல முடியாமல் போய்விட்டது. எனவே, இத்தகைய அகழ்வாய்வு, கல்வெட்டு, சிற்ப ஆய்வுகள் மேலும் வளர வேண்டும். இவையாவும் அரசியல், வட்டாரம் போன்ற அனைத்து மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடைபெற வேண்டிய நடவடிக்கை ஆகும். இதுகுறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
இணையாசிரியர், கதைசொல்லி.
rkkurunji@gmail.com
10.09.2021


Wednesday, September 8, 2021

#பாரதியார்_நினைவு_நூற்றாண்டு. #சில_கோரிக்கைகள். ———————————————————

 #பாரதியார்_நினைவு_நூற்றாண்டு.

———————————————————

மகாகவி பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. பல்வேறு ஆளுமைகள் பாரதியாரைக் குறித்து 1940-களிலிருந்து எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து ‘#கரிசல்_காட்டின்_கவிதைச்_சோலை__பாரதி’ என்ற நூலை வெளியிட இருக்கின்றேன்.
இதில் ஏறத்தாழ 70 கட்டுரைகளோடு ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, ப.ஜீவானநந்தம், கலைஞர், ம.பொ.சி. என பல முக்கிய புள்ளிகளின் கட்டுரைகளும், எட்டையபுரம் பாரதி மண்டப திறப்பு விழா கல்கி சிறப்பிதழின் சில பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
பாரதி நூற்றாண்டில் மத்தியரசும், தமிழக அரசும் சிறப்பு செய்யவேண்டும்.
இந்திய அரசு பாரதி பயின்ற வாரணாசியின்இந்துசர்வகலாச்சாலை
யில் அவருடைய முழு உருவச்சிலை அமைக்கவேண்டும். வாரணாசிப் பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல்கலைக்கழகத்திலும் பாரதி குறித்து ஆய்வு செய்ய இருக்கைகள் நிறுவ வேண்டும். பாரதி நூற்றாண்டுக் குறித்துச் சிறப்புஅஞ்சல்தலையும்வெளியிட
வேண்டும்.
தமிழக அரசை பொறுத்தவரையில்,
1. 1989-ல் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எட்டையபுரத்தில், அப்போது நான் தி.மு.க சார்பில் போட்டியிட்ட போது நாட்டுப்புற கலைகளை ஆய்வு செய்யக்கூடிய ஒரு கிராமிய பல்கலைக்கழகத்தை அமைய குரல் கொடுப்பேன் என்று உறுதியளித்தேன். ஆனால் நான் தேர்தலில் வெற்றியீட்ட முடியவில்லை. இந்நிலையில் பாரதி பெயரில் எட்டையபுரத்தில் கிராமிய வளர்ச்சி குறித்தான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க வேண்டும்.
2. திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள பாரதி படித்த ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலை பள்ளியில் அவர் குறித்தான கருவூலத்தைத் தமிழக அரசு அமைக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் பாரதியை படித்து, அவர் கூற்றை நேசிப்பவன் என்ற முறையில் இந்தக் கருத்தை முன்வைக்கின்றேன். நான் என்ன நினைத்தேனோ அதையே மூத்த தமிழறிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் நேற்றுத் தனது முகநூலில் பாரதிக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளைக் கூறியுள்ளார். அதை வழிமொழிந்து அரசுகள் இதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
••••
சிற்பி பாலசுப்பிரமணியம்
பாரதியார் நினைவு நூற்றாண்டு
———————————————
நமது முதல்வர் ஸ்டாலின் மகத்தான தலைவர்களுக்கெல்லாம் மணி மண்டபங்களும் சிலைகளும் அமைப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த மாதம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டு மாதம். அது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாத்து ஏமாற்றம் தருகிறது.
1. பாரதியார் கடைசியாகப் பயணம் செய்த ஈரோடு கருங்கல்பாளையத்தில் சிலை அமைக்கலாம். வாசக சாலையைக் கண்டறிந்து நினைவகமாக்கலாம்.
2. அவர் வாழ்ந்த கடையம் சிற்றூரில் நினைவு நூலகம் அமைக்கலாம்.
3. சுதேசமித்திரன் பத்திரிகை இருந்த இடத்தில் கவிஞருக்கு நினைவுச் சின்னம் உருவாக்கலாம்.
4. சரியாகப் பேணப்படாத புதுவை பாரதியார் இல்லத்தை ஓர் ஆலயம் போல் திருப்பணி செய்யலாம்.
5.கவிஞர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகத்தில் பாரதியார் உயராய்வு மையம திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குத் துணைவேந்தருடன் கலந்து தேவையான பெரு நிதியை (கட்டடம் ,ஆய்வகம்,அருங்காட்சியகம், பாரதியார பெயரால் உயர் விருது முதலிய பல) அரசு உதவ வேண்டும்.
6. மகாகவிக்கு நினைவு நூற்றாண்டு என்பது அரிதான ஒரு வாய்ப்பு. இதனை அரசு தவறவிடக் கூடாது.
7.அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் சொல்லச் சேர வாரும் செகத்தீரே!
——————-07.08.21————————
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08.09.2021

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர் , #கேஎஸ்ஆர்போஸ்ட் , #கேஎஸ்ராதாகிருஷ்ணன் , #கேஎஸ்ஆர்வாய்ஸ் , #ksr , #ksrvoice , #ksrpost , #ksradhakrishnan #dmk , #admk , #congres...