Thursday, September 2, 2021

#அரசியல்தத்துவ_சாஸ்திரம்_வடுவூர்_கே_துரைசாமி_ஐய்யங்கார்

 #அரசியல்தத்துவ_சாஸ்திரம்_வடுவூர்_கே_துரைசாமி_ஐய்யங்கார்

———————————————————
வடுவூர் கே.துரைசாமி ஐய்யங்காரின் படைப்புகள் கடந்த நூற்றாண்டில் அனைவராலும் படித்து வரவேற்கப்பட்ட நவரசப் புதினங்கள் ஆகும். நேற்றைக்கு அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்களை சந்தித்தப்போது துரைசாமி ஐயங்காரின் ”அரசியல் தத்துவ சாஸ்திரம்” என்ற பழைய நூலை என்னிடம் படிக்க வழங்கினார்.
வடுவூர் கே.துரைசாமி ஐய்யங்கார் கடந்த நூற்றாண்டில் பல சுவாரசியமான நகைச்சுவை புதினங்களை படைத்தவர். மதன கல்யாணி, சௌந்தர கோகிலம், மாய வினோத பரதேசி, பூர்ண சந்திரோதயம் எனப் பல படைப்புகள் இரண்டு, மூன்று தொகுதிகளாக வெளியிட்டார். இவருடைய மேனகா என்ற புதினம் 1935-ல் திரைப்படமாக வெளிவந்தது.
முற்றிலும் மாறுபட்ட அரசியல் கோட்பாடுகள், தத்துவங்களை தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் இந்த அரசியல் தத்துவ சாஸ்திரத்தை அருமையாக எழுதியுள்ளார்.
இந்நூல் எழுதப்பட்டு ஏறத்தாழ 80, 90 ஆண்டுகளாகியிருக்கும் என்று நினைக்கின்றேன். அதில் சொல்லப்பட்ட அரசியல் தத்துவங்கள் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கின்றது. அரசியல் அறிவியல் (Political Science) என்று கூறுவதற்கேற்ப, இந்த நூல் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்டாலும் பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கியது. இன்றைக்கு அரசியலில் உள்ளவர்கள் இதையெல்லாம் படிப்பார்களா என்று தெரியவில்லை. அரசியல் தளத்தில் இயங்குபவர்களுக்கு அரசியல் ததுவங்கள் நெறிமுறைகள், பன்னாட்டு அரசியல், அரசியல் சார்ந்த நடைமுறைகள் போன்றவற்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு சூழல் வரவேண்டும்.எல்லோரும் நாட்டு மன்னர்கள்தான். ஆனால் அரசியலுக்கு வருபவர்களுக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியவேண்டாமா?
இராணுவத்திற்குச் செல்கின்றவர்கள் இராணுவப் பயிற்சியும், இராணுவம் சார்ந்த கோட்பாடுகளும் தெரிந்துகொள்கிறார்கள், ஆசிரியர்களும், பேராசிரியர்களும் தங்கள் துறை சார்ந்த படிப்புகளைத் தெரியாமல் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர முடியாது. ஏன் ஒரு சமையல்காரர், தையல் தொழில்செய்பவர், முடித்திருத்துபவர்கள் கூட அதைக்குறித்தான புரிதலில்லாமல் தங்கள் பணிகளை மேற்கொள்ள முடியாது. ஆனால் அரசியலில் மட்டும் ஜனநாயகம் என்றால் என்ன?, குடியரசு என்றால் என்ன? அரசியல் சாசனம் என்றால் என்ன?, நாடாளுமன்ற ஜனநாயகம், ஈரடுக்கு முறை என பல கேள்விகளுக்கு தத்துவ ரீதியாக புரிந்த அளவுகூட பதில் சொல்ல முடியாதவர்கள் பலர்தான் இங்கே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்.
எத்தனை குற்றவாளிகள் இந்தபொறுப்புக்கு வந்திருக்கிறார்கள் என்று ஏ.டி.ஆர்.யில் இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்திருந்தது. அதையும் நான் பதிவுச்செய்திருந்தேன். குற்றவாளிகள் அதிகமாக கூடும் அவையில் என்ன ஜனநாயகம் இருக்கும், என்ன நேர்மை இருக்கும் இந்த நிலையில் தான் இன்றைய நாடாளுமன்றமும் பல்வேறு சட்டமன்றங்களும் இருக்கின்றன. இவர்களிடம் எப்படி அரசியல் சார்ந்த தத்துவங்கள், நெறிமுறைகள், அதை குறித்தான வாசிப்புகள், படிப்பிணைகள், புரிதல்களை எதிர்பார்க்க முடியும். இவர்கள் தான் நாட்டை ஆள்கிறார்கள். ஆளட்டும்.
ஒரு வீட்டிற்கு பணி செய்யவரும் பணியாளரிடம் பல கேள்விகள் கேட்டு வீட்டு வேலைக்கு சேர்க்கின்றோம். ஆனால் நம்மை ஆளுகின்ற, நம்மை ஆளப்போகின்ற மக்கள் பிரதிநிதிகளிடம், மக்கள்நல அரசியல்சார்ந்தத் தத்துவங்களும், புரிதல்களும் இருக்கின்றனவா? என்று சோதித்து வாக்களிக்கின்றோமா?
ஓட்டுகளை காசுக்கு விற்கின்றோம், வேறென்ன செய்ய, தத்துவங்கள் எல்லாம் புத்தகங்களில் இருக்கட்டும். மருத்துவர்கள், பொறியாளர்கள் புத்தகங்களைப் படித்துத் தேர்வாகித் தங்களுடையத் தொழிலுக்கு வரட்டும். அரசியலுக்கு மட்டும் எந்தப் படிப்புகளும் வேண்டாம். அவர்களே மாண்புமிகு.
வேறென்ன சொல்ல முடியும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02.09.2021

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...