Friday, September 10, 2021

#காவிரி_வைகை_குண்டாறு_இணைப்பு:

 #காவிரி_வைகை_குண்டாறு_இணைப்பு:

———————————————————

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மழை வெள்ளக்காலங்களில் 40 டி.எம்.சி.க்கும் அதிகமான உபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை கால்வாய் மூலம் வறட்சி மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் 1958-ல் காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு ரூ.189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். ஆனால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
அதற்கு பிறகு அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்த திட்டத்தை பற்றி கவலைப்படவில்லை. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு மத்தியில் இப்போது இதற்கு ஒரு வெளிச்சம் கிடைத்துள்ளது வரவேற்க தகுந்ததாகும்.
காவிரி நதியை வைகை மற்றும் குண்டாறு நதிகளோடு இணைக்கும் திட்டம் ரூ.3290 கோடியில் நிறைவேற்றலாம் என்று 2008-ல் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் புங்கா ஆறு, நப்பண்ணை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினியாறு, கொண்டாறு, வெள்ளாறு, பம்மாறு, விருசுழியாறு, மணிமுத்தாறு, சருகணியாறு, உப்பாறு, வைகை, கிருதுமால்நதி, கானல் ஓடை என 15 நதிகளை இணைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
இந்ததிட்டம்செயல்படுத்தப்பட்டால் முதல் பயனாக காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். இதில், கிடைக்கும் உபரி நீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள சுமார் 8 லட்சம் ஏக்கர் பாசன நிலம் விவசாய சாகுபடிக்கு பெரும் அளவில் பயன்பாடு உள்ளதாக இருக்கும். இதன் மூலம் 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.மேலும் நிலத்தடி நீர் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த 7 மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சனை தீர வழிவகுக்கும். இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள இன்னும் சில மாவட்டங்களும் பயன்பெற முடியும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை அரசு நிறைவேற்றுவது மிக எளிதுதான். ஆனால் இந்த பிரச்சனைக்காக விவசாயிகள் அமைப்பு போராடும் ஒவ்வொரு சமயமும் அதிகாரிகளும் அப்போதைய அமைச்சர்களும் அரசுக்கு பரிந்துரைப்பதாகவே தெரிவித்து வந்துள்ளனர். பிறகு கிடப்பில் போட்டுவிடுகின்றனர். காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி விவசாய சங்க அமைப்புகள் பல கட்ட போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோயில் உள்ளிட்ட இன்னும் சில ஒன்றியங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் எந்த காலத்திலும் தூர்வாரப்படுவதில்லை. தப்பித் தவறி தூர்வாரினால் அரையும் குறையுமாகத்தான் தூர்வாரும் பணிகள் நடைபெறும். இதன் காரணமாக நீர் ஆதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க வழியின்றி வீணாக கடலில் கலக்கும் நிலையுள்ளது. அது மட்டுமில்லாமல் பல்வேறு கிராமங்களில் குடிநீர் உப்புநீர் கலந்தது.
இந்நிலையில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக ரூ.700கோடி நிதி ஒதுக்கப்பட்டு நில அளவீடு உள்ளிட்ட பணிகள் தொடங்கின. திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா விராலிமலை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடந்தது. அப்போதைய முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கால்வாய் வெட்டும் பணிகளும் தொடங்கின. புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் 350மீட்டர் நீளம் 110மீட்டர் அகலத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது.
காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தையும் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்படுத்திட முடியும். அதை வேகப்படுத்திடுவதே இன்றைய தேவையாகும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09.09.2021

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...