அருமை நண்பர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன். இவரோடு இந்தியாவின் பல பகுதிகளுக்கு தொடர்வண்டியிலும் விமானத்திலும் பிரம்மபுத்திரா நதி தீரம், காஷ்மீர், டெல்லி, ஜெயபூர், மும்பை, கல்கத்தா என மட்டுமல்லாமல் தமிழகம், கேரளத்தின் பல பகுதிகளுக்கும் சென்றுவந்ததுண்டு. இவருடைய மனைவி யாழ்பாண நகர மேயர் சரோஜினி யோகேஸ்வரன் எப்போதும் பாசத்தோடு இருப்பார். இந்த இருவருடைய மரணங்கள் என்னைப்போல சிலருக்கு வேதனையைத் தந்தாலும் எங்களால் எதுவும் சொல்ல இயலவில்லை.
இன்றைக்கு காலை எழுந்தவுடன் யோகேஸ்வரனுடைய நினைவு வந்தது. 1983-ல் என்னுடைய சீனியர் வழக்கறிஞர் ஆர்.காந்தியின் முயற்சியில் சென்னை உயர்நீதிமன்ற பார் அசோசியேஷனில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து ஒரு நாள் மதிய நேரத்தில் ஆங்கிலத்தில் 45 நிமிடங்கள் பேசினார். மூத்த வழக்கறிஞர்கள் கோவிந்த் சுவாமிநாதன் (கௌரவம் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் இவரை முன்மாதிரியாக வைத்துதான் வழக்கறிஞர் போல் நடித்தார்) மூத்த வழக்கறிஞர் வி.பி.ராமன், என்.டி.வானமாமலை போன்ற வழக்கறிஞர்களும் அந்த நிகழ்வுக்கு வந்திருந்து இவரோடு தேநீர் அருந்திக்கொண்டு பேசியது எல்லம் நினைவுக்கு வருகின்றன. எவ்வளவோ நிகழ்வுகளை கடந்து வந்திருக்கும் காலச்சக்கரங்களில் இதையெல்லாம் அசை போடுவது பெரும் திருப்தி.
No comments:
Post a Comment