Wednesday, September 1, 2021

#கிராவிருது_2021_ஏன்_கோணங்கிக்கு_?

 #கிராவிருது_2021_ஏன்_கோணங்கிக்கு_?

கோணங்கி தமிழின் தனித்துவமான ஒரு எழுத்துக் கலைஞர்
--------------------------------------
கிரா எழுத்தில் எளிமையைப் பின்பற்றியவர். வாசக சுவாரஸ்யம் அவருக்கு முக்கியம். அவர் ஒரு கதை சொல்லி. அதுதான் அவரது சிறப்பு.
கிரா எழுத்தில் எளிமையைப் பின்பற்றியவர். வாசக சுவாரஸ்யம் அவருக்கு முக்கியம். அவர் ஒரு கதை சொல்லி. அதுதான் அவரது சிறப்பு.
உண்மையில் கோணங்கியினுடைய நாவல்கள் கடினமானதுதான். அவரது நாவல்களில் கதையிருப்பதில்லை. சம்பவங்கள்தான் உண்டு. அந்தச் சம்பவங்களைக்கூட வாக்கியங்களால் புதிராகவே அமைத்திருப்பார். வாசிக்கும்போது உடன்நிகழ்வாக நமக்குத் தோன்றும் அம்சங்கள்தான் கதையாக உருப்பெறும். அல்லது நாமே ஊகிக்க வேண்டிவரும். ஒரு வனத்திற்குள் நுழைவதைப்போன்றது. அதற்குள் நுழைந்த அனுபவங்களைக் கதையாகச் சொல்வதில்லை. ஆனால், வனத்திற்குள் நுழையும்போது ஏற்படும் மனநிலையைப் போன்று நேரடி தருணங்களை உணரச் செய்பவை.
நாவல் என்றால் அதில் ஒரு கதை இருக்க வேண்டும். அல்லது கதையப்பற்றிய ஒரு கதையாவது இருக்க வேண்டும் எனக் காலங்காலமாக நம்பும் எழுத்து மரபில் அவருடைய நாவல்கள்பற்றிய மதிப்பீடு என்பது, வாசிக்க முடியாதது. புரியாதது என துாரத்தில் துாக்கி எறிந்துவிடக்கூடியவைதான்.
அவரின் நாவல்கள் அனுபவப்பதிவுகளாகவோ, அல்லது அதன் கதைகளாகவோ இருப்பதில்லை. எந்த ஒருவரின் மனதிலும் தங்கியிருந்து தொந்தரவு செய்வதுமில்லை. வாசிக்கும்போது அந்த வாக்கியங்களும் அதனுாடாக உருவாகும் உணர்வுகளும் தோன்றுகின்றன. வாசித்தபிறகு மறைந்துவிடுகின்றன. உண்மையில் வாசிப்பு இன்பத்தை அந்தக் கணங்களில் உருவாக்கிவிடுகின்றன. கணங்களின் மறைவான பாதைவழியே மனதையும் நமது கற்பனையையும் அழைத்துச் செல்பவை.
ஆற்றில் குளிக்கும்போது ஏற்படும் உணர்வு, காலைப்பொழுதை காணும்போது ஏற்படும் உணர்வு இப்படி, தருணங்களில் வசிக்கச் செய்பவை. சம்பவங்களை இணைத்து ஒரு கதையாக உருவாகி நிற்பதில்லை. காட்சிகளைக் காணும்போது ஏற்படும் உடனிகழ்வுகள் பிரவாகித்து ஏற்படுத்தும் பரவசம் போன்றவை. பிறநாவல்களைப் போல, குறித்த காட்சிகளைக் கண்டபிறகும் கதைகளாக மனங்களில் பின்தொடரும் வேலையைச் செய்வதில்லை. ஆனால், அந்தக் கணநேர அனுபவம், சம்பவங்களின் பரவசம் என்ற ஒன்று இருந்ததே என்ற எண்ணத்தை மாத்திரமே நம்மைப் பின்தொடரச் செய்பவை.
சம்பவங்களைக் கதைகளாக மாற்றிச் சிந்திக்கும் இரண்டாம் கட்ட வேலையைக் கோணங்கியின் நாவல்கள் செய்வதில்லை என்பதால்,
அவரின் நாவல்களைப் புறக்கணித்துவிட முடியாது. ஏதோ ஒன்றை அனுபவித்தோம் என்ற உணர்வை மனம் முழுக்க தக்கவைக்கும் ஆற்றல் அவரின் நாவலுக்கு மாத்திரமே உண்டு. அந்த வகையில் தமிழில் தனித்துவமானதும், போட்டிகளற்றதுமான ஒரு எழுத்தாளர்.
ஆனால், என்ன கதைகளும் அதைத் தொடரும் சிந்தனைகளையும் எதிர்பார்க்கும் இலக்கி வெளியில் அவரைப் புறக்கணிப்பது இலகுவானது என்ற தோரணையில் பலரும் பதிவிடுவதை காணமுடிகிறது. வாசிப்பு இன்பத்தைத் தருவது என்பதுதான் இலக்கியத்தின் முதல் பணியென எடுத்துக்கொண்டால் அதைச் செய்வதற்கு கோணங்கியின் நாவல்களைவிட வேறு எந்த நாவல்களாலும் முடியாது.
புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பவை மாத்திரமே இந்த உலகத்தில் முக்கியமானவை என்ற தவறான மதிப்பீடுகளும் இதற்குப் பின்னே உள்ளன. புரிந்துகொள்ள முடியாத பல அம்சங்கள் அனுபவப் பரவசங்களை ஏற்படுத்துபவைாயகவும் உள்ளன. அதுபோல், புரிந்துகொள்ள முடிபவைகளாகச் சொல்லப்படுபவைகளும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டவைகளல்ல. புரிந்துகொள்ளுதல் என்பது மனிதச் செயற்பாடுகளில் ஒன்று. அதற்கு அதீதமான முக்கியத்துவத்தை வழங்க வேண்டியதில்லை. அதேநேரம், புரிந்துகொள்ளும் முயற்சியில் பங்களிப்பு செய்பவர்களெ அனைவரும்.
கோணங்கி தமிழின் தனித்துவமான ஒரு எழுத்தாளர். அவர் மொழியைப் பயன்படுத்தி, இசையையும், காட்சிகளையும் பிறப்பிப்பவர். இசையையும், காட்சிகளையும் நாம் எப்படி உடன்நிகழ்வாக உட்பொருளாக நமக்குள் பரவச் செய்கிறோமோ அப்படியான ஒன்றை மொழியைப் பயன்படுத்து செய்பவர். இசையையும், காட்சிகளையும் முதல் பார்வையிலும், முதல் கேட்டலிலும் உள்ளார்ந்தரீதியாக நெருங்கிக்கொள்கிறோமோ அதைப்போலதான் கோணங்கியின் நாவல்களையும் நாம் நெருங்க முடியும். புரிந்துகொள்வதற்கான உள்ளீடுகளைக் குறைத்து, உணர்ந்துகொள்ளும் தரிசனத்தை அதிகம் அக்கறை கொள்பவை கோணங்கியின் எழுத்துக்கள்.
நீர்வீழ்ச்சியை காணும்போது ஏற்படும் உணர்வுகளைப் போல, இசையைக் கேட்கும்போது ஏற்படும் ஊடுருவல் போல, வாசிக்கும்போது மாத்திரமே உருவாகி மறைந்துவிடுவன. வாசகர்களைப் பின்தொடர்ந்து வந்து தொல்லைப்படுத்துவதில்லை.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...