Showing posts with label kathai Solli. Show all posts
Showing posts with label kathai Solli. Show all posts

Saturday, August 22, 2015

கதைசொல்லி - Kathaisolli



கதைசொல்லி இந்த காலாண்டுக்கான இதழ் அச்சாகி வந்துவிட்டது. நாளையிலிருந்து தபாலிலும், தூதஞ்சலி்லும் அனுப்பப்பட  இருக்கின்றது. கடந்த இதழ் கிடைக்கப் பெற்றவர்கள் பாராட்டியது மேலும் ஊக்கத்தை அளித்தது.

கதைசொல்லியில் உள்ளடக்கம் மற்றும் அதன் கட்டமைப்புகள் பற்றி தங்களுடைய அன்பான கருத்துகளை எதிர்ப்பார்க்கின்றோம். அடுத்தவாரம் இறுதிக்குள் அனைவருக்கும் கதைசொல்லி இதழ் கிடைத்துவிடும் என நம்புகின்றேன்.

மின்னிதழிலும் கதைசொல்லியை 30-08-2015 அன்று மாலைமுதல் www.kathaisolli.in தளத்தில் வாசிக்கமுடியும்.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

இணை-ஆசிரியர் - பதிப்பாசிரியர்
கதைசொல்லி.
பொதிகை-பொருநை-கரிசல்.
மின்னஞ்சல்  : rkkurunji@gmail.com


#kathaisolli  #KSR_Posts #KsRadhakrishnan

Wednesday, August 5, 2015

கதை சொல்லி இதழ்-29





கதைசொல்லியின் 29-வது இதழின் பணிகள் முடிந்து அச்சுக்குச் செல்ல உள்ளது. இதழின் மெய்ப் பிரதியினை கி.ரா அவர்களுக்கு அனுப்பிவைத்தாயிற்று.

மற்றொரு மெய்ப் பிரதியை கையில் எடுத்துக்கொண்டு,
திருநெல்வேலி டவுண் சுடலைமாடன் தெருவில் உள்ள தி.க.சியின்  இல்லத்தின் முற்றம் வரை சென்றுவிட்டு கடந்தகாலங்களில் மூழ்கிவந்தேன்.

 அவர் உயிரோடு இருந்தபொழுது கதைசொல்லியைக் கொண்டுவருவதில் அவர் காட்டிய ஆர்வமும், அக்கறையும், ஏனைய விவாதங்களும்  நினைவுக்கு வந்தது.

அவரோடு அமர்ந்து பேசிய ஒரு பழைய இரும்பு நாற்காலி ஒன்று  அங்கு இருந்தது. அதில் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு, அவர் விரும்பிச் சாப்பிடும் ஓமப்பொடி தின்பண்டத்தை மனதிலே நினைத்துக் கொண்டு திரும்பினேன்.

சுடலைமாடன் கோவில் தெருவில் திகசிக்கு இறுதிவரை உதவியாக இருந்த ஓவியர் வள்ளிநாயகத்தை அவர் ஓவிய ஆசிரியராக வேலைபார்க்கும் மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அறையில் சந்தித்துப் பேசி, அவரோடு தேநீர் அருந்திவிட்டுத் திரும்புகையில், அந்தப் பள்ளியில் படித்த கா.சு.பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை போன்றவர்களின்  பணிகள் நினைவுக்கு வந்தன.

நெல்லை மாவட்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பேர்சொல்லக்கூடிய கல்விக் கூடமாக, அப்படியே பழமை மாறாத கட்டிடங்களாக மந்திரமூர்த்தி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இன்றைக்கும் காட்சியளிக்கின்றது.

அதன் பக்கத்தில் வேப்பமரங்களும், அரசமரங்களும், ஆல மரமும் ஓங்கி வளர்ந்து, பகல் நேரத்தில் சிலுசிலுக்கும் காற்றும், இப்பள்ளியைச் சுற்றி பச்சைப்பசேலென்ற வயல் வெளிகளும் பார்க்க ரம்மியமாக இருந்தது.

கடந்த கதைசொல்லி இதழ் கையில் கிடைத்தவுடன் பாராட்டுகளும், வாழ்த்துகளும் வந்தவண்ணம் இருந்தது. தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியா, ஈழம், உலகெங்கும் வாழும் தமிழர்கள் இடையே இந்த இதழ் அச்சுப் பிரதியாக மட்டுமில்லாமல், மின்னிதழ் பிரதியாகவும் சென்றடைந்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது.

இந்த இதழின் தயாரிப்புப் பணிகளில் அன்புக்குரிய கழனியூரன்,
தம்பி கார்த்திக்புகழேந்தி, ஸ்ரீதேவி செல்வராஜன் போன்றோருடைய உழைப்பை நன்றியுடன் பார்க்கின்றேன். இதழுக்கான அட்டைப் படத்தை மதுரை ரெங்கா அனுப்பியது பொறுத்தமாக இருந்தது.




-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-08-2015.



#KsRadhakrishnan #KSR_Posts  #kathaisolli

Wednesday, July 15, 2015

கதைசொல்லி வாசகர்வட்டம் - KSR Blog




அன்புக்குரிய முகநூல் நண்பர்களுக்கு...
வணக்கம்,

      தொடர்ந்து முகநூலில் தொடர்பில் உள்ள அன்பு நண்பர்களை அழைத்துப் பேச வேண்டுமென்று, தொடர்பில் உள்ள முகநூல் நண்பர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யவேண்டுமென்ற நண்பர்களின் விருப்பத்தின்படி திட்டமிட்டுள்ளோம்.

இந்த நிகழ்வில், “முகநூலும் பிரச்சனைகளும்- தீர்வும்” என்ற தலைப்பில் விவாதிக்க
மூத்த பத்திரிகை ஆசிரியர்கள், இலக்கிய படைப்பாளிகள், கலையுலகத்தைச் சேர்ந்த நண்பர்களையும் அழைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதற்கான நாளும், அழைப்பிதழும் இறுதி செய்யும் பணி நடந்துமுடிந்ததும்,  இந்த தளத்திலே அழைப்பிதழ் பதிவேற்றப்படும்.

தங்களுக்கு வாய்ப்பிருந்தால், கலந்துகொள்பவர்களின் விருப்பத்தை
அன்புடன் தெரிவிக்க வேண்டுகிறேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-07-2015. 

Sunday, May 24, 2015

கதைசொல்லிக்கு தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் அவர்களின் பாராட்டு.







இன்றைய தினமணி (24-05-2015)  தமிழ்மணியில், தினமணி ஆசிரியர் அன்புக்குரிய நண்பர் திரு.கே.வைத்தியநாதன் அவர்கள், “இந்தவாரம்- கலாரசிகன்” பத்தியில், சமீபத்தில் நாங்கள் கி.ரா அவர்களைப் புதுவையில் சந்தித்தது, அப்போது வட்டார மொழிகள் பற்றிய அவசியத்தை கி.ரா அவர்கள் குறிப்பிட்டது குறித்து சிறப்பாக எழுதியுள்ளார்.

அதே பத்தியில் கதைசொல்லியில் வெளிவந்துள்ள, எனக்கு உதவியாக இருக்கும் தம்பி கார்த்திக் புகழேந்தி அவர்களுடைய சிறுகதையான, “பண்டாரவிளை வைத்தியரும் காந்திமதி சித்தியும்”  கதையினை படித்துரசித்தது மட்டுமில்லாமல், தெக்குச் சீமையான திருநெல்வேலியின் மொழியையும், மாண்பையும், சிறப்பையும் எழுதியதுபற்றிக் குறிப்பிட்டது மனதுக்கு நிறைவாக இருக்கின்றது.

தம்பி கார்த்திக் புகழேந்தி தமிழ் இலக்கியத்தில்  வளர்ந்து வரும் படைப்பாளி. எதைச் சொன்னாலும் நுண்மான்நுழைபுலமாகப் புரிந்துகொண்டு செய்யும் ஆற்றல் கொண்டவர். அவர் சிறுகதைத் தொகுப்பு வற்றாநதி, நெல்லை வட்டாரநடையில் அமைந்த படைப்பாகும். அதையும் தினமணி ஆசிரியர் பாராட்டியுள்ளார்.

இளம் படைப்பாளிகளை கலாரசிகன் தொடர்ந்து அவர் பாராட்டுவது தமிழுக்குச் செய்கின்ற சேவையாகும். இதே பத்தியில் தினமணி முதுநிலை நிருபர்.நண்பர்.தா.அரவிந்தனுடைய குழி வண்டுகளின் அரண்மனையில் கவிதைத் தொகுப்பின் நடையையும், அதில் கூறப்பட்ட கருத்தையும் பாராட்டியுள்ளார்.

கார்த்திக் புகழேந்தி போன்ற இளைஞர்கள் தமிழ் படைப்புலகத்தின் இன்றைக்குள்ள சமூக நிலையையும் மனதில் வைத்து தங்கள் படைப்புகளை படைக்கின்றனர். இப்படி எண்ணற்ற இளைஞர்கள் ஆர்வமும் தாகமும் இலக்கியத்தின் மீது கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கின்றேன். இவர்கள் பணி தொடரவேண்டுமென்று இதயசுத்தியோடு வாழ்த்துகிறேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-05-2015.


Sunday, April 19, 2015

கதைசொல்லி - kathaisolli - கே.எஸ்.ஆர்.குறிப்புகள்.

கதைசொல்லி - Kathai Solli
_____________________________________________________

திரு.முரளிதரன்  ( BBC ) Muralidharan Kasi Viswanathan​ அவர்கள், கதைசொல்லியில் வந்த ஏ.கே.ராமானுஜம் கவிதையைப் பற்றி எழுதியிருக்கும்  பதிவு.

                                                     ***********

கே.எஸ். ராதாகிருஷ்ணன் 'கதைசொல்லி'யில்,சில குறிப்புகளை எழுதியிருந்தார். அதில் ஒன்று ஏ.கே. ராமானுஜம் பற்றியது. அதில் அவர், மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றினார் என்று குறிப்பிட்டிருந்தார்.

எனக்கு, உடனே A River என்ற ராமானுஜனின் ஆங்கிலக் கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது. ஏ.கே. ராமானுஜன், தியாகராசர் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் பணியாற்றியவர். அந்தத் துறை, பட்டமேற்படிப்பு கட்டடத்தில் இரண்டாவது தளத்தில் இருந்தது. அங்கிருந்து பார்த்தால், வைகையாறு தெரியும்.

வைகையில் வெள்ளம் வந்த காலகட்டத்தில், தன் துறையில் இருந்தபடி, அதைப் பார்த்து ராமானுஜன் எழுதியதுதான் A River.

நான் அதே ஆங்கிலத் துறையில் படிக்கும்போதும், வைகை தெரிந்தது. ஆனால், வருடத்தின் பெரும்பாலான நாட்களில் அதில் வளர்ந்துகிடக்கும் கருவேலமரங்கள்தான் கண்ணில்படும்.

இருந்தாலும், ஆங்கிலத் துறையில் நின்று, வைகையைப் பார்த்துவிட்டு கவிதை எழுதாமல் விட்டால் எதிர்காலம் மன்னிக்காது என்பதால், நானும் Balamurugan Ramanathanனும் சேர்ந்து ஒரு கவிதையை எழுதினோம்.

அந்தக் கருவேல மரங்களுக்குக் கீழே, கள்ளச்சாராயம் விற்கப்படுவதைப் பற்றிய கவிதை அது. எங்களது ஆங்கிலம், சகிக்க முடியாததாக இருந்தாலும் கவிதை நன்றாக இருந்ததாகவே ஞாபகம். எழுதிமுடித்த பிறகு, ஒரு பேராசிரியரிடம் போய் காண்பித்தோம். An Indian poem in Indian English என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அந்த நோட்டு பாலமுருகனுடையது. அதோடு அந்தக் கவிதையும் போய்விட்டது.

ஆனால், ஏ.கே. ராமானுஜன் அதிர்ஷ்டக்காரர். அவர் கவிதை நிலைத்துவிட்டது.

A River
=========
In Madurai,
city of temples and poets,
who sang of cities and temples,
every summer
a river dries to a trickle
in the sand,
baring the sand ribs,
straw and women's hair
clogging the watergates
at the rusty bars
under the bridges with patches
of repair all over them
the wet stones glistening like sleepy
crocodiles, the dry ones
shaven water-buffaloes lounging in the sun
The poets only sang of the floods.

He was there for a day
when they had the floods.
People everywhere talked
of the inches rising,
of the precise number of cobbled steps
run over by the water, rising
on the bathing places,
and the way it carried off three village houses,
one pregnant woman
and a couple of cows
named Gopi and Brinda as usual.

The new poets still quoted
the old poets, but no one spoke
in verse
of the pregnant woman
drowned, with perhaps twins in her,
kicking at blank walls
even before birth.

He said:
the river has water enough
to be poetic
about only once a year
and then
it carries away
in the first half-hour
three village houses,
a couple of cows
named Gopi and Brinda
and one pregnant woman
expecting identical twins
with no moles on their bodies,
with different coloured diapers
to tell them apart.

Wednesday, April 8, 2015

கதை சொல்லி - KathaiSolli



கதை சொல்லி இதழ்  மற்றும் மின்னிதழ் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.மிக்கநன்றி.  

பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் நண்பர்களும், குறிப்பாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதுகுறித்து ஆர்வம் செலுத்தியது மிகவும் பெருமைக்குரிய செயலாக இருந்தது. 

1995லிருந்து ”கதைசொல்லி” வெளிவருகின்றது. இடையில் சிலகாலம் தொய்வு ஏற்பட்டுவிட்டது. கி.ரா மற்றும் என்னைப் போன்றவர்களுக்கு இது ஊமைக்காயமாகவே இருந்தது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து கதைசொல்லி வெளிவரும். 

வணக்கம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
rkkurunji@gmail.com 

08-04-2015.

Monday, March 30, 2015

கதைசொல்லி -Kathai Solli .














கதைசொல்லி மீண்டும் கொண்டு வந்திருப்பதில் உள்ளூர மகிழ்ச்சி நிறைய உண்டு. இடைப்பட்ட காலங்களில் பணிச்சுமைகளால் கதைசொல்லியை கொண்டுவர இயலாமல் போனதற்கு முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கதைசொல்லி வெளிவராமல் போனது பற்றி கி.ரா ஒருவார்த்தை கூட இதுவரைக்கும் என்னிடம் வாயெழுந்து சொல்லவில்லை. அவருக்கு வெளிச்சொல்லாத ஊமைக்காயம் போல வலியாக இருந்ததை உணரமுடிந்தது என்னால்.



தி.க.சி தன் கடேசி தருவாயில் அவருடைய ஈரமான கரங்களால்  என்னைப் பற்றிக் கொண்டு,  “ கதைசொல்லியை திரும்பவும் கொண்டு வந்துடுங்க கே.எஸ்.ஆர்” என்று கேட்ட வார்த்தைகள் இன்னும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. அந்தக் கரங்களுக்கு வாஞ்சை செய்து விட்டதாய் நம்புகிறேன்.

தெற்குச்சீமை மண்ணை நேசிக்கிறவர்களும், ஈழத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும், இன்னும் எத்தனையோ பேரும் கேட்டுக் கேட்டு அழுத்துப் போய் கேட்பதையே நிறுத்தியிருந்தார்கள். இந்தக் கோடையில் கதைசொல்லியினைத் திரும்பக் கொண்டுவந்து, தமிழர்கள் வாழும் இருபத்தைந்துக்கும்  மேலான உலகநாடுகளுக்கும் கதைசொல்லியினை எடுத்துச் செல்லும் முயற்சியில் அத்தனைபேரையும் சமாதானப் படுத்தியதாயே எண்ணுகிறேன்.

வெய்யில் காலத்தில் நுங்குக் குலைகளை சைக்கிளுக்கு இருபுறத்திலும் கட்டிக்கொண்டு பதனி நுரைத்திருக்கும் ஈயப்பானையின் வாய்நுனியில் சிந்திவிடாமல் இருக்க உரச்சாக்கையும் சைக்கிள் ட்யூப்பையும்  கட்டிக் கொண்டு, கொழுத்தும் வெயிலில் லொக்குலொக்கென்று சைக்கிளை அழுத்திக் கொண்டு, வீதிவீதியாக வந்து நுங்கும் பதனியும் விற்றுப் போகும் மீசைக்காரப் பெரியவருக்கு அது வெறும் விற்பனை பண்டமாக மட்டுமா இருக்கமுடியும்?

 ஊரூராகச் சென்று பதநீரும், பனங்கிழங்கும், நுங்கும், பனம்பழமும் விற்கும் மனிதருக்கு உள்ளூர இருக்கும் ஆத்ம திருப்தியை வார்த்தைகளில் கொடுத்துவிட முடியாது.
அதேபோலத்தான் கதைசொல்லியை ஒரு ஆத்ம திருப்தியோடு கொண்டுவந்திருக்கிறேன். கூடவே பல இளையவர்கள் தங்கள் பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள்.

நவீனயுகத்தின் குளிர்பானங்களுக்கு மத்தியில் நம் மண்ணின் மாறாத வாசத்தோடு இனிக்கும் பதநீராக, நாட்டுப்புற படைப்புகளும், கிராமியத்தின் வாசனைகளும் நிரம்பியோடும் வெயிலோடையாக,  வயதான பெரியவர்கள் ஊருக்கு மத்தியில் அமர்ந்து ஒன்று கூடி பழங்கதை பேசும் எச்சம்படிந்துகிடக்கும் ஆலமரத்தின்  நிழல்திண்டாக,  தார்சாலையின் சூட்டில் கனன்று விடுமென்று குளத்தாங் கரையில் மாட்டுவண்டியை இறக்கி மரப்பைதாவைக் குளிரூட்டும் போது தானும் கொஞ்சம் காளைகளோடு குளிர்ச்சியைத் தழுவும் பொழுதுகளாக, கதைசொல்லியின் ஒவ்வொரு பக்கத்திலும் நம் மண்சார்ந்த பரிச்சயம் நிரம்பிக்கிடக்கின்றது.

சுருங்கச் சொன்னால், இந்த தலைமுறைப் பேரம்பேத்திகளை மடியில் அள்ளிப் போட்டு கதை சொல்லும் தாத்தாக்களின் பேரன்பை பேப்பரில் கொடுப்பதே கதைசொல்லியின் எளிய விளக்கம். தொடர்ந்து ஆதரவினை நல்கும் உங்கள் அத்தனை பேருக்கும் அன்பு.

 -ப்ரியங்களுடன் -கே.எஸ்.ஆர்.



Sunday, March 29, 2015

விமர்சன வித்தகரும், சிறியன சிந்தியா தி.க.சி. -Tee.Ka.cee






 நம்மிடம் வாழ்ந்த முக்கிய இலக்கிய கர்த்தாவாக இருந்த தி.க.சி அவர்கள் மறைந்து ஒராண்டு காலம் நிறைவு பெற்றுவிட்டது.
பல எழுத்தாளர்களை தாமரை இதழ் மூலம் ஊக்குவித்தவர் தி.க.சிவசங்கரன்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடும் குணமுடையவர். பல நேரம் இதனால் தி.க.சிக்கும், ஜெயகாந்தன் அவர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன.

கி.ராவின் கதையே ”தாமரையில்” வெளியிட மறுத்த போது, நா.வானமாமலை, என்.டி.வானமாமலை போன்றோர் முன்னிலையில் பெரிய விவாதமே நடந்தது. நவீன இலக்கிய போக்கில் திறனாய்வு என்ற வாசலைத் திறந்து வைத்தவர் தி.க.சி.

நெல்லையில் பிறந்து, கேரளத்தில் தொழிற்சங்கப் பணியாற்றி, சென்னையில் தாமரை இதழில் ஆசிரியராகவும், சோவியத் நாடு இதழில் பணியாற்றியும், தன்னுடைய இறுதிகாலத்தில் நெல்லை டவுணில் உள்ள தன்னுடைய சுடலைமாடன் தெரு வீட்டிலேயே வாழ்ந்து மறைந்தார்.

நேற்றைக்கு அவருடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அவரோடு ஏற்பட்ட பழக்கத்தாலும், நெருக்கத்தாலும் தான். என்னுடைய “நிமிரவைக்கும் நெல்லை” நூலினை விரும்பி, நேசித்து பல சமயம் பலரிடம் என்னைக்குறித்து   அவர் பாராட்டிப் பேசியதெல்லாம் செவிகளுக்கு வந்ததுண்டு.

 தன் முகநூல் பதிவில், அண்ணன் எஸ்.ஏ. பெருமாள் ( Sap Marx​ )  குறிப்பிட்டது போல  “ஒரு கல்லைக்கூட கார்டு (போஸ்ட் கார்டு) எழுதி எழுத்தாளனாக்கிவிடும் அற்புத மனிதர் தான் திகசி” .

தி.க.சி.யின் கால் காசு கடுதாசி பல விசயங்களைப் பேசும். பொதுவுடைமைவாதியாக, தொழிற்சங்கத் தலைவராக, கனிந்த மனம்கொண்டவராக, இளைஞனுக்கும் தோழனாக, ஏகலைவன்களை உருவாக்கும் துரோணராக, தத்துவ மேதையாக, நிறைவாக வாழ்ந்த மாமேதை எங்கள் பாசத்துக்குரிய தி.க.சி. அவர்கள்.  அவருடைய எழுத்துகளும் , கடிதங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றைச் சொல்லும். நம்முடைய “கதைசொல்லியின்” ஆலோசகர். இப்படி அவருடைய புகழ்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

காலம் எத்தனை வேகமாகச் சுழல்கிறது. தி.க.சி யை என்றும் தமிழ்கூறும் நல்லுலகம் நினைவில் கொள்ளும்.

*
கே.எஸ்.இராதாகிருஸ்ணன்.
29-03-2015.

நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்ட புதிய தலைமுறை. திரு.வேங்கட பிரகாஷ்  அவர்களின் பதிவையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

***
தி.க.சி.

விழா இரவு 8மணிக்கு முடிந்ததும் திரு.கே.எஸ்.ஆர். என்னையும் (வேங்கட பிரகாஷ்) திரு.கல்கி ப்ரியனையும் காரிலேற்றி அசோகா ஓட்டலுக்குக் கொண்டு சென்றார். நான்கு பேர் அமரக்கூடிய மேசையில் மூன்று பேர் அமர்ந்திருக்கிறோம். ’’காபி சாப்பிடுவோம்’’ என்றார். ஒரு சந்தேகத்தில்தான் கேட்டேன் ’‘என்ன மாமா இங்க?’’ அவர் சொன்னார்….’’இல்ல இங்கதான் தி.க.சி.யக் கூட்டிட்டு வந்து சாப்பிடுவோம். இன்னைக்கு அவர் ஞாவகமாவே இருக்குல்ல…..அதான் !’’ என்றார்.

தி.க.சி.காப்பியென்று ஒரு காப்பியை இன்று சுவைத்தோம். குடித்ததும் எழுந்துவிடவில்லை. ஏனென்றால் அந்த நான்காம் இருக்கையில் தி.க.சி. இன்னும் காபி குடித்து முடித்திருக்கவிலை…..!

......................
தி.க.சி. குறித்துப் பேச ’கதைசொல்லி’கள் திரு.கே.எஸ்.ஆர்., மற்றும் திரு.கழனியூரன் பணித்திருந்தனர். எழும்பூர் இக்சா மையத்தில் நேற்று மாலை நிகழ்ச்சி சிறப்புற நடந்தேறியது. என்னை எழுதவைக்கிறார்கள் பேசவைக்கிறார்கள்…. இன்னும் என்னென்னவோ தெரியவில்லை….. தி.க.சி. என்பது அடையாளம்தானே…. ஒவ்வொருவருக்கும் வாழ்வில் தி.க.சி.க்கள் கிடைப்பார்கள்! எனக்கு இவர்கள். நன்றி… ’நீங்களும் வாசிச்சி நானும் வாசிக்கவா..!’ என்று கலவரத்தோடுதான் ஒவ்வொரு மேடையிலும் திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோரைப் பார்க்கிறேன்.

ஆனால் அவர்களோ சிரித்த முகமென்கிறார்கள்! ஊடகப் பழக்கம்….! இலக்கியவாதிகளோடு உறவு இனிக்கத்தான் செய்கிறது. இந்த இனிப்பெல்லாம் ‘ உங்கள் ஆட்சியில் நீங்கள் மட்டும் என்ன செய்தீர்களாம்? ‘ என்பது போன்ற கசப்புக்கேள்விகளில் கரைத்துவிடத்தானா…?!

இனி நான் பேசியது:

‘’ திறனாய்வுத்தென்றல் தி.க.சி. அவர்களின் முழுமையான விமர்சனக் கட்டுரைத் தொகுப்புநூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருக்கின்ற, கதைசொல்லியைத் துயிலெழுப்பியிருக்கும் கரிசல்குயில், தாமரை இலைத் தண்ணீர் போல் அரசியலில் வீற்றிருக்கும் அன்பர், (தாமரை ஆசிரியர் தி.க.சி.யை விரும்பும் மனிதர் அரசியலில் அப்படித்தானே இருக்க முடியும்!) பெருமதிப்பிற்குரிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களே, நான் எப்போதும் விரும்பிக் கேட்கின்ற பேச்சுக்குச் சொந்தக்காரர், சொற்களை அருவியாய்க் கொட்டும் அன்புநிறைந்த ஐயா திருப்பூர் கிருஷ்ணன் அவர்களே, வரலாறு வாழ்த்துகின்ற பணிகளாகத் தொடர்ந்தாற்றிவரும் பெருமதிப்பிற்குரிய கழனியூரன் அவர்களே, ஐயா செந்தில்நாதன் அவர்களே, ஐயா முகம் மாமணி அவர்களே, ஐயா தருமராசன் அவர்களே, காவ்யா பதிப்பகத்தார் ஐயா சண்முகசுந்தரம் அவர்களே மற்றும் அரங்கில் முன்னமர்ந்திருக்கும் பேரன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே வணக்கம்.

என் இலக்கிய வாழ்வு நிறைவாழ்வென்றுதான் நான் கருதுகிறேன் என்பது திகசி தன்னைப் பற்றிச் சொன்னது. இந்த மனநிறைவு ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கவேண்டும். மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானோர்க்குச் சில புத்தகங்களை எழுதியதுமே வாழ்நாள் முழுவதும் இந்த மனநிறைவென்பது வந்துவிடுகிறது. திகசியின் விமர்சனங்களை முழுமையாகப் படித்தால்தான் சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கக்கூடியவனாக ஒரு எழுத்தாளன் எப்படி மிளிர வேண்டும் என்பது தெரியும் என்று கருதுகிறேன்.
அந்த இலக்கணத்தில் நின்று இயங்கி பிறகு மனநிறைவு வந்தால் அதுவே உண்மையான மனநிறைவாக இருக்கமுடியுமென்று கருதுகிறேன்.

பொதுவில் யாரும் விரும்பாத ஒன்று விமர்சனம். தப்பித்தவறி ஒருவர் ஒரு விமர்சனத்தை விரும்புகிறாரென்றால அதில் அவரைப் பற்றிப் பாராட்டுவார்த்தைகள் இருக்குமென்பது திண்ணம். இடித்துரைக்கும் சொற்களை எந்தக் கண்களும் காணத்துடிக்காது எந்தக்காதுகளும் கேட்கத்துடிக்காது.

தொடக்கத்தில் வல்லிக்கண்ணன் பணியாற்றிய கிராம ஊழியன் இதழில் திரைப்பட விமர்சனங்களை எழுதிவந்தவரை பேராசிரியர்.நா.வானமாமலை இலக்கிய விமர்சனப் பாதைக்கு இட்டுச்செல்கிறார். ஆனால் இன்றைக்கு அவர் இருந்தால் திரைப்படங்களுக்கு மட்டும் விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதுங்கள். நாட்டை அது பாழ்படுத்துவது போல் வேறெதுவும் பாழ்படுத்தவில்லை என்று நாம் மன்றாடிக் கேட்டுக்கொண்டிருப்போம்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய காட்சிகள் நிரம்ப இருந்தது கண்டு கொதித்துப்போய்த் தமிழகத்தின் பெரும் பண்பாட்டை மண்ணாக்கும் மசாலாத்தனமான படம் என்ற வகையில் எழுதிவிட்டார். அந்த இதழுக்கு அதுவரை அளிக்கப்பட்டு வந்த விளம்பரத்தை நிறுத்திவிட்டார் வாசன். ஆனால் அத்தோடு இவர் நிறுத்தினாரா என்றால் இல்லை. விகடன் நிறுவனம் நடத்திவந்த நாரதர் இதழில் நடிகையர் பயன்படுத்தும் வாசனைத்திரவியங்கள் குறித்தெல்லாம் கவர்ச்சியாக எழுதப்படுவதையும் கண்டித்தார் திகசி. விளைவு அந்த இதழ் இவர்களுக்கு அனுப்பப்பட்டதேகூட நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நா.வானமாமலை தி.க.சி.யை மடைமாற்றிவிடுகிறார். சரி அங்கும் என்னதான் ஆயிற்று?! மு.வ.வின் நூல்கள் தமிழகத்தில் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருந்த காலகட்டமல்லவா அது? அவரது 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி ஊன்றிப் பயின்று ஆழ்ந்த விமர்சனக் கட்டுரைகளை ஜனசக்தியில் தொடர்ந்து எழுதினார். பின்னர் அதைத் தொகுத்து அவருக்கே அனுப்பியும் வைத்தார். வந்த பதிலென்ன தெரியுமா? ஓர் அஞ்சலட்டையில் ஒற்றை வரி. ‘உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி’ என்று மட்டுந்தான்.

நான் இப்பெருமகனார்களைக் குறை சொல்லவில்லை. ஆனால் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பாங்கு இப்படித்தான் இருந்திருக்கிறது. இத்தனைக்கும் மென்மையான மனிதர்தான் திகசி. நெல்லையிலிருந்து மூன்று மைல் ஆற்றிலிறங்கி நடந்துசென்று அக்கரையில் வண்ணார்பேட்டையில் அப்போது குடியிருந்த டி.கே.சியோடு அளவளாவி வருவார்களாம். அவரும் இவரைப் போல் மென்மையானவர்தானே. வயதில் மிக இளையவர்கள் என்றாலும் பேரன்போடு டிகேசி நடத்துவாராம். அடிப்படையில் திகசி மென்மையான மனிதரென்றாலும் விமர்சனம் என்று வந்துவிட்டால் கறார் தன்மை வந்துவிடும். கூடவே இருந்த வல்லிக்கண்ணனையும் விடவில்லை. ஜெயகாந்தனையும் விடவில்லை. நேர்மையாக அளவிட்டுச் சென்றுகொண்டே இருந்தார்.

விமர்சகர்கள் என்றாலே கசப்போடு பார்க்கும் போக்குதானே இருக்கிறது. காலம் கடக்கக் கடக்கத்தான் உலகம் விமர்சகர்களின் அளப்பரிய பணியைப் புரிந்துகொள்ளும்.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி 20000 த்திற்கும் மேற்பட்ட இலக்கியத்தரம் வாய்ந்த கடிதங்களை எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அப்படியாக இலக்கியத்தரம் வாய்ந்த கடிதங்களை வெறும் அஞ்சலட்டைகளிலேயே எழுதிக்குவித்தவர்கள் திகசியும் வல்லிக்கண்ணனும். தனது விமர்சனக் கட்டுரைகளின் வாயிலாக தி.க.சி.என்றென்றும் தனது பணியை ஆற்றிக்கொண்டே இருக்கிறார். இளைய தலைமுறையினர் தி.க.சி.யைச் சிக்கெனப் பிடித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன். இந்த முழுமையான தொகுப்பை ’நம்மை விமர்சிக்கவில்லையே…. வேறு யார்யாரையோதானே விமர்சித்திருக்கிறார்’ என்ற எண்ணத்திலேனும் படித்துவிடவேண்டும்.

 படித்துமுடிக்கும்போது இந்த நூல் நம்மைச் செதுக்கி முடித்திருக்கும். ஒரு சிறந்த எழுத்தாளர் பிறந்திருப்பார்.  இந்நூலின் வாயிலாக தி.க.சி. என்றும் நம்மோடிருப்பார் நம்மைச் செதுக்கிக்கொண்டும்..! நன்றி..’’
- வேங்கட பிரகாஷ் .

Monday, March 23, 2015

கதை சொல்லி * இதழ்-27, Kathai solli




திட்டமிட்டவாறு ”கதை சொல்லி” -யின் பணிகள் நடக்கின்றன...
அட்டைப்படம் மாட்டுவண்டியோடு இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.  கி.ராவுக்கு சந்தோஷம். கழனியூரன் உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட பொறுப்புகளை எடுத்துச் செய்தார்.

கோவில்பட்டி மாரீஸின் உழைப்பு அதிகம். படைப்பாளிகளின் படைப்புகள் பல வந்துள்ளன. யாவும் பரிசீலனையில் உள்ளன. முடிந்தவரை நாட்டுப்புற, வட்டார வழக்கு படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இந்த கதைசொல்லி இதழை நாங்கள் இருக்கின்றோம் என்று பொறுப்புகளைத் தலையில் ஏற்றிக்கொண்ட இளைஞர்களான,  கார்த்திக் புகழேந்தி (திருநெல்வேலி) , கனவுப்பிரியன் (தூத்துக்குடி), சிவகாசி சுரேஷ், பேராசிரியர் விஜய ராஜேஸ்வரி (திருவனந்த புரம்), ஸ்ரீதேவி செல்வராஜன் (விருதுநகர்), காயத்ரிதேவி (நாகர்கோவில்),   இராதா இராமச்சந்திரன் (புதுக்கோட்டை) பாராட்டக்கூடிய வகையில் தயாரித்து வருகின்றனர்.

ஏப்ரல் 1ம் தேதி  “கதைசொல்லி” கத்தாயஇதழ் வெளிவருகின்றது. இதழ் வருவதை கேட்டு, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், மாமா தோப்பில் முகம்மது மீரான், தீப நடராஜன், நண்பர்கள் மணா, அப்பணசாமி, பேராசிரியர் பஞ்சாங்கம், பேராசிரியர் அ.ராமசாமி,  கவிஞர் வெண்ணிலா, உதயசங்கர்,  கோவை ரவீந்திரன், கல்கி பிரியன் இதுகுறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-3-2015.

#KSR_Posts.

#Kathai_solli.

Tuesday, March 17, 2015

கதைசொல்லி- Kathai Solli.




கதைசொல்லி பற்றிய விசாரிப்புகளும், வாழ்த்துகளும், இதழ்கள் எங்கே கிடைக்குமென்ற கேள்விகளும் , குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், தொலைப்பேசி அழைப்புகள் மூலம் தமிழகம் மட்டுமில்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் ஈழத்தமிழர் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்தும் வந்திருந்தது.  ஒரே நாளில்  முகநூல் அறிவிப்பைப் பார்த்துவிட்டு நண்பர்கள்  அன்பர்களின் இந்த  அழைப்பும் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியைத் தந்தது.

பிஜி தீவுகளிலிருந்தும், தென் ஆப்ரிக்காவிலிருந்தும் முறையே சரவண நாயகம், படையாச்சி ஆகியோர் பேசியிருந்தார்கள். இருவருமே தூய தமிழ் பேசுகிறவர்கள்.  தமிழகத்திற்கு இவர்கள் வந்ததில்லை. இவர்களுக்கும் கதைசொல்லி மீதிருக்கும் ஈடுபாடும், அக்கறையும் கண்டு மெய்மறந்தேன்.

தமிழகத்திலும் நல்லுள்ளங்கள் பலர் வாழ்த்துச் சொல்லுவதோடு, கதைசொல்லியை மீண்டும் கொண்டுவருவதற்கு நன்றி தெரிவிக்கும்போது எனக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை.

பேராசிரியர்.அ.ராமசாமி அவர்களைப் போன்ற தமிழ் அறிஞர்கள் மகிழ்ச்சியோடு, பாசாங்குகள் இல்லாமல் வாழ்த்தினது உற்சாகத்தையே கொடுத்தது.

இதுவெல்லாம் தமிழால் வந்தபெருமை. பூமிப்பந்தெங்கும் வாழும் தமிழர்கள் பலர் ”தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற சொல்லுக்கு ஏற்ப வாழ்கின்றனர் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.



பொதிகை-பொருநை-கரிசல்.
 rkkurunji@gmail.com.

‪#KathaiSolli‬

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC