Saturday, February 28, 2015

கடனில் தவிக்கும் விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் தூக்குக்கயிறும், விஷக்குப்பிகளும்... (Farmer's Suicide ) (2)

கடனில் தவிக்கும் விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் தூக்குக்கயிறும், விஷக்குப்பிகளும்... (Farmers Suicide )


காராஷ்ட்டிராவில் கடனில் சிக்கித்தவித்து தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளைப் பற்றிய விசாரணை தேசிய மனித உரிமை கமிசனில் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும், தமிழக விவசாயிகள் தற்கொலைகள் குறித்தும்  தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்ய இருப்பதையும் கடந்த வாரப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன் .

கடந்த 2014டிசம்பர் மாதம் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அறிக்கையின்படி, இந்திய விவசாயிகள் 52சதவிகிதம் பேர் கடன்வாங்கித் திக்குமுக்காடுகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில்  ஒரு சராசரி விவசாயிக்  குடும்பத்திற்கு ரூபாய் 47,000 கடனாக இருக்கிறது என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. வேளாண்மை செய்வதின் மூலமாக  ஒரு விவசாயக் குடும்பத்திற்கு ஓராண்டுக்குக் கிடைக்கும் வருமானமோ வெறும் 36,922 ரூபாய் மட்டுமே.

விவசாயத்தின் இத்தகைய சீரழிவு பசுமைப்புரட்சி ஆரம்பித்த காலத்திலே துவங்கிவிட்டது. குறிப்பாக, ஆந்திரம், மகாராஷ்ட்டிரம், குஜராத், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கடன் தொல்லையால் லட்சக்கணக்கில் விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்கின்றனர். தமிழகத்திலும் இந்த அவலநிலை 2012ல் ஏற்படத் துவங்கியது.

தமிழகத்தின் நெல்லைமாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள வரகனூரைச் சேர்ந்த ஜெகந்நாதன்,சங்கரன்கோவில்  மேலநீலிதநல்லூர் வெள்ளப்பனேரி செந்தூர்பாண்டியன், மயிலாடுதுறையைச் சேர்ந்த பூமிநாதன், கீவளூர் ராஜாங்கம், கீழையூரைச் சேந்த செல்வராஜ், பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி, ஏழை உழவன், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அப்துல் ரஹீம், சிவகாசி அருகே பாண்டி,  இப்படி பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன்சுமையால் தமிழ்நாட்டில் தற்கொலைச் செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.

கடன்சுமைகளால், ஆந்திரத்தில் 92சதவீதமும், தமிழகத்தில் 82.5சதவீதமும் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். கந்துவட்டிக்காரர்கள், விவசாயத் தரகுமண்டி தரகர்கள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களிடம் விவசாயிகள்  கடன் வாங்குகின்றார்கள். 

இதுபோக, வங்கிகளிலும் வேளாண்கடன் வாங்குகின்றனர்.
இப்படி தனியாரிடம் வாங்கும் கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போக, கடன் கொடுத்தவர்களுடைய ஏச்சுக்களுக்கும் , பேச்சுக்களுக்கும் பொறுக்கமுடியாமல் கடன்வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தமுடியவில்லையே என்ற சுயமரியாதையின் காரணமாக தங்களுடைய இன்னுயிரைத் துறந்த தியாக தீபங்களாக என்றும் மனதில் உள்ளனர். இதனால்தான் பலர் விவசாயத்தை விட்டுவிட்டு விளைநிலங்களை விற்பனை நிலங்களாக்கத்  துவங்குகின்றனர்.

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி விவசாய  நிலங்களைக் கபளீகரம் செய்யவும், விவசாயத் தொழிலை திண்டாடவும் வைத்துவிட்டது. சிறு மற்றும் மத்திய தரவிவசாயிகளை அப்புறப்படுத்திவிட்டு, பெரும் குழுமமாக கார்ப்பரேட் நிறுவனம் போன்று விவசாயத்தை நடத்த முயற்சிகள் தொடர்கின்றன. வரும் காலக்கட்டத்தில் விவசாயமே கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சென்றுவிடுமோ என்ற நிலையில் செயல்பாடுகள் இருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகளும் விவசாயிகளின் இந்த அவலநிலையை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றது. வேடிக்கை என்னவென்றால் விவசாயம் நம்  நாட்டின் முக்கியத்தொழில் என்றும், இந்தியநாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றும், ஏரின்றி அமையாது உலகு என்றும் விவசாயத்தோடான நம் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகின்றோம். ஆனால், விவசாயியின் வாழ்க்கைநிலை என்ன நிலையில் உள்ளதென்று பார்த்தால் வேதனை தருகின்ற செய்திகளே கிடைக்கின்றன.

2014ம் ஆண்டில்,  உத்தமர் காந்தி பெயரிலுள்ள ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூபாய் 34,000கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கும், உள்நாட்டு உற்பத்திக்கும் முக்கிய தொழிலான விவசாயத்தொழிலுக்கு வெறும் 31கோடிகள் தான் மத்திய அரசு ஒதுக்கியது.

1950லிருந்து 1965வரை இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண்மையின் பங்கே அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 56சதவீதம் உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு இருந்தது. ஆனால் இன்றைக்கு 2011ம் ஆண்டில் வெறும் 15சதவீதத்திற்கு உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தினுடைய பங்கு தள்ளப்பட்டுவிட்டது.

இதற்கு யார் பொறுப்பு? நம்மை ஆளுகின்ற அரசுகளும், வொயிட் காலர் அதிகார வர்க்கமும் தான். வெறும் வெற்று வார்த்தைகள் விவசாயிகளின் வளர்ச்சித் திட்டங்கள் என்று சொல்லிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
விவசாயிகள் போராட்டம் நாடுதழுவி நடைபெற்றது. குறிப்பாக, தமிழகத்தில் விவசாயிகள் சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர் போன்றோர் நடத்திய போராட்டங்களும் வடபுலத்தில் திக்காயத் போன்றவர்கள் எல்லாம் விவசாயிகள் உரிமைக்குழுக்களை எழுப்பியதை மறக்கமுடியுமா?

விடுதலைப் போராட்டத்திலும் அவுரி விவசாயிகள் போராடினார்கள்,  ஏன் தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல்முதலாக நெல்லைமாவட்டத்தில் கடம்பூரில் விவசாயிகளின் உரிமைகேட்டு துப்பாக்கி ரவைக்குப் பலியான விவசாயி பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்.

தி இந்து தமிழ் நாளேட்டில், விவசாயிகளுடைய அவலநிலையை சாய்நாத்துடைய பத்திகளிலும், அவர் எழுதிய நூல்களிலும் வறட்சிப்பிடியில் விவசாயி எவ்வளவு அல்லல்படுகின்றான் என்பதைப் படிக்கப்படிக்க போர்க்க்குணம் தான் மேலோங்குகிறது.

1991ல் கோவில்பட்டியில் நடந்த ஒரு விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒரு காவல்துறை அதிகாரி பச்சைத்துண்டு போராடுறாங்க, வண்டிப் பைதாக்களைவச்சு விளையாடுறாங்கஎன்று கிண்டலாகச் சொல்லும் போது நான் பதிலுக்கு “மிஸ்டர், நீங்கள் அரசு அதிகாரியாக இருக்கலாம். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் விவசாயிகளின் பலம் பற்றி, நீங்கள் பேசும்பேச்சுக்கு விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். பேசின வார்த்தைக்கு மன்னிப்புக் கேளுங்கள் என்று அவரை ஒரு பிடிபிடித்தவுடன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இப்படித்தான் விவசாயிகளைப் பற்றி துச்சமாக பேசுவது, அரசுப்பரிபாலங்களின் வாடிக்கையாக இருக்கின்றது.

டெல்லியில் உள்ள கிரிஷி பவனில் அமர்ந்துகொண்டு விவசாயிகளின் நலனைப்பற்றி கமிட்டிகள் அமைத்துள்ளோம், அறிக்கைகளை வாங்கியுள்ளோம், ஆய்வு செய்கின்றோம் என்பதும் வாடிக்கை. மாநில தலைமைச் செயலகங்களிலும் இதே பதில் தான்.
இதே நிலைமை நீடித்தால், நாட்டில் விவசாயமும் இருக்காது; அரிசி-பருப்பு பால்  வரை அத்தனையும் இறக்குமதி செய்ய வேண்டியதுதான்.
 
வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்  ..

நாடு வளர்ச்சி பெற வேண்டுமென்றால் இந்த மணிவாசகங்கள் ஆளவந்தார்களினுடைய கவனத்தில் எப்போதும் இருக்கவேண்டும்.

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.





Friday, February 27, 2015

14வது நிதிக்குழு - தமிழகத்திற்கு பாதிப்பு.




த்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களைப் பகிர்ந்து அளிப்பது எப்படி என பரிந்துரைகள் வழங்குவதுதான் நிதிக்குழுவின் முக்கியப் பொறுப்பு. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தக்குழு ஒருவர் தலைமையில் சில உறுப்பினர்களைக்கொண்டு மத்திய அரசால் நியமிக்கப்படும். பொருளாதாரம் மற்றும் நாட்டின் பிரச்சனைகளைத் தெரிந்த நிபுணர்களை உறுப்பினர்களாக்க் கொண்டு இக்குழு நியமிக்கப்படுவதுண்டு.

கலைக்கப்பட்ட திட்டக்குழுவைப் பற்றியோ, தற்போது அமைக்கப்பட்டுள்ள  “நிதிஆயோக் பற்றியோ  அரசியல் அமைப்புச்சட்டத்தில் குறிப்பிடப் பட்டவில்லை. ஆனால் நிதிக்குழு மட்டும் அரசியலமைப்புச் சட்ட்த்தின்  அதிகார வரம்புக்குள் அடங்கியுள்ளது

14வது நிதிக்குழு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி.ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்டது, இதன் அறிக்கையை  கடந்த 24-02-2015ல் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுவிட்டது.


14வது நிதிக்குழு தன் அறிக்கையில், மத்தியஅரசு வசூலிக்கும் வரிமூலமான வருமானத்தில் 42சதவீத்த்தை மாநில அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. கடந்த 13வது நிதிக்குழு,  மத்தியஅரசின் வரிவருமானத்தை மாநிலங்களுக்கு 32சதவீதமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டுமென்று பரிந்துரைத்திருந்தது.
இதனால், மாநில அரசுகளுக்கு குறைந்தபட்சம் 2015-2016 நிதி ஆண்டில் ரூபாய் 5.26லட்சம் கோடி நிதிஒதுக்கீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2014-2015நிதி ஆண்டில் மத்திய அரசு மூலமாகக் கிடைத்த பங்கு 3.48லட்சம் கோடி ஆகும்.

மத்திய அரசின் மொத்த வரிவருமானத்தில் 30மாநிலங்களுக்கு எப்படி நிதியைப் பிரித்தளிப்பது என்றும் 14வது நிதிக்குழு அறிக்கையில் பரிந்துரைகள் உள்ளன. இந்த அறிக்கையின் மூலமாக மாநிலங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வருமானம் அதிகரிக்கும். இதை மத்தியஅரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னேறிய மாநிலம் தனிநபர் வருமானம் போன்றவையெல்லாம் கணக்கில் கொண்டு நிதி ஆதாரங்களை இந்தக்குழு பிரிக்கப் பரிந்துரைத்துள்ளது. மேலும் இவ்வறிக்கையின்படி, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடுதலாக்கப் பட்டுள்ளது. அதனடிப்படையில், மக்கள்தொகை பெருக்கம் அதிகமுள்ள மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம், உத்ராஞ்சல் போன்ற மாநிலங்களுக்கு நிதிக்குழு பரிந்துரையால் கூடுதல்நிதி கிடைக்க இருக்கின்றது.

இந்த கூடுதல்நிதி ஒதுக்கீடு பிரச்சனை 11வது நிதிக்குழுவிலிருந்தே கிளம்பி இருந்தது. அன்றைக்கு ஒன்றுபட்ட ஆந்திரமாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இதைக் கடுமையாக எதிர்த்தார். குடும்பக்கட்டுப்பாடு மூலம் மக்கள் தொகை கட்டுப்படுத்திய மாநிலங்களைப் பாராட்டி நிதிகொடுக்காமல் நிதிஒதுக்கீட்டைக் குறைப்பது எப்படி என்று 1998 காலக்கட்டங்களிலே பிரச்சனை எழுந்தது.

மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு இருந்தால் 1971ம் ஆண்டு மக்கள்தொகையை அடிப்படையாக்க் கொண்டு கணக்கிடப்படவேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இந்த நிதிக்குழு தனது பரிந்துரையில் 1971ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக்க் கொண்டால்  17.5சதவீதம் ஒதுக்கீடு செய்யலாம் என்றும், 2011 மக்கள் தொகையை அடிப்படையாக்க் கொண்டால்  10சதவீதம் தான் செய்யமுடியும் என்று பரிந்துரை செய்துள்ளது.

14வது நிதிக்குழு அறிக்கையின்படி, தமிழகத்திற்கு குறைவாகத்தான் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். வரிவருமானத்தில் 4.023சதவீதமும், சேவை வரி மூலமாக 4.104சதவீதமும் தமிழகத்துக்குக்  கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே 2லட்சம்கோடி ரூபாய் கடனில் தமிழக அரசு இருக்கின்றது. அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியத்திட்டங்கள், கல்வி வளர்ச்சி போன்ற அடிப்படைக் கூறுகளை தமிழகத்தைப் பொறுத்தவரை நிதிக்குழு சரியாக ஆய்வு செய்யவில்லை எனத் தெரிகிறது.  

நிதிக்குழு மாநிலங்களுக்கிடையே பாரபட்சமாக, பாதிக்கக்கூடிய அளவில் நிதி ஆதாரப் பரிந்துரைகளை செய்துள்ளது என்று விமர்சனமும் எழுந்துள்ளது.  சமஸ்டி அமைப்பில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல்  மாநிலங்களுடைய தேவைகள், புவியியல் அமைப்பு, மக்கள் பிரச்சனைகள் ஆகிவற்றைக் கருத்தில் கொண்டு சீராய்ந்து நிதிக்குழு தன் கடமையைச் செய்யவேண்டும். ஆனால் ஒவ்வொரு நிதிக்குழுவும் மாநிலங்களின் உண்மையான தேவைகளும், நடைமுறைப் பிரச்சனைகளையும் பற்றி அறியாமல் தங்கள் பரிந்துரைகளை அறிக்கைகளில் வழங்கிவிடுகின்றார்கள்.

கடந்த 6வது நிதிக்குழுவில் இருந்தே இதுபற்றிய விழிப்புணர்வு மாநிலங்களுக்கு ஏற்பட்டது. இராஜமன்னார் குழு  தி.மு.க ஆட்சியில் அமைத்து, மாநில சுயாட்சி என்ற கோரிக்கையை கலைஞர் அவர்கள் கேட்ட காலகட்டத்திலிருந்து, நிதிக்குழுவின் மீதும் திட்டக்குழுவின் மீதும் நியாயமான விமர்சனங்கள் எழுந்தன.

பண்டிதர் நேரு காலத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சிமட்டும்தான் இருந்தது. இதனால் நிதிக்குழுபற்றிய செயல்பாடுகள் எதுவும் வெளிப்படையாக அறியமுடியவில்லை. 1967க்குப்பின், மாநிலங்களில் காங்கிரஸ் இல்லாத ஆட்சி ஏற்பட்டதால், திட்டங்களை ஒதுக்குவதிலும், நிதி ஆதாரங்களைப் பகிர்வதிலும் மாற்றாந்தாய்ப் போக்கு டெல்லியில் உள்ளது என்ற விமர்சனம் எழுந்தது. அதற்கு அடிப்படை நிதிக்கமிசனும், திட்டக்கமிசனும் தான்.

மாநிலங்களின் தேவைகளை மதிப்பிடுவதில் நிதிக்குழுவினுடைய பங்கு மிகமுக்கியமானது. அமைப்பு ரீதியாக என்ன நிலையென்று பார்த்தால், நிதிக்குழுவை அமைக்கும் முறையிலும், அது பரிசீலனை செய்யவேண்டிய விஷயங்கள் எவை என்று நிர்ணயிப்பதிலும் மத்திய அரசு கையாளும் கொள்கை தவறானதாக அமைகிறது.

மத்திய அமைச்சரவையின் சிபாரிசின் பேரில் நிதிக்கமிசனை குடியரசுத்தலைவர் அமைக்கிறார். நிதிக்கமிஷனை நிர்ணயிப்பதிலும் அவை பரிசீலிக்கவேண்டிய பிரச்சனைகள் எவை என்று தீர்மானிப்பதிலும் மாநில அரசுகளின் பங்கு இல்லாமல் போகிறது. இதனால் மாநிலங்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் குழுவில் இடம்பெற்று விடுகிறார்கள்.

நிதிக்கமிஷன் அமைக்கும் போதே அதற்கான வரையறைகளை மத்திய அரசு ஏற்படுத்திவிடுவதன் மூலம் மாநிலங்களுக்கான நியாயமான கோரிக்கைகளைக்கூட நிதிகுழுவினால் கவனிக்கமுடியாமல் போகிறது. நிதிக்குழுவுக்கென்று நிரந்தரமான அமைப்பு எதுவும் இல்லை. இந்த காரணத்தினால் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையும் நிதிக்குழு முன்னால் இயங்கிய குழு தன்பணிகளை விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. இதனால் ஒவ்வொரு நிதிக்குழுவிற்கும் இடையிலான தொடர்ச்சிகளுக்கு சில சிக்கல்களும் ஏற்படுகின்றன.

அரசியல்சட்டத்தில் 252வது பிரிவு கடன்களைப்பற்றியும் , 293வது பிரிவு நிதிபங்கீடு பற்றியும், 270, 272, 275வது பிரிவுகள்  நிதிக்குழுவின் சிபாரிசுப்படி நிதிப்பங்கீடு செய்யப்படுவதையும் குறிப்பிடுகின்றன. ஆனால், நிதிக்குழுவின் சிபாரிசுகள் முழுவதையுமோ அல்லது சிலவற்றையோ நிராகரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கும் உண்டு. ஆகவே மத்திய அரசில் பொறுப்பில் உள்ள கட்சி எதுவோ அக்கட்சி தங்களது அரசியல் கொள்கைகளுக்கேற்ப நிதிக்கமிஷனின் பணிகளையும், உறுப்பினர்களையும் நியமித்து விட்டு கமிசனின் பரிந்துரைகளை ஏற்கவோ மறுக்கவோ செய்லாம்.

ஆகவே, முதலில் நிதிக்குழுவுக்கென்ற தனி அலுவலகம் இயங்கவேண்டும். நிதிக்குழு என்பது சுயாதிக்க அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். அப்படி செயல்பட்டால்தான் அதனுடைய முடிவுகள் நியாயமானதாக இருக்கமுடியும். ஒருசமயம் மத்திய – மாநில உறவுகளைப் பற்றி ஆராய்வதற்கு துணைக்கமிட்டி அமைப்பது தொடர்பாக தேசிய வளர்ச்சிக்குழு முடிவு செய்தது. ஆனால் அப்போது தலைமையமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிதிக்குழு தருகின்ற பரிந்துரைகள்தான் சிலசமயம் விதிகளாகி விடுகின்றன. நாட்டின் வளர்ச்சியை சீராக்க் கொண்டுசெல்வது நிதிக்குழுவின் பரிந்துரைகளும் மத்திய அரசின் அணுகுமுறையும் தான். இந்த நிதிக்குழுவில் உள்ளவர்கள் எதோ பொறுப்புக் கொடுத்துள்ளார்கள் என்ற நிலையில் இல்லாமல் தங்கள் பணியை இதயசுத்தியோடு பாரபட்சமில்லாமல் துலாக்கோல் நிலையிலிருந்து ஆற்றிடவேண்டும். .
நாட்டின் வளர்ச்சியில் நிதிக்குழுவின் பங்கு வெறும் எழுத்துக்களால் மட்டுமில்லாமல் அது செயலிலும் இருக்கவேண்டும்.


-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.


இரயில்வே நிதிஅறிக்கையில் (2015-16) புறக்கணிக்கப்பட்ட தமிழக திட்டங்கள்.



இரயில்வே நிதிஅறிக்கையில் (2015-16) புறக்கணிக்கப்பட்ட தமிழக திட்டங்கள்.

1. சென்னை –திருப்பெரும்புதூர் (வழி-பூந்தமல்லி).
2. ஆவடி- திருப்பெரும்புதூர்.
3. இராமேஸ்வரம் – தனுஷ்கோடி.
4. தஞ்சாவூர் –அரியலூர் – சென்னை எழும்பூர்.
5. திண்டிவனம் – கடலூர் (வழி – புதுச்சேரி).
6. மயிலாடுதுறை –திருக்கடையூர் – திருநள்ளாறு- காரைக்கால்.
7. ஜோலார்பேட்டை –ஓசூர் (வழி- கிருஷ்ணகிரி).
8. சத்தியமங்கலம் –மேட்டூர்.
9. ஈரோடு – சத்தியமங்கலம்.
10. சத்தியமங்கலம் – பெங்களூரு.
11. மொரப்பூர் – தருமபுரி ( வழி – மூக்கனூர்).
12. மதுரை – காரைக்குடி(வழி-திருப்பத்தூர்).
13. வில்லிவாக்கம் – காட்பாடி.
14. திருவண்ணாமலை – ஜோலார்பேட்டை.
15. மதுரை – கோட்டயம்.
16. அரக்கோணம் – திண்டிவனம் (வழி – வாலாஜாபேட்டை).
17. சிதம்பரம் – ஆத்தூர் (வழி- அரியலூர்).
18. திண்டுக்கல் –கூடலூர்.
19. திண்டுக்கல் – குமுளி.
20. காட்பாடி – சென்னை (வழி-பூந்தமல்லி).
21. கும்பகோணம் – நாமக்கல்.
22. மானாமதுரை – தூத்துக்குடி.
23. நீடாமங்கலம் – பட்டுக்கோட்டை (வழி-மன்னார்குடி).
24. தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை.

நிலுவையிலிருக்கும் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காமல் கைவிரிக்கப்பட்டவை.
1. சென்னை- கடலூர்.
2. பழநி - ஈரோடு.
3. திண்டிவனம் – செஞ்சி- திருவண்ணாமலை.
4. திண்டிவனம்- வாலாஜா – நகரி
                             (திண்டிவனம் வாலாஜா வரை கைவிடப்படுகிறது)
5. திருப்பெரும்புதூர் – கூடுவாஞ்சேரி அகலப்பாதை பணி.
6. மதுரை – போடி.
7. திண்டுக்கல் – கோவை

இருவழிப்பாதை பணிகளுக்கும் நிதி ஒதுக்காமல் கைவிடப்பட்டவை.

1. திருச்சி – தஞ்சாவூர்.
2. இருகூர் – போத்தனூர்.

     சென்னை – கன்னியாகுமரி இருவழிப்பாதை திட்டம் , இராயபுரம் மற்றும் தாம்பரம் தொடர்வண்டி முனையம், நீண்டகால கோரிக்கையான ஈரோடு தாராபுரம் வழியாக பழநி இரயில்வே திட்டம் , செங்கோட்டை - கொல்லைம் இரயில்பாதை அகலப்பாதையாக மாற்றியமைக்கும் திட்டம்  என தமிழகம் எதிர்பார்த்த பல திட்டங்களும் கைவிடப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, குமரி மாவட்டத்தின் பகுதிகளை திருவனந்தபுரம் கோட்டத்திலிருந்து மதுரை கோட்டப் பகுதிகளுக்கு மாற்றியமைத்திருக்கவேண்டும். அல்லது திருநெல்வேலியை தனிக் கோட்டமாக அறிவித்திருக்கலாம்.

பா.ஜ.க அரசு இரயில்வே திட்ட வளர்ச்சியில் தமிழகத்தை புறக்கணித்துவிட்டது.

-KSR

Thursday, February 26, 2015

இரயில்வே நிதி அறிக்கையில் தமிழகத்தை வஞ்சித்துவிட்டது மத்திய அரசு.





2015-16ம் ஆண்டிற்கான இரயில்வே இரயில்வே நிதி அறிக்கை தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. பெருந்திட்டங்களும், புதிய அறிவிப்புகளும் தமிழகத்துக்கு  இந்த இரயில்வே நிதி அறிக்கையில் இல்லை.

செங்கோட்டை-கொல்லம், மதுரை-போடிநாயக்கனூர், பழநி மார்க்கம் போன்ற பல நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கும் கூட போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை.

சென்னைப் பெருநகர் சர்க்குலார் ரயில் திட்ட்த்துக்கான அறிவுப்புகளும் , நிதி ஒதுக்கீடுகளும் இல்லை. மொத்த்த்தில் சுரேஷ் பிரபுவின் இரயில்வே நிதி அறிக்கை தமிழகம் இந்தியாவில் தான் இருக்கின்றதா என்று சிந்திக்க வைத்துவிட்டது.

மாற்றாந்தாய் மனப்போக்கில் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகின்றது என்பதற்கு இதுவே உதாரணம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் - ஒபாமா உறுதி.

India's Membership in U.N security council






கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர  உறுப்பினராக வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது. இதற்கு சில நாடுகளும் ஆதரவும் தெரிவித்தன.

தற்போது, பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் , சீனா  ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக இருக்கின்றன.
 இந்த அவையை விரிவுபடுத்தி இந்தியாவும் நிரந்தர உறுப்பினர் ஆகுமென்று அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டு காங்கிரஸில் பேசும் பொழுது  உறுதிபட அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்பே தினமணியில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில்  இரண்டு பத்திகள்.  கீழே :



 1. http://goo.gl/6MDcGE
     01.01.2005

2.  http://goo.gl/RIqmnV
    20.02.2007



அப்பாவி விவசாயிகளை சவக்குழிக்குத் தள்ளும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம். (1)




Agriculture Lands Acquisition ...

அப்பாவி விவசாயிகளை சவக்குழிக்குத் தள்ளும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம்.
_________________________________________________________________

விவசாயிகளை எந்த அரசாங்கம் வந்தாலும் வஞ்சித்து காவு வாங்குகிறது. தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள்  எண்ணிக்கை லட்சக்கணக்கிற்கும் மேலாகிவிட்டது. எவ்வளவோ விவசாயப் போராட்டங்கள். ஆனாலும் அவர்கள் வாழ்வில் விடியல் மட்டும் ஏற்படவில்லை.

 சிவசேனை, அகாலிதளம், லோக் ஜன சக்தி, போன்ற தோழமை கட்சிகள் எதிர்த்தும் வம்படியாக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவருவதே குறியாக இருக்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு.  அவசரச் சட்டமாக பிறப்பித்தபோது இதனை ” கருப்பு அவசரச்சட்டம்” என்று அனைவரும் கண்டித்தார்கள்.

மோடி அரசு, கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதி சில திருத்தங்களோடு இந்த அவசர சட்டத்தைப் பிறப்பித்து, உடனடியாக அது நடைமுறைக்கு வருகின்றது என அவசரமும் காட்டியது. பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு இருந்தும் நாடாளுமன்றத்தில் விவாதித்து இதனை சட்டமாக்குவதை விட்டுவிட்டு, இத்தனை அவசரப்பட்டதில் பல சந்தேகங்கள் எழுகின்றன.   நாடுமுழுவதும் இச்சட்டத் திருத்தத்திற்கு  எதிர்ப்பு கடுமையாக கிளம்பியுள்ளது.

நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தில், நில உரிமையாளரிடம் நிலத்தைக் கையகப்படுத்தும் போது, சில தேவைகளுக்காக அவர்களின் அனுமதி நாட வேண்டியதில்லை என ஏற்கனவே சட்டப்பிரிவு 10 (ஏ) சொல்கிறது.

மேலும், தேசியப்பாதுகாப்பு, இராணுவத்தேவை, மின்சார திட்டங்கள், இரயில் வழித்தடங்கள், சாலைகள், தொழில் பூங்காக்கள், வறியவர்களுக்கு வீடுகள் கட்டுதல்  போன்ற அடிப்படையான தேவைகளுக்கு, நில உரிமையாளர்களிடம் அனுமதி இல்லாமல் நிலங்களை ஆர்ஜிதப்படுத்தலாம்.

ஆனாலும், நிலத்தை எடுத்துக்கொள்ளும் பொழுது, விவசாயத்திற்கு ஏற்ற வளமான நிலம்தானா என்று கவனிக்கவேண்டியது அவசியம் என்று ஏற்கனவே இருந்த சட்டத்தில் பிரிவுகள் இருந்தன. இப்போது உள்ள வரைவுச் சட்டத்தில் செழிப்பான விவசாய நிலமாக இருந்தால் கூட அதனை கவனிக்க அவசியமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கைகளுக்கு  எந்த  அனுமதியும் தேவையில்லை.

அதுமட்டுமல்லாமல், கீழ்குறிப்பிட்ட சட்டங்களும்  நிலம் கையகப் படுத்தும் சட்டத் திருத்தங்களோடு இணைத்து நடைமுறைக்கு வருகின்றது.

1) நிலக்கரி வளமுள்ள பகுதிகளில் நிலம் கையக்கப்படுத்துதல் மற்றும்       வளர்ச்சித் திட்டங்களுக்கான சட்டம்.
                    *இச்சட்டம் மீத்தேன்/நியூட்ரினோ திட்டத்திற்கும் இது    பொருந்தும்.

2) தேசிய நெடுஞ்சாலை திட்டம் -1956.

3) சுரங்கங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்துதல்.

4) அணுசக்தி திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டம் -1962.

5) பெருநகர் ரயில்வே கட்டுமானப் பணிச் சட்டம் -1978.

6) இந்திய டிராம்ஃபே சட்டம் -1886.

7) இரயில் வழிப்பாதை சட்டம் -1989.

8) தொல்பொருள் மற்றும் பழங்கால நினைவகங்கள் ஆய்வுச்சட்டம் -1958.

9) பெட்ரோலிய கனிம வள குழாய் பதிப்புச் சட்டம் -1962.

10) மின்சாரச் சட்டம் -2003.

11) அசையா  சொத்து கேட்பு மற்றும் ஆர்ஜிதப்படுத்தல் சட்டம் -1952.

12) மறு குடியேற்றங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம்.

13) தாமோதர் பள்ளத்தாக்கு ஆணையச் சட்டம் -1948.

*

ஏற்கனவே, குஜராத், மகராஷ்ட்ரா, மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றுப்படுகையில் பெரிய அணைகள் கட்டப்படும் என்று விவசாயிகளைத் துரத்தப்பட்டதை கண்டித்து மேதா பட்கர் தலைமையில் கடுமையாக போராடினார்கள்.

மேலும் இந்த நில ஆக்கிரமிப்புகளால் மக்கள் கொதித்தெழுந்து
மேற்கு வங்க நந்திகிராமத்திலும், தூத்துக்குடி மாவட்டத்தில் டாடா டைட்டானியம் மணல் ஆலையும் துரத்தப்பட்டதெல்லாம் நாம் அறிந்ததே...

தமிழகத்தில் மீத்தேன்; கெயில் குழாய் பதிப்பு; நியூட்ரினா என மத்திய அரசின் திட்டங்கள் பிசாசுகளைப் போல விவசாயிகளைத் தொடர்ந்து துரத்துகின்றன.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வனாந்திரங்களில் வாழும் பூர்வகுடிகளுக்கு எதிராக வனச்சட்டங்களையும் கொண்டுவர முயற்சித்தனர். வியாபாரிகளுக்கும், கார்பரேட் முதலாளிகள், கனிம வளங்களைச் சுரண்டுபவர்களுக்கும் தான் மத்திய அரசுகள் கட்சி பேதமில்லாமல் விசுவாசமாக நடந்துகொள்கிறது. பொதுநலன் என்று சொல்லிக்கொண்டு கொழுத்த பணக்காரர்களுக்கு இச்சட்டங்கள் சாதகமாக அமைகின்றன.

ஆளவந்தார்கள் தேர்தல் நேரத்தில், தாங்கள் தேர்தல் நிதியாகப் பெற்ற பெருந்தொகைகளுக்கு இம்மாதிரி சட்டங்கள் மூலம் தங்கள் செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்கின்றார்கள். ஏற்கனவே என்னுடைய பழைய பதிவில் குறிப்பிட்டவாறு, நேரு  காலத்திலிருந்தே டெல்லி சிவப்புநாடாக்கள்  விவசாயிகள் என்பவர்கள் தீண்டப்படாதவர்கள் என்ற மோசமான மனநிலையினை உருவாக்கிவிட்டார்கள்.

நேருவின் ஐந்தாண்டுத் திட்டங்களில் தொழில் துறைக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டது. விவசாயத்திற்கு அனுகூலமாக எந்த திட்டங்களும் இல்லை. தில்லி யோஜனா பவனில் செயல்பட்ட திட்டக் குழுவும், இப்போது பிரதமர் மோடியால் மாற்றியமைக்கப்பட்ட நிதி ஆயோக் (NITI Aayog) -ம் விவசாயிகள் மீது அக்கறையற்ற தன்மையில் தான் இருக்கிறது.  டெல்லி அதிகார மையங்கள் அப்பாவி விவசாயிகளின் வயிற்றில் அடித்து, அவர்கள் நொந்து சாகடிக்கப்படவேண்டுமென்ற திட்டங்கள் தீட்டுகின்றார்களா?

ஆட்சியாளர்களே! பிரான்ஸில்  வயிற்று பசிக்கு ரொட்டி கேட்ட விவசாயிகளிடம்  “கேக் சாப்பிடுங்கள்” என்று திமிர் பிடித்த ராணி மேரி ஆண்டாய்னட் மமதையில் சொன்னதால் தான்
பிரெஞ்சு புரட்சி தோன்றியது.

உழவன் உழுதால் தான் உலகம் உயரும். அவன்  பாடுபடும்  நிலங்களைப் பிடிங்கிக்கொண்டு, அவனை வஞ்சித்தால் அவன் போர்குணத்தோடு  எழுவான்.  அந்த எழுச்சி உங்கள் ஆணவங்களை அளித்தொழிக்கும். இதனை கவனத்தில் கொண்டு விவசாயிகளை அணுகுங்கள்.

*
 "விளை நிலங்கள் எல்லாம் விடியல் தருமென
காலம் காலமாய் காத்து...
காகிதமாய் வந்த கரன்சி
விலை நிலமாய் பிடுங்கி கொள்ள...

அதிகாலை கதிரவன் கரம் படும் முன் எழுந்து,
மீதி நிலமாவது காப்பாற்றும் என்று உழுதிட்ட உழவும்,
முன்பு பெய்த சிறு மழையை,
வற்றியமண்ணே முகர்ந்துகொள்ள....

நிலத்தடிநீரை நினைவில் வைத்து இறைத்தால்
வண்ணம் ஆக்கப்பட்ட சாயா ரசயான கழிவும்
சாக்கடையாய் ஓன்று சேர்ந்து கொல்கிறது
பொன்னான மண்ணையும், மனிதனையும்....

வாய்தா வாங்கி வாடி போனது போட்ட விதை
எப்படியாயினும் கலங்காமல் உழைத்த,கலப்பை
தன்னை சொல்லி கொண்டு காட்சி பொருளாய் இன்று...
தானியங்கள் அள்ளிய முறம் கூட முற்றத்தில்
மரணித்து விடும் நிலையில் இருக்கும், மாடுகள்
சந்தையிலிருந்து காசப்புகடைக்கு,கண்ணீருடன்...

"தனியொருவனுக்கு உணவு இல்லையென்றால்.....என்றான் பாரதி உணவளிக்கும் உழவே வழியின்றி உணவின்றி
சிறிது சிறிதாக இறப்பை நோக்கி,
இனியும் மாறும் என்று...

இவ்வுலகில்,மரங்கள் வைத்து மழை வரவழைத்து,
இனியும்,பூமிக்கு தீங்கு எதுவும் செய்யமால்,
செயலில் வாழ்வாதாரத்தை பெருக்கினால் ஒழிய,
தொன்று தொட்டே சொல்லப்பட்டுவந்த,
"எதிலும் முதன்மையானது உழவு"
இந்த வரிகள் நிஜமாகுமா ? ” -கவிஞர் நந்த கோபால்.

பின் குறிப்பு : விவசாயிகள்  தற்கொலைகள் குறித்து தேசிய
மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான தரவுகள் திரட்டப்பட்டு , மனுவும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.


Wednesday, February 25, 2015

Mamata pledges “positive role” for Teesta and Indo-Bangla Border issues.



West Bengal chief minister Mamata Banerjee assures Bangladesh’s Prime minister Sheikh Hasina of playing a positive role so that Dhaka and New Delhi could sign a deal for sharing the water of river Teesta and also border issues at the earliest.


மேற்கு வங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி பங்களாதேஷ் சென்று, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினாவைச் சந்திந்து, நதிநீர்ப் பிரச்சனைகள், எல்லைப் பிரச்சனைகள் ஆகியவற்றிற்குத் தீர்வுகாண வேண்டுமென்று ஒரு மாநில முதல்வர் என்ற நிலையில் பேசியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

பன்மையில் ஒருமை என்ற நிலையில் இந்தியாவின் சமஸ்டி அமைப்புக்கு, பலம் சேர்க்கும் இந்த நடவடிக்கையை நாம் பாராட்டவேண்டும். இந்தப்பிரச்சனைகளில் இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இணக்கமான நிலை ஏற்பட்டு சுமூக முடிவுகள் எடுக்கப்பட இந்திய அரசும் முயல வேண்டும். ஏற்கனவே நதிநீர்ப் பிரச்சனைகளில் ஐ.நா மன்றம் தலையிட்டு இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் கங்கைநதிப் பிரச்சனையில் தீர்வு காணப்பட்ட்து.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ள ஆரோக்கியமான ஜனநாயகம் இந்தியாவில் எப்போதும் பீடுநடை போடுகின்றது. அதற்கு மேலும் வலுசேர்க்க மாநில முதல்வர்கள், தங்கள் மாநிலங்களுக்கு  அண்டைநாடுகளோடு பிரச்சனைகள் இருந்தால் பேசித்தீர்ப்பதென்பது நல்ல முயற்சிதான்.

தமிழகத்திற்கும் இலங்கையோடு மீனவர் பிரச்சனை, ஈழத்தமிழர் மற்றும்  அகதிகள் பிரச்சனைகள் உள்ளன. மத்திய அரசின் முன்னிலையோடு இதையெல்லாம் மாநில அரசும் கவனிக்கலாம்.

கேரள முதல்வர் வளைகுடா நாட்டில் பணிசெய்யும் மலையாளிகள் நலன்காக்க வளைகுடா நாடுகளுக்குச் சென்று அங்குள்ள அரசுகளுடன் கடந்த காலத்தில் அவர்களுடைய பிரச்சனைகள் குறித்துப் பேசியதுண்டு.

சமஸ்டி அமைப்பில் இது ஒரு நல்ல துவக்கம். 

மீளுமா ஐரோப்பிய யூனியன்? பண்டைய கிரேக்கத்திற்கா இந்தநிலை....?







கிராமப்புறங்களில் வாழ்ந்து கெட்ட வீடு என்று, பெரிய இடிபாடுகள் கொண்ட வீட்டைக் காட்டிச் சொல்வதுண்டு. ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டன், போர்த்துக்கீசு, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகள் தன்னகத்தே பல காலனி நாடுகளைக் கொண்டு உலகவரலாற்றில் தன் சர்வவல்லமை காட்டியது.

ஜனநாயகமும், ஆட்சிமுறையும் கிரேக் ஏதேன்சில் நகர அரசுகளாகப் பிறந்து ரோமில் வளர்ந்து  இங்கிலாந்தில் கோலோச்சிய அரசியல் கோட்பாடுகள் உலகத்துக்கு வழிகாட்டின. ஜனநாயகம், குடியரசு, தேர்தல், சட்டத்தின் ஆட்சி என்ற தத்துவங்கள் அங்கு தழைத்தோங்கின.
இன்று ஐரோப்பிய யூனியன் பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டு குழப்பத்தில் நடைபோடுகின்றது. 

கிரேக்கம், ரோம் நாகரீகங்கள் இன்றைக்கும் உலக வரலாற்றில் கீர்த்தி பெற்றவையாக உள்ளன. இத்தகு பழமைவாய்ந்த கிரீஸ் இன்றைக்கு கடன்சுமையால் தத்தளிக்கின்றது. கடன்கொடுத்த ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஐ.எம்.எஃப் போன்றவை கடுமையான நிபந்தனைகளை கிரீசுக்கு விதித்தது.

அந்த நிபந்தனைகளால், கிரீஸ் அரசு ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. பணியிலிருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியமும் குறைக்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்குவதும் நிறுத்தப்பட்டன. வருமானவரி கடுமையாக கூடுதலாக்கப்பட்டது. மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும், மானியங்களும் நிறுத்தப்பட்டன.

கிரீஸ் நாட்டில் உள்ள  “சிரிசா என்ற கம்யூனிஸ்ட் இயக்கம் அரசின் மீதான மக்களுக்கு இருக்கும் வெறுப்பைப் பயன்படுத்திக்கொண்டு போராட்டங்களை அங்கு நடத்தின. ஐரோப்பிய யூனியனும், ஐ.எம்.எஃப்-ம் கிரீஸ் மீது விதித்த பொருளாதாரக் கட்டுப்பாடு நிபந்தனைகளைத் தளர்த்த சிரிசா போராடியது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிக்கன நடவடிக்கைகளைக் கைவிடுவோம் என்றும், வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்குத் திரும்ப வேலை கொடுப்போம் என்றும் வாக்குறுதிப் பிரச்சாரங்கள் செய்ய, கிரீசில் சிரிசா ஆட்சிக்கு வந்தது.  


ஆட்சிக்கு வந்தவுடன் சிரிசா இடதுசாரி அரசு, ஐரோப்பிய யூனியன், மற்றும்  ஐ.எம்.எஃப் கட்டுப்பாடுகளை தளர்த்தி, திரும்பவும் நிதி உதவி தங்கள் நாட்டுக்கு அளிக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்தது. சிரிசா ஆட்சியாளர்கள், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிதிஅமைச்சர்களின் முன்னிலையில், ஐரோப்பிய யூனியன் நிதிஅமைப்புகளோடு பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனாலும் இச்சிக்கல்களில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், இன்றைய கிரீஸ் அரசு ஐரோப்பா யூனியன் தங்களுக்கு உதவவில்லை என்றால், ரஷ்யாவையும், சீனாவையும் தங்களுக்கு உதவ வேண்டி நாடுவோம் என்று சொல்லியிருக்கின்றது. கிரீசில் உள்ள இடதுசாரி அரசு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேரவும் தயார் என்று தெரிவித்துள்ளது. கிரீசுக்கு ஜெர்மனியும் நெதர்லாந்தும் தான் அதிகப்படியான உதவிகளை இதுவரைக்கும் செய்துள்ளது.

ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி மிகுந்த நிலையில், அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகள் பாதிக்கப்படும் என்ற கருத்துகள் நிலவுகின்றன. ஸ்பெயின் நாட்டிலும், இடதுசாரி சக்திகள் ஒருமுகமாகத் திரண்டு, மக்களின் ஆதரவைப் பெற்று வருகின்றது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பொருளாதாரச் சிக்கலினால் பொதுவுடமைக் கட்சிகள் தங்கள் ஆளுமையை நிலைநாட்டிக் கொள்வார்களோ என்று தற்போதைய ஐரோப்பிய யூனியன் அரசுகள் அச்சப்படுகின்றன.

உலகத்தையே ஆட்டிப்படைத்த இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல் போன்ற பலநாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய கண்டத்தின் ஆளுமை ஆட்டம் காண்கின்றது. ஒருபக்கம் பொருளாதார நெருக்கடிகள் மறுபக்கம் பொதுவுடமைக் கட்சிகளின் வளர்ச்சி என பல பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளது ஐரோப்பியநாடுகள்.

ஜனநாயகத்தின் தொட்டில்கள் என வர்ணிக்கப்பட்ட கிரேக்கம், இத்தாலி; நாடாளுமன்றத்தின் தாய் எனச் சொல்லப்படுகின்ற இங்கிலாந்து; தொழிற்புரட்சி, ரஷ்யப்புரட்சி, மறுமலர்ச்சிப் போராட்டங்கள் (Renaissance) , மதச்சீரமைப்பு (Reformation) எனப் பலகளங்கள் கண்டு அகிலத்திற்கு அரசியல் கொள்கைகளையும், நெறிமுறைகளையும் பரப்பிய ஐரோப்பாவுக்கா இப்படி ஒரு சீர்குலைவு?

வரலாற்று மாணவர்களுக்குத் தெரியும், ஒரு நாட்டையோ, ஆளுமையையோ அறிய முற்படும்பொழுது சம்பந்தப்பட்டவர்களின் ஏற்ற இறக்கம் (Rise and Fall ) என்றுதான் கற்பதுண்டு.

இந்த ஏற்ற இறக்கங்கள் அரசியல் மாற்றங்களினாலோ, போரினாலோ, உள்நாட்டு கலவரங்களினாலோ, தேசிய இனப்பிரச்சனைகளாலோ, பொருளாதாரச் சரிவுகளினாலோ ஏற்படும். அரசியல் தத்துவத்தில் நிகழ்வதும் இதுவே. இன்றைக்கு  ஐரோப்பிய யூனியன் சிக்கல்களிலிருந்து தப்புமா என்பதுதான் உலகநாடுகளின் பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராக நியமிப்பு



நேற்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள்,  இனமான பேராசிரியர் அவர்கள், தளபதி.மு.கஸ்டாலின் அவர்கள்  கலந்தாலோசித்து   “தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராக” அடியேனை நியமித்திருக்கிறார்கள்.  இந்த நேரத்தில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை அவர்களுக்கு மிக்க அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவரங்கத்திற்கு இடைத்தேர்தல் பணிகளுக்காகச் சென்றுவிட்டு இன்று மாலை (06-02-2015) சென்னை திரும்பியதால் தாமதமாகவே இந்தப் பதிவை எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டிலே முதல்முதலாக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளராக 1994ல் நியமிக்கப்பட்டேன். தி.மு.கவின் முதல் செய்தித் தொடர்பாளர் என்ற பெருமையை மாட்சிமைக்குரிய தலைவர். கலைஞர் அவர்கள் 2002ல் எனக்கு வழங்கினார்.

தெற்குச் சீமையில் வானம் பார்த்த கரிசல் பூமியில் உள்ள கந்தகமண்ணான ஒரு குக்கிராமத்தில் பிறந்து, 1972தொடங்கி  ஏறத்தாழ 43 ஆண்டுகாலம்  மாணவர் பருவத்திலிருந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டுவர வாய்ப்புக் கிடைத்தது.  பெருந்தலைவர் காமராஜர், பழ.நெடுமாறன், கவிஞர்.கண்ணதாசன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடு,
ஈழதேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அ.அமிர்தலிங்கம் மற்றும் இந்திய அளவில் தேவராஜ் அர்ஸ்,  செல்வி.தாரஹேஸ்வரி சின்ஹா, கே.பி.உன்னிகிருஷ்ணன், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோரோடு நெருக்கத்தையும் பாசத்தையும் பெற்றேன். இதில் சில தலைவர்கள் என்னுடன்  தமிழகம் மற்றும் சென்னை மாநகரில் வாடகைக் காரில் கூட வலம் வந்ததுண்டு. என்னுடைய வசிப்பிடத்தில் தங்கியதும் உண்டு.

வை.கோ அவர்கள்  தி.மு.கவில் இருந்தபொழுது அவருடைய முயற்சியால் தலைவர்.கலைஞர் அவர்களுடைய வாழ்த்துகளோடு 30ஆண்டுகளுக்கு முன் கழகத்தில் இணைந்தேன்.  என்னுடைய மணவிழாவை தலைவர்.கலைஞர் நடத்தி வைக்க பழ.நெடுமாறன் தலைமை ஏற்க, வை.கோ வரவேற்புரையாற்ற அனைத்து தமிழ்நாட்டு தலைவர்களும் மற்றும் தமிழீழத் தலைவர்களும் பங்கேற்றது பெரும் பேறாக நினைக்கிறேன். அவை இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது.

வழக்கறிஞர் தொழிலில் சகாக்களும், ஜூனியர்களுமாக இன்றைக்கு பத்துபேர் வரை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி / நீதிபதிகள் என்ற நிலையில் உள்ளனர். மகிழ்ச்சியாக உள்ளது.  ஒருகாலத்தில் அடியேனின் ஆதரவையும், வழிகட்டுதலையும் பெற்றவர்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற பொறுப்புக்கு வந்தனர் என்பதும் மனதிற்கு நிறைவைத்தரும் நிகழ்வுகளாகும்.

1989 மற்றும் 1996 கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இரண்டுமுறை மட்டுமே தேர்தல் களத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. மிகக்குறைவான வாக்கு வித்யாசத்திலே வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது.

ஐ.நா மன்றத்தில் 1994ல் பொறுப்பு கிடைத்தபோதும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பதவி இருந்தால்தான் மதிப்பு என்பது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருபோதும் இருந்ததில்லை. எந்த நிலையிலும் நண்பர்களும், தோழர்களும் என்மீது காட்டிய பாசம் மறக்கமுடியாது.

என்னுடைய அரசியல் வாழ்வில் ஆரம்பகட்டத்தில் என்னைத்
தட்டிக் கொடுத்து வேலைவாங்கிய பழ.நெடுமாறனையும், வை.கோவையும் இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். மனவேறுபாடுகளை காலங்கள் மாற்றும்.
நீர்குமிழி ஒருநிமிடம், வானவில்லோ சில நிமிடம்,  பூக்களும் பூச்சிகளும் சில நாட்கள். மானிடமோ ஆண்டுகள். இதில் டார்வின் கொள்கைப்படி, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராட்டங்கள், முயற்சிகள் என ஒவ்வொன்றையும் கடந்துசெல்லவேண்டிதான் உள்ளது. இந்தப் புரிதல் இருந்தால் மனதில் எவ்வித ரணங்களும் எழாது. இத்தனை ஆண்டுகளில் பெற்ற அனுபவம் தான் கோபங்களையும் தாபங்களையும் மாற்றி என்னை பண்படவைத்தது.

 “போர் களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை”
என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

மேலும், என்னிடம் நேசம்காட்டும் அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிக்கையாளர்களும், ஊடகவியலாளர்களும், வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும், நண்பர்களும்  “எப்போதும் உங்களுக்கொரு வாய்ப்பு வரவில்லையே” என்று என்மீதுள்ள பாசத்தின் காரணமாக ஆதங்கப்படுவதுண்டு. தகுதியே தடையென்றும் ஒருசிலர் சொல்வதுமுண்டு. நானும் அவர்களிடமெல்லாம் பார்ப்போம் என்று சொல்லி  பேச்சைத் திசைதிருப்பிக் கொண்டதும் உண்டு.  பொறுப்புகளில் இல்லையென்றாலும் செயல்படமுடியும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடாகும்.

இன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் “கழகத்தின் செய்தித் தொடர்பாளராக” பொறுப்பை வழங்கியுள்ளது மேலும் உற்சாகத்தோடு செயல்பட  வாய்ப்பமைத்துக் கொடுத்திருக்கின்றது. தலைவர் கலைஞர் அவர்களின் மறுபதிப்பாக தளபதி அவர்களின் பீடுநடை இன்றைக்கு கழகத்தை முன்னெடுத்துச் செல்கின்றது.

இதிகாசத்தில் வரும் அணிலொன்று லங்கேஷ்வரம் பாலம் அமைக்க ஒருபுறம் மண்ணில் புரண்டு மறுபுறம் அந்த மண்ணை உதிர்த்துக் கொட்டி எல்லோர்க்கும் நடுவே உதவியாக இருந்தது. தன்னால் ஆனச் சிறுமுயற்சியையும் உழைப்பையும் அந்த இடத்தில் வெளிப்படுத்திய அணில் போல  இந்த வேள்விப் பணியில் அடியேன்  கழகத்திற்கு உழைக்க வாய்ப்பளித்த மாட்மைக்குரிய தலைவர் கலைஞர் அவர்களுக்கும், இனமான பேராசிரியர் அவர்களுக்கும், தளபதி.மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் என்னுடைய  நன்றிகலந்த வணக்கங்கள்.

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

Tuesday, February 24, 2015

புவி அரசியலில் இந்து மகாக்கடலும் இலங்கை திரிகோணமலையும்.




ம்பது ஆண்டுகளுக்கு முன் சீனா, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்கரை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்று தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தது.
அன்றைய இலங்கையின் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தப்போக்கு நல்லதல்ல என்று இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தன. இந்த எச்சரிக்கைகளின் பயத்தை உணர்ந்த பண்டாரநாயக்கா
சீனாவுக்கு திரிகோணமலையினை கையளிக்கப்போவதில்லை என்ற உறுதிமொழியினைத் சரியாக இன்றோடு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 24-02-1965 அன்று,தெளிவாக மக்கள் மத்தியில் வெளியிட்டார்.

அதுவரை இந்தியாவை பயமுறுத்த திரிகோணமலை கடற்கரை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கலாம் என நினைத்த சிறிமாவோ தன் முடிவை மாற்றிக்கொண்டார்.

இந்த திரிகோணமலைத் துறைமுகம் இயற்கைத்துறைமுகம் ஆகும். பாறைகள் சுற்றியிருக்க அருகருகே நிற்கும் கப்பல்கள் கூட கண்ணுக்குப் புலப்படாது. துறைமுகத்தின் செயல்பாடுகள் கருவிகள் மூலம் தான் கண்காணிக்கமுடியும். இத்தகைய பாதுகாப்புத் தன்மையாலும், திரிகோணமலைத் துறைமுகம் இந்தியாவுக்கு அருகிலே அமைந்திருப்பதாலும் ஆதிக்கசக்தி படைத்த நாடுகளுக்கு இந்த துறைமுகத்தின் மீது எப்போதும் ஒரு கண்ணுண்டு.

புவி அரசியலில் அமெரிக்காவின் கழுகுப்பார்வையும் ; சீனாவின் ட்ராகன் நெழிவதும் திரிகோணமலையினை நோக்கி என்று.வேடிக்கையாகச் சொல்வார்கள்

அதற்கேற்றார்போலவே, இடைப்பட்ட ஐம்பது ஆண்டுகளில், 1970 - 80காலகட்டத்தில் அமெரிக்காவுக்குச் சாதகமாக சிறிமாவோ பண்டாரநாயகா, “வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா”, “அமெரிக்க எண்ணெய்” நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளுக்காக திரிகோணமலை துறைமுகத்தை வழங்க முன்வந்தார்.

இதற்கு சற்றுகாலம் முன்பு, இந்திய பெருங்கடலில் டியூகோகர்சியா இராணுவ தளத்தை இலங்கையின் உதவியோடு அமெரிக்கா அமைத்தபோது, இந்திராகாந்தியின் எச்சரிக்கையின் விளைவாக அமெரிக்கா அங்கிருந்து தனது தளத்தை மாற்றிக்கொண்டது. வங்கதேசம் உதயமாகி இந்திராகாந்தியின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த நேரம் அப்போது. சோவியத் யூனியனுடன் இந்தியாவுக்கு நட்புறவும் இருந்தது.



இதேபோன்ற பதட்டநிலை எப்போதும் இந்தியப் பெருங்கடலில் நிலவி வருகின்றது. இதற்கு முக்கியக்காரணம் இலங்கை தான். இராஜபக்‌ஷே தயவில் சீனாவின் ஆதிக்கம் இந்துமகா சமுத்திரத்திலும் , வங்கக்கடலிலும் இன்றைக்கு வரை கோலோச்சுகின்றது. கச்சத்தீவுவரை சீனாவின் நடமாட்டம் இருப்பதாக தரவுகள் சொல்கின்றன.

சீனா தங்களுடைய உற்பத்திகளைச் சந்தைப்படுத்த ஆப்பரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அமைக்கும் வணிகப் பாதையான சில்க்வே(Silk way) அமைக்கும் திட்டம் மற்றும் இந்தியபெருங்கடல், வங்கக்கடல் அடியில் எரிவாயுக்குழாய்கள் பதித்து மியான்மர் வழியாக சீனாவுக்குக் கொண்டு செல்லும் திட்டமும் அதற்கான பணிகளும் நடக்கின்றன.

இந்தியப்பெருங்கடலில் இந்தியாவின் ஆளுமையை நிலைநாட்டவும், அமைதிமண்டலமாக இந்தியப்பெருங்கடல் வங்கக்கடல் பகுதிகளை பாதுகாக்கவும் வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. ஏனென்றால் கடந்தவாரம் பிரதமர் மோடி அருணாச்சலபிரதேசத்திற்குச் சென்றதற்கு சீனா கண்டணம் தெரிவித்துள்ளது. நமது நாட்டின் மண்ணிற்கே ஒரு பிரதமர் செல்வதற்கு அண்டைநாடு கண்டணம் எழுப்புகிறது. அதுமட்டுமல்லாமல் பிரம்மபுத்ரா நதியின் இடையே அணைகள் கட்டுவதும், மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதும் இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் சீனா கட்டிவருகின்றது. பிரம்மபுத்திராவின் நீர்வரத்தையே சீனாவுக்கு மாற்றிவிடுமோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகின்றது.

நில எல்லையிலே இத்தனை முரண்டுபிடிக்கும் சீனா, தனக்குச் சம்பந்தமில்லாத இந்தியப்பெருங்கடலில் கால் வைத்தால் பயங்கரமான எதிர்வினைகள் உருவாகும்.

இந்நிலையில், ஒரு முக்கிய அறிவிப்பை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியப்பெருங்கடலில் என்னென்ன தாதுக்கள் இருக்கின்றன என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது. . கடலுக்கடியில் கிடைக்கும் துத்தநாகம், இரும்பு, கோபால்ட், நிக்கல், தங்கம், வெள்ளி என இந்தியப் பெருங்கடலினடியில் இருக்கும் தாதுக்களை கண்டறிய ஒரு ஆராய்ச்சி அடுத்துவரும் நான்காண்டுகளும் நடைபெறும் என்றுமத்திய அரசு அறிவித்துள்ளது.


டிசம்பர் மாதம் கோவாவில் துவங்கி மொரீசியஸ் வரை முதல்கட்டமாக இந்த ஆய்வுப்பணிகள் நடைபெறும் . இது வரவேற்புக்குரியது. இதுவரை இந்தியா பெரிய ஆய்வுகளை இந்துமகா சமுத்திரத்தின் கடல்பரப்பில் நடத்தவில்லை. இந்த ஆராய்ச்சியாவது, இந்தியாவின் ஆளுமையை ஓரளவு கடல்பகுதியில் நிலைநிறுத்துமென்ற திருப்தி நமக்கு எழுகிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

நாளந்தா சர்ச்சை.

நேற்றைக்குக் குறிப்பிட்ட (24-02-2015)
நாளந்தா பல்கலைக்கழக  முறைகேடுகள்.
***

நாளந்தா பல்கலைக்கழகத்தின் கீர்த்தியினையும் வரலாற்றையும் அறிந்த நாம் பெருமைப் பட்டுள்ளோம். ஆனால், அங்கும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதுவும் நோபல்பரிசு வாங்கிய அமர்த்தியா சென் மீது குற்றச்சாட்டு என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? குற்றச்சாட்டுகள் பற்றி கடிதம் எழுதியவரோ டாக்டர். அப்துல்கலாம்.

இந்திய குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் மெண்டர் (Mentor) ஆக இருக்கின்றார். அவர் 2011ம் ஆண்டு, அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா-வுக்கு பல்கலைக்கழகத்தில் நடக்கும் தவறுகள் குறித்து எழுதிய கடிதம் நம்மை நம்ப மறுக்கவைக்கிறது.
இந்தப்பிரச்சனையில் இடையிடையில் வில்லங்கப் பேர்வழி சுப்பிரமணியசுவாமி வேறு குறுக்குசால் ஓட்டுகிறார்.

ஆனால், அமர்த்தியா சென்னோ நேர்மையானவர் என அறியப்பட்ட நோபல் பரிசு பெற்றவர்.
______________________________________________________________________________

_________________________________________________________________________

அக்கடிதத்தில் குறிப்பிட்டவாறு அமர்த்தியா சென்,
தன் பதவிக்கு பெற்ற ஊதியத்திற்கு ஏற்றவாறு பணி செய்யவில்லை என்றும், தனக்கு வேண்டப்பட்டவர்களை அதிக சம்பளத்தில் பதவியில் அமர்த்தினார் என்றும், நாளந்தா பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஏர் இந்தியா விமானங்களில் பிசினஸ் க்ளாஸ் வகுப்பில் இலவசமாக பயணம் செய்தார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2000கோடி ஊழல்கள் நடைபெற்றதாக தணிக்கைத் துறையே கூறியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் - சில குறிப்புகள்.


மேற்குத்தொடர்ச்சி மலைகள் மயத்தைவிட காலத்தினால் மூத்தது. இந்த மலைத்தொடரில் 126 ஆறுகள்பல சிற்றாறுகள்,  29 பெரிய நீர்வீழ்ச்சிகள்சுணைகள்,  50க்கும் அதிகமான  அணைக்கட்டுகள் மற்றும்   கொடைக்கானல்உதகைமூனார்நீலகிரி போன்றபல மலைவாசஸ்தலங்கள்பசுமை நிறைந்த காடுகளை கொண்டடங்கியது. 

தமிழ் பிறந்த  தொட்டிலாக  தென்கோடியில் அகஸ்தியர் வாழ்ந்த  பொதிகை மலையிலிருந்து வரும் தென்றலுக்கு இணையாக எதுவுமில்லை. மாமதுரைப் பாண்டியன் அவையில் நீதிகேட்டு இறுதியில் கற்புக்கரசி கண்ணகி  சென்றது மேற்குத்தொடர்ச்சி மலைப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கம்பம் பகுதிக்கே! 

யுனஸ்கோ நிறுவனத்தால் உலகின் பாரம்பரியம் மிக்க சின்னமாக  2011ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலை அறிவிக்கப்பட்டது.  இம்மலைத்தொடரில் எத்தனையோ அற்புதங்கள்மனத்திற்கேற்ற ரம்யமான அமைதிபுதிய உலகம்அரியகாட்சிகள் ,  கானுயிரிகள், நிறைந்து மனத்துயரத்தைப் போக்கும் மாமருந்துதான் இம்மலைத்தொடர்.

குஜராத் மாநிலம் துவங்கி மகராஷ்ட்ரம்கோவா,  கர்நாடகம்,  கேரளம்தமிழகம் குமரிமுனை வரை 1200 கீ.மீ மேலாக தொடர் சங்கிலி போல நீண்டு தென்னிந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது மேற்குத் தொடர்ச்சி மலைகள்.  அரபிக்கடலிலிருந்து வரும் காற்றைத் தடுத்து தீபகற்ப இந்தியாவிற்கு மழைப் பொழிவைத் தருகின்றது. 

இம்மலைத்தொடரில் 7402 பூக்கும் தாவரங்களும், 1814 பூக்காத தாவரங்களும்அருமருந்தாக அமைந்த பல மூலிகைச் செடிகளும் -மரங்கொடிகளும், 6000வகையான பூச்சிகளும், 10 வகையான காட்டுத் தேனீக்களும்,  508வகை பறவை இனங்களும், 179 இருவாழ் உயிரினங்களும், 290 வகையான அரியமீன்களும்அதிக அளவில் யானைகளையும் கொண்ட பகுதியாக இருக்கின்றது.  


14 தேசியப்பூங்காக்கள், 44 வன உயிரின சரணாலயங்கள், 11 புலிகள் காப்பகங்கள் மட்டுமல்லாமல்புலிசிறுத்தைவரையாடு போன்ற 139 வகை பாலூட்டி உயிரினங்கள் இந்த மலைக்காடுகளில் வாழ்கின்றன. பலவகையான  நீர்வளம்வனவளம்கனிம வளம் ஆகியவற்றோடு  35 சிகரங்களைக் கொண்ட இந்த மலைத்தொடர்  150மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்ரிக்க - மடகாஸ்கர் நிலப்பரப்போடு இணைந்த மலைத்தொடராக இருந்து பிரிந்தது என்று ஆய்வுகள் சொல்கின்றன. 

80மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட  எரிமலை சீற்றத்தினால்இப்போதுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்தது என்று மற்றொரு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கோதாவரிகிருஷ்ணாகாவிரிதாமிரபரணி போன்ற பல ஆறுகளின் நதிமூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகள் தான். 





மணிமுத்தாறுதென்பெண்ணைவைகைபெரியாறுபோன்ற ஆறுகளின் நீர்வரத்தும் இங்கிருந்துதான். எண்ணற்ற பழங்குடிமக்கள் இம்மலைத்தொடர்களில் வாழ்கின்றனர். அவர்களின் கலாச்சாரமும், வாழ்க்கைமுறையும், தனித்துவம் மிகுந்த தாய்மொழியும் அலாதியானது.

குற்றாலம்அகஸ்தியர்சுருளிவெள்ளிநீர்வீழ்ச்சிசுஞ்சனா சுட்டேசோகக்சாலக்குடிகல்கட்டிஉஞ்சள்ளிபாணதீர்த்தம் சத்தோடுசிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி என இங்கு நீர்வீழ்ச்சிகள் ஏராளம். ஊட்டி ஏரிகொடைக்கானல் ஏரிபேரிஜம் ஏரிபூக்காடு ஏரிதேவிக்குளம் ஏரிலிட்சினி யானை ஏரிஉள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் செயற்கை ஏரிகளும் இங்கு அமைந்துள்ளன.

அத்தனை இயற்கை வளங்களும் அமைந்த மலைகளின் வளத்தைப் படிப்படியாகசில சுயநலவாதிகள் அழிக்க ஆரம்பித்தனர். பேராசை சக்திகளால் இந்த பசுமை நிறைந்த மலைகள் மொட்டையடிக்கப்பட்டு வருகின்றது. 

மரங்களை வெட்டி வனத்தின் பசுமையை அழித்தார்கள். குவாரிகள் என்ற பெயரில் மலையை துண்டாடினார்கள். ராட்சத குழாய்க்களைக் கொண்டு சுவைநீரையும் திருடத் துவங்கினார்கள்.  பண்ணைவீடுகள்,  தங்கும் விடுதிகள் என வணிக ரீதியில் மேற்குத் தொடர்ச்சி மலையையே கபளீகரம் செய்து வருகின்றனர். 

மனிதர்கள் காடுகளை நோக்கிப் புறப்பட்டதும்காடுகளிலுள்ள விலங்குகள் நாட்டை நோக்கிப் புறப்படத் துவங்கின. இவர்கள் செய்த சுயநல கூத்துக்களால்புவி வெப்பமயமாகி பருவமழை பொய்த்து , ஓசோன் படலத்தில் வாயு விரிவடைந்தது என இயற்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. கேளிக்கைகும் , மதுஅருந்துவதற்கும் காடுக்குள் சென்று காட்டை நாசப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. புற்காடுகளை அழித்து மனைகளாக மாற்றியதின் விளைவு உதகை மலைப்பகுதியே நிலச்சரிவுக்குள்ளாகியது மறக்கமுடியுமா என்ன?.

ஊட்டிநீலகிரிமூணாறுமேகமலைகொடைக்கானல் போன்ற மலைநகரங்களில் மாஸ்டர் ப்ளான் மற்றும் வனச்சட்டங்களை மீறி பண்ணைவீடுகளும்தேயிலை எஸ்டேட்டுகளும் பெருகிவிட்டதால்மலையின் அமைப்புக்கே  ஆட்டம் கொடுக்குமோ என்ற அச்சம் நமக்கு ஏற்பட்டுள்ளது.  

வைகையாற்றின் கரையில் அமைந்துள்ள வருசநாடு பகுதியில் சில பேராசைக்காரர்களால் கஞ்சா பயிரிடுவதும்வனவிலங்குகளை வேட்டையாடுவதும் நடக்கிறது. இங்குதான் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தற்போது ரோந்துப்பணிகள் நடைபெற்றன.

இம்மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகஆனைக்கல் காடுகள் • அன்சி தேசிய பூங்கா • ஆரளம் காடுகள் • அகத்தியமலை உயிர்கோள காப்பகம் • அகத்தியவனம் உயிரியல் பூஙகா • பந்திப்பூர் தேசிய பூங்கா • பன்னார்கட்டா தேசிய பூங்கா • பத்திரா காட்டுயிர் உய்விடம் • பிம்காட் காட்டுயிர் உய்விடம் • பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் • சன்டோலி தேசிய பூங்கா • சின்னார் காட்டுயிர் உய்விடம் • தான்டலி தேசிய பூங்கா • இரவிகுளம் தேசிய பூங்கா • கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா • இந்திராகாந்தி தேசிய பூங்கா • இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் •

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் • கரியான் சோலை தேசிய பூங்கா • கர்நாலா பறவைகள் உய்விடம் • கோய்னா காட்டுயிர் உய்விடம் • குதிரைமுக் தேசிய பூங்கா • முதுமலை தேசிய பூங்கா • முதுமலை தேசிய பூங்கா • முதுமலை புலிகள் காப்பகம் • முக்கூர்த்தி தேசிய பூங்கா • நாகரகொளை தேசிய பூங்கா • புது அமரம்பலம் காடுகள் • நெய்யார் காட்டுயிர் உய்விடம் • நிலகிரி உயிர்கோள காப்பகம் • பழனிமலைகள் தேசிய பூங்கா • பரம்பிக்குளம் காட்டுயிர் உய்விடம் • பெப்பாரா காட்டுயிர் உய்விடம் • பெரியார் தேசிய பூங்கா • புசுபகிரி காட்டுயிர் உய்விடம் • ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் • செந்துரிணி காட்டுயிர் உய்விடம் • அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா • சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் • திருவில்லிப்புத்தூர் காட்டுயிர் உய்விடம் • தலைகாவிரி காட்டுயிர் உய்விடம் • வயநாடு காட்டுயிர் உய்விடம் ஆகிய இடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
   மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
   குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே... " திரிகூட ராசப்பக் கவிராயர் பாடின குற்றாலக்குறவஞ்சி இம்மலையில் நீராடுதுறையாக அமைந்திருக்கும் குற்றாலத்தின் இயற்கை எழிலைப் பாடுகிறது.

இயற்கையோடு இயைந்து விவசாயம் செய்து அதனை இயற்கைக்கே படைத்துக் களித்த முன்னோர்களை புறநானூற்றுப் பாடலொன்று பாடுகின்றது. பிட்டங் கொற்றன் என்ற குறுநிலமன்ன்னைப் பற்றி முல்லை நிலத்தில் பாடப்பட்டிருக்கும் பாடலின் எளிய உரை அந்தக் காலக்கட்டத்தின் பழங்குடிமக்களின் வாழ்வை நம் கண்முன்னே கொண்டுவருகின்றது. 

''அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு
கடுங்கட் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை
முந்து விளை யாணர்” - புறநானூறு : 168'''

அருவி ஒலித்துப்பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக் கொடி வளரும் மலைச்சாரலில் காந்தள் மலர்கள் மலர்ந்து இவ்விடத்தில் மனத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த காந்தள் மலர்களின் கொழுந்த கிழங்குகளைக் கிளறித் தின்னுவதற்காக காட்டுப் பன்றிகளின் கூட்டம் அங்கு வருகின்றன. தங்களின் கூரிய கொம்புகளால் (பற்கள்) நிலத்தைக் குத்தி,கிளறி,நொண்டி காந்தள் மலர்களின் கிழங்குகளை வெளிய எடுத்து தின்று விட்டு செல்கின்றன.

இப்பொழுது அந்த நிலம் பார்ப்பதற்கு ஏர் கொண்டு உழுந்த வயல்க்காட்டைப் போன்று காட்சியளிக்கின்றது.இதைப் பார்த்த அந்த மலைவாழ் மக்கள் நிலத்தின் மேலிருந்த காந்தள் தழைகளை எடுத்து வீசி விட்டு அதன் மீது தினையை விதைக்கின்றார்கள். விதைத்த தினைக்கதிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்குத் அணியமாகின்றன.

தினைக் கதிர்களை அறுவடை செய்ய அந்த மலைவாழ் மக்கள் ஒரு நல்ல நாளுக்காகக் காத்திருந்து அறுவடை செய்ய முதல் விளைச்சலை கடவுளுக்குப் படைப்பது அவர்களின் மரபு. சந்தனக் கட்டைகளால் அடுப்பில் தீ மூட்டி அதன் மீது காட்டு ஆமாக்களிடமிருந்து (மாடு) நுரை தளும்ப கறக்கப்பட்ட புதிய பால் உற்றப் பட்ட பானையை வைக்கின்றார்கள். பால் நன்றாக கொதித்ததும் அதில் தினையை போட்டு பொங்கல் சமைத்து கடவுளுக்குப் படைக்கின்றனர். என்ன இனிமை பாருங்கள். 

இத்தகைய மேற்குத் தொடர்ச்சி மலைகள் போலல்லாமல்கிழக்குத் தொடர்ச்சி மலைகள்  தனித்தனியாக துண்டிக்கப்பட்ட அமைப்பினை உடையது. அதிலும் பசுமையைச் சூரையாடியே விட்டார்கள். திண்டுக்கல் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலையின் அங்கமாக இருக்கும் சிறுமலைக்காட்டின் ஒரு பகுதி முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டது. கொல்லிமலைக்கும் ஜவ்வாது மலைக்கும் அதே நிலைமை. 

மேற்குத் தொடர்ச்சி மலையினைக் கண்காணிக்க உரிய கருவிகளும்போதுமான அளவு அலுவலர்களும் இல்லை என்பது பெரிய குறை. பல்வேறு வெளிநாட்டு கும்பல்களோடு சேர்ந்து இந்தப் பகுதியில் வேட்டையாடி விலங்கினங்களுடைய தோல் மற்றும் உடல்கூறுகளை அயல்நாடுகளுக்குக் கடத்துகின்ற நிலையும் உள்ளது. 

இந்த அவலங்களை எல்லாம் தீர்க்க வேண்டுமென்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தாலும்வணிக நோக்க ஆதிக்கச் சக்திகள் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று காட்டுக்குள் புகுந்து தங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு காட்டைச் சுரண்டுகின்றார்கள். 

இதற்காகவேமாதவ காட்கில் தலைமையிலும்கஸ்தூரி ரங்கன் தலைமையிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டன.

 இந்த குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றக்கூடாது என்று கேரளா போன்ற பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஏனெனில் அவர்களால் மரங்களை வெட்டமுடியாதுகுவாரி நடத்த முடியாதுஉல்லாச விடுதிகள் கட்ட முடியாதுதங்களுக்கு பணம் கொழிக்காது என்ற சுயநலத்தில் இந்த அறிக்கைகளை நிறைவேற்ற விடாமல் நெருக்கடி கொடுத்தனர்.

அதற்கேற்றார்போல்டெல்லி ஆட்சியிலுள்ள பாதுஷாக்களும் மாதவகாட்கில்கஸ்தூரி ரங்கன் அறிக்கைகளைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.  பத்துபேர் கொண்ட கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை, கடந்த 2013 ஏப்ரல் 15 நாள் மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டது. 

மேற்குத்தொடர்ச்சி மலையின் 37சதவீத வனப்பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுகட்டிடங்கள் கட்டுவதுகுவாரிகள்
அணைகள்மின் உற்பத்தி திட்டங்கள்தொழிற்சாலைகள்அணுமின் நிலையங்கள் அமைக்கத்தடை விதிக்கப்பட வேண்டும். 

20,000 சதுர கி.மீ காட்டைச் சுற்றி கட்டுமானங்களே இருக்கக் கூடாது. 50,000ஹெக்டேருக்கு மேல் வீடுகள் அமையக்கூடாது.  புதிதாக எந்த நிலத்திற்கும் பட்டா வழங்கக் கூடாது. வனநிலங்களை
வேறுபணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. 

அமைதிப் பள்ளத்தாக்குவருசநாடு போன்ற பல  வனப்பகுதிகள் மிகவும் எச்சரிக்கையாகவும்கடுமையாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கஸ்தூரி ரங்கன் அறிக்கையை விடமாதவ காட்கில் அறிக்கையின் பரிந்துரைகள் இன்னும் கடுமையானவை. 

வளர்ச்சிபேராசைசுயநலம் என்ற நோக்கத்திற்காக இயற்கையின் அருட்கொடையான வளங்களை ஒருபோதும் அழிக்கக்கூடாது என்று மாதவ காட்கில் தன்னுடைய அறிக்கையில் தெளிவாக்கியுள்ளார். 

கர்நாடகமும் கேரளாவும் அரசுப்பணியில் விலக்குக் கோரும் பகுதிகளை தயார்ப்படுத்தி வருகிறது. மகாராஷ்ட்டிர மாநிலமும் இதே நிலைப்பாட்டைக் கொண்டு வருகிறது. கேரள மாநிலம் மூவர் குழுவை அமைத்து அம்மாநில கிராமங்கள் தோறும் கஸ்தூரி ரங்கன் அறிக்கைக்கு எதிராக கருத்துக் கேட்புக் கூட்டங்களும் நடத்தின.
ஆனால் தமிழ்நாடு இதைக் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.


தமிழக நீராதாரங்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையிலே உள்ளது. அந்த நீராதாரங்களைப் பாதுகாக்கவேண்டுமென்ற கஸ்தூரி ரங்கன் அறிக்கையை ஆதரிக்கத் தமிழ்நாடு தவறிவிட்டது. இதுவரை மத்திய அரசு கேட்டு எந்தக் கருத்தையும் தமிழகம் தெரிவிக்காமல் உள்ளது கவலையைத் தருகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் மொத்தம் 1,60,000 சதுரகிலோமீட்டர் பரப்பளவில், தமிழகம்  28,200ச.கிலோமீட்டர் பரப்பளவைப் பெற்றுள்ளது. கேரளாவோ 28,100 சதுர கிலோமீட்டரும், கோவா 1,075 சதுர கிலோமீட்டரையும், மகாராஷ்ட்டிரா 58,400சதுர கிலோமீட்டரையும், கர்நாடகா 43,300சதுர கிலோமீட்டரையும் பெற்றுள்ளதாக இக்கருத்துகள் சொல்லும் போது தமிழகம் மட்டும் வாய்மூடி மௌனியாகவே இருக்கின்றது.

இந்த இரண்டு அறிக்கைகளும் கையில் வாங்கியபின்பு மத்திய அரசு ம் இவற்றை நடைமுறைப் படுத்தவில்லை. இந்த இரண்டு குழுக்களையும் மத்திய அரசுதானே அமைத்து அறிக்கை தரச்சொன்னதுஅதே மத்தியஅரசு  அறிக்கைகளின் பரிந்துரைகளைபரிசீலித்து நிறைவேற்றுவது தானே நியாயமும் நேர்மையும். அதைக் கிடப்பில் போட அவசியம் என்ன?இந்த கேள்விகளின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை தானே!.

கலாச்சாரத்திலும் ஒன்றோடு ஒன்று இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அழிவுநேர்கிறது என்பதை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. மனித ஜீவனோடும்இந்த சமுதாயத்தோடும் அங்கமாகத்தான் மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கின்றது.  இயற்கையை காப்போம் வாரீர்..  

 -கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
24-02-2015.



#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...