நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிடும் மாத இதழான “உங்கள் நூலகம்” இந்த பிப்பிரவரி2015 இதழில், தொலைக்காட்சி விவாதங்கள் ஒருபார்வை என்றதலைப்பில் திரு.செல்வ கதிரவன் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையினை வாசித்தேன். இக்கட்டுரையில் விவாதங்களில் கலந்துகொள்பவர்கள் அனைவர்களின் பெயர்களும், அவர்கள் சார்திருக்கும் கட்சிகளையும் விபரமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
அடியேனைப் பற்றிக் குறிப்பிடும்போது “கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கோபக்கனலோடு வெளிநடப்பும் செய்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு தோழர், ஒரே கேள்விக்கு இரண்டுமுறை பதில் சொன்ன பிறகும், அதே கேள்வியினைத் திரும்ப திரும்பக் கேட்டு குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குற்றவாளியினை விசாரிப்பதுபோல நடந்துகொள்ளும் போது வேறு என்ன செய்யமுடியும்?.
தொலைக்காட்சி விவாதங்களுக்கு வரும் சிலருக்கு குறிப்பிட்ட தலைப்பில் உள்ள பிரச்சனைகள் சம்பந்தமான விஷயஞானமும் இல்லை. ஒரு உதாரணம், ஈழப்பிரச்சனை விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்துகொண்டே நவநீதம்பிள்ளையினை ஆண் என்று ஒருவர் சொல்கிறார். திரிகோணமலையும், மட்டக்களப்பும் இலங்கையின் கிழக்குபகுதியில் இருக்கின்றது என்று தெரியாமல் வவுனியா காட்டில் இருக்கிறது என்று ஒரு நண்பர் சொல்கிறார். முல்லைப்பெரியார் விவாதங்களில் எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் கேரளாவுடன் 1979ல் ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை என்று சாதிக்கின்றார். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம்.
ஆதாரங்களோடு தகவல்களைச் சொன்னாலும் விதண்டாவாதம் பேசுவோரிடம் சற்று கோபம்வருவது இயற்கையே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நடந்துகொண்டதும் இல்லை. இதுவரை என்னுடைய தனிப்பட்ட வரையறையின் எல்லையிலிருந்து தாண்டினதில்லை. கோபக்கனல் என்று குறிப்பிட்டதிலிருந்து நான் மாறுபடுகிறேன்.
விவாதங்களில் ஏற்ற இறக்கங்களோடு வார்த்தை ஜாலங்கள், இல்லாமல் முழுமையான விபரங்கள், செய்திகள், வரலாற்று ஆதாரங்களோடு பேசுகின்ற பாணியினை நான் எப்போதும் பின்பற்றுகின்றேன். இப்போதைய தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள நண்பர்கள் அழைக்கும் போது, அவர்களிடம் என்ன விவாதத் தலைப்பு என்றுகேட்டு உடன்பாடு இருந்தால் விவாதங்களுக்குச் செல்கின்றேன்.
அதுமட்டுமில்லாமல், உடன்விவாதத்திற்கு வருவது யார்யார் என்று தெரிந்துகொண்டு செல்வதும் வாடிக்கை. விவாதங்களில் கலந்துகொள்வதால் நமக்குக் கிடைக்கும் விளம்பரங்களை விட அவ்விவாதநிகழ்ச்சி ஆரோக்கியமாக மக்களுக்கு அறியாச் செய்திகளையும், பிரச்சனைகளின் சாரத்தைக் குறித்த அடிப்படை தெளிவுகளையும் தெரிந்து கொள்ளவைப்பதே நோக்கமாக இருக்கவேண்டும். தொலைக்காட்சி விவாதங்களுக்குச் செல்லும்பொழுது இதனை மனதில்கொண்டுதான் நான் செல்வதுண்டு.
No comments:
Post a Comment