மதுரையில் இருந்து கேசவனும், சுமதியும் பேசினார்கள்.
கேசவன் “அண்ணாச்சி என்ன வெறும் திருநெல்வேலி தூத்துக்குடி, கோவில்பட்டி சாத்தூர், சிவகாசி பத்தி மட்டுமே விபரமா எழுதுறீங்களே.. எங்க தேனியையும் மதுரையும் பத்தி ஏதும் வரலாற்றுக்குறிப்புங்க எழுதக்கூடாதா” என்றார். நான் அவரிடம் பலசமயம் மதுரை மற்றுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளைப் பற்றிய தரவுகளை எழுதிக் கொண்டு வருவதைச் சொன்னேன்.
சரி அக்கால மதுரையைச் சுற்றி பார்த்தால் தான் என்ன.. சங்கம் வளர்த்து வணிகம் பெருத்த”மருதம் சூழ்ந்த மாமதுரை” தமிழகத்தின் கலாச்சாரத்தின் தலைநகரம். உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் எழில் நகரம்.
வைகையாற்றின் கரையில் மதுரையினை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகள், கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளிலே காணப்படுகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ் மதுரையைப் பற்றி தன் பயணக்குறிப்புகளில் எழுதியுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
புறநானூற்றில் "மதுரை' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படையில் மதுரைக்காஞ்சி என்றும், நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும் அழைக்கப்படுகிறது மதுரை நகரம்.
சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான பெரும் வரலாற்றைக் கொண்டது. மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் மதுரைக்காஞ்சியில் வர்ணிக்கப்பட்டுள்ளது. சங்ககால பாண்டியர்கள், சோழர்கள், பிற்கால பாண்டியர்கள், நாயக்கர் அரச வம்சத்தினர்கள் தங்கள் தலைநகராக மதுரையில் ஆட்சி செய்திருக்கிறார்கள். 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழிவுறாமல் இன்றும் மிச்சமிருக்கிறது.
“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே... ” பாடலைத் தான் மறந்துவிடமுடியுமா!
"பதியெழுவறியா பழங்குடி மூதூர்” என சிலப்பதிகாரச் சொல்லொன்று உண்டு இதற்கு பொருள் என்ன தெரியுமா? தற்போது மதுரை சுற்றுவட்டாரங்களில் பேசப்டும் பழமொழி ஒன்றுண்டு.
"மதுரயச் சுத்தின கழுத வேற எங்கையும் போவாது' என்பது தான் இந்த சிலப்பதிகாரச் சொல்லின் கொச்சையான பொருள்.
மதுரை பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது நாளங்காடி, அல்லங்காடி, போன்ற வணிகங்கள் ஆதியிலே இருந்தது. அதன் தொடர்ச்சிதான் இன்றைக்கு கீழமாசிவீதியில் இருக்கும் கடைகள். வேப்பமரங்கள் அடர்ந்திருந்த மதுரை நெல்பேட்டையில், தூத்துக்குடியில் இருந்து வரும் உப்பும், கருவாடும். நெல்லையிலிருந்து வரும் கருப்பட்டியும் விற்கும் கடைகள் இருந்தன.
கோவில்பட்டி, சாத்தூர், இராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, நாகலாபுரம், புதூர், தேனி, சின்னமனூர், திண்டுக்கல், பழநி, இராமநாதபுரம், மானாமதுரை, என குமரிமாவட்டம்வரை உள்ள வியாபாரிகள் இந்த இருதெருக்களிலும் மரபுரீதியாக தங்களுடைய கடைகளை இன்றைக்கும் நடத்தி வருகின்றார்கள்.
14ம் நூற்றாண்டில் சொக்கநாதர் ஆலயத்தினருகே, தலைக்கட்டு என்ற அடிப்படையில் தானியங்கள் விற்பனை செய்யும் கடைகள் இருந்தன. அக்காலத்தில் கிராமங்களிலிருந்து மாட்டுவண்டிகளில் பாரமேற்றி பொருட்களை வியாபாரிகளிடம் விற்றுவிட்டு விவசாயிகள் ஓரிருநாட்கள் மதுரையினையும் வைகை ஆற்றையும் சுற்றிப்பார்த்துவிட்டு தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதுண்டு.
மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. சமணமும், சைவமும், வைணவமும் மதுரையில் தளைத்திருந்ததற்கான சான்றுகள் இன்றும் கிடைத்தவண்ணம் உள்ளன. கிறித்துவர்கள் மருத்துவமனைகள், கலாசாலைகளையும் அமைத்தனர். இசுலாமியர்களும் கோரிப்பாளையம், மதுரையின் மேலமாசிவீதியை ஒட்டிய பகுதியிலும் தொடக்கத்திலிருந்தே இந்துசமுதாய மக்களிடம் உறவுமுறையில் பழகிவருகின்றனர். இதன் அடையாளம் தான் அழகர் வைகையாற்றில் துலுக்கர் நாச்சியார் இருப்பிடத்திற்குச் செல்வதாகும்.
மதுரை மக்கள், "அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில் எழுவர்,' என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுகள் இம்மண்ணின் மைந்தர்களுக்கு குடும்பத்திருவிழா. மதுரை வட்டார கிராம மக்கள் கட்டுச் சோற்றோடு, வண்டிகட்டி சாரைசாரையாக சித்திரை திருவிழாவில் நடக்கும் மீனாட்சி கல்யாணத்திற்கு வருவதுண்டு.
மதுரையின் வணிகப்பேட்டைகள் 500ஆண்டுகளுக்கும் பழமையானது. வைகைக் கறையில் மூன்று ஏக்கர் பரப்பில் அப்போது தங்கள் விருப்பம் போல கடைகள் பரப்பி வைத்து வியாபாரம் செய்தனர். நவதானியங்கள், மளிகைப் பொருட்கள், ஜவுளி, ஆபரணங்கள், என வகைவகையாக பகலிலும் இரவிலும் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் விடிய விடிய விற்பனை நடக்கும். அப்போதிலிருந்தே மதுரை தூங்கா நகரம் தான்.
நாட்டுமருந்திலிருந்து முத்து ஆபரணங்கள் வரை அனைத்தும் கிடைக்கக்கூடிய செந்தமிழ்நாட்டின் வணிக மையமாக மதுரை நகரம் விளங்கியது. அந்த அடிப்படையில் தான்இன்றைக்கு ஒவ்வொரு தெருவிலும் குறிப்பிட்ட பொருட்கள் விற்கக்கூடிய வகையில் நான்கு மாட தெருக்களும் அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்த அமைப்பு பண்டைய நகரங்களான ஏதன்ஸ், ரோம் , மிலான், கெய்ரோ, மற்றும் கிரேக்கத்திலும், இத்தாலியிலும் ஸ்பெயின் நாடுகளிலும் கூட கிடையாது.
இன்றைக்கிருக்கும் பேரூந்து வசதிகளெல்லாம் அப்போது வாய்த்திருக்கவில்லை. வசதியானவர்கள் குதிரைகளிலும், குதிரை வண்டிகளிலும், நடுத்தர மக்கள் மாட்டுவண்டிகளிலும், எளியமக்கள் நடந்தே மதுரைக்கு வருவதுண்டு. அப்படி வரும்போது வழிப்பறிகளும் நடைபெறுவது உண்டு. வியாபாரிகள் தங்கள் பயணத்தின் போது வழிப்பறிக் கொள்ளைக்காரர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள சண்டைப்பயிற்சியும், பிற்காலத்தில் அனுமதிபெற்று துப்பாக்கியும் தோட்டாக்களும் வைத்துக் கொண்டனர்.
பெரும்பாலும், மதுரைக்கு தெற்கு, மேற்கு கிழக்கு திசைகளிலிருந்துதான் வியாபாரிகளும் கிராமவாசிகளும் வருவதுண்டு. எனவே தெற்குவாசலில் மாட்டுவண்டிகளைச் சரிசெய்வதற்கும், மாடுகளுக்கு லாடம் கட்டுவதற்குமான வண்டிப்பேட்டைகள் அமைந்திருந்தது. இங்கு சாப்பாட்டுக்கடைகளும் இருக்கும். பெரும்பாலும் வெளியூரிலிருந்து வருபவர்கள் இப்பகுதியில் தங்குவதுண்டு இன்றைக்குப் போல் அன்று பேட்டரி விளக்குகள் இருக்காது. அரிக்கேன் விளக்குதான் இவர்களுக்கு இரவுச்சூரியன்.
மதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வரமுடியாத வகையில், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறக்கும். மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்களுக்கு பதிலாக பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பு, மணல்,வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. மேலும், கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்து கோட்டையினை நெருங்குவதில்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன.
பாண்டியர்கள் ஆட்சிக்குப் பின் நாயக்கர்கள் ஆட்சிகாலத்தில் மீனாட்சிகோவில் கோபுரங்கள் சீரமைத்து. வழிப்போக்கர்கள் தங்க சத்திரங்களும், தங்குவோர்க்கு உணவுவசதிகளும், தெருக்களில் பெரிய திரியைக் கொண்டு எரியும் கல்விளக்குகளும் , அமைக்கப்பட்டது. தமுக்கம் மைதானமும், திருமலைநாயக்கர் மஹாலும் , மங்கம்மாள் சத்திரமும் இன்றைக்கும் காட்சிகளாக உள்ளன.
1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கி, கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை சுற்றுப்புற கிராமங்களுடன் இணைத்தார்.
மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டவை.
உத்தமர் காந்தி இந்நகரில் வாழ்ந்த எளிய மக்களைக் கண்டு தன் ஆடைகளைத் துறந்து அரை நிர்வாணமான இடம் மதுரைதான். தமிழகத்தின் அசைவே மதுரை. மதுரை இல்லாமல் தமிழ்நாட்டின் வரலாறு இல்லை. மதுரையைச் சொன்னது கையளவே! இன்னும் சொல்லாதது கடலளவு.
-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
அற்புதமான பதிவு! மிக அரிய தகவல்கள்! மதுரையைப் பற்றி கேள்விப்படாத விஷயங்கள் நிறைந்திருந்தது.
ReplyDeleteநன்றி
Delete