Monday, February 16, 2015

பிரச்சனையில் பனாரஸ் பட்டு.







சமீபத்தில் பனாரஸ் பல்கலைக்கழக கருத்தரங்கிற்கு
பதிவாளர். பாண்டே அழைத்திருந்தார். பல்கலைக்கழக வளாகம் விரிந்து பரந்த அமைதியான அற்புதமான இடம்.  கங்கை நதிக்கரையிலே மதன்மோகன் மாளவியா திட்டமிட்டு கட்டிய பழமையும் புதுமையும் இணைந்த கட்டிடங்களும், இக்கலாசாலையின் செயல்பாடுகளும் உள்ளன.

பசுமையான சோலைகள், சட்டம்,மருத்துவம், விவசாயம், கால்நடை,  இசை என அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த கலாசாலைதான் பனாரஸ் இந்துப் பல்கலைகழகம். சர்வபள்ளி.டாக்டர். இராதா கிருஷ்ணன் துணைவேந்தராக பணியாற்றிய பல்கலைக்கழகம்.

மூன்று நாட்கள் இங்கு தங்கியது அமைதியான வாழ்க்கை, காசி நகரத் தெருக்களிலும் பகலும் இரவும் சொந்த கிராமத்தில்  நடப்பது போல இருந்தது. தூசிகள் நிறைந்த நகரத்தில் தான் பனாரஸ் பட்டு நெய்யப் படுகின்றது.

ராமாயண மகாபாரதத்திலும் பானாரஸ் பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது . கி.மு.6ம் நூற்றாண்டில் பாலி மொழியில் இந்த பட்டு காசிக்காம் வட்டம் என்று அழைக்கப்பட்டது.  இந்து மக்களின் புண்ணியதளமாக வாரணாசி விளங்கினலும், பட்டு நெசவில் இஸ்லாமியரும் 14ம் நூற்றாண்டில் ஈடுபட்டனர் என்று செய்திகள் உள்ளன.

மொகலாய மன்னர்களும் இராஜ புத்திரர்களும் விரும்பிய பனாரஸ் பட்டினை இஸ்லாமியர்கள் உலகம் முழுதும் எடுத்துச் சென்றனர் என்பது செய்தி. 1990வரை பட்டு விசைத்தறிகளில் இந்தபுடவை தயாரிக்கப்பட்டது. இன்றைக்கு பனாரஸ் பட்டுப் புடவை பாதுகாப்பின் இயக்கமான கைத்தறிகளைக் காப்போம் என்ற அமைப்பின் தலைவரே மகபூஸ் ஆலம் என்ற இஸ்லாமியர் ஆவார். .
.
அவர் சொலுகிறார், “பெனாரஸ்க்குப் பின்னாடி உருவான மகாராஷ்ட்ரா, குஜராத் பட்டுகளுக்கு கிடைக்கும் மத்திய மாநில அரசுகளின் ஆதரவு எங்களுக்கு இல்லை என்றும், தடையில்லா மின்சாரம் வேண்டுமென்றும், மூலப்பொருட்களான நூல், சாயம் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கவேண்டும்“ என்று முடிக்கிறார்.

இன்னொரு பட்டு உற்பத்தியாளர், குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றவர் ஆப்தீன் என்ற இஸ்லாமிய சகோதரர் “சில மகராஷ்ட்ரா குஜராத் காரர்களுடைய இடம்பெயர்வால் இத்தொழில் பாதிக்கபட்டுள்ளது” என்கிறார்.

சமீபத்தில் பிரதமர் மோடி தன்னுடைய வாரணாசி தொகுதியில் பனராஸ் பட்டு வளர்ச்சிக்கு 200கோடி மதிப்பில் ஒரு வர்த்தக மையம் துவக்கி இருக்கிறார். பனாரஸ் வாசிகளான பலர் இத்தொழிலை நம்பி உள்ளனர். மோடி தங்களுக்கு மறுவாழ்வு கொடுப்பாரா என்ற வினாவோடு வாரணாசிவாசிகள் வாழ்கின்றார்கள்.

அவர்கள் என்னிடம், ”உங்கள் காஞ்சிபுரம் பட்டுக்கு இருக்கும் மவுசு எங்களுக்கு இல்லையே. மைசூர் பட்டுக்குக் கிடைக்கின்ற மதிப்பு எங்களுக்கில்லையே” என்று ஆதங்கப்பட்டனர்.



வாரணாசியில் வலம் வந்தபொழுது, விசாலாட்சிக் கோவிலில் விசாலாட்சி கோயில் என்று தமிழில் எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப் படவைத்தது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையிலும், தமிழ்த்துறைகளில்  தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் பலர் இருக்கின்றனர்.

வாரணாசி தொலைவில் இருந்தாலும் தமிழகத்தோடான அதன் தொடர்புகளும் உள்ளன. பாரதி காலத்திலிருந்து, திருவாடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனம் வரை ஆன மடங்களும் உள்ள ஊர்தான் காசி.  இப்படியான ஊரில் இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பனாரஸ் பட்டுத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் பிரதமர்மோடி யின் சொந்த தொகுதியின் பிரச்சனைகள். பட்டு நெசவாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுமா!

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...